Search This Blog

Followers

Powered By Blogger

Sunday, September 28, 2025

பிம்பம் 9


 

அத்தியாயம் 9


இன்று


  விக்ரம் தனது அடையாளங்களை காட்டி,  தான் ஒரு துப்பறிவாளன் என்று கூறிய போது, போலீசார் அவனை நம்ப மறுத்தனர்.  உடனே சென்னையில் உள்ள ஐஜி அலுவலகத்திற்கு அழைத்து, அவரிடமே நேரடியாக பேச வைத்த போது தான், இங்குள்ள போலீசாரிடம் இவனுக்கு மதிப்பு கிடைக்க ஆரம்பித்தது.


    விக்ரம் தனது துப்பறிவு நிறுவனத்தின் மூலம், சென்னையில் போலீஸாரால் தீர்வு காண முடியாத பல வழக்குகளின், சிக்கலாக முடிச்சுகளை அவிழ்க்க, அவர்களுக்கு உதவி புரிந்துள்ளான். அதன் பிறகு அவன் போலீஸ் ஸ்டேஷனில் மரியாதையாகவே நடத்தப்பட்டான்.


    விஷயம் அறிந்து ஸ்டேஷனுக்கு வந்த இன்ஸ்பெக்டர், அவன் வழக்கிற்கு தேவையான சித்ராவின் பைலை எடுத்து அவனிடம் கொடுத்தார். அதை புரட்டிப் பார்த்தவன் இன்ஸ்பெக்டரை நோக்கி கேள்விகளை எழுப்ப தொடங்கினான்.


  "நீங்க எப்படி இந்த கேஸை தற்கொலை தான்னு முடிவு பண்ணீங்க? அந்த ரூம்ல வேற யாரோட கைரேகையும் இல்லையா? இதுல அவங்க சில நாளா மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததா சொல்லி இருக்கீங்க, ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவங்க எப்படி கதவை எல்லாம் சரியா லாக் பண்ணிக்கிட்டு தூக்கு போட்டு தற்கொலை பண்ணியிருக்க முடியும்? எப்படியோ கேஸ் முடிஞ்சா சரி அப்படித்தானே சார். சரி.. அவங்களோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எங்கே? "


  கான்ஸ்டபிள் கபோர்டுல் இருந்து ஒரு பைலை கொண்டு வந்து நீட்டினார்.


  "சார் அந்த பொண்ணு தன்னோட சேலையால கழுத்து நெறிக்கப்பட்ட காரணத்தால் தான், இறந்து போயிருக்காங்க. அவங்களோட கழுத்துல அந்த சேலையோட அச்சு இருந்தது. அந்தப் பொண்ணு தூக்கு போட்டுக்கும்போது ஊருக்குள்ளேயும் யாரும் இல்ல, அவங்க வீட்டில இருந்த அவங்க கணவர் உட்பட எல்லாரும் கோயிலுக்கு போயிருந்திருக்காங்க, அதனால அடுத்த நாள் காலையில தான் விஷயம் தெரிஞ்சிருக்கு. அதுக்குள்ள அந்த பொண்ணு வயித்துல இருந்த குழந்தையும் மூச்சு திணறி இறந்து போயிடுச்சு. இப்படிதான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல டாக்டர் தாமோதரன் ரிப்போர்ட் பண்ணி இருக்காரு"


"மனநலம் பாதிக்கப்பட்ட பொண்ணுன்னு சொல்றாங்க, அத்தோட அவங்க பிரக்னண்டா வேற இருந்திருக்காங்க, இப்படிப்பட்ட சூழ்நிலையில, எப்படி அவங்கள தனியா விட்டுட்டு வீட்டில இருக்கிறவங்க எல்லாரும் வெளியே போய் இருப்பாங்க? இதுல உங்களுக்கு ஒரு டவுட்டும் வரலையா?"


  " அந்த ஊரை பொருத்தவரைக்கும் சித்ரா பௌர்ணமி ரொம்ப ஃபேமஸான கோயில் திருவிழா, அத்தோட இறந்து போன அந்த பொண்ணு, எப்பவுமே மன நலம் பாதிக்கப்பட்ட மாதிரி நடந்துக்காதாம். எப்பவாவது ஒரு தடவை தான் புத்தி சரியில்லாத மாதிரி பேசுமாம்."


"எப்பவாவதுன்னா?  எத்தனை முறை இந்த மாதிரி நடந்துகிட்டு இருக்காங்க? அதை எத்தனை பேர் பார்த்து இருக்காங்க?"


  "ரெண்டு மூணு தடவை இந்த மாதிரி நடந்திருக்கறதா சொன்னாங்க. அவங்க பேரன்ட்ஸ் ஒரு தடவ பாத்திருக்காங்களாம், அப்புறம் ஊர்க்காரங்க எல்லாம் ஒரு டைம் அப்புறம்  வீட்ல அந்த பொண்ணோட மாமியார் ஒரு தடவ இந்த பொண்ணு இந்த மாதிரி நடந்து கிட்டத பார்த்திருக்கிறார்களாம்."


" வாட்? என்ன சொன்னீங்க, அந்த பொண்ணோட பேரண்ட்ஸ் பாத்து இருக்காங்களா? அவங்களுக்கும் இந்த பொண்ணுக்கும் தான் பேச்சுவார்த்தையே இல்லாததா

சொன்னாங்க?"


    "ஆமா சார், ஆனா  இந்த பொண்ணு பிரகனண்ட்டா இருக்கிறது தெரிஞ்சதும் அவங்க இந்த பொண்ணை குடும்பத்தோட சேர்த்துக்கிட்டாங்களாம்." 


  "சரி நீங்க மேல சொல்லுங்க."


    "வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் கோயிலுக்கு கிளம்பும்போது கூட, நல்லா தான் பேசினதா சொல்றாங்க. தனக்கு கால் வலிக்கிறதால தான் வீட்ல இருக்கிறதாக சொல்லி, மத்தவங்களை எல்லாம் கோயிலுக்கு போயிட்டு வர சொல்லி இருக்கு, அந்த பொண்ணோட  ஹஸ்பண்ட் கூட தான் துணையா வீட்டுல இருக்கிறேன்னு சொன்னதுக்கு, இல்ல வேண்டாம்னு சொல்லி அவரையும் அனுப்பி வெச்சிருக்கு."

 

  சரியாக அந்த நேரத்தில் கான்ஸ்டபிள் ஓடி வந்து கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் சீப் டாக்டர் தாமோதரன், தனது மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி தற்கொலை பண்ணிக் கொண்டதாக கூற, விக்ரம் தானும் உடன் வருவதாக கூறி ஜனாவையும் அழைத்துக் கொண்டு, போலீசாருடன் மருத்துவமனைக்கு விரைந்தான்.


    அங்கு டாக்டரின் அறையில் டாக்டர்  தாமோதரன் கைகளில் இருந்து வழிந்த ரத்தமானது அவரின் உடல் முழுவதும் நனைத்திருக்க நேர் குத்திய பார்வையோடு விழுந்து கிடந்தார்


  "என்ன பாஸ் இது எங்க சுத்தினாலும் இந்த கேசு ஒரு முடிச்சுலேயே வந்து நிக்குது, மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நிற்கிறோம்." 

 

அன்று


  அடுத்த நாள் காலையில் சிவாவும் சித்ராவும் கிளம்பி வந்தபோது, ரேகாவும் நாகலிங்கமும் அவர்களின் வீட்டில் தான் இருந்தனர்.


    "டேய் நாகு, என்ன நீ இன்னும் கடைக்கு கிளம்பலையா? ரேகா நீ ஏன் இன்னும் ஆபீஸ் போகாம இங்க இருக்க?"


  "உடம்பு சரியில்ல மாமா அதுதான் லீவு போட்டு இருக்கேன். அண்ணே என்னை அங்க வீட்ல தனியா இருக்க வேண்டான்னு இங்க நம்ம  வீட்டுக்கு கூட்டிட்டு வந்துச்சு, நீங்க எப்ப மாமா ஊருல இருந்து வந்தீங்க? எங்கயாச்சும் வெளிய கிளம்பிட்டீங்களா?"


"ஆமா சித்ராவை செக்கப்பு கூட்டிட்டு போறேன்."


"என்னப்பா திடீர்னு செக்கப்புக்கு? ஏம்மா சித்ரா, வயித்துல  பிள்ளைக்கு ஏதாவது பண்ணுதா?"


    "அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, அவ ரொம்ப சோம்பலா இருந்த மாதிரி தெரிஞ்சது. அதுதான் செக்கப் கூட்டிட்டு போலாம்னு பார்த்தேன்."


      "சரிப்பா பாத்து  போயிட்டு வாங்க வயித்துக்பிள்ளைக்காரியை உக்கார வச்சு கிட்டு, வேகமா வண்டி ஓட்டாத மெதுவாவே ஓட்டிட்டு போ"


  சாந்தி இப்போதெல்லாம்  திருமணம் ஆன புதிதில் சித்ராவிடம் நடந்து கொண்டது போல, இப்போதெல்லாம் நடந்து கொள்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் அவள் வயிற்றில் வளரும் அவளின் குடும்ப வாரிசு தான். அதனாலேயே இப்போதெல்லாம் அவளை நன்றாக கவனிக்க ஆரம்பித்து விட்டார்.


  "சரிப்பா இட்லி ரெடியாயிடுச்சு சாப்பிட்டு கிளம்புங்க"


  "இல்லம்மா நாங்க கோயிலுக்கு போயிட்டு அப்படியே ஹோட்டல்ல பாத்துக்கிறோம்."


" சரிப்பா நல்ல ஹோட்டலா பார்த்து வாங்கி கொடு."


  அவர்கள் இருவரும் ரேகாவிடமும் தலையசைத்து விட்டு கிளம்ப, அவள் ஒரு குரோதத்தோடு வண்டியில் போகும் சித்ராவை பார்த்துக் கொண்டிருந்தாள்.


"என்னம்மா தங்கச்சி நீ இருக்க வேண்டிய இடத்துல அவ இருக்கா, அதை போய் ஆசையா பார்த்துட்டு இருக்க?"


"நீ வேற ஏன்ணே, என் வயிறு எரியுது. ஹாஸ்பிடல் தானே போறாங்க உடம்பு சரியில்லைன்னு சொல்றேன், ரேகாவையும் கூட்டிட்டு போங்கன்னு அத்தை சொன்னாங்களா? இல்ல அவ தான் சொன்னாளா? இப்பல்லாம் அத்தை கூட மாறிட்டாங்கண்ணே."


"நான் அப்பவே சொன்னேன் நீ தான் கேட்கல, அவ மச்சானை லவ் பண்றேன்னு சொன்னப்பவே, நீ நானும் அத்தானும் விரும்புகிறோம்னு சொல்லி இருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்குமா? இப்போ அவளுக்கு அந்த இடத்தை விட்டு கொடுத்துட்டு, நீ பார்த்துகிட்டு மட்டும் நிக்கிறே"


"எல்லாத்துக்கும் காரணம் நீ தான்ணே, நீ மட்டும் அன்னைக்கு பஸ்ல அவ கிட்ட மாட்டிக்காம இருந்திருந்தா, உன்ன பத்தி அவ கிட்ட நல்ல விதமா சொல்லி வச்சிருந்தேன், உனக்கு அவளை கரெக்ட் பண்ணி விட்டடிருப்பேன். நீ அவ வீட்டிலேயும் நான் இங்கயும் செட்டிலாகி இருக்கலாம். தேவையில்லாம பஸ்ல அவகிட்ட மாட்டி, போலீஸ் ஸ்டேஷன் போயி, உன்னை காப்பாற்றுவதற்காக அன்னைக்கு நான் அவ கிட்ட பொய் சொல்லி இதெல்லாம் தேவையா? நல்லவேளை இதுவரைக்கும் நம்ம மேல சந்தேகம் வராத மாதிரி நடிச்சுட்டு இருக்கிறதால, ஏதோ அவளும் நம்பிகிட்டு இருக்கா."


  "சரி விடு நடந்தது நடந்து போச்சு, எனக்கு என்ன தெரியும்? அவ அந்த பஸ்ல வருவான்னு? இப்பவும் உனக்கு வாய்ப்பு இருக்கு, அதை நான் கை கூட வைக்கிறேன். நீ வேணும்னா பாத்துக்கிட்டே இரு."


  சிவா சித்ராவை அழைத்துச் சென்றது சித்ராவின் அப்பாவுடைய கெஸ்ட் ஹவுஸ்க்கு தான். அங்கு அவளுக்காக அவளின் தாயார் காத்துக் கொண்டிருந்தார். அவரை கண்டவுடன் இவள் அவரைக் கட்டிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.


  சித்ராவின் பெற்றோருக்கு சித்ரா தான் அவர்களின் உயிர். அவளுக்காகவே அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவர்கள், கல்யாண விஷயத்தில் தங்களை ஏமாற்றி விட்டுச் சென்ற கோபத்தில், ஏதோ வாய்க்கு வந்தபடி அவளின் திருமணத்தன்று பேசி விட்டனர்.


    ஆனால் தன் பிள்ளை மீது கொண்ட பாசம் இன்னும்அவர்களை விட்டுப் போகவில்லை. சிவாவும் திருமணத்திற்கு பிறகு அவர்களை பல முறை வந்து பார்த்து தன் மீது தான் தவறு என்று கூறி மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தான். அவன் இருக்கும் அதே கட்சியில் தான் சித்ராவின் அப்பாவும் இருக்கிறார்.


    அவனுக்கு மக்களிடம் இருக்கும் நற்பெயரின் காரணமாக, அவனின் தொகுதியில் கட்சியின் சார்பில், கவுன்சிலர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் அவருக்கு தெரியும். அவனின் நல்ல மனதை பார்த்து இவர்களுக்கும் மனம் கனிந்து விட்டது. அத்தோடு தனது பிள்ளை கர்ப்பமாக இருப்பதை  கேள்விப்பட்ட பிறகும் கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டு இருக்க முடியுமா?


    சித்ரா ஹாலில் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த தனது தந்தையை நோக்கி வேகமாக செல்ல, படி தடுக்கி கீழே விழ இருந்தவளை, ஓடிவந்து பிடித்துக் கொண்டார் அவளின் தந்தை.


No comments:

Post a Comment