Search This Blog

Followers

Powered By Blogger

Saturday, September 6, 2025

பிம்பம் 3


 

             அத்தியாயம் 3


இன்று


  "ஏன் பாஸ், இது உங்களுக்கே நல்லாருக்கா? இப்படி கோயில் கோயிலா என்னை சுத்த வைக்கிறீங்களே? இது உங்களுக்கே நியாயமா படுதா?"


  "விட்றா நீ செஞ்ச பாவமெல்லாம் இதுனாலயாவது கரையட்டும்."


  "எது? பாவமா? அப்பழுக்கில்லாத இந்த பச்ச குழந்தையை போய் இப்படி சொல்லிட்டீங்களே பாஸ்? என்னால தாங்க முடியல?"


  "உன் பெர்ஃபார்மன்ஸை நிறுத்திட்டு வந்த வேலையை பார்க்கறியா?"


    "இங்க யாருகிட்ட போய் கேட்கறது? அங்கங்க ரெண்டு ரெண்டு பாட்டிங்களா சேர்ந்து உட்கார்ந்து, வெத்தலையோட ஊர் நாயத்தையும் சேர்த்து இடிச்சிகிட்டு இருக்காங்க."


    "அவங்க தான் நம்ம டார்கெட். அவங்களுக்கு தெரியாம ஊருக்குள்ள ஒரு விஷயமும் நடக்காது. போலீஸ்க்கு தெரியாத விஷயம் கூட இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இவங்கதான் இந்த ஊரோட 24 ஹவர்ஸ் சிசிடிவி கேமரா."


  "அது... சரி... ஆமா என்ன கோயிலுக்குள்ள  ஃபுல்லா பெருசுங்களா இருக்கு. ஒரு பாவாடை தாவணியை கூட காணோமே? சரி முறைக்காதீங்க பாஸ் வந்த வேலையை கவனிக்கிறேன்."


    "இந்த ஊர்ல நடக்கற பௌர்ணமி பூஜை, ரொம்ப விசேஷம். அதுவும் சித்ரா பௌர்ணமிக்கு எப்பவும் ஊரே திரண்டு வந்து விழா எடுத்து கும்பிடுவாங்க. இன்னைக்கு சித்ரா பௌர்ணமி, காலைல இருந்தே ஊர்ல இருக்குற பெரியவங்க எல்லாரும் கோவில்ல தான் இருப்பாங்க. சாயந்திர நேரம் தான் கன்னிப்பெண்கள் எல்லாரும் ஒன்னு கூடி கும்மி அடிப்பாங்க."


  "ஓ அப்ப நமக்கு சாயந்திரமும் இங்க வேலை இருக்குன்னு சொல்ல வர்றீங்க, ஓகே பாஸ் நான் வாயை மூடிக்கிறேன், யூ ப்ரோசீட்."


    விக்ரம் மரத்தடியில் அமர்ந்திருந்த பாட்டிகளில் ஒருவரை நோக்கி சென்றான்.


  "என்னப்பா எந்த டிவி சேனல்ல இருந்து வந்திருக்கீங்க?... இல்லே ஏதும் பத்திரிகையில இருந்து வந்திருக்கீங்களா?"


    விக்ரமும் ஜனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு,


    " பாட்டி நாங்க எந்த டிவி சேனல்ல இருந்தும் வரல, பத்திரிக்கையில் இருந்தும் வரல. இவர் ஒரு எழுத்தாளர் உங்க கோயில பத்தி புக் எழுத போறாரு. இந்த கோயிலை பத்தி தெரிஞ்சுக்கத் தான், உங்ககிட்ட வந்திருக்காரு. உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை எல்லாம் சொல்லுங்க, அது எங்களுக்கு புக் எழுத உதவியா இருக்கும்."


  "ஓஹோ… அப்பறம் எதுக்கு உன் கையில படம் புடிக்கிற பொட்டியை வச்சிருக்கே?"


  "இந்தக் கோயிலை போட்டோ எடுக்கறதுக்கு தான் பாட்டி இது. சரி இந்த கோயிலை பத்தி சொல்லுங்க, இங்க சித்ரா பௌர்ணமி அப்போ நடக்குற திருவிழா, ரொம்ப விசேஷமாமே?"


    "ஆமா ஆமா இங்க சித்ரா பௌர்ணமி விழா ரொம்ப சிறப்பா தான் நடந்துகிட்டு இருந்துச்சு, ஆனா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி திருவிழா அப்போ, அந்த சம்பவம் நடந்ததிலிருந்து, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இந்த ஊர்ல இருக்க யாரும் ஆறு மணிக்கு மேல வெளியே வர்றதே இல்ல."


  இது அவர்களுக்கு கிடைத்த புதிய செய்தி.


  "என்ன பாட்டி சொல்றீங்க? அப்படி என்ன நடந்துச்சு? எதுக்காக பௌர்ணமி நாள் அன்னைக்கு மட்டும் ஆறு மணிக்கு மேல வெளியே வர மாட்டாங்க?"


  "அது....... ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி....... ,சித்ரா பௌர்ணமி அன்னைக்கு வயித்துப்புள்ளகாரி தற்கொலை பண்ணிக்கிட்டா இல்ல, அவ ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஆவியா வந்து காவு கேட்கிறதா ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க. ஒவ்வொரு மாசமும் பௌர்ணமி அப்போ ஊருக்கு முன்னாடி இருக்க அந்த புளியமரத்துகிட்ட, நிறைய பேர்  அவளை பார்த்ததா கூட சொல்லியிக்காங்க.


      இன்னைக்கு எப்படியும் ஆறு மணிக்கு முன்னவே கும்மி அடிச்சு முடிச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா அந்த புள்ள இறந்து போன நாள் இன்னைக்கு தான். இன்னையோட ரெண்டு வருஷம் ஆயிடுச்சு."


அன்று


  சித்ராவும் ரேகாவும் அலுவலகம் முடிந்து பஸ்ஸிற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.


    "ஏண்டி நாங்க தான் வேற வழி இல்லாம, இந்த கூட்ட நெரிசல்ல வந்துட்டும் போயிட்டும் இருக்கோம். உனக்கென்னடி உங்க அப்பாட்ட சொன்னா, ஒரு காரையே டிரைவரோட ஏற்பாடு பண்ணி தருவாரே, அப்புறம் எதுக்காக இந்த கூட்ட நெரிசல்ல சிக்கிகிட்டும், நிறைய இடி மன்னர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிகிட்டும்னு, இவ்வளவு கஷ்டப்படுற?"


    "ரேகா பணத்தால எல்லாத்தையும் வாங்கிட முடியாது, அனுபவம் தான் நம்ம வாழ்க்கைக்கு தேவையான, உண்மையான பயிற்சியை கொடுக்குது. அதை நான் நேரடியா ஃபேஸ் பண்ணனும்னு நினைக்கிறேன். வாழ்க்கையை வழி நடத்த ஒரு சில அனுபவங்கள் தான் நமக்கு உதவிகரமாக இருக்கும். அது எனக்கு இந்த பயணத்தின் போது கிடைக்குது."


  "தாயே தெரியாம கொஸ்டின் கேட்டுட்டேன் என்னை விட்டுடு ஆத்தா, ஒரு கேள்வி கேட்டது குத்தமாடி? இப்படியா இவ்ளோ பெரிய லக்சர் கொடுப்பே?"


  "ரேகா, வீட்டுக்கு வெளியே தான் நான் நானாக இருக்கேன். வீட்டுக்குள்ள போயிட்டா தங்க கூண்டுல அடச்ச கிளியோட கதைதான். வீட்ல யாரும் என்னோட சொல்ல மீறி நடக்க மாட்டாங்க தான், இருந்தாலும் அவங்களுக்காகவே அவங்க சொல்ற பேச்சை மட்டுமே கேட்டு நடந்துக்குவேன். அதனாலதான் வெளியே என்ன பிரச்சனை நடந்தாலும், என் மேல எந்த தப்பும் இருக்காதுன்னு என்னோட அப்பா அதுக்கு முழுசா சப்போர்ட் பண்றாரு.?"


  "அப்போ மேடம் வீட்டில எலி வெளியில புலின்னு சொல்ல வர்றீங்க அப்படித்தானே ?"


  "ம்ம்ம், உறுதியா கிடையாது ஆனா  கிட்டத்தட்ட அப்படிதான்."


  இதைக் கேட்டு முறைத்துக் கொண்டிருந்த ரேகாவின் போன் இசைத்தது. அதை எடுத்துப் பேசிய ரேகாவின் முகம் கலவரத்தை தத்தெடுத்துக் கொண்டது.


  "என்னாச்சு ரேகா ஏதாச்சும் பிரச்சனையா?"


    "ஆமா சித்ரா, நான் சொல்லி இருக்கேன் இல்ல, என்னை எடுத்து வளர்த்த அத்தை பத்தி, அவங்க தான் கூப்பிட்டு இருந்தாங்க. அவங்க பையனை இங்க பக்கத்துல ஏதோ ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் பண்ணி இருக்கிறதா, அவங்களுக்கு போன் வந்துச்சாம்."


  "என்னாச்சு அவருக்கு? எதுக்காக அட்மிட் பண்ணி இருக்காங்களாம்?"


  "அத்தைக்கும் அது பத்தி சரியா தெரியல? நான் இப்ப போய், நேரா எங்க மாமாவை ஹாஸ்பிடல்ல பார்த்து, என்னன்னு தெரிஞ்சுகிட்டு தான், அவங்களுக்கு திருப்பி கூப்பிடனும்."


" சரிப்பா நானும் உன் கூடயே வரேன், ஹாஸ்பிடல் நேம் கேட்டியா?"


  "கேட்டேன், பக்கத்துல இருக்குற அக்ஷயா நர்சிங் ஹோம்ல தான் சேர்த்திருக்காங்களாம்."


  "சரி, அந்த ஹாஸ்பிட்டல் இங்கிருந்து பக்கம் தான். வா நடந்தே போகலாம்."


  அக்ஷயா நர்சிங் ஹோமில் அறை எண் முன்னூற்று ஐந்தில் தலையில் கட்டுடன் படுத்திருந்தான் சிவா என்கின்ற சிவப்பிரகாஷ்.

No comments:

Post a Comment