அத்தியாயம் 2
இன்று
"பாஸ் என்ன பாஸ் இது, அந்த பண்ணையார்கிட்ட சொல்லி வீட்டை ஏற்பாடு பண்ண மாதிரி, சமையலுக்கும் யாரையாவது ஏற்பாடு பண்ணியிருக்கலாம்ல? இப்ப பாருங்க உங்க கையால தோசையை சுட்டு தர சொன்னா, அந்த தோசைக்கல்லையே எடுத்துக் கொண்டு வந்து வைக்கிறீங்க. எப்படி பாஸ் இது எல்லாத்தையும் திங்கிறது?"
"உனக்கு வேண்டாட்டி எழுந்து போடா, போய் பட்டினியாக்கிடா. இங்க உனக்கு நான் பாஸா, எனக்கு நீ பாஸானே தெரியல? எல்லா வேலையும் நானே செஞ்சிட்டு இருக்கேன். நீ உக்காந்து குத்தமா சொல்லிக்கிட்டு இருக்க? எழுந்து போடா முதல்ல."
"ஐயோ எதுக்காக இப்படி எல்லாம் பெரிய வார்த்தை பேசறீங்க. சாப்பாட்டை எப்பவும் வேஸ்ட் பண்ண கூடாது, தோசை நடுவுல தான் கருகியிருக்கு, பரவால்ல விடுங்க. அதை பிச்சு போட்டுட்டு சுத்தி இருக்கிறதை சாப்பிடலாம். ஓ! இதுதான் தேங்காய் சட்னியா? முறைக்காதீங்க பாஸ், என்ன கலர்ஃபுல்லா இருக்குது… வெள்ளை வெளையேன்னு."
"திங்கிறத்துலயே குறியா இரு, நான் உன்கிட்ட நேத்து என்ன சொன்னேன்? போலீஸ் ஸ்டேஷன் போய் அங்க நமக்கு சாதகமாக ஒரு ஆள புடிச்சு, இந்த தற்கொலை கேஸ் பத்தி அவங்க என்ன எஃப் ஐ ஆர் பைல் பண்ணி இருக்காங்கன்னு, விசாரிச்சுட்டு வர சொன்னனா இல்லையா?"
"அதெல்லாம் விசாரிச்சிட்டேன் பாஸ். நீங்க நேத்து கொஞ்சம் லேட்டா வந்தீங்க, அதனால தான் நான் தூங்கிட்டேன்.
அந்த பொண்ணு ரொம்ப நாளாவே தனக்கு தானே, தனியா பேசிட்டு இருந்திருக்கு. கோவில்ல ஒரு நாள் அந்த பொண்ணோட புடவையில நெருப்பு புடிச்சுகிச்சாம், சுத்தி இருந்தவங்க பதறிப் போய் அந்தப் பொண்ணுகிட்ட, சொல்லிக் கூட கேட்காம, நெருப்பு புடிச்ச புடவையோடவே நடந்து போயிட்டு இருந்திருக்கு. அங்கிருந்த மத்த ஆட்கள் தான் தண்ணியை எடுத்து, அந்த பொண்ணு மேல ஊத்தி, காப்பாத்தி இருக்காங்க.
அதுக்கு கூட எந்த ரெஸ்பான்சும் பண்ணாம, அந்த பொண்ணு பாட்டுக்கு நடந்து போயிடுச்சாம். அந்தப் பொண்ணு சாகும்போது மெண்டலி ஸ்ட்ராங்கில்லையாம். ஏதோ தெரியாத்தனமா சுருக்கு போட்டு மாட்டி இருக்கும் போல, அதுதான் மூச்சு திணறி இறந்திருக்கு.
அந்தப் பொண்ணு வயித்துல இருந்த எட்டு மாச கருவும், அந்த பொண்ணோடவே மூச்சுத் திணறி செத்துப் போயிடுச்சுன்னு எஃப் ஐ ஆர் ஃபைல் பண்ணி வச்சிருக்காங்க பாஸ். சரி நீங்க போன வேலை என்னாச்சு பாஸ், அந்த பொண்ணோட ஹஸ்பண்டை பார்த்தீங்களா?"
"பார்த்தேன், அவங்க குடும்பத்தை பத்தியும் வெளிய லைட்டா விசாரிச்சேன், எல்லாரும் நல்லவிதமா தான் சொல்றாங்க. அந்த பொண்ணுக்கும் அவருக்கும் நடந்தது லவ் மேரேஜாம். பொண்ணு வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க. இந்த பொண்ணோட அப்பா, ஏதோ ஜாதி கட்சி தலைவர் போல, அதனால அவங்க கல்யாணத்தப்ப ஊர் முன்னாடி அந்த பொண்ணையும் பையனையும் கண்டபடி திட்டி, இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு, அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டு போயிட்டாங்களாம்.
அந்தப் பையன் பேரு பிரகாஷ். இந்த மாவட்ட இளைஞரணி தலைவரா இருக்கான். கட்சியில இருந்தாலும் ஒரு மெடிக்கல் ஷாப்ல நாலு பேரை வேலைக்கு வைச்சு நடத்திகிட்டு இருக்கான். இந்த தடவை கட்சி சார்பா அவனுக்கு கவுன்சிலர் பதவி கிடைக்கும்னு பேசிக்கிறாங்க. இதுக்கு முன்னாடியே நிறைய தடவை அந்த வாய்ப்பு வந்து, பல அரசியல் காரணங்களால தட்டி போனதா பேசிக்கிட்டாங்க. இந்தப் பையனும் அந்த பொண்ணை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாதாத்தான் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க"
அப்போது வெளியிலிருந்து யாரோ அழைக்கும் சத்தம் கேட்க, இருவரும் வாசலுக்கு வெளியே சென்று பார்த்தனர்.
"அண்ணே என்னை பண்ணையார் அனுப்பி வச்சாருங்கண்ணே. நீங்க இங்க இருக்கிற வரைக்கும் உங்களுக்கு சமைச்சு போடுறதுக்காக."
இடுப்பில் உள்ள குழந்தையை தனது முந்தானையால் மூடியபடி நின்று கொண்டிருந்த இந்த இளம் பெண்ணை பார்த்து விக்ரம்,
" வேலைக்கு வர்றது சரிதாம்மா, ஆனா நீ கை குழந்தைய வச்சுகிட்டு எப்படி எங்களுக்கு சமைச்சு போடுவே?"
"அண்ணே எம்புள்ள உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டான்ணே. அவன் பாட்டுக்கு சிவனேன்னு இருப்பான். நான் அதுக்குள்ள உங்களுக்கு சமைச்சு வெச்சிட்டு, வீட்டுல இருக்க மேல் வேலை எல்லாம் பார்த்திடுவேன். சம்பளம் கூட நீங்க ஏதாச்சும் பார்த்து கொடுத்தால் போதுங்கண்ணே. அதை வைச்சு என் மகனுக்கு ஏதாவது வாங்கிக்குவேன்."
"சரிம்மா, நீ சமையல் வேலையை மட்டும் பார்த்துக்கோ, குழந்தையை வச்சிட்டு வேற எதுவும் மேல் வேலை பார்க்க வேண்டாம். துவைக்கிற வேலை எல்லாம் நாங்களே பார்த்துக்குறோம் சரியா. நாளைல இருந்து வேலைக்கு வந்திடும்மா. ஆமா உன் பேர் என்ன?"
"தேவி ண்ணே"
" கைக்குழந்தையை வெச்சுகிட்டு நீயேம்மா இப்படி கஷ்டப்படறே? உன் வீட்டுக்காரர் என்ன பண்றாரு ?"
"அது ஒரு கழிசடைண்ணே."
"என்னம்மா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டே??"
"அவர் ஒழுங்கா இருந்தா, நான் ஏன்ணே இப்படி கைக்குழந்தையோடு வேலைக்கு வரேன்? இந்த ஊரு ஆம்பளைங்களுக்கு குடும்பத்தை விட அரசியல் தான் முக்கியமா போச்சு. ஊராருங்க முன்னாடி நல்லவன் மாதிரி வேஷம் போடுறாங்க. ஆனா அவனவன் பொண்டாட்டி கிட்ட கேட்டா தானே தெரியும், அவனுங்களோட உண்மையான லட்சணம் என்னன்னு. சரி அதைவிடுங்க என்னோட கதையை சொல்லி உங்க நேரத்தை ஏன் நான் வீணாக்கனும். நாளைக்கு காலையில் இருந்து வேலை ஆரம்பிச்சிடுறேங்கண்ணே வரட்டுங்களா?"
தேவி கூறியதை கேட்டு விக்ரம் சிந்தனையில் இருக்க, ஜனா தான் அவளுக்கு மறுமொழி கூறி அனுப்பி வைத்தான்.
அன்று
ஆபீஸ்க்கு லேட்டாக வந்த காரணத்தால் பர்மிஷன் லெட்டர் எழுதி, அதை தனது உயர் அதிகாரிக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருந்தாள் சித்ரா. அவள் அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தால் அவளுடைய தற்போதைய தோழியான ரேகா.
ரேகா வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றது. ரொம்ப பயந்து சுபாவமாக வந்து சேர்ந்த அவளுக்கு, தைரியசாலியான சித்ரா தோழியானாள்.
" எதுக்கு சித்ரா உனக்கு இந்த தேவையில்லாத வேல? பஸ்ல அவன் தப்பா நடந்துகிட்டான்னா, அங்கேயே அடிச்சு விட்டுட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே? நீ எதுக்கு வான்டடா போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்திருக்க? எதுக்குடி நமக்கு இந்த தேவையில்லாத வேலை?"
"இப்படியே நமக்கென்னன்னு போறதால தான், இவனுங்க எல்லாம் அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு, மேல மேல நிறைய தப்பு பண்றாங்க. இவனுங்கள ரெண்டு மாசமாவது ஜெயிலுக்குள்ள தள்ளுனா, அடுத்து இன்னொரு பொண்ணு மேல கை வைக்க துணிவானுங்களா? சரி அதை விடு, இன்னைக்கு உன் பாசமலர் ஏதோ உன்ன பார்க்க வர்றதா சொன்னியே, என்ன ஆச்சு?"
"அவருக்கு ஏதோ அர்ஜென்ட் வேலை வந்திடுச்சாம், அதனால இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொன்னாரு."
"உன்னோட அண்ணணும் என்னோட அண்ணா மாதிரி தான் போல? என்னோட அண்ணா, நாடு தான் முக்கியம்னு எங்க எல்லாரையும் விட்டுட்டு ராணுவத்தில் சேர்ந்துட்டாரு. ஆனா உன்னோட அண்ணா வேலை வேலைனு ஓடிக்கிட்டே இருக்காரு."
No comments:
Post a Comment