Search This Blog

Followers

Powered By Blogger

Wednesday, September 10, 2025

பிம்பம் 5


 அத்தியாயம் 5


இன்று


    பிரகாஷின் அம்மா சாந்தி கோயிலுக்குள் பூஜைக் கூடையுடன் நுழைந்து கொண்டிருந்தார். மூலவர் சன்னிதியை நோக்கி சென்றவர், கண்களை மூடி இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார்.


  கோயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை, அங்கிருந்த ஒரு சில பெரியவர்களும், அங்கொருவர் இங்கொருவராக வெளிப்பிரகாரத்தில் தான் அமர்ந்திருந்தனர்.


  விக்ரமின் திட்டப்படி சாந்தி அம்மாவுக்கு எதிரில் வந்த நின்று ஜனா, தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே, சாந்தி கண்களை மூடி இறைவனை வேண்டிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, தன் கையில் உள்ள மயக்க மருந்து ஸ்பிரேயை சாந்தியை நோக்கி சிறிது சிறிதாக தெளித்தான்.


    விக்ரம் முன்னமே கூறியிருந்தான் அதிகமாக ஸ்பிரே செய்யாமல், சிறிது சிறிதாக அவருக்கு தலைசுற்றல் வரும் அளவுக்கு மருந்தை தெளித்தால் போதும் என்று.

 

சாந்திக்கு அருகில் தான் விக்ரம் நின்று கொண்டிருந்தான். அந்த மருந்தின் விளைவால், அவர் கண்கள் இருட்டிக் கொண்டு வர, ஒரு பக்கமாக சாயப்போனவரை தன் கைகளில் தாங்கிக் கொண்டான்.



  "அய்யோ அம்மா, என்னாச்சு உங்களுக்கு? இந்தாங்க இந்த தண்ணியை குடிங்க."


  விக்ரம் தனது பையில் இருந்து நீர் பாட்டிலை எடுத்து, அவருக்கு சிறிது தண்ணீர் புகட்டினான்.


      அவருக்கு சுயநினைவு இருந்தது, ஆனால் கண்களை தெளிவாக திறக்க இயலவில்லை, எழுந்து நிற்கவும் முடியவில்லை.


    "தெரியலப்பா, நல்லா தான் இருந்தேன், ஏனோ படபடன்னு கண்ணை இருட்டிக்கிட்டு வந்துடுச்சு.."


    "கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா சரியா போயிடும். வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன், ஜனா அம்மா கையில இருக்க பூஜை கூடையை வாங்கிக்கோ. நீங்க அட்ரஸ் சொல்லுங்கம்மா, நான் உங்களை வீட்டில் கொண்டு போய் விட்டுடறேன்."


      "பயப்படாதீங்கம்மா, நாங்க பண்ணையாருக்கு தெரிஞ்சவங்கதான். அவர்தான் எங்களை இங்க ஒரு வீட்டில் தங்க வைச்சிருக்கிறார். நான் ஒரு எழுத்தாளர், இந்த கோயிலை பத்தி கட்டுரை எழுதுவதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கேன்."


    அதன் பிறகு சாந்தி அம்மா தனது விலாசத்தை கூற, விக்ரம் மற்றும் ஜனாவின் உதவியோடு அவரது வீட்டிற்கு வந்தார்.


     " ரொம்ப நன்றிங்க தம்பி, நீங்க ரெண்டு பேரும் இல்லனா, நான் எப்படி வீடு வந்து சேர்ந்திருப்பேனோ எனக்கே தெரியல."


" உங்களுக்கு இப்படி அடிக்கடி வரும்மாம்மா? எதுக்கும் நீங்க டாக்டர் கன்சல்ட் பண்றது நல்லதுன்னு நினைக்கிறேன்."


        "நான் நல்லாத்தான் தம்பி இருந்தேன், எப்ப என் மகன் அந்த விளங்காதவளை கட்டிட்டு வந்தானோ? அப்ப இருந்து எங்க குடும்பத்துக்கு புடிச்சது சனி. இப்போ செத்துப் போய் கூட என் பையனை விட்டுப் போக மாட்டேங்குறா, எந்நேரமும் அவ நினைப்புலயே என் மகனும் சுத்திகிட்டு இருக்கான்."


    "ஓ அப்படியாம்மா, உங்க முதல் மருமக தான் இறந்துட்டாங்களே, அப்புறம் என்ன பிரச்சனை? நீங்க உங்க பிள்ளை கிட்ட சொல்லி வேறொரு கல்யாணம் செஞ்சுக்க சொல்லலாமே?"


    "அதெல்லாம் அவ போன ஆறு மாசத்தில இருந்தே, வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி, அவனை வற்புறுத்திட்டு தான் இருக்கேன். உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன தம்பி, என் அண்ணன் பொண்ணு கூட, இவனுக்காகவே காத்துகிட்டு இருக்கா. எங்க நாம சொல்றதெல்லாம் அவன் காதுல ஏறுனா தானே? ஆனா அந்த விஷயத்தை தவிர என் பையன் ரொம்ப நல்லவன் தம்பி. அவன் தலை எடுத்ததுக்கு அப்புறம் தான் எங்க வீட்டையே இடிச்சு மாற்றி கட்டினான். அதுக்கு முன்ன இது ஒரு ஓட்டு வீடா தான் இருந்தது. என் புள்ள தான் இது எல்லாத்தையும் தட்டி எடுத்துட்டு அப்படியே பில்லர் வைச்சு டார்ச் கட்டடம் போட்டான்."


  "வீடு ரொம்ப நல்லா இருக்கும்மா, நாங்க நகரத்துல வாழ்றவங்க, இந்த மாதிரி காத்தோட்டமா எல்லாம் வீடு பார்த்ததே இல்லை."


  " ஒரு நிமிஷம் இருங்க தம்பி. நான் உங்களுக்கு காபி தண்ணி கொண்டு வரேன்."


  "ஐயோ, உங்களுக்கு எதுக்கும்மா சிரமம்?"


  "அட நீங்க இருங்க தம்பி, இதுல என்ன சிரமம், என்னை இவ்வளவு பத்திரமா வீட்ல கொண்டுவந்து சேர்த்து இருக்கீங்க, உங்களுக்கு ஒரு டம்ளர் காபி கூட தராட்டி எப்படி? இருங்க வாரேன்."


  அவர் சமையல் அறையினுள் நுழைந்தவுடன் விக்ரம் அவசரமாக ஜனாவிற்கு கண்ணை காட்டி விட்டு, சித்ரா தற்கொலை செய்ததாக கூறப்படும் அந்த அறையை நோக்கி சென்றான். அந்த அறை அட்டாச் பாத்ரூமோடு இருந்தது. அவர்கள் அறையில் ஒரு பின்பக்க கதவும் இருந்தது. அதற்கு பின்புறம் கொல்லை புறமாகவும், அங்கே தனியாக பாத்ரூமும் இருந்தது. அந்த அறையை சுற்றி சுற்றி தேடியும் அவர்களின் திருமண புகைப்படம் ஒன்று கூட அங்கு இல்லை.


  ஜனா சிக்னல் கொடுக்க விக்ரம் உடனடியாக, அந்த அறையை விட்டு வெளியேறி, வரவேற்பறையில் ஜனாவிற்கு அருகில் வந்த அமர்ந்தான்.   


      சாந்தி அவர்களுக்கு குடிப்பதற்கு  காபியும், திருவிழாவிற்காக செய்த பலகாரங்களையும் கொண்டு வந்து அவர்களின் முன்பு அடுக்கினார்.


      "என்னம்மா உங்க பையனோட கல்யாண போட்டோ எங்கேயுமே இல்லை?"


    இதைக் கேட்டு சாந்தியின் முகம் தீவிரமானது


    "என்னாச்சும்மா? ஏன் உங்க முகம் பேய் அறஞ்ச மாதிரி இருக்கு? ஏதாச்சும் பிரச்சனையா?"


    "அதை ஏன் கேக்குறீங்க தம்பி அவ செத்துப் போய் ரெண்டு நாள் கழிச்சு, என் பையன் கிட்ட தேர்தல் சம்பந்தமா பேசணும்னு, கட்சி ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டு இருந்தாங்க. இவனும் என்ன பண்றதுன்னு தெரியாம மனசே இல்லாம தான் அங்க போனான்."


  " அன்னைக்கு ராத்திரி அவ தற்கொலை பண்ணிகிட்ட, ரூமுக்கு பின்னாடி இருக்க கொல்லை புறத்திலயிருந்து, ஏதோ சத்தம் கேட்டுச்சு. நான் என்னவோ ஏதோன்னு போய் பார்த்தான்ப்பா. என் பையன் ரூம்ல இருக்க பின்பக்க கதவு திறந்திருந்துச்சு.


     அங்க இருக்க மரத்துக்கு கீழே ஒரு உருவம் தலையை விரிச்சு போட்டு நிக்கிற மாதிரி இருந்துச்சு, உத்து பார்த்தப்ப தான் தெரிஞ்சது, செத்துப்போனவ கையில அவங்க கல்யாண போட்டோவை வைச்சிட்டு அதையே வெறிச்சு பார்த்துகிட்டு  இருந்தா!. எனக்கு ஈரகொலையே நடுங்கி போச்சு. அடுத்த நாளே பூசாரியை  கூப்பிட்டு அந்த புளிய மரத்துல ஆணிய வச்சு அடிச்சு புட்டேன். அதுக்கப்புறம் அவளை ஊருக்குள்ள யாரும் பார்க்கல, ஆனா அடிக்கடி அந்த புளிய மரத்துக்கிட்டு அவளை பார்த்ததா சொல்லிக்கிறாங்க."


    இவற்றை கேட்டுக் கொண்டிருந்த ஜனா, அப்படியே மயங்கி சரிந்து விட்டான்.


அன்று


    சிவப்பிரகாஷ் ஹாஸ்பிட்டலில் இருந்தவரை ரேகாவுடன் சேர்ந்து சித்ரா, தினமும் அங்கு சென்று அவனை நலம் விசாரித்து வந்தாள்.


    அவர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, இருவருக்கும் புரிதலை தாண்டிய ஒரு நல்ல நட்பு மலர்ந்தது. அவன் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்பும் கூட இவர்களின் நட்பு தொடர்ந்தது.


  சித்ராவும் சிவாவும் பேசும் போது ரேகாவின் பார்வை ஒருவித கோபத்தோடு சித்ராவை நோக்கி தான் இருக்கும். ஆனால் அது தனது கற்பனையோ என்று சித்ரா எண்ணுமாறு, மறு நொடியே தனது முகத்தை சீராக்கிக் கொண்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக பேசத் தொடங்கி விடுவாள்.


  கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் நட்பு காதலாக உருமாறி, இருவரின் மனதிலும் வேரூன்றி கொண்டிருந்தது.


      சித்ரா முதன் முதலில் சிவாவின் மீது தனக்கு ஏற்பட்டுள்ள காதலை, ரேகாவிடம் தான் கூறினாள். அவள் தனக்கு இது சந்தோஷமே என்று கூறிய பிறகு தான், தனது காதலை சிவாவிடம் வெளிப்படுத்தினாள்.


    இவர்களின் காதல் சித்ராவின் வீட்டிற்கு தெரிய வர, அவள் வீட்டு காவலில் வைக்கப்பட்டால். அவசரமாக அவளின் திருமணத்திற்காக, வரனும் பார்க்கப்பட்டு, தேதியும் குறிக்கப்பட்டது.


  தன் பெற்றோரிடம் எவ்வளவு போராடியும் அவர்கள், அவளின் கருத்துக்களை கேட்பதாகவே இல்லை.


  ராணுவத்தில் உள்ள தனது அண்ணனுக்கு செய்தி அனுப்பியும் அங்கிருந்து எந்தவித பதில் கடிதமும் வராததால், ஒரு முடிவோடு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் சித்ரா.


No comments:

Post a Comment