Search This Blog

Followers

Powered By Blogger

Monday, September 8, 2025

பிம்பம் 4


 

அத்தியாயம் 4


இன்று


      "என்ன பாட்டி சொல்றீங்க பேயாவா? இந்த ஊருக்கு வெளியே இருக்கே, அந்த புளியமரத்துலயா?"


    பாட்டி ஆம் என்று தலையசைத்ததை கண்டு, ஜனாவின் முகம் போன போக்கை பார்த்து, விக்ரமுக்கு அன்றைக்கு அந்த புளிய மரத்தை கட்டிக்கொண்டு ஜனா நின்ற நிலைதான், கண் முன்னே காட்சியாக விரிந்தது. வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு வாய்க்குள்ளேயே மறைத்துக் கொண்டான் விக்ரம்.


    "ஏன் பாட்டி, விருப்பப்பட்டு தற்கொலை பண்ணிக்கிட்டவங்க எதுக்காக காவு வாங்க துடிக்கனும்? யாராவது அவங்கள கொன்னிருந்தால் தான் அவங்களை பழி வாங்குறதுக்காக இப்படி பேயா அலைவாங்க?"


    "அது கொலையோ தற்கொலையோ யாருக்கு தெரியும்?"


    "ஏன் பாட்டி அந்த பொண்ணுக்கும் அவங்க வீட்டுக்காரருக்கும் ஏதாவது பிரச்சனையா?"


    "ச்சே ச்சே அவன் அந்த புள்ளையை தங்கமா தான் தாங்கினான். ஆனா அவ அத்தைகாரிக்கு தான், இவளை மருமகளா கூட்டிட்டு வந்ததே புடிக்கல. அவளுக்கு அவங்க அண்ணன் மகளை கட்டி வைக்கணும்னு ஆசை. ஆனா அந்த பையன் அவ அத்தை பொண்ணோட சிநேகிதியை இல்ல காதலிச்சு கூட்டிட்டு வந்துட்டான்."


  "அந்த அம்மா அவ்வளவு பெரிய கொடுமக்காரியா பாட்டி?"


  "பின்ன இல்லாமையா அவளோட புருசங்காரன் பாதியிலயே அவளை விட்டுட்டு, பரதேசம் போகணும். ஆமா நீங்க என்ன, கோயில பத்தி விசாரிக்க வந்துட்டு, இந்த புள்ளையை பத்தியே விசாரிச்சுட்டு இருக்கீங்க?"


    பாட்டி தனது மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டே, சந்தேக கண்ணோடு அவர்களைப் பார்த்து கேள்வி கேட்க,


    " அது....அது ஒன்னும் இல்ல பாட்டி நாங்க எழுத்தாளர்ன்னு சொன்னோம்ல, ஒருவேளை நீங்க சொல்ற கதை நல்லா இருந்தா, அதையே ஒரு புக்கா எழுதலாம்னு தான். அதனால தான் இவ்வளவு விரிவா கேட்டுட்டு இருக்கோம். அந்த புக்குல உங்க போட்டோவையும் நீங்க சொன்ன கதைன்னு சொல்லி போட்டார்லாம் சரியா, எங்க ஸ்மைல். சூப்பர் பாட்டி இந்த படத்தையே அந்த புக்குல போட்டர்லாம், நீங்க மேல சொல்லுங்க."


    அந்தப் பாட்டி வாயெல்லாம் பல்லாக தமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறத் தொடங்கினார்.


    பிரகாஷுக்கு  ஒரு மாமன் மகளும், மகனும் இருக்கிறார்களாம். தனது அண்ணனின் மறைவுக்குப் பிறகு தாய் இல்லாத அவர்களை தமது வீட்டிற்கு பின்னால்  குடிவைத்து,  பாதுகாத்து வளர்த்து வருகிறார் பிரகாஷின் தாயார்.


    சிறுவயதில் இருந்தே தனது அண்ணன் மகளே, தனக்கு மருமகளாக வரவேண்டும் என்று அவருக்கு ஆசை. ஆனால் தனது மகன், அவளின் தோழியை தனது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பான் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லையாம். தனது மகனுக்காக அவளை ஏற்றுக் கொண்டாலும், அவன் இல்லாத பொழுதுகளில் முகத்தை காட்டவும் செய்வாராம்.


    சித்ராவுக்கு பைத்தியம் பிடித்து தன் பிள்ளையை விட்டு ஓடிப் போக வேண்டும் என்று, இந்த ஊரில் உள்ள குடுகுடுப்பைகாரனிடம் சென்று சித்ராவிற்க்கு சூனியம் கூட வைத்தாராம்.


    "பாஸ் நம்ம வந்த வேலை சிறப்பா முடிஞ்சது போல, நம்ம தேவைக்கு மேலயே நிறைய இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு."


  "இல்ல ஜனா, இங்க நாம வந்த வேலை இன்னம் முடியல. இப்பதான் ஆரம்பிக்க போகுது."


    "என்ன பாஸ் சொல்றீங்க ? அதுதான் தேவையான எல்லா விஷயத்தையும் இந்த பாட்டிங்க கிட்ட இருந்து வாங்கியாச்சே?"


    " நான் இங்க வந்ததுக்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கு. அதோ வராங்க பாரு அவங்க தான் பிரகாஷோட அம்மா சாந்தி. இன்னைக்கு எப்படியாவது அந்த வீட்டுக்குள்ள போய் சித்ரா தற்கொலை பண்ணிக்கிட்டதா சொன்ன இடத்தை பார்த்தாகணும் நமக்கு அங்க ஏதாவது க்ளூ கிடைக்க வாய்ப்பு இருக்கு."


    "என்ன பாஸ் இவங்க பார்க்கிறதுக்கு நம்ம ஊர் சொர்ணாக்கா மாதிரி இருக்காங்க, இவங்களுக்கு யாரு சாந்தின்னு பேர் வைச்சது. சரி பிளான் போட்டுட்டீங்களா, இல்ல இனிமேல் தானா?"


  "பிளான் ரெடி தான் ஜனா. நான் சொல்ற படி செய்."


அன்று


    சிவப்பிரகாஷ் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் தோழிகள் இருவரும் சென்றனர். இன்னும் அவன் கண்விழிக்காததால் அவன் அருகில் நின்று கொண்டிருந்த நண்பர்களிடம் இது எப்படி ஆனது என்று விசாரிக்க, 


  "நம்ம மாரியோட தங்கச்சி வீட்டுக்காரர் இருக்காருல்ல, அவருக்கு அவங்க அம்மா அப்பா பணத்துக்கு ஆசைப்பட்டு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறதா இருந்தாங்க, அதை தடுத்து நிறுத்துற தகராறுலதான் சிவாக்கு இப்படி அடிபட்டுடுச்சு."


        இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு கண்விழித்தன் சிவப்பிரகாஷ்.


      "எதுக்கு மாமா உனக்கு இந்த தேவையில்லாத வேல? யார் எப்படி போனா உனக்கு என்ன? அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் வேற  கல்யாணம் பண்ணிக்கிட்டான்னா, அது அவங்க குடும்ப பிரச்சினை, அதுக்குள்ள நீ ஏன் போய் தலையை விடற? பாரு இப்ப எப்படி அடிபட்டு வந்து படுத்து கிடக்கேன்னு?"


  "என்ன ரேகா இப்படி சொல்லிட்ட? நாளைக்கு உனக்கே புகுந்த வீட்ல ஒரு பிரச்சனைனாலும், நான் முன்னாடி வந்து நிற்க மாட்டேனா? அந்த பொண்ணும் எனக்கு அப்படித்தான். கண்ணுக்கு  முன்னாடி ஒரு அநியாயம் நடக்கும்போது அதை எப்படி தட்டி கேட்காம இருக்க முடியும்." 


  "அதுவும் அந்த பொண்ணுக்கு ஒரு வயசுல குழந்தை இருக்கு, அதை கூட மறந்துட்டு அந்த ஆளு, இன்னொரு கல்யாணம் பண்ணிக்க நினைச்சான், பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? அதுதான் போலீஸோட போயி சண்டை போட்டு, அந்த கல்யாணத்தையே நிறுத்திட்டேன்."


  அப்போது சிவப்பிரகாசத்தின் தோழனான மாரி, அறைக்குள் நுழைந்து, அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்து விட்டான்.


    "நீ மட்டும் இல்லைனா, என் தங்கச்சியோட வாழ்க்கையே பாழா போயிருக்கும் சிவா. இப்போ மாப்பிள்ளையோட குடும்பம் பூராவும் போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்காங்க. எங்க கிட்ட சமாதானமா போக பேச்சு வார்த்தை நடத்துறாங்க, இனிமே என் தங்கச்சியோட ஒழுங்கா வாழ்வேன்ன்னு, மாப்பிள்ளை போலீஸ் முன்னாடி உறுதி கொடுத்திருக்காரு. இது எல்லாமே உன்னால தான் சிவா நடந்தது."


  "மாரி ஒழுங்கா விசாரிச்சுட்டு  உன் தங்கச்சியை அங்க அனுப்பு. இப்போ சமாதானமா போற மாதிரி கூட்டிட்டு போய்ட்டு, பின்னாடி வேற ஏதாவது செய்திட போறாங்க. அதனால உன் கண்காணிப்பிலேயே உன் தங்கச்சியும் அவர் வீட்டுக்காரரும் இருக்கிற மாதிரி வேற வீட்டில் குடி வச்சுக்கங்க."


    மாரி அவனிடம் சரி என்று சொல்லிவிட்டு, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்ததால், மறுபடியும் பலமுறை நன்றிகள் கூறிவிட்டு, அங்கிருந்த அவசரமாக சென்றான்.


  " இந்த டைம்ல எதுக்காக ரேகா தனியா வந்தே?"


  "இல்ல மாமா இவ என்னோட பிரண்டு பேரு சித்ரா, இவ கூட தான் இங்க வந்தேன்."


  " சரிம்மா  நான் இங்க பாத்துக்குறேன். முதல்ல நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. லேடிஸ் மட்டும் இப்படி தனியா வெளியே வராது நல்லது இல்ல."


  "ஏன் சார் ஆம்பளைங்க மட்டும் தனியா வெளியே சுத்தலாமா? நாங்க ஹாஸ்பிடலுக்கு தனியா வர்றது கூட குத்தமா?"


  "நான் அதை குத்தம்னு சொல்லலைங்க, நம்ம சேஃப்டிய நாம தானே பார்த்துக்கணும். அப்பா அம்மா கிட்ட நீங்க இங்க வர்றீங்கன்னு சொல்லிட்டு வந்தா அது ஒரு சேப்டி, எதுவுமே சொல்லாம, நீங்க இப்படி இங்க ஹாஸ்பிடல் வந்ததை வேற யாராவது பார்த்து, வீட்டுல சொன்னா தேவையில்லாம பொண்ணுங்களோட பேரு தான் கெட்டுப் போகும். 


     நம்ம சமூகத்துல ஒரு தடவை ஒரு பொண்ணுக்கு பெயர் கெட்டுட்டா, அது அப்படியே நின்னு போயிடும். ஆனா இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளைங்களுக்கு கிடையாது, அது என்னவோ நம்ம சமூகத்தோட டிசைன் அப்படி. சரிங்க நீங்க கிளம்புங்க, டேய் போய் ஆட்டோ கூட்டிட்டு வந்து, அவங்களை பத்திரமா வண்டி ஏத்தி விட்டுட்டு தான், நீங்க உள்ள வரணும்."


  பெண்கள் என்றால் போதைப் பொருளாக நினைக்கும் ஆண்களும் உண்டு, எட்ட நிறுத்தி வேறுபாடு பார்க்கும் ஆட்களும் உண்டு. ஆனால் இவனது அணுகுமுறை சித்ராவுக்கு புதிதாகபட்டது. அனைவரிலும் இருந்து இவன் தனித்து தெரிந்தான்.


  அவனின் உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு தலையசைப்போடு  ரேகாவுடன் ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தாள்.


No comments:

Post a Comment