அத்தியாயம் 6
இன்று
மயங்கி விழுந்த ஜனாவை பார்த்து விக்ரம், இவனுக்கு இதே வேலையா போச்சு என்று புலம்பிக் கொண்டே அவனை எழுப்ப முயன்றான். இவன் மயங்கி விழுந்ததைக் கண்டு மிரண்டு போன சாந்தி, உதவிக்கு அக்கம்பக்கத்தினரை அழைப்பதை பார்த்து,
"ஒன்னும் இல்லம்மா இவனுக்கு பேய்ன்னா கொஞ்சம் பயம், நீங்க சொன்னதைக் கேட்டு பயந்து போய் மயங்கி விழுந்துட்டான் அவ்வளவுதான்."
கீழே விழுந்த ஜனாவை எழுப்பி மேலே படுக்க வைக்க முயன்றான் விக்ரம், ஆனால் ஜனாவினுடைய கனமான சரீரத்தின் பாரத்தை அவனால் தூக்க முடியவில்லை.
சாந்தியின் குரல் கேட்டு அவரின் வீட்டுக்கு பின்புறம் இருந்த, சாந்தியின் அண்ணன் மகன் நாகலிங்கம் கொல்லைப்புறம் வழியாக பதறியபடி ஓடி வந்தான்.
விக்ரமுக்கு ஆச்சரியமாக இருந்தது இப்போது தானே, நான் பார்த்துவிட்டு வந்தேன், பின்பக்க கதவு தாழிடப்பட்டு இருந்ததே? இவன் எவ்வாறு பின்புறம் இருந்து வருகிறான்? என்ற யோசனையில் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
"என்னத்தே? என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்திகிட்டு இருக்கே?"
"ஏண்டா நாகு, நீ நேர் வழியாவே வீட்டுக்குள்ள வரமாட்டியா? எப்ப பாரு பொடக்காலி(கொள்ளைபுறம்) வழியாவே உள்ள வாரே?"
"நான் வீட்டை சுத்திட்டு வர்றதுக்குள்ள நேரம் ஆயிடும் அத்தே, இதுதான் ஷார்ட் கட்டு. அதனால தான் இந்த வழியா வந்தேன். முதல்ல என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்துனேன்னு சொல்லு?"
"இவங்க நமக்கு தெரிஞ்ச பசங்கடா, இந்த தம்பி திடீர்னு மயக்கம் போட்டுருச்சு. அந்த தம்பியால தனியா இவரை தூக்கி, மேல படுக்க வைக்க முடியல, நீ கொஞ்சம் உதவி செய்டா, நான் போய் மருத்துவச்சியை கூட்டிட்டு வாரேன்."
"ஐயோ அம்மா, அந்த அளவுக்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல. ஏதோ பயந்து போய் மயக்கம் போட்டுட்டான், கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க, அது தெளிச்சா சரியா போயிடுவான்."
இதோ கொண்டு வரேன் தம்பி என்று அவர் உள்ளே சென்று தண்ணீர் செம்போடு வெளியே வந்தார். அதை வாங்கி ஜனாவின் முகத்தில் தெளித்து அவனை மயக்கத்தில் இருந்து தெளிய வைத்த விக்ரம், அவனை அப்படியே எழுப்பி சோபாவில் சாய்த்து அமர வைத்தான்.
" யார் அத்தை இவங்க? ஊருக்கு புதுசா இருக்காங்க?"
"சொல்ல மறந்துட்டேன் பாரு, இவங்க கதை எழுதறவங்களாம், நம்ம பண்ணையார் தான், நம்ம ஊர் கோயிலை பத்தி எழுத வந்திருக்க இவங்களை, கீழ தெருவுல இருக்க மாறன் வீட்ல தங்கவச்சிருக்காரு. இன்னைக்கு கோயில்ல மயக்கம் போட்டு விழுக போன என்னை, இவங்கதான் பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டாங்க."
"ஓஹோ"
"வணக்கம் சார், என் பேர் விக்ரம், இவன் என்னோட ஜூனியர் ஜனா."
"வணக்கம் என் பேர் நாகலிங்கம் இவங்களோட அண்ணன் பையன்."
"ரேகா வந்துட்டாளாடா? ஊர் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து கும்மி அடிக்க போறாங்க? என்ன இன்னும் அவளை காணோம்?"
"வந்திடுவா அத்தே, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்துட்டு இருக்கறதா எனக்கு போன் பண்ணினா, இதோ பாரு அவளே வந்துட்டா."
"என்னாச்சுத்தே யார் இவங்க எல்லாம்?"
சாந்தி கோவிலில் நடந்ததை பற்றியும் இவர்களை பற்றியும் அவளிடம் கூறினார்.
"ரொம்ப நன்றிங்க சார், சரியான நேரத்தில எங்க அத்தையை காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க."
"பரவால்ல மேடம் எல்லாம் ஒரு மனிதாபிமான செயல் தானே."
ஒரு பெண்ணின் குரல் கேட்டவுடன் ஜனா தானாக கண்களை திறந்து, ரேகாவை கண்டுவிட்டு முகத்தை துடைத்தும் தலையை சீவியும் தன்னை சரி செய்து கொண்டு,
" ஆமாங்க எல்லாமே ஒரு மனிதாபிமான செயல் தானே."
என்று ரேகாவை பார்த்து வழிந்து கொண்டே கூறினான்.
அன்று
வீட்டை விட்டு வெளியேறிய சித்ரா நேராக சென்று நின்றது சிவப்பிரகாஷின் இல்லத்தில் தான். சிவா அவளது நிலையை புரிந்து கொண்டு, தனது அன்னையிடம் பேசி, அவசர திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான்.
அவர்கள் திருமணம் சிவாவின் ஊரில் உள்ள ஒரு கோயிலில் நடந்தது. இந்த திருமணத்தில் சிவாவின் அம்மா சாந்திக்கு விருப்பமில்லை, அவர் சிவாவிடம் எவ்வளவோ போராடி மறுத்துப் பார்த்தார், உயிரை விட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி கூட பார்த்தார், ஆனால் அவன் நீங்கள் இதற்கு சம்மதிக்கவில்லை என்றாலும் சித்ராவை தவிர வேறு யாரையும் என் மனைவியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றதால், வேறு வழி இல்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டார்.
அவர்களின் திருமணம் எளிமையாக கோயிலில் ஊர் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. விஷயம் அறிந்து வந்த சித்ராவின் பெற்றோர்கள் அவளை சரமாரியாக வசைப்பாடி விட்டு, இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மண்ணைஅள்ளி அவள் மீது வீசி, சபித்துவிட்டு சென்றனர்.
திருமணமான சில நாட்கள் சித்ராவிற்கு நன்றாகவே சென்றது. ஆனால் சிவா வீட்டில் இல்லாத நாட்களில் சாந்தி அவளிடம் காட்டும் முகமானது வேறாக இருந்தது. அவள் எந்த செயலை செய்தாலும் குற்றம் கூறுவதும் திட்டுவதுமாகவே, அவளை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அத்தோடு ஒன்றுமாத்தி ஒன்றாக பல வேலைகளை அவளை செய்யுமாறு கூறிக் கொண்டே இருப்பார்.
இது தெரிந்தது தான் என்றாலும் போகப்போக சித்ராவிற்கு மனதுக்கு சங்கடமாக இருந்தது. இதை பற்றி சிவாவிடம் கூறி பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்று அவளும் அவர் கூறும் வேலைகளை செய்து கொண்டேயிருப்பாள்.
திருமணத்திற்கு பிறகு சித்ரா வேலைக்கு செல்வதை விட்டுவிட்டாள். சிவாவின் மெடிக்கல் ஷாப் சம்பந்தப்பட்ட கணக்குகளை வீட்டிலேயே சரி பார்த்து கொடுக்க ஆரம்பித்தால்.
அங்குள்ள வேலையாட்களின் விவரங்களையும், மருந்து கடையில் உள்ள மருந்துகளின் ஸ்டாக் விபரத்தையும் கணினியில் ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்து கணினியில் அவற்றை சேமித்து வைத்தாள்.
அப்படி வேலையாட்களின் விபரங்களை கணினியில் பதிந்து கொண்டிருந்த போதுதான், அன்றொரு நாள் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தால், தன்னால் போலீஸில் பிடித்துக் கொடுக்கப்பட்டவன் அவர்களின் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருப்பதை கண்டால்.
அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ரேகா, இதுதான் தன் அண்ணன் என்று அவளுக்கு அறிமுகப்படுத்த, சித்ரா அதிர்ந்து தான் போனாள் .
சித்ரா ரேகாவிடம் அவளது அண்ணனை பற்றி கூறலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பெரும் போராட்டமே நடத்தினாள். ஏனென்றால் சித்ராவிற்கு தான் தெரியுமே ரேகாவிற்கு அவள் அண்ணன் என்றால் உயிர் என்று. அத்தோடு அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தமும் அவன் தான். எனவே சிவாவிடம் மட்டும் அவனை பற்றி மேலோட்டமாக சொல்லி வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள், ஆனால் அடுத்த நாளே ரேகாவின் அண்ணன் நாகலிங்கம் அவளை காணவந்தான்.
வந்தவன் அவள் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். தற்போது தான் மாறிவிட்டதாகவும் இப்போதெல்லாம் அவ்வாறான தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் கெஞ்சினான். சிவாவிடமும் தன் தங்கையிடம் தன்னை பற்றி எதுவும் தவறாக கூறிவிட வேண்டாம் என்று அவளிடம் மன்றாடினான்.
சித்ராவும் இனி ஒரு முறை இவ்வாறு நடந்து கொண்டால், அவர்களிடம் தெரிவித்து விடுவேன் என்று மிரட்டி, அவனை அனுப்பி வைத்தாள்.
No comments:
Post a Comment