அத்தியாயம் 31(இறுதி அத்தியாயம்)
தேவ் அருகில் இருந்த பைப்பில் இருந்து தண்ணீரை பிடித்து, அவர்களை நோக்கி வீசினான்.
அது கவியின் முகத்தை நனைத்திருக்க விருட்டென்று எழுந்தவள், சுற்றி முற்றி பார்த்தபடி கண்மணியை எழுப்பினாள்.
“கண்மணி அடியேய் எழுந்திரு டி.”
“ ப்ச் என்ன டி? அதுக்குள்ள விடிஞ்சிருச்சா என்ன?”
“இல்லடி அது…”
“அப்பறம் என்ன பேசாம படுத்து தூங்கு, ஏற்கனவே அந்த கிழவி அந்த சடங்கு இந்த சடங்குன்னு சொல்லி உயிரை வாங்கிடுச்சு, மறுபடியும் வந்து எழுப்பறதுக்குள்ள கொஞ்ச நேரமாச்சும் என்னை தூங்க விடுடி”
“அட எழுந்து தொலை, இந்த ரூமோட மேல் கூரை ஒழுகுதா என்ன? மழை தண்ணி மேல விழுந்த மாதிரி இருந்துச்சே?”
“மழை தண்ணி விழுந்தா குடையை பிடிச்சுட்டு பேசாம தூங்கு. அர்த்த ராத்திரியில ஆராய்ச்சி பண்ணாத.”
தலை பக்கம் இருந்து இஷ் இஷ் என்று சத்தம் வர, பாம்பு தான் வந்து விட்டதோ என்று பயந்த கவி, கட்டிலில் இருந்து துள்ளி கீழே குதித்தாள். அவளது செய்கையில் கண்மணியும் பதறி கீழே குதிக்க, ஜன்னலுக்கு மறுபுறம் நின்றிருந்த தேவ் மெதுவாக அவளை அழைத்தான்.
“ஓய் பட்டர் ஸ்காட்ச் பயப்படாத நான் தான். உன் கிட்ட கொஞ்சம் பேசனும் பின்பக்க கதவை கொஞ்சம் திறந்து விடேன்.”
அவளோ இடுப்பில் கை வைத்தபடி அவனை முறைக்க, தேவ்வின் பின்புறம் இருந்து நவீன் பேசினான்.
“சிஸ்டர் ப்ளீஸ் சிஸ்டர், உங்களுக்காக சுவர் எல்லாம் ஏறி குதிச்சு வந்திருக்கோம். ஒரு பத்து நிமிஷம் கதவை திறந்து விட்டீங்கன்னா, அதுக்கப்புறம் இவனை கூட்டிட்டு நல்லபடியா ரூமுக்கு போயிடுவேன்.”
“அண்ணா உங்க உயிர் தோழர் எப்படியும் என்னை பார்க்க வந்திருக்க மாட்டாரு, அவரோட உயிரான பேபி டாலை பார்க்கனுங்கற ஆசையில தான் இங்க வந்திருப்பாரு. வெளியே தான் காவலுக்கு நிப்பாங்க போய் கொஞ்சி குலாவச் சொல்லுங்க.”
“ச்சே ச்சே ஆயிரம் தான் இருந்தாலும் என் பட்டர் ஸ்காட்ச் மாதிரி ஆகுமா?”
கண்மணி அவனை முறைத்துக் கொண்டிருக்க, கவி பின்பக்க கதவை திறந்தபடி அறையை விட்டு வெளியேறியதும், தேவ் அறைக்குள் நுழைந்து கண்மணியின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கி அவள் முகத்தில் வண்ணக் கோலத்தை காட்டிட, அதற்கு மேலும் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல், மௌன சிறைக்குள் தன்னை பூட்டிக் கொண்டபடி முகத்தை தாழ்த்திக் கொண்டாள் கண்மணி. அவளது விரல்களில் முத்தமிட்டவனோ மென்மையாக,
“ஹேய் பட்டர் ஸ்காட்ச்… ஹேப்பி அனிவர்சரி.”
அவனது வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்தவள், விரிந்த கண்களில் அதிர்ச்சியோடு அவனை பார்க்க, மூடியிருந்த தனது வலது கை விரல்களை பிரித்தவன், அதற்கு நடுவே இருந்த கருகமணியை அவள் முகத்திற்கு நேராக நீட்டினான். அதனை கண்டு அவளது விழகளில் மெல்லிய நீர் படலம்.
“திருமதி தேவராஜன் அவர்களே, நீங்க சொன்னபடியே இந்த தாலியை நான், மூனு வருஷம் என் இதயத்துக்கு பக்கத்துல வச்சு, பத்திரமா பாதுகாத்தேன். இனி உங்க சபதத்தை நிறைவேத்த இந்த மாங்கல்யத்தை உங்க கழுத்துல கட்டலாமா?”
ஆனந்த கண்ணீரானது அணையை உடைத்துக் கொண்டு பொங்கி வர, தனது கண்ணீரை அவனிடம் இருந்து மறைக்க முகத்தை மூடிக் கொண்டு திரும்பி நின்று கொண்டாள் கண்மணி.
வெளியே தற்போது தான், கவிதாவிடம் மெதுவாக பேச்சு கொடுத்து, தனது வார்த்தை ஜாலங்களால் காதல் என்ற வாசலை நோக்கி அவளோடு கை கோர்த்தபடி செல்லத் தொடங்கி இருந்தான் நவீன்.
திடீரென கண்மணி விசும்பும் சத்தம் கேட்டு மாயை விலகியது போல, நவீனை அப்படியே விட்டு விட்டு உள்ளே ஓடி வந்தாள் கவிதா.
“இவனோட ப்ரெண்ட்ஷிப் வச்சுகிட்டதுக்கு பதிலா, ஒரு மடத்துல சேர்ந்து துறவியா போகலாம். இப்ப தான் ஒரு பொண்ணுகிட்ட பேசி கரெக்ட் பண்ண ஆரம்பிச்சேன் அது பொறுக்கலையாடா உனக்கு?”
என்று தலையில் அடித்துக் கொண்டு கவியின் பின்னே அறைக்குள் நுழைந்தான் நவீன்.
முகத்தை மூடியபடி கண்மணி கட்டிலின் மீது அமர்ந்து விசும்பிக் கொண்டிருக்க, அவளது அருகே வந்த தேவ் கண்மணியின் தோள் மீது கை வைத்த மறு நிமிடம், அவனது வயிற்றை கட்டிக்கொண்டு அழத் தொடங்கி விட்டாள் பாவை.
எத்தனை போராட்டங்கள் எத்தனை வலிகள், எத்தனை அவமானங்கள் இந்த மாங்கல்யத்துக்காக, கடைசியில் போலி தேவ் வாயிலாக தன் உயிரானவனை பற்றி அவள் அறிந்து கொண்ட செய்தியை, தற்போது நினைக்கும் போது கூட கண்மணிக்கு மனது பதறியது.
“ஹே பட்டர் ஸ்காட்ச்…என் பொண்டாட்டி ரொம்ப ஸ்ட்ராங் இல்லையா என்ன? உண்மையை தெரிஞ்சுக்க சிஐடியா போய் அத்தனை பேரையும் தட்டி தூக்கினவளாச்சே!”
கண்மணி இன்னும் இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டாள். அவர்களது நெருக்கத்தை கண்டு கவி நாணத்தோடு மீண்டும் வெளியே சென்று விட, வால் பிடித்தது போல நவீனும் அவளோடு வெளியேறினான்.
“அடடே இந்த அழுமூஞ்சிக்காகவா நான் இத்தனை ரிஸ்க் எடுத்து இங்க வந்தேன், இதுக்கு என் பேபி டாலையே பார்க்க போயிருப்பனே?”
சட்டென்று நிமிர்ந்தவளோ அவனை முறைக்க,
“என்ன பேபிகிட்ட போயிடவா?”
என்று கள்ளச் சிரிப்போடு அவன் கூறிய மறுநிமிடமே, தனது பற்களை அவனது உடலில் பதித்திருந்தாள் கண்மணி. அவனது அலறலில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி எழுந்து, வேகமாக அவளது அறைக் கதவை தட்டத் தொடங்கிட, மாட்டிக் கொண்டார்களோ என்ற உணர்வில் கவியும் நவீனும் வேகமாக உள்ளே வந்தனர். தேவ்வும் பதட்டமாக கதவை பார்க்க,
“உங்க பேபி டால் தான் கதவை தட்டி உடைக்குது, போய் அதுகிட்டயே குடுங்க போங்க.”
என்றபடி கண்மணி கட்டிலில் திரும்பி படுத்துக் கொள்ள,
“ஏன்டா தேரை இழுத்து தெருவுல விட்ட, நீ சிஸ்டரை பார்க்க வந்தியா இல்ல அவங்க பாட்டியை பார்க்க வந்தியா?”
“இதுல என்னண்ணா சந்தேகம்? உங்க தோழர் அந்த பியூட்டியை பார்க்கத் தான் வந்திருக்கார்.”
கதவு தட்டும் சத்தம் அதிகமானது,
“தேவ் சார் நீங்க கிளம்புங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல என் பாட்டியும், இவளோட பாட்டியும் கத்தற சத்தம் கேட்டு, மண்டபத்துல இருக்குற எல்லாரும் இந்த ரூம் முன்னாடி தான் குழுமி இருக்க போறாங்க. அவங்க பேக் சைடு வழியா வந்து பார்க்கறதுக்குள்ள, நீங்க இரண்டு பேரும் எப்படியாவது மண்டபத்தை விட்டு வெளியே போயிடுங்க.”
என்று கவி கூற, திரும்பி படுத்திருந்த கண்மணியையே ஏக்கத்தோடு பார்த்து நின்றான் தேவ். தலையில் அடித்தபடி அவனது கையைப் பிடித்து இழுத்துச் சென்ற நவீன்,
“ நல்லாத் தானே பேசிகிட்டு இருந்தீங்க அதுக்குள்ள என்ன பிரச்சனை மறுபடியும்? ஆமா கேட்க மறந்துட்டேன், எதுக்கு அப்படி கத்துன?”
வேகமாக அவனோடு மண்டபத்தை விட்டு வெளியேறிய நவீன், காரில் அமர்ந்தபடியே கேள்வியாக தேவ்வைப் பார்க்க, நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் முழுவதுமாக கூறி முடித்தான் தேவ்.
“ஏன்டா நீ அந்த பிள்ளையை சமாதானப்படுத்த வந்தா, அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டியது தானே, அதை விட்டுட்டு மறுபடியும் அந்த பிள்ளைய வெறுப்பேத்திட்டு வந்திருக்க.
ஆனாலும் நான் எத்தனையோ ஹீரோவை பார்த்திருக்கேன்டா, ஏன் விதவிதமான ஆன்ட்டி ஹீரோவைக் கூட பாத்திருக்கேன். ஆனா நீ மட்டும் ஏன்டா இப்படி டிப்ரண்டா பாட்டி ஹீரோவா இருக்க?”
என்றபடி சத்தமாக சிரிக்கத் தொடங்கிய நவீன், தேவ்வின் முறைப்பில் அமைதியாகி விட்டான்.
அடுத்த நாள் காலை கல்யாண சடங்குகள் ஆரம்பமாக, மணமேடையில் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்த தேவ்வின் கண்கள் தன்னவளின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தது.
குங்கும நிற இழைகளுக்கிடையே, தங்கச் சரிகைகள் பிணைக்கப்பட்டிருந்த பட்டுச்சேலையில், அழகோவியமாக மின்னியவளை, காதல் கண்களோடு தேவ் கண்களுக்குள் நிறைத்துக் கொண்டிருக்க, அவனது இமைச்சிமிட்டா பார்வையினால் கண்ணங்கள் செம்மையுற மணமேடை ஏறிய கண்மணி, தலைக்குனிந்த படியே தன்னவனின் அருகில் அமர்ந்தாள்.
அவள் முகத்தில் அத்தனை பூரிப்பு. தேவ் அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, கண்மணி வெட்கத்தில் நெளிந்தாள். ஐயர் மாங்கல்யத்தோடு அட்சதையை ஆசிர்வாதம் பெற்று வர கீழே அனுப்பி இருக்க, கண்மணிக்கு தங்களது முதல் திருமண நிகழ்வு மனதில் நிழலாடியது.
அதே நேரம் தனது கைகளில் பத்திரமாக வைத்திருந்த கருகமணியை எடுத்தவன்,
“ பட்டர் ஸ்காட்ச்” என்று அழைத்திட, விழி உயர்த்தியவளின் கண்களை, காதலோடு பார்த்தபடியே அவளது கழுத்தில் கருகமணியை கட்டினான் தேவ்.
பிறகு பலராலும் ஆசிர்வதிக்கப்பட்ட திருமாங்கல்யத்தை, அவளுக்கு அணிவித்து ஊரறிய தனது பட்டர் ஸ்காட்சின் மிஸ்டர் கண்மணியானான்.
கண்களில் மின்னும் காதலோடு அவன் காதருகில் குனிந்தவளோ, குரலில் குறும்போடு,
“மூனு தடவை என் கழுத்துல தாலி கட்டிட்டீங்க தேவ் சார், இனி இந்த ஜென்மத்தில் நீங்க என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. காதல் கணவா…உந்தன் கரத்தை நான் என்றுமே விட மாட்டேன்.”
“சத்தியம் சத்தியம் இது சத்தியமே! பட்டர் ஸ்காட்ச்.”
முற்றும்.
அன்புடன்,
சரண்யா சதீஷ்.


