Search This Blog

Followers

Powered By Blogger

Tuesday, September 30, 2025

பிம்பம் 10


 அத்தியாயம் 10


இன்று


  "டாக்டரோட  ஃபேமிலிக்கு தகவல் சொல்லியாச்சா?" 


    "சார் அவங்க எங்கேயோ வெளியூர் போயிருக்காங்க? பக்கத்து வீட்டுல இருக்கிறவங்க கிட்ட, டாக்டரோட மனைவி போன் நம்பர் வாங்கி தகவல் கொடுத்துட்டோம். இப்போ இங்க தான் வந்துட்டு இருக்காங்க."


    விக்ரம் தாமோதரனின் சடலம் கிடந்த இடத்தில், ஏதாவது தடயம் கிடைக்கின்றதா என்று தேடிக் கொண்டிருக்க, இன்ஸ்பெக்டர் அங்குள்ளவர்களிடம் அவரது விசாரணையை தொடங்கினார்.


  "யார் சம்பவத்தை முதலில் பார்த்தது?"


   "நான் தானுங்க சார்,நான் இங்க பகல்ல  வாட்ச்மேனா வேலை செய்றேன் சார், காலையில வந்ததும் ஹாஸ்பிடல்ல இருக்க  ரூம்களை எல்லாம் திறந்து விடுவேனுங்க, அதுக்கு அப்புறம் தான் சுத்தம் செய்யறவங்க வந்து, அதை கிளீன் பண்ணிட்டு போவாங்க. அப்படி சாரோட கதவை திறந்து விடலாமுன்னு வந்தப்பதான்  தாமோதரன் டாக்டரோட ரூம் கதவு திறந்தே இருக்கிறதை பார்த்தேன். இங்கே உள்ள வந்து பார்த்தா இவர் இப்படி கிடக்காரு.. உடனே போலீசுக்கு போன் பண்ணிட்டாங்க சார்."


  "நைட் வாட்ச்மேன் எங்க?  அவரை உடனே இங்கு வர சொல்லுங்க."


    " சார் ஆல்ரெடி தகவல் கொடுத்திட்டோம். அதோ அவரே வந்துட்டு இருக்கார் பாருங்க."


  "வணக்கம் சார், எம்பேரு மாணிக்கம். நான் தான் இங்க நைட் வாட்ச்மேனா ஒர்க் பண்றேன்."


  "டாக்டர் தாமோதரனை நீங்க கடைசியா எப்போ பார்த்தீங்க?"


  " டெய்லி சாயந்திரம் 6:00 மணிக்கு எல்லாரும் கிளம்பினதும், ரூம்  எல்லாத்தையும் பூட்டிட்டு, டீக்கடைக்கு டீ குடிக்க போயிட்டு வருவேன் சார். நேத்து அப்படி தாமோதரன் சார் ரூமுக்கு போனப்போ, அவர் கிளம்பாம ரூம்லயே இருந்தாரு. தனக்கு வேலை இருக்கிறதாகவும், தன்னை சந்திக்க ஒரு ஆள் வருவாருன்னும் சொன்னாரு. நான் டீ குடிக்க போறேன்னு சொன்னதுக்கு, சரி நீ கெளம்பு நான் வேலையை முடிச்சுட்டு, நானே இந்த ரூமை பூட்டிட்டு கிளம்பிக்கறேன்னு சொன்னாரு, நானும் போகும்போது வெளி கேட்டை சாத்திட்டு தான் சார் போனேன், நான் திரும்பி வந்தப்போ கேட் திறந்தே இருந்துச்சு, எப்பவும் டாக்டரோட கார் பில்டிங்க்கு பின்னாடி தான் நிக்கும், நான் கதவு திறந்திருந்ததால அவரு கிளம்பிட்டாருன்னு நினைச்சிட்டேன். விடிய  காலைல இப்படி செய்தி வந்ததும் தான் இங்கன ஓடியாரேன் சார்."


    அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்ரம், ஜனாவிற்கு அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை கண்காட்டிட, புரிந்து கொண்டதாக தலையை ஆட்டிவிட்டு அவன் சென்று விட்டான். பிறகு இன்ஸ்பெக்டரிடம் திரும்பியவன்,


  "இன்ஸ்பெக்டர் சார் எப்படி ரேகா கர்ப்பமா இருந்ததாலதான் அவளோட அண்ணன் குத்திக் கொலை செஞ்சிருக்கான்னு சொல்றீங்க? அவனே ஏதாவது சொன்னானா?"


  "ஆமா சார், பைத்தியம் புடிச்ச மாதிரி நேரா பாத்துகிட்டே, அவ கர்ப்பமா இருக்கா அதனால தான் அவளை கொலை செய்தேன், அப்படின்னே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தான், ஆனா கொஞ்ச நேரத்திலேயே என்னை எதுக்காக கூட்டிட்டு போறீங்க? நான் என்ன தப்பு செஞ்சேன்னு? உளர ஆரம்பிச்சுட்டான். 


  உன் தங்கச்சியை கொலை பண்ணின குற்றத்துக்காக கைது பண்றோம்னு சொன்னதும், என்ன என் தங்கச்சி இறந்துட்டாளா? நான் குத்தி கொண்ணுட்டனா?  இல்ல நான் அப்படி எதுவும் பண்ணவே இல்லைன்னு, உளர ஆரம்பிச்சிட்டான். ரொம்ப அரகெண்ட்டா நடந்துகிட்டான். அவன புடிச்ச ஜெயில்ல போடுறதுக்குள்ள ஒரு வழி ஆயிடுச்சு."


  "நாங்க இப்போ அந்த பொண்ணோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம், இதே ஹாஸ்பிடல்ல தான் அந்த பொண்ணுக்கு போஸ்ட்மார்ட்டம்  நடந்துட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசல்ட் கைக்கு வந்திடும். உங்களுக்கு சித்ரா கொலை வழக்குல இவங்க மேல சந்தேகம் இருக்குதா என்ன? அதனால தான், அவங்க வீட்டை கண்காணிக்க உங்க அசிஸ்டென்டை அனுப்பினீங்களா?"


  "ஆமா சார், சித்ரா இறக்கறதுக்கு முன்னாடி தன்னை சுத்தி ஏதோ தப்பா நடக்குதுன்னு சொல்லி, தன்னோட டைரியை அவங்க அண்ணனுக்கு அனுப்பி வைச்சிருக்காங்க, அவர் எல்லையில் போராடிட்டு இருந்தனால அப்போ அவர் கைக்கு அந்த டைரி கிடைக்கல. சித்ரா இறந்து ரொம்ப மாசம் கழிச்சு தான் அவருக்கு அது கையில கிடைச்சிருக்கு. அதுல இவங்கள பத்தி சந்தேகமா இருக்கிறதா தான், எழுதி இருக்காங்க. அவங்க அண்ணா அந்த டைரியையும் சேர்த்துதான் என்கிட்ட கொடுத்து இருக்கார். நானும் படிச்சு பார்த்தேன். இந்த நாகலிங்கத்தை சித்ரா கல்யாணத்துக்கு முன்னாடியே, பஸ்ல தன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியதா சொல்லி  போலீஸ்ல புடிச்சு கொடுத்திருக்காங்க."


  இவர்கள் பேசிக் கொண்டே டாக்டரின் அறைக்கு வந்திருந்தார்கள் அவர் அப்போதுதான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை எழுதி முடித்து கையொப்பமிட்டு கொண்டிருந்தார். அங்கு அவரின் முன் அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ரேகாவின் இறப்பு பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் தான் இன்ஸ்பெக்டரும் விக்ரமும் அறையினுள்ளே நுழைந்தனர்


    "அடடே சிவா சாரா!.. உங்களை ஊருக்குள்ள பார்க்கறதே முடியாத காரியமா இருக்கு? எப்பவும் சென்னையிலேயே இருக்கறீங்க போல?"


  "ஆமா சார் தள்ளி வைத்திருந்த எலெக்சனை இப்பதான் வைக்க போறாங்க, அதோட இந்த டைம் என்னை தான் எம்எல்ஏ கேண்டிடேட்டா தேர்ந்தெடுத்து இருக்காங்க, அதனால கொஞ்சம் கட்சி வேலை ஜாஸ்தியா இருந்தது. அவங்க தேர்தல் நாள் அறிவிச்ச உடனே இனி ஊர்ல தான் ஒர்க்.


    என்னால நம்பவே முடியல சார்!.. ரேகா பிரக்னண்டா இருந்தாங்கிறதும், அது காரணமா நாகலிங்கம் அவளை கொலை செஞ்சுட்டாங்கிறதும், எங்களுக்கே அதிர்ச்சியா இருக்கு, ரேகா ரொம்ப அமைதியான பொண்ணு, நாகலிங்கமும் அப்படித்தான் ரொம்ப நல்ல பையன், அவன் இருக்கிற காரணத்தால தான், நான் இங்க கடையை அவன் பொறுப்புல விட்டுட்டு, சென்னையில் கட்சி வேலையா அலைஞ்சுட்டு இருக்கேன். இப்படி திடீர்னு சொல்லவும் என்னால நம்பவே முடியல."


  அப்போது அவசரமாக உள்ளே வந்த ஜனா இன்ஸ்பெக்டரிடமும், விக்ரமிடமும் கூறிய செய்தி கேட்டு, அவர்கள் மட்டுமல்ல சிவாவும் அதிர்ந்து நின்றான்.


அன்று


  சித்ராவின் பெற்றோர்கள் அவளை தங்களுடன் சேர்த்துக் கொண்டாலும், உறவினர்கள் வட்டாரத்தில் அதை தெரியப்படுத்தவில்லை. அவர் ஜாதி கட்சி தலைவராக இருப்பதால் இது பேசு பொருளாக ஆகிவிடும் என்று, ரகசியமாகவே அவளை சந்தித்து வந்தனர். 


    அவளது அண்ணனுக்கும் இவளின் திருமண விஷயம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவன் போர்க்களத்தில் இருந்த காரணத்தால் லேட்டாக தான் செய்தி சென்று சேர்ந்தது. உடனே தனது தங்கைக்கு அழைத்து பேசியவன் அவள் சந்தோசமாக வாழ்க்கை நடத்துவதை அறிந்து மகிழ்ச்சி கொண்டான். அவள் கணவனிடம் பேசிவிட்டு தான் வைத்தார்.


  அந்த வருடம் கொரோனா என்ற கொடிய நோய் பரவியதால், கூட்டம் கூடக் கூடாது என்று தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதனால் சிவா அதைப்பற்றி கேட்டு வர சென்னை நோக்கி கட்சி அலுவலகத்திற்கு  சென்றுவிட்டான்.


சித்ரா கருவுற்றிருந்ததால் அதை அரசாங்க மருத்துவமனையில் பதிவு செய்ய, அவளுக்கு துணையாக ரேகாவும் உடன் வந்திருந்தாள். அங்கு வந்த அனைவரும் நர்ஸ்களின் கைகளால் ஊசியினை போட்டுக் கொண்டிருக்க, கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் ரேகா அவளிடம், டாக்டர் தனக்கு தெரிந்தவர் தான், நாம் அவரை நேராக சென்று பார்க்கலாம் என்று கூறி, சித்ராவை  அழைத்துக்கொண்டு நேராக டாக்டரின் அறைக்கு சென்றாள். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர் தாமோதரன் அவளின் உடல்நிலை சற்று பலவீனமாக இருப்பதாகவும், அதற்கு தான் கொடுக்கும் மருந்துகளை சரியாக உண்டு வரவேண்டும் என்று கூறினார்.


      பிறகு அவளுக்கு நான்கு மாதங்களுக்கான ஊசியை அவளின் கைகளில் போட்டு விட்டார். பிறகு இன்னொரு கைகளிலும் சத்து ஊசி என்று கூறி, இன்னொரு ஊசியை செலுத்தினார்.


    சித்ரா குனிந்து கைகளை தேய்த்து விட்டுக் கொண்டிருக்க, டாக்டர் தாமோதரன் கட்டைவிரலை ரேகாவை நோக்கி உயர்த்தி காட்டினான், அவளும் சித்ரா கவனிக்காதவாறு கண் சிமிட்டினாள்.


    தனக்கு ஒரு மாதிரி இருப்பதாக சித்ரா கூற, அவளை ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்து, வீட்டில் விட்டுவிட்டு ரேகா தனது வீட்டுக்கு சென்று விட்டாள்.


  அவளின் முகம் சோர்வாக இருப்பதைக் கண்ட சாந்தி, சிறிது நேரம் அவளை அறையில் ஓய்வு எடுக்குமாறு கூற, சித்ராவும் அவளது கட்டிலில் சென்று படுத்துக்கொண்டாள்.


சிறிது நேரத்திலேயே அவளின் உடல் விறைத்து, அவளின் பார்வை நேர் குத்தி நின்றது. அப்போது அவள் அறையில் பின்பக்க வாசல் வழியாக தாழ்ப்பாளை உள்ளே கம்பிவிட்டு, அதை நீக்கிவிட்டு வந்த நாகலிங்கம் அவள் அருகினில் வந்தான்.


  அவள் அருகில் வந்து அமர்ந்தவன், அவளுக்கு கட்டளையிட ஆரம்பித்தான்.


“சித்ரா இப்போ நான் சொல்றத தான் நீ செய்யப் போறே, உன்ன சுத்தி இருக்கிற துணிமணிகளை கிழிச்சு ஹால்ல கொண்டு போய் வீசு, சமையல் அறைக்கு போய், சீமண்ணைய்யையும் தீப்பெட்டியையும் எடுத்துட்டு வந்து, இந்த துணியில ஊத்தி தீப்பெட்டியால தீயை பத்த வச்சு, அந்த துணி மேல போடு. நீ போட்டிருக்க துணியையும் அந்த நெருப்புக்கு நேரா பிடி , அதை யாராவது தடுக்க வந்தா அவங்க மேலயும் சீமண்ணையை ஊத்து."


    அடுத்த நிமிடமே சித்ரா கீ கொடுத்த பொம்மை போல, தன் அருகில் உள்ள துணிகளை, ஹாலில் கொண்டு போய் போட்டுவிட்டு சமையலறைக்குச் சென்று, சீமண்ணையை எடுத்து வந்து, தான் தூக்கி வீசிய துணிகளின் மீது ஊற்றினால்.


    "என்னை அன்னைக்கு போலிஸ் ஸ்டேஷன்ல தலை குனிஞ்சு நிக்க வைச்சயில்லடி, இனி ஊருக்குள்ள நீ எப்படி தலை நிமிர்ந்து நடக்கறேன்னு நான் பார்க்கிறேன்."


Sunday, September 28, 2025

பிம்பம் 9


 

அத்தியாயம் 9


இன்று


  விக்ரம் தனது அடையாளங்களை காட்டி,  தான் ஒரு துப்பறிவாளன் என்று கூறிய போது, போலீசார் அவனை நம்ப மறுத்தனர்.  உடனே சென்னையில் உள்ள ஐஜி அலுவலகத்திற்கு அழைத்து, அவரிடமே நேரடியாக பேச வைத்த போது தான், இங்குள்ள போலீசாரிடம் இவனுக்கு மதிப்பு கிடைக்க ஆரம்பித்தது.


    விக்ரம் தனது துப்பறிவு நிறுவனத்தின் மூலம், சென்னையில் போலீஸாரால் தீர்வு காண முடியாத பல வழக்குகளின், சிக்கலாக முடிச்சுகளை அவிழ்க்க, அவர்களுக்கு உதவி புரிந்துள்ளான். அதன் பிறகு அவன் போலீஸ் ஸ்டேஷனில் மரியாதையாகவே நடத்தப்பட்டான்.


    விஷயம் அறிந்து ஸ்டேஷனுக்கு வந்த இன்ஸ்பெக்டர், அவன் வழக்கிற்கு தேவையான சித்ராவின் பைலை எடுத்து அவனிடம் கொடுத்தார். அதை புரட்டிப் பார்த்தவன் இன்ஸ்பெக்டரை நோக்கி கேள்விகளை எழுப்ப தொடங்கினான்.


  "நீங்க எப்படி இந்த கேஸை தற்கொலை தான்னு முடிவு பண்ணீங்க? அந்த ரூம்ல வேற யாரோட கைரேகையும் இல்லையா? இதுல அவங்க சில நாளா மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததா சொல்லி இருக்கீங்க, ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவங்க எப்படி கதவை எல்லாம் சரியா லாக் பண்ணிக்கிட்டு தூக்கு போட்டு தற்கொலை பண்ணியிருக்க முடியும்? எப்படியோ கேஸ் முடிஞ்சா சரி அப்படித்தானே சார். சரி.. அவங்களோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எங்கே? "


  கான்ஸ்டபிள் கபோர்டுல் இருந்து ஒரு பைலை கொண்டு வந்து நீட்டினார்.


  "சார் அந்த பொண்ணு தன்னோட சேலையால கழுத்து நெறிக்கப்பட்ட காரணத்தால் தான், இறந்து போயிருக்காங்க. அவங்களோட கழுத்துல அந்த சேலையோட அச்சு இருந்தது. அந்தப் பொண்ணு தூக்கு போட்டுக்கும்போது ஊருக்குள்ளேயும் யாரும் இல்ல, அவங்க வீட்டில இருந்த அவங்க கணவர் உட்பட எல்லாரும் கோயிலுக்கு போயிருந்திருக்காங்க, அதனால அடுத்த நாள் காலையில தான் விஷயம் தெரிஞ்சிருக்கு. அதுக்குள்ள அந்த பொண்ணு வயித்துல இருந்த குழந்தையும் மூச்சு திணறி இறந்து போயிடுச்சு. இப்படிதான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல டாக்டர் தாமோதரன் ரிப்போர்ட் பண்ணி இருக்காரு"


"மனநலம் பாதிக்கப்பட்ட பொண்ணுன்னு சொல்றாங்க, அத்தோட அவங்க பிரக்னண்டா வேற இருந்திருக்காங்க, இப்படிப்பட்ட சூழ்நிலையில, எப்படி அவங்கள தனியா விட்டுட்டு வீட்டில இருக்கிறவங்க எல்லாரும் வெளியே போய் இருப்பாங்க? இதுல உங்களுக்கு ஒரு டவுட்டும் வரலையா?"


  " அந்த ஊரை பொருத்தவரைக்கும் சித்ரா பௌர்ணமி ரொம்ப ஃபேமஸான கோயில் திருவிழா, அத்தோட இறந்து போன அந்த பொண்ணு, எப்பவுமே மன நலம் பாதிக்கப்பட்ட மாதிரி நடந்துக்காதாம். எப்பவாவது ஒரு தடவை தான் புத்தி சரியில்லாத மாதிரி பேசுமாம்."


"எப்பவாவதுன்னா?  எத்தனை முறை இந்த மாதிரி நடந்துகிட்டு இருக்காங்க? அதை எத்தனை பேர் பார்த்து இருக்காங்க?"


  "ரெண்டு மூணு தடவை இந்த மாதிரி நடந்திருக்கறதா சொன்னாங்க. அவங்க பேரன்ட்ஸ் ஒரு தடவ பாத்திருக்காங்களாம், அப்புறம் ஊர்க்காரங்க எல்லாம் ஒரு டைம் அப்புறம்  வீட்ல அந்த பொண்ணோட மாமியார் ஒரு தடவ இந்த பொண்ணு இந்த மாதிரி நடந்து கிட்டத பார்த்திருக்கிறார்களாம்."


" வாட்? என்ன சொன்னீங்க, அந்த பொண்ணோட பேரண்ட்ஸ் பாத்து இருக்காங்களா? அவங்களுக்கும் இந்த பொண்ணுக்கும் தான் பேச்சுவார்த்தையே இல்லாததா

சொன்னாங்க?"


    "ஆமா சார், ஆனா  இந்த பொண்ணு பிரகனண்ட்டா இருக்கிறது தெரிஞ்சதும் அவங்க இந்த பொண்ணை குடும்பத்தோட சேர்த்துக்கிட்டாங்களாம்." 


  "சரி நீங்க மேல சொல்லுங்க."


    "வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் கோயிலுக்கு கிளம்பும்போது கூட, நல்லா தான் பேசினதா சொல்றாங்க. தனக்கு கால் வலிக்கிறதால தான் வீட்ல இருக்கிறதாக சொல்லி, மத்தவங்களை எல்லாம் கோயிலுக்கு போயிட்டு வர சொல்லி இருக்கு, அந்த பொண்ணோட  ஹஸ்பண்ட் கூட தான் துணையா வீட்டுல இருக்கிறேன்னு சொன்னதுக்கு, இல்ல வேண்டாம்னு சொல்லி அவரையும் அனுப்பி வெச்சிருக்கு."

 

  சரியாக அந்த நேரத்தில் கான்ஸ்டபிள் ஓடி வந்து கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் சீப் டாக்டர் தாமோதரன், தனது மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி தற்கொலை பண்ணிக் கொண்டதாக கூற, விக்ரம் தானும் உடன் வருவதாக கூறி ஜனாவையும் அழைத்துக் கொண்டு, போலீசாருடன் மருத்துவமனைக்கு விரைந்தான்.


    அங்கு டாக்டரின் அறையில் டாக்டர்  தாமோதரன் கைகளில் இருந்து வழிந்த ரத்தமானது அவரின் உடல் முழுவதும் நனைத்திருக்க நேர் குத்திய பார்வையோடு விழுந்து கிடந்தார்


  "என்ன பாஸ் இது எங்க சுத்தினாலும் இந்த கேசு ஒரு முடிச்சுலேயே வந்து நிக்குது, மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நிற்கிறோம்." 

 

அன்று


  அடுத்த நாள் காலையில் சிவாவும் சித்ராவும் கிளம்பி வந்தபோது, ரேகாவும் நாகலிங்கமும் அவர்களின் வீட்டில் தான் இருந்தனர்.


    "டேய் நாகு, என்ன நீ இன்னும் கடைக்கு கிளம்பலையா? ரேகா நீ ஏன் இன்னும் ஆபீஸ் போகாம இங்க இருக்க?"


  "உடம்பு சரியில்ல மாமா அதுதான் லீவு போட்டு இருக்கேன். அண்ணே என்னை அங்க வீட்ல தனியா இருக்க வேண்டான்னு இங்க நம்ம  வீட்டுக்கு கூட்டிட்டு வந்துச்சு, நீங்க எப்ப மாமா ஊருல இருந்து வந்தீங்க? எங்கயாச்சும் வெளிய கிளம்பிட்டீங்களா?"


"ஆமா சித்ராவை செக்கப்பு கூட்டிட்டு போறேன்."


"என்னப்பா திடீர்னு செக்கப்புக்கு? ஏம்மா சித்ரா, வயித்துல  பிள்ளைக்கு ஏதாவது பண்ணுதா?"


    "அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, அவ ரொம்ப சோம்பலா இருந்த மாதிரி தெரிஞ்சது. அதுதான் செக்கப் கூட்டிட்டு போலாம்னு பார்த்தேன்."


      "சரிப்பா பாத்து  போயிட்டு வாங்க வயித்துக்பிள்ளைக்காரியை உக்கார வச்சு கிட்டு, வேகமா வண்டி ஓட்டாத மெதுவாவே ஓட்டிட்டு போ"


  சாந்தி இப்போதெல்லாம்  திருமணம் ஆன புதிதில் சித்ராவிடம் நடந்து கொண்டது போல, இப்போதெல்லாம் நடந்து கொள்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் அவள் வயிற்றில் வளரும் அவளின் குடும்ப வாரிசு தான். அதனாலேயே இப்போதெல்லாம் அவளை நன்றாக கவனிக்க ஆரம்பித்து விட்டார்.


  "சரிப்பா இட்லி ரெடியாயிடுச்சு சாப்பிட்டு கிளம்புங்க"


  "இல்லம்மா நாங்க கோயிலுக்கு போயிட்டு அப்படியே ஹோட்டல்ல பாத்துக்கிறோம்."


" சரிப்பா நல்ல ஹோட்டலா பார்த்து வாங்கி கொடு."


  அவர்கள் இருவரும் ரேகாவிடமும் தலையசைத்து விட்டு கிளம்ப, அவள் ஒரு குரோதத்தோடு வண்டியில் போகும் சித்ராவை பார்த்துக் கொண்டிருந்தாள்.


"என்னம்மா தங்கச்சி நீ இருக்க வேண்டிய இடத்துல அவ இருக்கா, அதை போய் ஆசையா பார்த்துட்டு இருக்க?"


"நீ வேற ஏன்ணே, என் வயிறு எரியுது. ஹாஸ்பிடல் தானே போறாங்க உடம்பு சரியில்லைன்னு சொல்றேன், ரேகாவையும் கூட்டிட்டு போங்கன்னு அத்தை சொன்னாங்களா? இல்ல அவ தான் சொன்னாளா? இப்பல்லாம் அத்தை கூட மாறிட்டாங்கண்ணே."


"நான் அப்பவே சொன்னேன் நீ தான் கேட்கல, அவ மச்சானை லவ் பண்றேன்னு சொன்னப்பவே, நீ நானும் அத்தானும் விரும்புகிறோம்னு சொல்லி இருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்குமா? இப்போ அவளுக்கு அந்த இடத்தை விட்டு கொடுத்துட்டு, நீ பார்த்துகிட்டு மட்டும் நிக்கிறே"


"எல்லாத்துக்கும் காரணம் நீ தான்ணே, நீ மட்டும் அன்னைக்கு பஸ்ல அவ கிட்ட மாட்டிக்காம இருந்திருந்தா, உன்ன பத்தி அவ கிட்ட நல்ல விதமா சொல்லி வச்சிருந்தேன், உனக்கு அவளை கரெக்ட் பண்ணி விட்டடிருப்பேன். நீ அவ வீட்டிலேயும் நான் இங்கயும் செட்டிலாகி இருக்கலாம். தேவையில்லாம பஸ்ல அவகிட்ட மாட்டி, போலீஸ் ஸ்டேஷன் போயி, உன்னை காப்பாற்றுவதற்காக அன்னைக்கு நான் அவ கிட்ட பொய் சொல்லி இதெல்லாம் தேவையா? நல்லவேளை இதுவரைக்கும் நம்ம மேல சந்தேகம் வராத மாதிரி நடிச்சுட்டு இருக்கிறதால, ஏதோ அவளும் நம்பிகிட்டு இருக்கா."


  "சரி விடு நடந்தது நடந்து போச்சு, எனக்கு என்ன தெரியும்? அவ அந்த பஸ்ல வருவான்னு? இப்பவும் உனக்கு வாய்ப்பு இருக்கு, அதை நான் கை கூட வைக்கிறேன். நீ வேணும்னா பாத்துக்கிட்டே இரு."


  சிவா சித்ராவை அழைத்துச் சென்றது சித்ராவின் அப்பாவுடைய கெஸ்ட் ஹவுஸ்க்கு தான். அங்கு அவளுக்காக அவளின் தாயார் காத்துக் கொண்டிருந்தார். அவரை கண்டவுடன் இவள் அவரைக் கட்டிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.


  சித்ராவின் பெற்றோருக்கு சித்ரா தான் அவர்களின் உயிர். அவளுக்காகவே அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவர்கள், கல்யாண விஷயத்தில் தங்களை ஏமாற்றி விட்டுச் சென்ற கோபத்தில், ஏதோ வாய்க்கு வந்தபடி அவளின் திருமணத்தன்று பேசி விட்டனர்.


    ஆனால் தன் பிள்ளை மீது கொண்ட பாசம் இன்னும்அவர்களை விட்டுப் போகவில்லை. சிவாவும் திருமணத்திற்கு பிறகு அவர்களை பல முறை வந்து பார்த்து தன் மீது தான் தவறு என்று கூறி மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தான். அவன் இருக்கும் அதே கட்சியில் தான் சித்ராவின் அப்பாவும் இருக்கிறார்.


    அவனுக்கு மக்களிடம் இருக்கும் நற்பெயரின் காரணமாக, அவனின் தொகுதியில் கட்சியின் சார்பில், கவுன்சிலர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் அவருக்கு தெரியும். அவனின் நல்ல மனதை பார்த்து இவர்களுக்கும் மனம் கனிந்து விட்டது. அத்தோடு தனது பிள்ளை கர்ப்பமாக இருப்பதை  கேள்விப்பட்ட பிறகும் கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டு இருக்க முடியுமா?


    சித்ரா ஹாலில் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த தனது தந்தையை நோக்கி வேகமாக செல்ல, படி தடுக்கி கீழே விழ இருந்தவளை, ஓடிவந்து பிடித்துக் கொண்டார் அவளின் தந்தை.


Monday, September 22, 2025

பிம்பம் 8


 

அத்தியாயம் 8


இன்று


  அந்த பௌர்ணமி இரவு பொழுதில் விக்ரம் புளிய மரத்தின் அருகே கண்காணிக்க செல்ல, ஜனா சிவாவின் கொல்லை புறத்தையும், நாகலிங்கத்தையும் கண்காணிக்க சிவாவின் வீட்டிற்கு வந்திருந்தான். விக்ரம் நினைத்தது போலவே, சிவாவின் வீட்டை விட்டுவிட்டு ரேகாவின் வீட்டை நோக்கித்தான் முதலில் ஜனா சென்றான்.


ரேகா தனது அத்தை சாந்தியிடம், தான் இன்று கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கூறிவிட்டு அவளின் வீட்டிற்கு வந்து விட்டால். சிவாவின் மெடிக்கல் ஷாப்பில் இருந்து எடுத்து வந்த மாத்திரைகளை முதலில் முழுங்கியவள், பிறகு போனில் யாருக்கோ அழைத்து தீவிரமாக பேசத் தொடங்கினாள். அப்போதுதான் ஜனாவும் ரேகாவை நோட்டம் விடத் தொடங்கினான்.


"ஹலோ நான் தான்."


"      "


    "அதெல்லாம் மாத்திரை போட்டுட்டேன், இங்க பாருங்க இதுக்கு மேல மறுபடியும் இதே மாதிரி என்னை பண்ண வைக்காதீங்க சொல்லிட்டேன்."


  "      "


    "புரியுது இதுல எனக்கும் பங்கு இருக்குது தான், இருந்தாலும் இப்படியே எவ்வளவு நாளைக்கு தான் இருக்கிறது? எப்ப தான் என்னை கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கீங்க?"


    " "


    "புரியுது, ஆனா இந்த மாதிரி மறுபடியும் என்னை கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட வைக்காதீங்க."


  "    "


  " சரி சரி நீங்க பாருங்க."


    கேட்டுக் கொண்டிருந்த ஜனாவிற்கு திக்கென்று ஆனது, அடிப்பாவி கரெக்ட் பண்ணலாம்னு வந்தா, இவ வயித்துல இருக்க குழந்தையை கலைக்க மாத்திரையை போட்டுட்டு உட்கார்ந்து இருக்கா? என்று அவன் மனதில் எண்ணிக்கொண்டான்.


    "இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி ரகசியமாக வாழ்க்கை நடத்துறது?  வர்ற கோபத்துக்கு அவனை குத்தி கொன்னுடலாமான்னு கூட தோணுது."


நான் வேணும்னா அதுக்கு உதவி பண்ணட்டுமா? 


  திடீரென்று தனது தலைக்கு மேலே கேட்ட சத்தத்தில், ரேகா அண்ணார்ந்து பார்க்க, அங்கு தலைகீழாக சித்ரா இவளைப் பார்த்தபடியே, உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள்.


  சித்ராவை பார்த்த ரேகா பயந்து போய் அப்படியே தரையில் விழுந்தால்,


   " சி…  சி…. சித்ரா நீ..  நீயா? நீ எப்படி இங்க? அதுவும் உத்திரத்துல?"


  என்னை உத்திரத்துல தானே கட்டி தொங்க விட்டீங்க? அப்புறம் நான் வேற எங்கு தொங்கறது?


  "சித்ரா என்னை எதுவும் பண்ணிடாத, ப்ளீஸ் என்னை எதுவும் பண்ணிடாத நான் கர்ப்பமா இருக்கேன் எனக்குள்ள குழந்தை இருக்கு."


    ஏன் நீங்க எல்லாரும் என்னை கொலை செஞ்ச போது, என் வயித்துல குழந்தை இல்லையா? நான் எவ்வளவு கதறுனேன்? அதுல ஒரு வார்த்தையாவது கேட்டியா? ஆமா எப்ப இருந்து உன் வயித்துல வளர்ற குழந்தை மேல, இப்படி திடீர்னு பாசம் வந்தது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட  அந்த குழந்தையை கலைப்பதற்கு தானே மாத்திரை போட்டே?


  சித்ரா உத்திரத்தில் இருந்து படிப்படியாக தொங்கிக் கொண்டே கீழே வந்தாள். கண்களின் சிவப்பு நெருப்பாக கொழுந்து விட்டு எரிய, ரேகாவை நெருங்கினால்,


      " சித்ரா ப்ளீஸ் என்னை விட்டுடு, எனக்கு எதுவுமே தெரியாது, நான் வேண்டான்னு தான் சொன்னேன் அவங்க தான் கேட்கல ப்ளீஸ் என்ன விட்டுடு."


    ரேகாவின் அண்ணன் நாகலிங்கம் சரியாக அந்த நேரம் வாசல் கதவை திறந்து கொண்டு, கீ கொடுத்த பொம்மை போல அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தான்.


  ரேகா அவனை அழைக்க அழைக்க, காது கேளாதவன் போல் சமையல் கூடத்திற்குள் நுழைந்தவன், ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு ரேகாவை நெருங்கினான். அவனது கண்கள் வழக்கத்துக்கு மாறாக நேர்குத்தி இருந்தது.


  " அண்ணே என்ன பண்ற? என்னை பாருண்ணே, நான் உன் தங்கச்சி."


    உங்க  அண்ணனால எப்படி ரேகா பார்க்க முடியும்? அவன்தான் அன்னைக்கு நான் நடைபிணமா தெரியணும்னு குத்துனானே, அதே ஊசியை தானே இப்போ அவனும் குத்தி இருக்கான். அதனால நான் சொல்றதை மட்டும் செய்யற பொம்மையா தான் இருப்பான். 


     உனக்கு தெரியாததா? இந்த மருந்து அவன் உடம்புல இருக்குற வரைக்கும் இப்படித்தான் இருப்பான்னு,  உங்க அண்ணே செஞ்ச பாவத்துக்கும், உனக்கு அண்ணனா பொறந்த பாவத்துக்கும் சேர்த்து, உன்னை இந்த கத்தியால குத்திட்டு ஜெயிலுக்கு போக போறான். அங்க  பைத்தியமாவே மாறி, தூக்கு போட்டுகிட்டு தன் உயிரை விடப் போறான். 


  நாகலிங்கம் தப்பித்த ஓட முயன்ற ரேகாவை பிடித்து அவளின் வயிற்றில் ஓங்கி ஓங்கி கத்தியால் குத்தினான். ரேகாவின் அலறல் அங்குள்ள நாய் மற்றும் கோட்டான்களின் ஒலியோடு சேர்ந்து, அந்த இடத்தையே மயான பூமியாக மாற்றியது.


    இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனா பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தான், ஜன்னலுக்கு வெளியே இருந்த இவனை திரும்பிப் பார்த்த சித்ரா,


  தேங்க்யூ ஃபார் யுவர் ஹெல்ப் பிரதர் 


  என்று கூறிவிட்டு மறைந்து போனாள், அடுத்த நிமிடமே ஜனாவும் அப்படியே மயங்கி சரிந்தான்.


  அடுத்த நாள் லாக்கப்பில் இருந்த அவனைப் பார்க்க வந்த விக்ரமிடம், நடந்த அனைத்தையும் கூறியவன்,


  "பாஸ் என்னை அநியாயமா இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்து, இப்படி என்னை பேய்க்கு பிரதர் ஆக்கிட்டீங்களே பாஸ்? இது உங்களுக்கே நல்லா இருக்கா?"


  "சரிடா சரிடா அந்த பொண்ணு ஒன்னைய பிரதராதானே சொல்லுச்சு, என்ன உன்னையும் சேர்த்து பேயவா மாத்திடுச்சு?"


  "எதே? யோவ் பாஸு மரியாதையா என்னை ஊருக்கு கொண்டு போய் விடுயா, எங்க அப்பா அம்மாக்கு ஒரே புள்ளையா நானு."


   "எது மரியாதையாவா?"


  "பாஸ் பாஸ் பயத்துல கொஞ்சம் ரெஸ்பெக்ட் குறைஞ்சிடுச்சு, அட்ஜஸ்ட் பண்ணி, என்னை முதல்ல எப்படியாவது வெளியே எடுங்க பாஸ்." 

    விக்ரம் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் தங்களது அடையாளங்களை காட்டி, சித்ராவின் கொலை சம்பந்தமான இன்வெஸ்டிகேஷன்காக வந்திருப்பதாக கூறவும் தான், ஜனாவை வெளியே விட்டனர்.


    பிறகு விக்ரமை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால், சித்ராவின் கேஸ் ஃபைலை அவனிடம் கொடுத்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.


அப்போதுதான் அந்த ஊரைச் சேர்ந்த, கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், அவர் உபயோகப்படுத்தும் மருத்துவ உபகரணங்களால், தன்னைத்தானே குத்திக் கொண்டு  தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வர, அனைவரும் அங்கே விரைந்தனர்.


அன்று


சித்ரா கத்த தொடங்கவும் அவளது வாயை பொத்திய சிவா,


  "ஐயோ சித்து ஏன் கத்துற? அம்மா வந்திட போறாங்க, நான் தான். அம்மா அங்க வெளிய பக்கத்து வீட்டில கதை பேசிட்டு இருந்தாங்க, என்னை பார்த்தா நான் ஊர்ல இல்லாதப்ப நடந்ததை எல்லாம் கதை கதையா சொல்வாங்க.


    அப்பறம் உன்னை இப்போதைக்கு பார்க்க விட முடியாதுன்னு தான்  மறைஞ்சு மறைஞ்சு வீட்டுக்குள்ள வந்தேன், உன்ன பாக்கலாம்னு ஆசையா ஓடி வந்தா நீ எங்க போன?"


  "நீங்களா? பக்கத்துல ரேகா வீடு வரைக்கும் போயிருந்தேன். ஆமா நீங்க வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு சொன்னீங்க?"


"ஆமா, ஆனா எனக்கு உன்ன பாக்கணும் போல இருந்துச்சு. அதோட  என் குழந்தைக்கு ஒழுங்கா நீ சாப்பாடு கொடுக்கிறது இல்லையாமே? என் கனவுல வந்து கம்ப்ளைன்ட் பண்ணினான். அதனாலதான் நான் நேரா இங்கே ஓடி வந்துட்டேன், டேப்லெட் எல்லாம் இங்க அப்படியே இருக்கு, நீ என்னதான் சாப்பிடற? ஆமா ஏன் ஒரு மாதிரி இருக்க? முகமெல்லாம் வாடி போய் இருக்கு ?முதல்ல கிளம்பு டாக்டரை போய் பார்த்துட்டு வரலாம்."


  சித்ராவிற்கு ரேகாவின் வீட்டில் தான் கண்டதை சிவாவிடம் கூற மனம் வரவில்லை, ஒருவேளை தான் தெரியாமல் கூட இவ்வாறு நினைத்திருக்கலாம், எதற்காக வீணாக ஒரு கல்யாணமாகாத அப்பாவி பெண்ணின் மீது பழி விழ வேண்டும் என்று, அதைப் பற்றி அவள் யாரிடமும் கூற விரும்பவில்லை.


   "ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க நான் நல்லா தான் இருக்கேன், இப்ப சாப்பிட்டுட்டு மாத்திரை சாப்பிடுவதற்கு மறந்துட்டேன், அவ்வளவுதான், இதோ இப்பவே போட்டுடறேன்."


  "இதையெல்லாம் கூடவா மறப்பாங்க? சித்து...., உனக்கு உங்க அம்மாவை பாக்கணும்னு ஆசையா இருக்கா? இல்லே... இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க, தான் பொறந்த வீட்டுல இருக்கணும்னு ஆசைப்படுவாங்க, ஆனா  எனக்காக தானே நீ உன் வீட்டை விட்டு வந்துட்டே.....அதுதான்.."


  "ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க, நீங்க என் கூட இருந்தா அதுவே எனக்கு போதும்."


"சரி நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு."


"சர்ப்ரைஸா என்னதுங்க அது?"


"அதுதான் சர்ப்ரைஸ்ன்னு சொல்லிட்டேனே, நாளைக்கு நீ துள்ளி குதிக்க போற பாரு, நாளைக்கு காலைல சாப்பிட்டு ரெடியா இரு, நம்ம வெளிய போக போறோம்."


    அடுத்த நாள் காலையில் அவன் கொடுத்த இன்ப அதிர்ச்சியை பார்த்து சித்ரா அழுதே விட்டாள்.


Thursday, September 18, 2025

பிம்பம் 7


 

அத்தியாயம் 7


இன்று

 

  "ஐயோ பாஸ் மறுபடியும் அந்த புளிய மரத்துக்கா? என்னால முடியாது, ரொம்ப போர்ஸ் பண்ணீங்க அப்புறம் இத்தோட இந்த ஜனா, உங்களோட உறவை முறிச்சுக்க வேண்டியதா இருக்கும் பரவால்லையா?"


  "நல்லதாபோச்சு அப்படி ஒரு நல்ல நாள் வராதான்னு, நான் எவ்வளவு நாளா ஏங்கிட்டு இருக்கேன் தெரியுமா? சரி எப்போ ஊருக்கு கிளம்பற?"


      " எதே ? என்ன பாஸ் பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டீங்க? நான் புளிய மரத்துகிட்ட தானே கண்காணிக்க மாட்டேன்னு சொன்னேன், அதுதான் எப்படியும் சிவா வீட்டையும் அந்த நாகலிங்கத்தையும்  இன்னைக்கு கண்காணிக்கனும்னு சொல்லி இருக்கீங்களே! நான் அங்க போறேன் நீங்க புளியமரத்து கிட்ட போங்க, அவ்வளவுதான் மேட்டர் சால்வ்டு. என்ன பாஸ் சந்தேகமா பார்க்கறீங்க நீங்க புளிய மரத்தைமட்டும் பார்த்தாபோதும் ஆனா நான் உங்களுக்காக சிவா வீட்டு கொல்லைபுறத்தையும் அந்த நாகலிங்கத்தையும் போய் கண்காணிக்கறேன் பாஸ்."


    "நீ நாகலிங்கத்தை தான் கண்காணிக்க போறயா? இல்ல அவன் தங்கச்சி ரேகாவை  பார்க்கனுங்கறக்காக போறேங்கறையா?"


  " பாஸ், என்ன பாஸ் உங்க ஜனாவை சந்தேகப்படுறீங்களா?"


  " ச்சே ச்சே சந்தேகமெல்லாம் கிடையாது, கன்ஃபாமா சொல்றேன், நேத்து அந்த அம்மா பேயை பத்தி சொன்னதும் மயக்கம் போட்டு விழுந்துட்டு, அந்த புள்ளையோட குரல் கேட்டதும், அடுத்த நிமிஷமே எழுந்துகிட்ட பாரு? அப்பவே தெரிஞ்சது, எப்படியும் நீ அந்த புள்ள பின்னாடி சுத்தி ஊர்க்காரங்க கையால செருப்படி வாங்கப் போறேன்னு."


    "போன இடத்துல நம்ம வேலையை தவிர வேற ஏதாவது வேலையை பார்த்து, சிக்கல்ல மாட்டிக்கிட்டு நின்னேன்னா, நான் எல்லாம் வந்து சிபாரிசு பண்ண மாட்டேன். போலீஸ் ஸ்டேஷனே கதின்னு கெடே."


"பாஸ் இருந்தாலும் நீங்க என்னை இவ்வளவு தெளிவா.... புரிஞ்சு வச்சிருக்க கூடாது."


  "இதெல்லாம் வக்கனையா பேசு, பேய் பத்தி காதால கேட்டா கூட மயக்கம் போட்டு விழுந்திரு, ஏதோ  கண்ணாலேயே பேயை பார்த்த மாதிரி."


"கிண்டல் பண்ணாதீங்க பாஸ்."


  "கிண்டலா? டேய் நான் உண்மையை சொல்லிகிட்டு இருக்கேன்."


  " போங்க பாஸ் போற இடத்துல எல்லாம் அந்த புளியமரத்தை பத்தியே பேசறாங்க, நீங்க எந்த நேரத்துல வாயை வச்சீங்களோ நாம விசாரிக்க போற இடத்திலே எல்லாரும் அந்த புளிய மரத்துக்கிட்ட பேயை பார்த்ததாவே சொல்றாங்க, இதுக்கு மேலயும் நான் மயக்கம் போடாம இருந்தா, அப்புறம் அந்த பேய்க்கு என்ன மரியாதைன்னு கேட்கறேன்."

   

    அன்று இரவு இருவரும் தத்தமது வேலையை முடிக்க, விக்ரம் புளிய மரத்தை நோக்கியும், ஜனா சிவாவின் வீட்டில் உள்ள அவனது பெட்ரூம்மை ஒட்டிய, கொல்லை புறத்திற்கும் சென்றனர்.


விக்ரமின் வாய் முகூர்த்தமோ என்னவோ! அடுத்த நாள் காலையில் விக்ரமுக்கு ஜனா போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாகத்தான் செய்தி வந்தது. ரேகா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததால், அவளது அண்ணன் நாகலிங்கத்தால் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்கள் வீட்டிற்கு அருகில் ஜனா மயங்கி விழுந்திருந்ததால், ஒருவேளை அவன் ரேகாவின் ரகசிய காதலனாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அவனை போலீஸ் ஸ்டேஷனில் அவர்களின் கஸ்டடியில் வைத்து விசாரித்து கொண்டு இருப்பதாகவும், செய்தி வந்தது.


அன்று


      சித்ராவின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு ஆதாரமாக அவள் கருவுற்றாள். இதை அறிந்ததும் சிவா அவளை தன் கைகளில் வைத்து தாங்கினான். பக்கத்து ஊரில் உள்ள பிரபலமான மகப்பேறு மருத்துவமனைக்கு அவளை மாதாமாதம் கூட்டிக்கொண்டு செக்கப்பிற்கு சென்று வந்தான்.


    இந்நிலையில்தான் கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நாள் வந்தது. சிவாவின் கட்சியில் அந்தத் தொகுதியின் சார்பாக அவனை முன்னிறுத்துவதாக அறிவித்தனர். அவன் கட்சி வேலையில் மூழ்க தொடங்கியதால், சித்ரா ரேகாவுடன் மருத்துவமனைக்குச் சென்று வந்தாள்.


  சித்ராவின் குடும்பமும் அரசியல் பின்னனியை கொண்டது தான். அவளின் தாத்தா உள்துறை அமைச்சராக இருந்தவர். ஆனால் அவளின் அப்பா கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மட்டும் பெயரளவில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார். ஏனோ அவருக்கு கட்சி மற்றும் பதவியில் பெரிதாக விருப்பம் ஏதுவும் இல்லை. அவரின் மகனோ நாடு தான் பெரிது, ஜாதி கட்சிகள் கூட தேவையில்லை என்று, அவரை எதிர்த்து கொண்டு ராணுவத்தில் சேர்ந்து விட்டார்.


  சித்ராவிற்கு சிவா அரசியலில்  ஈடுபடுவது பிடிக்கத்தான் இல்லை, இருந்தாலும் இது அவனது கனவு, தனது மக்களுக்காக போராடி மேலே வந்தவன் அதனால் அவனது விருப்பங்களுக்கு மதிப்பளித்து வந்தாள்.


  ரேகாவின் வீட்டிற்கு சித்ரா அவ்வளவாக செல்வதில்லை, தற்போது சிவா அரசியல் விஷயமாக வெளியூர் சென்ற காரணத்தால், நாகலிங்கம் தான் மேற்பார்வையாளராக இருந்து மருந்து கடையை பார்த்துக் கொள்கிறான். அதனால் தற்போதெல்லாம் அவன் தான், கணக்குகளை சரி பார்த்து விட்டு, கடையை பூட்டிக் கொண்டு வருகிறான்.


    ஒரு மாலை வேளையில் ரேகா ஆபீஸ்ஸில் இருந்து வீட்டிற்கு வந்திருப்பாள் என்று நினைத்து, அவளைப் பார்த்து வரலாம் என்று அவளது வீட்டிற்கு சென்றாள் சித்ரா.


  சித்ரா ரேகாவின் வீட்டை நெருங்கிய போது உள்ளிருந்து ஏதோ பேச்சு குரல் வந்தது போல இருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே ரேகாவின் பெயரை கூறியபடியே வீட்டின் கதவை தட்டினாள்.


  சிறிது நேரத்திற்கு பிறகு தான் கதவு திறக்கப்பட்டது. உள்ளிருந்து வந்த ரேகா இவளை கண்டு பதட்டமானால், பிறகு சட்டென்று முகத்தை மாற்றிக்கொண்டு அவளை வாசலிலேயே நிற்க வைத்து,


" என்ன சித்ரா அதிசயமா இருக்கு நான் வீட்டுக்கு வா வான்னு கூப்பிட்டா கூட வர மாட்டேன்னு சொல்லுவ, இன்னிக்கு நீயாகவே என்னோட வீடு தேடி வந்திருக்க? ஏதாச்சும் பிரச்சனையா? அத்தை ஏதாச்சும் உன்னை திட்டினாங்களா? இல்ல...உனக்கு உடம்புக்கு எதுவும்  சரியில்லையே?"


  "முதல்ல மூச்சை விடு ரேகா, இத்தனை கேள்வியை ஒட்டுக்கா கேட்டா, நான் எந்த கேள்விக்கு தான் ஆன்சர் பண்ண? சரி என்னை இப்படி வாசல்ல நிக்க வைக்கத்தான், வீட்டுக்கு வா வான்னு அத்தனை தடவை  கூப்பிட்டியா?"


வீட்டின் பின்வாசலில் இருந்து டொம் என்ற சத்தம் கேட்க,


   "என்னடி இது? பின்பக்கம் ஏதோ சத்தம் கேக்குது?"


"அது ஒன்னுமில்ல சித்ரா, அந்த பக்கமா பூனை ஒன்னு சுத்திக்கிட்டு இருக்கு, அதோட வேலையா இருக்கும்.நீ உள்ள  வா "


  ரேகாவின் வீடு மொத்தமாக மூன்று அறைகளைக் கொண்டது. ஒரு சமையல் கூடம்,ஒரு பெட்ரூம் மற்றும் பின்பக்க வாசல் கதவோடு கூடிய வரவேற்பறை. அந்தப் பின்பக்க வாசல் கதவு திறந்திருப்பது போல தோன்றியது.


  சித்ராவை வரவேற்பறையில் உள்ள சோபாவின் மீது அமர வைத்துவிட்டு, ரேகா அவளுக்கு குடிக்க  ஏதாவது கொண்டு வருவதாக கூறி, சமையல் கூடத்திற்கு சென்றாள்.


  சித்ரா அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிர் திசையில் தான் பெட்ரூம் இருந்தது. கதவு திறந்திருந்ததால் உள்ளே இருப்பது அப்படியே தெரிந்தது. அந்த அறையில் துணிகள் அங்கங்கே சிதறி கிடந்தன, அத்தோடு மது பாட்டில்களும் அதனை ஊற்றிக் கொடுக்கும் கோப்பைகளும் இருந்தன.


        சித்ரா இது ரேகாவின் அண்ணாவுடைய வேலையாக இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கையில், அதற்கு அருகில் பாதி எரிந்து கொண்டிருந்த சிகரெட் துண்டினை கண்டு நெற்றி சுருங்க யோசிக்க தொடங்கினாள்.


    ஏனோ அங்கு அமர்ந்திருப்பது முள்ளின் மீது அமர்ந்திருப்பது போன்று தோன்ற, ரேகாவை அழைத்து தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக கூறிவிட்டு, தனது இல்லத்தின்  கொல்லைபுறத்தை நோக்கி நடந்தாள்.


  அவளது பெட்ரூமுக்குள் யோசனையினோடே நுழைந்து கொண்டிருக்கையில், யாரோ அவளின் மீது வந்து விழ, பதறிப் போய் உரத்த குரலில் கத்த தொடங்கினாள்.

Sunday, September 14, 2025

பிம்பம் 6


 

அத்தியாயம் 6


இன்று


  மயங்கி விழுந்த ஜனாவை பார்த்து விக்ரம், இவனுக்கு இதே வேலையா போச்சு என்று புலம்பிக் கொண்டே அவனை எழுப்ப முயன்றான். இவன் மயங்கி  விழுந்ததைக் கண்டு மிரண்டு போன சாந்தி, உதவிக்கு அக்கம்பக்கத்தினரை அழைப்பதை பார்த்து,


"ஒன்னும் இல்லம்மா இவனுக்கு பேய்ன்னா கொஞ்சம் பயம், நீங்க சொன்னதைக் கேட்டு பயந்து போய் மயங்கி  விழுந்துட்டான் அவ்வளவுதான்." 


  கீழே விழுந்த ஜனாவை எழுப்பி மேலே படுக்க வைக்க முயன்றான் விக்ரம், ஆனால் ஜனாவினுடைய கனமான சரீரத்தின் பாரத்தை அவனால் தூக்க முடியவில்லை. 


சாந்தியின் குரல் கேட்டு அவரின் வீட்டுக்கு பின்புறம் இருந்த, சாந்தியின் அண்ணன் மகன் நாகலிங்கம் கொல்லைப்புறம் வழியாக பதறியபடி ஓடி வந்தான்.


  விக்ரமுக்கு ஆச்சரியமாக இருந்தது இப்போது தானே, நான் பார்த்துவிட்டு வந்தேன், பின்பக்க கதவு தாழிடப்பட்டு இருந்ததே? இவன் எவ்வாறு பின்புறம் இருந்து வருகிறான்? என்ற யோசனையில் சிந்தித்துக் கொண்டிருந்தான்.


  "என்னத்தே? என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்திகிட்டு இருக்கே?"


    "ஏண்டா நாகு, நீ நேர் வழியாவே வீட்டுக்குள்ள வரமாட்டியா? எப்ப பாரு பொடக்காலி(கொள்ளைபுறம்) வழியாவே உள்ள வாரே?"


  "நான் வீட்டை சுத்திட்டு வர்றதுக்குள்ள நேரம் ஆயிடும் அத்தே, இதுதான் ஷார்ட் கட்டு. அதனால தான் இந்த வழியா வந்தேன். முதல்ல என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்துனேன்னு சொல்லு?"


  "இவங்க நமக்கு தெரிஞ்ச பசங்கடா, இந்த தம்பி திடீர்னு மயக்கம் போட்டுருச்சு. அந்த தம்பியால தனியா இவரை தூக்கி, மேல படுக்க வைக்க முடியல, நீ கொஞ்சம் உதவி செய்டா, நான் போய் மருத்துவச்சியை  கூட்டிட்டு வாரேன்."


  "ஐயோ அம்மா, அந்த அளவுக்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல. ஏதோ பயந்து போய் மயக்கம் போட்டுட்டான், கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க, அது தெளிச்சா சரியா போயிடுவான்."


    இதோ கொண்டு வரேன் தம்பி என்று அவர் உள்ளே சென்று தண்ணீர் செம்போடு வெளியே வந்தார். அதை வாங்கி ஜனாவின் முகத்தில் தெளித்து அவனை மயக்கத்தில் இருந்து தெளிய வைத்த விக்ரம், அவனை அப்படியே எழுப்பி சோபாவில் சாய்த்து அமர வைத்தான்.


  " யார் அத்தை இவங்க? ஊருக்கு புதுசா இருக்காங்க?"


      "சொல்ல மறந்துட்டேன் பாரு, இவங்க கதை எழுதறவங்களாம், நம்ம பண்ணையார் தான், நம்ம ஊர் கோயிலை பத்தி எழுத வந்திருக்க இவங்களை, கீழ தெருவுல இருக்க மாறன் வீட்ல தங்கவச்சிருக்காரு. இன்னைக்கு கோயில்ல மயக்கம் போட்டு விழுக போன என்னை, இவங்கதான் பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டாங்க."


    "ஓஹோ"


    "வணக்கம் சார், என் பேர் விக்ரம், இவன் என்னோட ஜூனியர் ஜனா."


    "வணக்கம் என் பேர் நாகலிங்கம் இவங்களோட அண்ணன் பையன்."


    "ரேகா வந்துட்டாளாடா? ஊர் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து கும்மி அடிக்க போறாங்க? என்ன இன்னும் அவளை காணோம்?"


  "வந்திடுவா அத்தே, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்துட்டு இருக்கறதா எனக்கு போன் பண்ணினா, இதோ பாரு அவளே வந்துட்டா."


  "என்னாச்சுத்தே யார் இவங்க எல்லாம்?"


  சாந்தி கோவிலில் நடந்ததை பற்றியும் இவர்களை பற்றியும் அவளிடம் கூறினார்.


  "ரொம்ப நன்றிங்க சார், சரியான நேரத்தில எங்க அத்தையை காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க."


    "பரவால்ல மேடம் எல்லாம் ஒரு மனிதாபிமான செயல் தானே."


    ஒரு பெண்ணின் குரல் கேட்டவுடன் ஜனா தானாக கண்களை திறந்து, ரேகாவை கண்டுவிட்டு முகத்தை துடைத்தும் தலையை சீவியும் தன்னை சரி செய்து கொண்டு,


  " ஆமாங்க எல்லாமே ஒரு  மனிதாபிமான செயல்  தானே." 


  என்று ரேகாவை பார்த்து வழிந்து கொண்டே கூறினான்.


அன்று


  வீட்டை விட்டு வெளியேறிய சித்ரா நேராக சென்று நின்றது சிவப்பிரகாஷின் இல்லத்தில் தான். சிவா அவளது நிலையை புரிந்து கொண்டு, தனது அன்னையிடம் பேசி, அவசர திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான்.


    அவர்கள் திருமணம் சிவாவின் ஊரில் உள்ள ஒரு கோயிலில் நடந்தது. இந்த திருமணத்தில் சிவாவின் அம்மா சாந்திக்கு விருப்பமில்லை, அவர் சிவாவிடம் எவ்வளவோ போராடி மறுத்துப் பார்த்தார், உயிரை விட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி கூட பார்த்தார், ஆனால் அவன் நீங்கள் இதற்கு சம்மதிக்கவில்லை என்றாலும் சித்ராவை தவிர வேறு யாரையும் என் மனைவியாக  ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றதால், வேறு வழி இல்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டார்.


    அவர்களின் திருமணம் எளிமையாக கோயிலில் ஊர் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. விஷயம் அறிந்து வந்த சித்ராவின் பெற்றோர்கள் அவளை சரமாரியாக வசைப்பாடி விட்டு,  இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மண்ணைஅள்ளி அவள் மீது வீசி, சபித்துவிட்டு சென்றனர்.


        திருமணமான சில நாட்கள் சித்ராவிற்கு நன்றாகவே சென்றது. ஆனால் சிவா வீட்டில் இல்லாத நாட்களில் சாந்தி அவளிடம்  காட்டும் முகமானது வேறாக இருந்தது. அவள் எந்த செயலை செய்தாலும் குற்றம் கூறுவதும் திட்டுவதுமாகவே, அவளை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அத்தோடு ஒன்றுமாத்தி ஒன்றாக பல வேலைகளை அவளை செய்யுமாறு கூறிக் கொண்டே இருப்பார்.


  இது தெரிந்தது தான் என்றாலும் போகப்போக சித்ராவிற்கு மனதுக்கு சங்கடமாக இருந்தது. இதை பற்றி சிவாவிடம் கூறி பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்று அவளும் அவர் கூறும் வேலைகளை செய்து கொண்டேயிருப்பாள்.


  திருமணத்திற்கு பிறகு சித்ரா வேலைக்கு செல்வதை விட்டுவிட்டாள். சிவாவின் மெடிக்கல் ஷாப் சம்பந்தப்பட்ட கணக்குகளை வீட்டிலேயே சரி பார்த்து கொடுக்க ஆரம்பித்தால்.


      அங்குள்ள வேலையாட்களின் விவரங்களையும், மருந்து கடையில் உள்ள மருந்துகளின் ஸ்டாக் விபரத்தையும் கணினியில் ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்து கணினியில் அவற்றை சேமித்து  வைத்தாள்.


    அப்படி வேலையாட்களின் விபரங்களை கணினியில் பதிந்து கொண்டிருந்த போதுதான், அன்றொரு நாள் சிறுமியிடம்  தவறாக நடந்து கொண்ட காரணத்தால், தன்னால் போலீஸில் பிடித்துக் கொடுக்கப்பட்டவன் அவர்களின் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருப்பதை கண்டால்.


    அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ரேகா, இதுதான் தன் அண்ணன் என்று அவளுக்கு அறிமுகப்படுத்த, சித்ரா அதிர்ந்து தான் போனாள் .


  சித்ரா ரேகாவிடம் அவளது அண்ணனை பற்றி கூறலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பெரும் போராட்டமே  நடத்தினாள். ஏனென்றால் சித்ராவிற்கு தான் தெரியுமே ரேகாவிற்கு அவள் அண்ணன் என்றால் உயிர் என்று. அத்தோடு அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தமும் அவன் தான். எனவே சிவாவிடம் மட்டும் அவனை பற்றி மேலோட்டமாக சொல்லி வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள், ஆனால் அடுத்த நாளே ரேகாவின் அண்ணன் நாகலிங்கம் அவளை காணவந்தான்.


    வந்தவன் அவள் கால்களில் விழுந்து  தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். தற்போது தான் மாறிவிட்டதாகவும் இப்போதெல்லாம் அவ்வாறான தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் கெஞ்சினான். சிவாவிடமும் தன் தங்கையிடம் தன்னை பற்றி எதுவும் தவறாக கூறிவிட வேண்டாம் என்று அவளிடம் மன்றாடினான்.


      சித்ராவும் இனி ஒரு முறை இவ்வாறு நடந்து கொண்டால், அவர்களிடம் தெரிவித்து விடுவேன் என்று மிரட்டி, அவனை அனுப்பி வைத்தாள்.


Wednesday, September 10, 2025

பிம்பம் 5


 அத்தியாயம் 5


இன்று


    பிரகாஷின் அம்மா சாந்தி கோயிலுக்குள் பூஜைக் கூடையுடன் நுழைந்து கொண்டிருந்தார். மூலவர் சன்னிதியை நோக்கி சென்றவர், கண்களை மூடி இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார்.


  கோயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை, அங்கிருந்த ஒரு சில பெரியவர்களும், அங்கொருவர் இங்கொருவராக வெளிப்பிரகாரத்தில் தான் அமர்ந்திருந்தனர்.


  விக்ரமின் திட்டப்படி சாந்தி அம்மாவுக்கு எதிரில் வந்த நின்று ஜனா, தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே, சாந்தி கண்களை மூடி இறைவனை வேண்டிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, தன் கையில் உள்ள மயக்க மருந்து ஸ்பிரேயை சாந்தியை நோக்கி சிறிது சிறிதாக தெளித்தான்.


    விக்ரம் முன்னமே கூறியிருந்தான் அதிகமாக ஸ்பிரே செய்யாமல், சிறிது சிறிதாக அவருக்கு தலைசுற்றல் வரும் அளவுக்கு மருந்தை தெளித்தால் போதும் என்று.

 

சாந்திக்கு அருகில் தான் விக்ரம் நின்று கொண்டிருந்தான். அந்த மருந்தின் விளைவால், அவர் கண்கள் இருட்டிக் கொண்டு வர, ஒரு பக்கமாக சாயப்போனவரை தன் கைகளில் தாங்கிக் கொண்டான்.



  "அய்யோ அம்மா, என்னாச்சு உங்களுக்கு? இந்தாங்க இந்த தண்ணியை குடிங்க."


  விக்ரம் தனது பையில் இருந்து நீர் பாட்டிலை எடுத்து, அவருக்கு சிறிது தண்ணீர் புகட்டினான்.


      அவருக்கு சுயநினைவு இருந்தது, ஆனால் கண்களை தெளிவாக திறக்க இயலவில்லை, எழுந்து நிற்கவும் முடியவில்லை.


    "தெரியலப்பா, நல்லா தான் இருந்தேன், ஏனோ படபடன்னு கண்ணை இருட்டிக்கிட்டு வந்துடுச்சு.."


    "கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா சரியா போயிடும். வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன், ஜனா அம்மா கையில இருக்க பூஜை கூடையை வாங்கிக்கோ. நீங்க அட்ரஸ் சொல்லுங்கம்மா, நான் உங்களை வீட்டில் கொண்டு போய் விட்டுடறேன்."


      "பயப்படாதீங்கம்மா, நாங்க பண்ணையாருக்கு தெரிஞ்சவங்கதான். அவர்தான் எங்களை இங்க ஒரு வீட்டில் தங்க வைச்சிருக்கிறார். நான் ஒரு எழுத்தாளர், இந்த கோயிலை பத்தி கட்டுரை எழுதுவதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கேன்."


    அதன் பிறகு சாந்தி அம்மா தனது விலாசத்தை கூற, விக்ரம் மற்றும் ஜனாவின் உதவியோடு அவரது வீட்டிற்கு வந்தார்.


     " ரொம்ப நன்றிங்க தம்பி, நீங்க ரெண்டு பேரும் இல்லனா, நான் எப்படி வீடு வந்து சேர்ந்திருப்பேனோ எனக்கே தெரியல."


" உங்களுக்கு இப்படி அடிக்கடி வரும்மாம்மா? எதுக்கும் நீங்க டாக்டர் கன்சல்ட் பண்றது நல்லதுன்னு நினைக்கிறேன்."


        "நான் நல்லாத்தான் தம்பி இருந்தேன், எப்ப என் மகன் அந்த விளங்காதவளை கட்டிட்டு வந்தானோ? அப்ப இருந்து எங்க குடும்பத்துக்கு புடிச்சது சனி. இப்போ செத்துப் போய் கூட என் பையனை விட்டுப் போக மாட்டேங்குறா, எந்நேரமும் அவ நினைப்புலயே என் மகனும் சுத்திகிட்டு இருக்கான்."


    "ஓ அப்படியாம்மா, உங்க முதல் மருமக தான் இறந்துட்டாங்களே, அப்புறம் என்ன பிரச்சனை? நீங்க உங்க பிள்ளை கிட்ட சொல்லி வேறொரு கல்யாணம் செஞ்சுக்க சொல்லலாமே?"


    "அதெல்லாம் அவ போன ஆறு மாசத்தில இருந்தே, வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி, அவனை வற்புறுத்திட்டு தான் இருக்கேன். உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன தம்பி, என் அண்ணன் பொண்ணு கூட, இவனுக்காகவே காத்துகிட்டு இருக்கா. எங்க நாம சொல்றதெல்லாம் அவன் காதுல ஏறுனா தானே? ஆனா அந்த விஷயத்தை தவிர என் பையன் ரொம்ப நல்லவன் தம்பி. அவன் தலை எடுத்ததுக்கு அப்புறம் தான் எங்க வீட்டையே இடிச்சு மாற்றி கட்டினான். அதுக்கு முன்ன இது ஒரு ஓட்டு வீடா தான் இருந்தது. என் புள்ள தான் இது எல்லாத்தையும் தட்டி எடுத்துட்டு அப்படியே பில்லர் வைச்சு டார்ச் கட்டடம் போட்டான்."


  "வீடு ரொம்ப நல்லா இருக்கும்மா, நாங்க நகரத்துல வாழ்றவங்க, இந்த மாதிரி காத்தோட்டமா எல்லாம் வீடு பார்த்ததே இல்லை."


  " ஒரு நிமிஷம் இருங்க தம்பி. நான் உங்களுக்கு காபி தண்ணி கொண்டு வரேன்."


  "ஐயோ, உங்களுக்கு எதுக்கும்மா சிரமம்?"


  "அட நீங்க இருங்க தம்பி, இதுல என்ன சிரமம், என்னை இவ்வளவு பத்திரமா வீட்ல கொண்டுவந்து சேர்த்து இருக்கீங்க, உங்களுக்கு ஒரு டம்ளர் காபி கூட தராட்டி எப்படி? இருங்க வாரேன்."


  அவர் சமையல் அறையினுள் நுழைந்தவுடன் விக்ரம் அவசரமாக ஜனாவிற்கு கண்ணை காட்டி விட்டு, சித்ரா தற்கொலை செய்ததாக கூறப்படும் அந்த அறையை நோக்கி சென்றான். அந்த அறை அட்டாச் பாத்ரூமோடு இருந்தது. அவர்கள் அறையில் ஒரு பின்பக்க கதவும் இருந்தது. அதற்கு பின்புறம் கொல்லை புறமாகவும், அங்கே தனியாக பாத்ரூமும் இருந்தது. அந்த அறையை சுற்றி சுற்றி தேடியும் அவர்களின் திருமண புகைப்படம் ஒன்று கூட அங்கு இல்லை.


  ஜனா சிக்னல் கொடுக்க விக்ரம் உடனடியாக, அந்த அறையை விட்டு வெளியேறி, வரவேற்பறையில் ஜனாவிற்கு அருகில் வந்த அமர்ந்தான்.   


      சாந்தி அவர்களுக்கு குடிப்பதற்கு  காபியும், திருவிழாவிற்காக செய்த பலகாரங்களையும் கொண்டு வந்து அவர்களின் முன்பு அடுக்கினார்.


      "என்னம்மா உங்க பையனோட கல்யாண போட்டோ எங்கேயுமே இல்லை?"


    இதைக் கேட்டு சாந்தியின் முகம் தீவிரமானது


    "என்னாச்சும்மா? ஏன் உங்க முகம் பேய் அறஞ்ச மாதிரி இருக்கு? ஏதாச்சும் பிரச்சனையா?"


    "அதை ஏன் கேக்குறீங்க தம்பி அவ செத்துப் போய் ரெண்டு நாள் கழிச்சு, என் பையன் கிட்ட தேர்தல் சம்பந்தமா பேசணும்னு, கட்சி ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டு இருந்தாங்க. இவனும் என்ன பண்றதுன்னு தெரியாம மனசே இல்லாம தான் அங்க போனான்."


  " அன்னைக்கு ராத்திரி அவ தற்கொலை பண்ணிகிட்ட, ரூமுக்கு பின்னாடி இருக்க கொல்லை புறத்திலயிருந்து, ஏதோ சத்தம் கேட்டுச்சு. நான் என்னவோ ஏதோன்னு போய் பார்த்தான்ப்பா. என் பையன் ரூம்ல இருக்க பின்பக்க கதவு திறந்திருந்துச்சு.


     அங்க இருக்க மரத்துக்கு கீழே ஒரு உருவம் தலையை விரிச்சு போட்டு நிக்கிற மாதிரி இருந்துச்சு, உத்து பார்த்தப்ப தான் தெரிஞ்சது, செத்துப்போனவ கையில அவங்க கல்யாண போட்டோவை வைச்சிட்டு அதையே வெறிச்சு பார்த்துகிட்டு  இருந்தா!. எனக்கு ஈரகொலையே நடுங்கி போச்சு. அடுத்த நாளே பூசாரியை  கூப்பிட்டு அந்த புளிய மரத்துல ஆணிய வச்சு அடிச்சு புட்டேன். அதுக்கப்புறம் அவளை ஊருக்குள்ள யாரும் பார்க்கல, ஆனா அடிக்கடி அந்த புளிய மரத்துக்கிட்டு அவளை பார்த்ததா சொல்லிக்கிறாங்க."


    இவற்றை கேட்டுக் கொண்டிருந்த ஜனா, அப்படியே மயங்கி சரிந்து விட்டான்.


அன்று


    சிவப்பிரகாஷ் ஹாஸ்பிட்டலில் இருந்தவரை ரேகாவுடன் சேர்ந்து சித்ரா, தினமும் அங்கு சென்று அவனை நலம் விசாரித்து வந்தாள்.


    அவர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, இருவருக்கும் புரிதலை தாண்டிய ஒரு நல்ல நட்பு மலர்ந்தது. அவன் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்பும் கூட இவர்களின் நட்பு தொடர்ந்தது.


  சித்ராவும் சிவாவும் பேசும் போது ரேகாவின் பார்வை ஒருவித கோபத்தோடு சித்ராவை நோக்கி தான் இருக்கும். ஆனால் அது தனது கற்பனையோ என்று சித்ரா எண்ணுமாறு, மறு நொடியே தனது முகத்தை சீராக்கிக் கொண்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக பேசத் தொடங்கி விடுவாள்.


  கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் நட்பு காதலாக உருமாறி, இருவரின் மனதிலும் வேரூன்றி கொண்டிருந்தது.


      சித்ரா முதன் முதலில் சிவாவின் மீது தனக்கு ஏற்பட்டுள்ள காதலை, ரேகாவிடம் தான் கூறினாள். அவள் தனக்கு இது சந்தோஷமே என்று கூறிய பிறகு தான், தனது காதலை சிவாவிடம் வெளிப்படுத்தினாள்.


    இவர்களின் காதல் சித்ராவின் வீட்டிற்கு தெரிய வர, அவள் வீட்டு காவலில் வைக்கப்பட்டால். அவசரமாக அவளின் திருமணத்திற்காக, வரனும் பார்க்கப்பட்டு, தேதியும் குறிக்கப்பட்டது.


  தன் பெற்றோரிடம் எவ்வளவு போராடியும் அவர்கள், அவளின் கருத்துக்களை கேட்பதாகவே இல்லை.


  ராணுவத்தில் உள்ள தனது அண்ணனுக்கு செய்தி அனுப்பியும் அங்கிருந்து எந்தவித பதில் கடிதமும் வராததால், ஒரு முடிவோடு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் சித்ரா.


Monday, September 8, 2025

பிம்பம் 4


 

அத்தியாயம் 4


இன்று


      "என்ன பாட்டி சொல்றீங்க பேயாவா? இந்த ஊருக்கு வெளியே இருக்கே, அந்த புளியமரத்துலயா?"


    பாட்டி ஆம் என்று தலையசைத்ததை கண்டு, ஜனாவின் முகம் போன போக்கை பார்த்து, விக்ரமுக்கு அன்றைக்கு அந்த புளிய மரத்தை கட்டிக்கொண்டு ஜனா நின்ற நிலைதான், கண் முன்னே காட்சியாக விரிந்தது. வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு வாய்க்குள்ளேயே மறைத்துக் கொண்டான் விக்ரம்.


    "ஏன் பாட்டி, விருப்பப்பட்டு தற்கொலை பண்ணிக்கிட்டவங்க எதுக்காக காவு வாங்க துடிக்கனும்? யாராவது அவங்கள கொன்னிருந்தால் தான் அவங்களை பழி வாங்குறதுக்காக இப்படி பேயா அலைவாங்க?"


    "அது கொலையோ தற்கொலையோ யாருக்கு தெரியும்?"


    "ஏன் பாட்டி அந்த பொண்ணுக்கும் அவங்க வீட்டுக்காரருக்கும் ஏதாவது பிரச்சனையா?"


    "ச்சே ச்சே அவன் அந்த புள்ளையை தங்கமா தான் தாங்கினான். ஆனா அவ அத்தைகாரிக்கு தான், இவளை மருமகளா கூட்டிட்டு வந்ததே புடிக்கல. அவளுக்கு அவங்க அண்ணன் மகளை கட்டி வைக்கணும்னு ஆசை. ஆனா அந்த பையன் அவ அத்தை பொண்ணோட சிநேகிதியை இல்ல காதலிச்சு கூட்டிட்டு வந்துட்டான்."


  "அந்த அம்மா அவ்வளவு பெரிய கொடுமக்காரியா பாட்டி?"


  "பின்ன இல்லாமையா அவளோட புருசங்காரன் பாதியிலயே அவளை விட்டுட்டு, பரதேசம் போகணும். ஆமா நீங்க என்ன, கோயில பத்தி விசாரிக்க வந்துட்டு, இந்த புள்ளையை பத்தியே விசாரிச்சுட்டு இருக்கீங்க?"


    பாட்டி தனது மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டே, சந்தேக கண்ணோடு அவர்களைப் பார்த்து கேள்வி கேட்க,


    " அது....அது ஒன்னும் இல்ல பாட்டி நாங்க எழுத்தாளர்ன்னு சொன்னோம்ல, ஒருவேளை நீங்க சொல்ற கதை நல்லா இருந்தா, அதையே ஒரு புக்கா எழுதலாம்னு தான். அதனால தான் இவ்வளவு விரிவா கேட்டுட்டு இருக்கோம். அந்த புக்குல உங்க போட்டோவையும் நீங்க சொன்ன கதைன்னு சொல்லி போட்டார்லாம் சரியா, எங்க ஸ்மைல். சூப்பர் பாட்டி இந்த படத்தையே அந்த புக்குல போட்டர்லாம், நீங்க மேல சொல்லுங்க."


    அந்தப் பாட்டி வாயெல்லாம் பல்லாக தமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறத் தொடங்கினார்.


    பிரகாஷுக்கு  ஒரு மாமன் மகளும், மகனும் இருக்கிறார்களாம். தனது அண்ணனின் மறைவுக்குப் பிறகு தாய் இல்லாத அவர்களை தமது வீட்டிற்கு பின்னால்  குடிவைத்து,  பாதுகாத்து வளர்த்து வருகிறார் பிரகாஷின் தாயார்.


    சிறுவயதில் இருந்தே தனது அண்ணன் மகளே, தனக்கு மருமகளாக வரவேண்டும் என்று அவருக்கு ஆசை. ஆனால் தனது மகன், அவளின் தோழியை தனது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பான் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லையாம். தனது மகனுக்காக அவளை ஏற்றுக் கொண்டாலும், அவன் இல்லாத பொழுதுகளில் முகத்தை காட்டவும் செய்வாராம்.


    சித்ராவுக்கு பைத்தியம் பிடித்து தன் பிள்ளையை விட்டு ஓடிப் போக வேண்டும் என்று, இந்த ஊரில் உள்ள குடுகுடுப்பைகாரனிடம் சென்று சித்ராவிற்க்கு சூனியம் கூட வைத்தாராம்.


    "பாஸ் நம்ம வந்த வேலை சிறப்பா முடிஞ்சது போல, நம்ம தேவைக்கு மேலயே நிறைய இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு."


  "இல்ல ஜனா, இங்க நாம வந்த வேலை இன்னம் முடியல. இப்பதான் ஆரம்பிக்க போகுது."


    "என்ன பாஸ் சொல்றீங்க ? அதுதான் தேவையான எல்லா விஷயத்தையும் இந்த பாட்டிங்க கிட்ட இருந்து வாங்கியாச்சே?"


    " நான் இங்க வந்ததுக்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கு. அதோ வராங்க பாரு அவங்க தான் பிரகாஷோட அம்மா சாந்தி. இன்னைக்கு எப்படியாவது அந்த வீட்டுக்குள்ள போய் சித்ரா தற்கொலை பண்ணிக்கிட்டதா சொன்ன இடத்தை பார்த்தாகணும் நமக்கு அங்க ஏதாவது க்ளூ கிடைக்க வாய்ப்பு இருக்கு."


    "என்ன பாஸ் இவங்க பார்க்கிறதுக்கு நம்ம ஊர் சொர்ணாக்கா மாதிரி இருக்காங்க, இவங்களுக்கு யாரு சாந்தின்னு பேர் வைச்சது. சரி பிளான் போட்டுட்டீங்களா, இல்ல இனிமேல் தானா?"


  "பிளான் ரெடி தான் ஜனா. நான் சொல்ற படி செய்."


அன்று


    சிவப்பிரகாஷ் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் தோழிகள் இருவரும் சென்றனர். இன்னும் அவன் கண்விழிக்காததால் அவன் அருகில் நின்று கொண்டிருந்த நண்பர்களிடம் இது எப்படி ஆனது என்று விசாரிக்க, 


  "நம்ம மாரியோட தங்கச்சி வீட்டுக்காரர் இருக்காருல்ல, அவருக்கு அவங்க அம்மா அப்பா பணத்துக்கு ஆசைப்பட்டு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறதா இருந்தாங்க, அதை தடுத்து நிறுத்துற தகராறுலதான் சிவாக்கு இப்படி அடிபட்டுடுச்சு."


        இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு கண்விழித்தன் சிவப்பிரகாஷ்.


      "எதுக்கு மாமா உனக்கு இந்த தேவையில்லாத வேல? யார் எப்படி போனா உனக்கு என்ன? அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் வேற  கல்யாணம் பண்ணிக்கிட்டான்னா, அது அவங்க குடும்ப பிரச்சினை, அதுக்குள்ள நீ ஏன் போய் தலையை விடற? பாரு இப்ப எப்படி அடிபட்டு வந்து படுத்து கிடக்கேன்னு?"


  "என்ன ரேகா இப்படி சொல்லிட்ட? நாளைக்கு உனக்கே புகுந்த வீட்ல ஒரு பிரச்சனைனாலும், நான் முன்னாடி வந்து நிற்க மாட்டேனா? அந்த பொண்ணும் எனக்கு அப்படித்தான். கண்ணுக்கு  முன்னாடி ஒரு அநியாயம் நடக்கும்போது அதை எப்படி தட்டி கேட்காம இருக்க முடியும்." 


  "அதுவும் அந்த பொண்ணுக்கு ஒரு வயசுல குழந்தை இருக்கு, அதை கூட மறந்துட்டு அந்த ஆளு, இன்னொரு கல்யாணம் பண்ணிக்க நினைச்சான், பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? அதுதான் போலீஸோட போயி சண்டை போட்டு, அந்த கல்யாணத்தையே நிறுத்திட்டேன்."


  அப்போது சிவப்பிரகாசத்தின் தோழனான மாரி, அறைக்குள் நுழைந்து, அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்து விட்டான்.


    "நீ மட்டும் இல்லைனா, என் தங்கச்சியோட வாழ்க்கையே பாழா போயிருக்கும் சிவா. இப்போ மாப்பிள்ளையோட குடும்பம் பூராவும் போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்காங்க. எங்க கிட்ட சமாதானமா போக பேச்சு வார்த்தை நடத்துறாங்க, இனிமே என் தங்கச்சியோட ஒழுங்கா வாழ்வேன்ன்னு, மாப்பிள்ளை போலீஸ் முன்னாடி உறுதி கொடுத்திருக்காரு. இது எல்லாமே உன்னால தான் சிவா நடந்தது."


  "மாரி ஒழுங்கா விசாரிச்சுட்டு  உன் தங்கச்சியை அங்க அனுப்பு. இப்போ சமாதானமா போற மாதிரி கூட்டிட்டு போய்ட்டு, பின்னாடி வேற ஏதாவது செய்திட போறாங்க. அதனால உன் கண்காணிப்பிலேயே உன் தங்கச்சியும் அவர் வீட்டுக்காரரும் இருக்கிற மாதிரி வேற வீட்டில் குடி வச்சுக்கங்க."


    மாரி அவனிடம் சரி என்று சொல்லிவிட்டு, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்ததால், மறுபடியும் பலமுறை நன்றிகள் கூறிவிட்டு, அங்கிருந்த அவசரமாக சென்றான்.


  " இந்த டைம்ல எதுக்காக ரேகா தனியா வந்தே?"


  "இல்ல மாமா இவ என்னோட பிரண்டு பேரு சித்ரா, இவ கூட தான் இங்க வந்தேன்."


  " சரிம்மா  நான் இங்க பாத்துக்குறேன். முதல்ல நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. லேடிஸ் மட்டும் இப்படி தனியா வெளியே வராது நல்லது இல்ல."


  "ஏன் சார் ஆம்பளைங்க மட்டும் தனியா வெளியே சுத்தலாமா? நாங்க ஹாஸ்பிடலுக்கு தனியா வர்றது கூட குத்தமா?"


  "நான் அதை குத்தம்னு சொல்லலைங்க, நம்ம சேஃப்டிய நாம தானே பார்த்துக்கணும். அப்பா அம்மா கிட்ட நீங்க இங்க வர்றீங்கன்னு சொல்லிட்டு வந்தா அது ஒரு சேப்டி, எதுவுமே சொல்லாம, நீங்க இப்படி இங்க ஹாஸ்பிடல் வந்ததை வேற யாராவது பார்த்து, வீட்டுல சொன்னா தேவையில்லாம பொண்ணுங்களோட பேரு தான் கெட்டுப் போகும். 


     நம்ம சமூகத்துல ஒரு தடவை ஒரு பொண்ணுக்கு பெயர் கெட்டுட்டா, அது அப்படியே நின்னு போயிடும். ஆனா இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளைங்களுக்கு கிடையாது, அது என்னவோ நம்ம சமூகத்தோட டிசைன் அப்படி. சரிங்க நீங்க கிளம்புங்க, டேய் போய் ஆட்டோ கூட்டிட்டு வந்து, அவங்களை பத்திரமா வண்டி ஏத்தி விட்டுட்டு தான், நீங்க உள்ள வரணும்."


  பெண்கள் என்றால் போதைப் பொருளாக நினைக்கும் ஆண்களும் உண்டு, எட்ட நிறுத்தி வேறுபாடு பார்க்கும் ஆட்களும் உண்டு. ஆனால் இவனது அணுகுமுறை சித்ராவுக்கு புதிதாகபட்டது. அனைவரிலும் இருந்து இவன் தனித்து தெரிந்தான்.


  அவனின் உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு தலையசைப்போடு  ரேகாவுடன் ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தாள்.


Saturday, September 6, 2025

பிம்பம் 3


 

             அத்தியாயம் 3


இன்று


  "ஏன் பாஸ், இது உங்களுக்கே நல்லாருக்கா? இப்படி கோயில் கோயிலா என்னை சுத்த வைக்கிறீங்களே? இது உங்களுக்கே நியாயமா படுதா?"


  "விட்றா நீ செஞ்ச பாவமெல்லாம் இதுனாலயாவது கரையட்டும்."


  "எது? பாவமா? அப்பழுக்கில்லாத இந்த பச்ச குழந்தையை போய் இப்படி சொல்லிட்டீங்களே பாஸ்? என்னால தாங்க முடியல?"


  "உன் பெர்ஃபார்மன்ஸை நிறுத்திட்டு வந்த வேலையை பார்க்கறியா?"


    "இங்க யாருகிட்ட போய் கேட்கறது? அங்கங்க ரெண்டு ரெண்டு பாட்டிங்களா சேர்ந்து உட்கார்ந்து, வெத்தலையோட ஊர் நாயத்தையும் சேர்த்து இடிச்சிகிட்டு இருக்காங்க."


    "அவங்க தான் நம்ம டார்கெட். அவங்களுக்கு தெரியாம ஊருக்குள்ள ஒரு விஷயமும் நடக்காது. போலீஸ்க்கு தெரியாத விஷயம் கூட இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இவங்கதான் இந்த ஊரோட 24 ஹவர்ஸ் சிசிடிவி கேமரா."


  "அது... சரி... ஆமா என்ன கோயிலுக்குள்ள  ஃபுல்லா பெருசுங்களா இருக்கு. ஒரு பாவாடை தாவணியை கூட காணோமே? சரி முறைக்காதீங்க பாஸ் வந்த வேலையை கவனிக்கிறேன்."


    "இந்த ஊர்ல நடக்கற பௌர்ணமி பூஜை, ரொம்ப விசேஷம். அதுவும் சித்ரா பௌர்ணமிக்கு எப்பவும் ஊரே திரண்டு வந்து விழா எடுத்து கும்பிடுவாங்க. இன்னைக்கு சித்ரா பௌர்ணமி, காலைல இருந்தே ஊர்ல இருக்குற பெரியவங்க எல்லாரும் கோவில்ல தான் இருப்பாங்க. சாயந்திர நேரம் தான் கன்னிப்பெண்கள் எல்லாரும் ஒன்னு கூடி கும்மி அடிப்பாங்க."


  "ஓ அப்ப நமக்கு சாயந்திரமும் இங்க வேலை இருக்குன்னு சொல்ல வர்றீங்க, ஓகே பாஸ் நான் வாயை மூடிக்கிறேன், யூ ப்ரோசீட்."


    விக்ரம் மரத்தடியில் அமர்ந்திருந்த பாட்டிகளில் ஒருவரை நோக்கி சென்றான்.


  "என்னப்பா எந்த டிவி சேனல்ல இருந்து வந்திருக்கீங்க?... இல்லே ஏதும் பத்திரிகையில இருந்து வந்திருக்கீங்களா?"


    விக்ரமும் ஜனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு,


    " பாட்டி நாங்க எந்த டிவி சேனல்ல இருந்தும் வரல, பத்திரிக்கையில் இருந்தும் வரல. இவர் ஒரு எழுத்தாளர் உங்க கோயில பத்தி புக் எழுத போறாரு. இந்த கோயிலை பத்தி தெரிஞ்சுக்கத் தான், உங்ககிட்ட வந்திருக்காரு. உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை எல்லாம் சொல்லுங்க, அது எங்களுக்கு புக் எழுத உதவியா இருக்கும்."


  "ஓஹோ… அப்பறம் எதுக்கு உன் கையில படம் புடிக்கிற பொட்டியை வச்சிருக்கே?"


  "இந்தக் கோயிலை போட்டோ எடுக்கறதுக்கு தான் பாட்டி இது. சரி இந்த கோயிலை பத்தி சொல்லுங்க, இங்க சித்ரா பௌர்ணமி அப்போ நடக்குற திருவிழா, ரொம்ப விசேஷமாமே?"


    "ஆமா ஆமா இங்க சித்ரா பௌர்ணமி விழா ரொம்ப சிறப்பா தான் நடந்துகிட்டு இருந்துச்சு, ஆனா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி திருவிழா அப்போ, அந்த சம்பவம் நடந்ததிலிருந்து, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இந்த ஊர்ல இருக்க யாரும் ஆறு மணிக்கு மேல வெளியே வர்றதே இல்ல."


  இது அவர்களுக்கு கிடைத்த புதிய செய்தி.


  "என்ன பாட்டி சொல்றீங்க? அப்படி என்ன நடந்துச்சு? எதுக்காக பௌர்ணமி நாள் அன்னைக்கு மட்டும் ஆறு மணிக்கு மேல வெளியே வர மாட்டாங்க?"


  "அது....... ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி....... ,சித்ரா பௌர்ணமி அன்னைக்கு வயித்துப்புள்ளகாரி தற்கொலை பண்ணிக்கிட்டா இல்ல, அவ ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஆவியா வந்து காவு கேட்கிறதா ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க. ஒவ்வொரு மாசமும் பௌர்ணமி அப்போ ஊருக்கு முன்னாடி இருக்க அந்த புளியமரத்துகிட்ட, நிறைய பேர்  அவளை பார்த்ததா கூட சொல்லியிக்காங்க.


      இன்னைக்கு எப்படியும் ஆறு மணிக்கு முன்னவே கும்மி அடிச்சு முடிச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா அந்த புள்ள இறந்து போன நாள் இன்னைக்கு தான். இன்னையோட ரெண்டு வருஷம் ஆயிடுச்சு."


அன்று


  சித்ராவும் ரேகாவும் அலுவலகம் முடிந்து பஸ்ஸிற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.


    "ஏண்டி நாங்க தான் வேற வழி இல்லாம, இந்த கூட்ட நெரிசல்ல வந்துட்டும் போயிட்டும் இருக்கோம். உனக்கென்னடி உங்க அப்பாட்ட சொன்னா, ஒரு காரையே டிரைவரோட ஏற்பாடு பண்ணி தருவாரே, அப்புறம் எதுக்காக இந்த கூட்ட நெரிசல்ல சிக்கிகிட்டும், நிறைய இடி மன்னர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிகிட்டும்னு, இவ்வளவு கஷ்டப்படுற?"


    "ரேகா பணத்தால எல்லாத்தையும் வாங்கிட முடியாது, அனுபவம் தான் நம்ம வாழ்க்கைக்கு தேவையான, உண்மையான பயிற்சியை கொடுக்குது. அதை நான் நேரடியா ஃபேஸ் பண்ணனும்னு நினைக்கிறேன். வாழ்க்கையை வழி நடத்த ஒரு சில அனுபவங்கள் தான் நமக்கு உதவிகரமாக இருக்கும். அது எனக்கு இந்த பயணத்தின் போது கிடைக்குது."


  "தாயே தெரியாம கொஸ்டின் கேட்டுட்டேன் என்னை விட்டுடு ஆத்தா, ஒரு கேள்வி கேட்டது குத்தமாடி? இப்படியா இவ்ளோ பெரிய லக்சர் கொடுப்பே?"


  "ரேகா, வீட்டுக்கு வெளியே தான் நான் நானாக இருக்கேன். வீட்டுக்குள்ள போயிட்டா தங்க கூண்டுல அடச்ச கிளியோட கதைதான். வீட்ல யாரும் என்னோட சொல்ல மீறி நடக்க மாட்டாங்க தான், இருந்தாலும் அவங்களுக்காகவே அவங்க சொல்ற பேச்சை மட்டுமே கேட்டு நடந்துக்குவேன். அதனாலதான் வெளியே என்ன பிரச்சனை நடந்தாலும், என் மேல எந்த தப்பும் இருக்காதுன்னு என்னோட அப்பா அதுக்கு முழுசா சப்போர்ட் பண்றாரு.?"


  "அப்போ மேடம் வீட்டில எலி வெளியில புலின்னு சொல்ல வர்றீங்க அப்படித்தானே ?"


  "ம்ம்ம், உறுதியா கிடையாது ஆனா  கிட்டத்தட்ட அப்படிதான்."


  இதைக் கேட்டு முறைத்துக் கொண்டிருந்த ரேகாவின் போன் இசைத்தது. அதை எடுத்துப் பேசிய ரேகாவின் முகம் கலவரத்தை தத்தெடுத்துக் கொண்டது.


  "என்னாச்சு ரேகா ஏதாச்சும் பிரச்சனையா?"


    "ஆமா சித்ரா, நான் சொல்லி இருக்கேன் இல்ல, என்னை எடுத்து வளர்த்த அத்தை பத்தி, அவங்க தான் கூப்பிட்டு இருந்தாங்க. அவங்க பையனை இங்க பக்கத்துல ஏதோ ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் பண்ணி இருக்கிறதா, அவங்களுக்கு போன் வந்துச்சாம்."


  "என்னாச்சு அவருக்கு? எதுக்காக அட்மிட் பண்ணி இருக்காங்களாம்?"


  "அத்தைக்கும் அது பத்தி சரியா தெரியல? நான் இப்ப போய், நேரா எங்க மாமாவை ஹாஸ்பிடல்ல பார்த்து, என்னன்னு தெரிஞ்சுகிட்டு தான், அவங்களுக்கு திருப்பி கூப்பிடனும்."


" சரிப்பா நானும் உன் கூடயே வரேன், ஹாஸ்பிடல் நேம் கேட்டியா?"


  "கேட்டேன், பக்கத்துல இருக்குற அக்ஷயா நர்சிங் ஹோம்ல தான் சேர்த்திருக்காங்களாம்."


  "சரி, அந்த ஹாஸ்பிட்டல் இங்கிருந்து பக்கம் தான். வா நடந்தே போகலாம்."


  அக்ஷயா நர்சிங் ஹோமில் அறை எண் முன்னூற்று ஐந்தில் தலையில் கட்டுடன் படுத்திருந்தான் சிவா என்கின்ற சிவப்பிரகாஷ்.

Thursday, September 4, 2025

பிம்பம் 2

 



அத்தியாயம் 2

இன்று


  "பாஸ் என்ன பாஸ் இது, அந்த பண்ணையார்கிட்ட சொல்லி வீட்டை ஏற்பாடு பண்ண மாதிரி, சமையலுக்கும் யாரையாவது ஏற்பாடு பண்ணியிருக்கலாம்ல? இப்ப பாருங்க உங்க கையால தோசையை சுட்டு தர சொன்னா, அந்த தோசைக்கல்லையே எடுத்துக் கொண்டு வந்து வைக்கிறீங்க. எப்படி பாஸ் இது எல்லாத்தையும் திங்கிறது?"


    "உனக்கு வேண்டாட்டி எழுந்து போடா, போய் பட்டினியாக்கிடா. இங்க உனக்கு நான் பாஸா, எனக்கு நீ பாஸானே தெரியல? எல்லா வேலையும் நானே செஞ்சிட்டு இருக்கேன். நீ உக்காந்து குத்தமா சொல்லிக்கிட்டு இருக்க? எழுந்து போடா முதல்ல."


  "ஐயோ எதுக்காக இப்படி எல்லாம் பெரிய வார்த்தை பேசறீங்க. சாப்பாட்டை எப்பவும் வேஸ்ட் பண்ண கூடாது, தோசை நடுவுல தான் கருகியிருக்கு, பரவால்ல விடுங்க. அதை பிச்சு போட்டுட்டு சுத்தி இருக்கிறதை சாப்பிடலாம். ஓ! இதுதான் தேங்காய் சட்னியா? முறைக்காதீங்க பாஸ், என்ன கலர்ஃபுல்லா இருக்குது… வெள்ளை வெளையேன்னு."


  "திங்கிறத்துலயே குறியா இரு, நான் உன்கிட்ட நேத்து என்ன சொன்னேன்? போலீஸ் ஸ்டேஷன் போய் அங்க நமக்கு சாதகமாக ஒரு ஆள புடிச்சு, இந்த தற்கொலை கேஸ் பத்தி அவங்க என்ன எஃப் ஐ ஆர் பைல் பண்ணி இருக்காங்கன்னு, விசாரிச்சுட்டு வர சொன்னனா இல்லையா?"


    "அதெல்லாம் விசாரிச்சிட்டேன் பாஸ். நீங்க நேத்து கொஞ்சம் லேட்டா வந்தீங்க, அதனால தான் நான் தூங்கிட்டேன்.


    அந்த பொண்ணு ரொம்ப நாளாவே தனக்கு தானே, தனியா பேசிட்டு இருந்திருக்கு. கோவில்ல ஒரு நாள் அந்த பொண்ணோட புடவையில நெருப்பு புடிச்சுகிச்சாம், சுத்தி இருந்தவங்க பதறிப் போய் அந்தப் பொண்ணுகிட்ட, சொல்லிக் கூட கேட்காம,  நெருப்பு புடிச்ச புடவையோடவே நடந்து போயிட்டு இருந்திருக்கு. அங்கிருந்த மத்த ஆட்கள் தான் தண்ணியை எடுத்து, அந்த பொண்ணு மேல ஊத்தி, காப்பாத்தி இருக்காங்க.


    அதுக்கு கூட எந்த ரெஸ்பான்சும் பண்ணாம, அந்த பொண்ணு பாட்டுக்கு நடந்து போயிடுச்சாம். அந்தப் பொண்ணு சாகும்போது மெண்டலி ஸ்ட்ராங்கில்லையாம். ஏதோ தெரியாத்தனமா சுருக்கு போட்டு மாட்டி இருக்கும் போல, அதுதான் மூச்சு திணறி இறந்திருக்கு.


     அந்தப் பொண்ணு வயித்துல இருந்த எட்டு மாச கருவும், அந்த பொண்ணோடவே மூச்சுத் திணறி செத்துப் போயிடுச்சுன்னு எஃப் ஐ ஆர் ஃபைல் பண்ணி வச்சிருக்காங்க பாஸ். சரி நீங்க போன வேலை என்னாச்சு பாஸ், அந்த பொண்ணோட ஹஸ்பண்டை பார்த்தீங்களா?"


  "பார்த்தேன், அவங்க குடும்பத்தை பத்தியும் வெளிய லைட்டா விசாரிச்சேன், எல்லாரும் நல்லவிதமா தான் சொல்றாங்க. அந்த பொண்ணுக்கும் அவருக்கும் நடந்தது லவ் மேரேஜாம். பொண்ணு வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க. இந்த பொண்ணோட அப்பா, ஏதோ ஜாதி கட்சி தலைவர் போல, அதனால அவங்க கல்யாணத்தப்ப ஊர் முன்னாடி அந்த பொண்ணையும் பையனையும் கண்டபடி திட்டி, இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு, அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டு போயிட்டாங்களாம்.


அந்தப் பையன் பேரு பிரகாஷ். இந்த மாவட்ட இளைஞரணி தலைவரா இருக்கான். கட்சியில இருந்தாலும் ஒரு மெடிக்கல் ஷாப்ல நாலு பேரை வேலைக்கு வைச்சு நடத்திகிட்டு இருக்கான். இந்த தடவை கட்சி சார்பா அவனுக்கு கவுன்சிலர் பதவி கிடைக்கும்னு பேசிக்கிறாங்க. இதுக்கு முன்னாடியே நிறைய தடவை அந்த வாய்ப்பு வந்து, பல அரசியல் காரணங்களால தட்டி போனதா பேசிக்கிட்டாங்க. இந்தப் பையனும் அந்த பொண்ணை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாதாத்தான் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க" 


  அப்போது வெளியிலிருந்து யாரோ அழைக்கும் சத்தம் கேட்க, இருவரும் வாசலுக்கு வெளியே சென்று பார்த்தனர்.


    "அண்ணே என்னை பண்ணையார் அனுப்பி வச்சாருங்கண்ணே. நீங்க இங்க இருக்கிற வரைக்கும் உங்களுக்கு சமைச்சு போடுறதுக்காக."


  இடுப்பில் உள்ள குழந்தையை தனது முந்தானையால் மூடியபடி நின்று கொண்டிருந்த இந்த இளம் பெண்ணை பார்த்து விக்ரம்,


    " வேலைக்கு வர்றது சரிதாம்மா, ஆனா நீ கை குழந்தைய வச்சுகிட்டு எப்படி எங்களுக்கு சமைச்சு போடுவே?"


  "அண்ணே  எம்புள்ள உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டான்ணே. அவன் பாட்டுக்கு சிவனேன்னு இருப்பான். நான் அதுக்குள்ள உங்களுக்கு சமைச்சு வெச்சிட்டு, வீட்டுல இருக்க மேல் வேலை எல்லாம் பார்த்திடுவேன். சம்பளம் கூட நீங்க ஏதாச்சும் பார்த்து கொடுத்தால் போதுங்கண்ணே. அதை வைச்சு என் மகனுக்கு ஏதாவது வாங்கிக்குவேன்."


  "சரிம்மா, நீ சமையல் வேலையை மட்டும் பார்த்துக்கோ, குழந்தையை வச்சிட்டு வேற எதுவும் மேல் வேலை பார்க்க வேண்டாம். துவைக்கிற வேலை எல்லாம் நாங்களே பார்த்துக்குறோம் சரியா. நாளைல இருந்து வேலைக்கு வந்திடும்மா. ஆமா உன் பேர் என்ன?"


  "தேவி ண்ணே"


    " கைக்குழந்தையை வெச்சுகிட்டு நீயேம்மா இப்படி கஷ்டப்படறே? உன் வீட்டுக்காரர் என்ன பண்றாரு ?"


      "அது ஒரு கழிசடைண்ணே."


    "என்னம்மா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டே??"


  "அவர் ஒழுங்கா இருந்தா, நான் ஏன்ணே இப்படி கைக்குழந்தையோடு வேலைக்கு வரேன்? இந்த ஊரு ஆம்பளைங்களுக்கு குடும்பத்தை விட அரசியல் தான் முக்கியமா போச்சு. ஊராருங்க முன்னாடி நல்லவன் மாதிரி வேஷம் போடுறாங்க. ஆனா அவனவன் பொண்டாட்டி கிட்ட கேட்டா தானே தெரியும், அவனுங்களோட உண்மையான லட்சணம் என்னன்னு. சரி அதைவிடுங்க என்னோட கதையை சொல்லி உங்க நேரத்தை ஏன் நான் வீணாக்கனும். நாளைக்கு காலையில் இருந்து வேலை ஆரம்பிச்சிடுறேங்கண்ணே வரட்டுங்களா?"


    தேவி கூறியதை கேட்டு விக்ரம் சிந்தனையில் இருக்க, ஜனா தான் அவளுக்கு மறுமொழி கூறி அனுப்பி வைத்தான்.


அன்று


ஆபீஸ்க்கு லேட்டாக வந்த காரணத்தால் பர்மிஷன் லெட்டர் எழுதி, அதை தனது உயர் அதிகாரிக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருந்தாள் சித்ரா. அவள் அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தால் அவளுடைய தற்போதைய தோழியான ரேகா.


     ரேகா வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றது. ரொம்ப பயந்து சுபாவமாக வந்து சேர்ந்த அவளுக்கு, தைரியசாலியான சித்ரா தோழியானாள்.


  " எதுக்கு சித்ரா உனக்கு இந்த தேவையில்லாத வேல? பஸ்ல அவன் தப்பா நடந்துகிட்டான்னா, அங்கேயே அடிச்சு விட்டுட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே? நீ எதுக்கு வான்டடா போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்திருக்க? எதுக்குடி நமக்கு இந்த தேவையில்லாத வேலை?"


    "இப்படியே நமக்கென்னன்னு போறதால தான், இவனுங்க எல்லாம் அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு, மேல மேல நிறைய தப்பு பண்றாங்க. இவனுங்கள ரெண்டு மாசமாவது ஜெயிலுக்குள்ள தள்ளுனா, அடுத்து இன்னொரு பொண்ணு மேல கை வைக்க துணிவானுங்களா?  சரி அதை விடு, இன்னைக்கு உன் பாசமலர் ஏதோ உன்ன பார்க்க வர்றதா சொன்னியே, என்ன ஆச்சு?"


  "அவருக்கு ஏதோ அர்ஜென்ட் வேலை வந்திடுச்சாம், அதனால இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொன்னாரு."


  "உன்னோட அண்ணணும் என்னோட அண்ணா மாதிரி தான் போல? என்னோட அண்ணா, நாடு தான் முக்கியம்னு எங்க எல்லாரையும் விட்டுட்டு ராணுவத்தில் சேர்ந்துட்டாரு. ஆனா உன்னோட அண்ணா  வேலை வேலைனு ஓடிக்கிட்டே இருக்காரு."


 



Tuesday, September 2, 2025

பிம்பம் 1


 

            அத்தியாயம் 1


இன்று


    அந்த சிறிய பேருந்தானது மெய்க்காரன்பட்டி என்று எழுதப்பட்டிருந்த, அறிவிப்புப் பலகைக்கு அருகில் வந்துநின்றது.


    அதிலிருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கினர். ஒருவன் காட்டன் ஷர்ட்டும் கருப்பு நிற பேன்ட்டும் அணிந்து, கைகளில் லக்கேஜ் பேக்கோடு நின்றிந்தான்.


  இன்னொருவனோ டி-ஷர்ட்டின் மீது கோட்டும், கிழிந்த ஜீன்ஸ்சும், கருப்பு கண்ணாடியும் அணிந்துகொண்டு, ஒரு தோல்பையுடன் அந்த ஊருக்கு சற்றும் பொருந்தாத ஒருவனாக வந்து இறங்கியிருந்தான்.


  அவர்கள்  கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு மனித நடமாட்டமும் இல்லை. இரு பக்கமும் மரங்களாலும் புதரினாலும் சூழப்பட்டிருந்தது அந்த மண் ரோடு.


  "பாஸ் ஊர்ல அத்தனை வேலையை விட்டுட்டு, இந்த கிராமத்துக்கு எதுக்காக வந்திருக்கோம் நாம? அப்படி என்ன முக்கியமான ப்ராஜெக்ட் இது? நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன், நீங்க என்ன இந்த முள்ளு காட்டை ஏதோ பூஞ்சோலையை பார்க்கிற மாதிரி  ரசிச்சு பார்த்துகிட்டு வர்றீங்க. கால் வலிக்குது கொஞ்சம் நின்னு போங்க பாஸ்."


      "ஏண்டா லக்கேஜ் பேக்கை தூக்கிட்டு நானே ஸ்பீடா நடக்குறேன்.  தோல் பையைதானே மாட்டிகிட்டு இருக்க, உன்னால இந்த ஸ்பீடுக்கு கூட நடக்க முடியாதா என்ன? இவ்வளவு நேரம் பஸ்ல உட்கார்ந்து தானே வந்தோம், அப்புறம் என்ன?"


    "எது உட்கார்ந்து வந்தோமா? நல்லா குதிச்சு குதிச்சு வந்தோம்னு சொல்லுங்க பாஸ். அதுதான் கரெக்டா இருக்கும். அதுவும் எத்தனை வளைவு! இந்த பஸ்ல ஒரு பத்து நாள் வந்தா போதும், யோகா பண்ணாமலே என் உடம்பு குறைஞ்சிடும் போல இருக்கு."


  " நல்லது தானே, எப்போ பாரு ஃபாலோ பண்ணி போற ஆளுங்ககிட்ட மாட்டிகிட்டு அடி வாங்குறதே உனக்கு வேலையா போச்சு. ஒவ்வொரு தடவையும் நான் வந்து உன்னை காப்பாத்த வேண்டியதா இருக்கு. நீ ஒல்லியானால் அதிலிருந்து நான் ரிலீஃப் ஆகலாம் இல்லயா."


  "பாஸ், தி கிரேட் துப்பறிவாளன் விக்ரம் பேசற பேச்சா இது. உங்களோடு பிஏவான இந்த ஜனாவை காப்பாத்தாம, வேற யாரை காப்பாத்த போறீங்க? நான் ஒல்லியானாலும், குண்டாக இருந்தாலும் எப்பவுமே பைனல் டச்சு நீங்க தான் கொடுத்தாகணும்."


  விக்ரம் அவனை முறைத்து விட்டு வேகமாக நடக்க,


  "பாஸ் பாஸ் இப்போ எதுக்கு இப்படி கோச்சுகிட்டு இவ்வளவு ஸ்பீடா நடக்குறீங்க? முதல்ல நாம இங்க எதுக்காக வந்து இருக்கோம்னு நீங்க காரணத்தை சொல்லாட்டி, நான் இந்த புளிய மரத்தை விட்டு நகர மாட்டேன்."


    ஜனார்த்தனன் அங்கிருந்த புளிய மரத்தை, தன் கை கொண்டு இறுக்கமாக கட்டிக் கொள்ள,


    "ஜனா ஊர்ல ஒரு பேச்சு உண்டு உனக்கு தெரியுமா? பேய்ங்க எப்பவுமே புளிய மரத்துல தான் தொங்குமாம்."


  ஜனா சட்டென்று அந்த புளிய மரத்திலிருந்து பின்வாங்க, அதில் அடித்திருந்த ஒரு ஆணி, அவன் சட்டையோடு மாட்டிக் கொண்டது.


    "அய்யய்யோ பாஸ் பேய் புடிச்சி இழுக்குது....., பேய் புடிச்சு இழுக்குது.... எப்படியாவது என்னை காப்பாத்துங்க."


      விக்ரம் சிரித்துக் கொண்டே அவன் மண்டையில் அடித்து விட்டு, அந்த ஆணியை மரத்தில் இருந்து பிடுங்கி, அவன் சட்டையில் இருந்து நீக்கி தூர வீசினான்.


      திடீரென்று கருமேகம் சூழ்ந்து சூறைக்காற்று அடித்தது.


    "பாஸ் எந்த நேரத்துல பேய் பத்தி பேசினீங்களோ, இப்படி பேய் காத்தா அடிக்குதே!! இப்பவாச்சும் சொல்லுங்களேன், எதுக்காக இந்த பேய் கிராமத்துக்கு வந்திருக்கோம்."


    அடை மழைக்கு ஒதுங்கி, அந்த புளிய மரத்திற்கு அடியில் நின்று கொண்டு, ஜனாவிற்கு பதில் கூற தொடங்கினான் விக்ரம்.


  "கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மிலிட்டரி ஆபீசர் நம்மள பார்க்க வந்திருந்தாரே ஞாபகம் இருக்கா?"


  "ஆமாம் பாஸ், அவர் பேரு கூட ஏதோ கிருஷ்ணமூர்த்தின்னு சொன்னாருல்ல. ஏதோ ஒரு டைரியை கூட உங்ககிட்ட கொடுத்தாரே. அதிலிருந்த போட்டோ கூட, தெரியாம நீங்க வெச்சிருந்த மை  பாட்டில்ல விழுந்து குளிச்சிடுச்சே. முறைக்காதீங்க பாஸ், சரி.... தெரியாம என் கைபட்டு அது கவுந்துடுச்சு, நான் என்ன பண்ணட்டும்.ம்ம்ம் மேல சொல்லுங்க."


  "அவரோட தங்கச்சி இறந்ததுல அவருக்கு ஏதோ சந்தேகம் இருக்காம். அது தற்கொலை இல்ல, கொலை தான்னு நம்பறாரு. அது பத்தி விசாரிக்க தான் நாம இங்க வந்திருக்கோம்."


  "என்ன பாஸ், ஊர்ல அவ்ளோ பெரிய ப்ராஜெக்டை எல்லாம் விட்டுட்டு, இந்த தற்கொலை கேசை பத்தி விசாரிக்க, நீங்களே நேரடியா வந்திருக்கீங்களே? இதுக்கு நம்ம அசிஸ்டன்சே போதுமே?"


  "ஜனா அந்த மிலிட்டரி ஆபீஸர் தன்னோட சொந்த பந்தங்களை எல்லாம் விட்டுட்டு, நம்ம நாட்டுக்காகவும் நம்மள போல இந்த நாட்டுல வாழ்ற மக்களுக்காகவும் தான், அந்த எல்லையில குளிர்லையும் பனியிலையும் வெயில்லையும் வேலை பார்க்கறாரு. அவருக்காக நாம, இந்த ஒரு விஷயத்தை கூட செய்ய கூடாதா? அதனாலதான் இந்த கேஸ்காக நானே நேரடியாக இங்க வந்திருக்கேன்."


    "நாம இங்க இருக்க எல்லார்கிட்டயும் ஒரு எழுத்தாளரா, இந்த ஊர் கோயிலை பத்தி ஆராய்ச்சி பண்ணி, எழுத வந்திருக்கோம்னு தான் சொல்ல போறேன். நீ பாட்டுக்கு எதையாவது உளறி வச்சிடாதே, அப்புறம் நம்ம கண்ணு முன்னாடி இருக்கற ஒரு சில க்ளு கூட, நம்ம கண்ணுக்கு தெரியாம போயிடும்."


    சட்டென்று அந்த பேய் மழை நின்று அமைதியானது. வானம் தெளிவாகவும், காற்று சற்று இதமாகவும் வீச ஆரம்பித்தது.


    "என்ன பாஸ் இது! அலாவுதீன் அற்புத விளக்கை தேய்ச்சா வருமே, அந்த மாதிரி இந்த புல் மழை ஸ்வைங்குனு வந்துட்டு ஸ்வைங்குனு போயிடுச்சு.


  ஆமா நாம இங்க தங்கறதுக்கும், திங்கிறதுக்கும் ஏதாவது ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா? இல்ல ஊருக்குள்ள போய் தான் நாம கதையை கிரியேட் பண்ணனுமா பாஸ்?"


    "இந்த ஊரு வாத்தியார் எனக்கு தெரிஞ்சவர்தான். அவர் மூலமா இந்த ஊர் பண்ணையார்கிட்ட உதவி கேட்டிருக்கேன். செய்யறேன்னு சொல்லி இருக்காரு போய் பார்ப்போம்."


அன்று


அமைதியாக ஓடிக் கொண்டிருந்த அந்த அரசு மாநகர பேருந்தில், வீல் என்ற ஒருவரின் கன்னத்தில் அறையும் சத்தத்தில், பஸ்ஸில் இருந்த அனைவரும் அந்த சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தனர்.


  சுடிதார் அணிந்த காளி தேவியாக, தனக்கு அருகில் நின்ற சிறு பெண்ணிடம், சில்மிஷம் செய்ய வந்த அந்த வாலிபனை வகையறையே இல்லாமல் அடித்து நொறுக்கி கொண்டிருந்தால் சித்ரா.


  "ராஸ்கல் ஒரு சின்ன பொண்ண கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா? அவ குழந்தைடா, அவ கிட்ட போய் என்ன வேலை பார்க்குற? உன்னை எல்லாம் நடுரோட்டில நிக்க வச்சு, செருப்பாலயே அடிச்சு கொல்லனும்,பொறுக்கி நாயே."


    "என்னடி ஓவரா  துள்ளுறே? பஸ்ல கூட்டமா இருந்தது, அதனால அந்த பாப்பாவை கொஞ்சம் கை வைச்சு அந்தப் பக்கமா நகர்த்தி விட்டேன்.  அதுக்கு என்னமோ லபோ திபோன்னு கத்தற,எம்மேல கையை வைக்கிறே. நான் யாருன்னு தெரியுமா? கவுன்சிலரோட மச்சான்." 


  "நீ யாரா இருந்தா எனக்கென்னடா? கண்டக்டர் அண்ணா நேரா பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க. இந்த பொறுக்கி நாயை எல்லாம் வெளிய நடமாட விடக்கூடாது. என் மேல கை வச்சான்னு சொல்லியே, நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன்."

   


என்னவரே என் மன்னவரே






அத்தியாயங்கள்

  1. மன்னவரே 01
  2. மன்னவரே 02
  3. மன்னவரே 03
  4. மன்னவரே 04
  5. மன்னவரே 05
  6. மன்னவரே 06
  7. மன்னவரே 07
  8. மன்னவரே 08
  9. மன்னவரே 09
  10. மன்னவரே 10
  11. மன்னவரே 11
  12. மன்னவரே 12
  13. மன்னவரே 13
  14. மன்னவரே 14
  15. மன்னவரே 15
  16. மன்னவரே 16
  17. மன்னவரே 17
  18. மன்னவரே 18
  19. மன்னவரே 19
  20. மன்னவரே 20
  21. மன்னவரே 21
  22. மன்னவரே 22
  23. மன்னவரே 23
  24. மன்னவரே 24
  25. மன்னவரே 25
  26. மன்னவரே 26
  27. மன்னவரே 27
  28. மன்னவரே 28
  29. மன்னவரே 29
  30. மன்னவரே 30
  31. மன்னவரே 31
  32. மன்னவரே 32
  33. மன்னவரே 33
  34. மன்னவரே 34
  35. மன்னவரே 35
  36. மன்னவரே 36
  37. மன்னவரே 37
  38. மன்னவரே 38
  39. மன்னவரே 39
  40. மன்னவரே 40
  41. மன்னவரே 41
  42. மன்னவரே 42
  43. மன்னவரே 43
  44. மன்னவரே 44
  45. மன்னவரே 45
  46. மன்னவரே 46
  47. மன்னவரே 47
  48. மன்னவரே 48
  49. மன்னவரே 49
  50. மன்னவரே 50
  51. மன்னவரே 51
  52. மன்னவரே 52
  53. மன்னவரே 53
  54. மன்னவரே 54
  55. மன்னவரே 55
  56. மன்னவரே 56
  57. மன்னவரே 57
  58. மன்னவரே 58
  59. மன்னவரே 59
  60. மன்னவரே 60
  61. மன்னவரே 61
  62. மன்னவரே 62
  63. மன்னவரே 63
  64. மன்னவரே 64
  65. மன்னவரே 65
  66. மன்னவரே 66
  67. மன்னவரே 67
  68. மன்னவரே 68
  69. மன்னவரே 69
  70. மன்னவரே 70
  71. மன்னவரே 71
  72. மன்னவரே 72
  73. மன்னவரே 73
  74. மன்னவரே 74
  75. மன்னவரே 75
  76. மன்னவரே 76
  77. மன்னவரே 77
  78. மன்னவரே 78
  79. மன்னவரே 79
  80. மன்னவரே 80
  81. மன்னவரே 81
  82. மன்னவரே 82
  83. மன்னவரே 83
  84. மன்னவரே 84
  85. மன்னவரே 85
  86. மன்னவரே 86
  87. மன்னவரே 87
  88. மன்னவரே 88
  89. மன்னவரே 89
  90. மன்னவரே 90
  91. மன்னவரே 91
  92. மன்னவரே 92
  93. மன்னவரே 93
  94. மன்னவரே 94
  95. மன்னவரே 95
  96. மன்னவரே 96
  97. மன்னவரே 97
  98. மன்னவரே 98
  99. மன்னவரே 99
  100. மன்னவரே 100
  101. மன்னவரே 101
  102. மன்னவரே 102