Search This Blog

Followers

Powered By Blogger

Thursday, September 18, 2025

பிம்பம் 7


 

அத்தியாயம் 7


இன்று

 

  "ஐயோ பாஸ் மறுபடியும் அந்த புளிய மரத்துக்கா? என்னால முடியாது, ரொம்ப போர்ஸ் பண்ணீங்க அப்புறம் இத்தோட இந்த ஜனா, உங்களோட உறவை முறிச்சுக்க வேண்டியதா இருக்கும் பரவால்லையா?"


  "நல்லதாபோச்சு அப்படி ஒரு நல்ல நாள் வராதான்னு, நான் எவ்வளவு நாளா ஏங்கிட்டு இருக்கேன் தெரியுமா? சரி எப்போ ஊருக்கு கிளம்பற?"


      " எதே ? என்ன பாஸ் பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டீங்க? நான் புளிய மரத்துகிட்ட தானே கண்காணிக்க மாட்டேன்னு சொன்னேன், அதுதான் எப்படியும் சிவா வீட்டையும் அந்த நாகலிங்கத்தையும்  இன்னைக்கு கண்காணிக்கனும்னு சொல்லி இருக்கீங்களே! நான் அங்க போறேன் நீங்க புளியமரத்து கிட்ட போங்க, அவ்வளவுதான் மேட்டர் சால்வ்டு. என்ன பாஸ் சந்தேகமா பார்க்கறீங்க நீங்க புளிய மரத்தைமட்டும் பார்த்தாபோதும் ஆனா நான் உங்களுக்காக சிவா வீட்டு கொல்லைபுறத்தையும் அந்த நாகலிங்கத்தையும் போய் கண்காணிக்கறேன் பாஸ்."


    "நீ நாகலிங்கத்தை தான் கண்காணிக்க போறயா? இல்ல அவன் தங்கச்சி ரேகாவை  பார்க்கனுங்கறக்காக போறேங்கறையா?"


  " பாஸ், என்ன பாஸ் உங்க ஜனாவை சந்தேகப்படுறீங்களா?"


  " ச்சே ச்சே சந்தேகமெல்லாம் கிடையாது, கன்ஃபாமா சொல்றேன், நேத்து அந்த அம்மா பேயை பத்தி சொன்னதும் மயக்கம் போட்டு விழுந்துட்டு, அந்த புள்ளையோட குரல் கேட்டதும், அடுத்த நிமிஷமே எழுந்துகிட்ட பாரு? அப்பவே தெரிஞ்சது, எப்படியும் நீ அந்த புள்ள பின்னாடி சுத்தி ஊர்க்காரங்க கையால செருப்படி வாங்கப் போறேன்னு."


    "போன இடத்துல நம்ம வேலையை தவிர வேற ஏதாவது வேலையை பார்த்து, சிக்கல்ல மாட்டிக்கிட்டு நின்னேன்னா, நான் எல்லாம் வந்து சிபாரிசு பண்ண மாட்டேன். போலீஸ் ஸ்டேஷனே கதின்னு கெடே."


"பாஸ் இருந்தாலும் நீங்க என்னை இவ்வளவு தெளிவா.... புரிஞ்சு வச்சிருக்க கூடாது."


  "இதெல்லாம் வக்கனையா பேசு, பேய் பத்தி காதால கேட்டா கூட மயக்கம் போட்டு விழுந்திரு, ஏதோ  கண்ணாலேயே பேயை பார்த்த மாதிரி."


"கிண்டல் பண்ணாதீங்க பாஸ்."


  "கிண்டலா? டேய் நான் உண்மையை சொல்லிகிட்டு இருக்கேன்."


  " போங்க பாஸ் போற இடத்துல எல்லாம் அந்த புளியமரத்தை பத்தியே பேசறாங்க, நீங்க எந்த நேரத்துல வாயை வச்சீங்களோ நாம விசாரிக்க போற இடத்திலே எல்லாரும் அந்த புளிய மரத்துக்கிட்ட பேயை பார்த்ததாவே சொல்றாங்க, இதுக்கு மேலயும் நான் மயக்கம் போடாம இருந்தா, அப்புறம் அந்த பேய்க்கு என்ன மரியாதைன்னு கேட்கறேன்."

   

    அன்று இரவு இருவரும் தத்தமது வேலையை முடிக்க, விக்ரம் புளிய மரத்தை நோக்கியும், ஜனா சிவாவின் வீட்டில் உள்ள அவனது பெட்ரூம்மை ஒட்டிய, கொல்லை புறத்திற்கும் சென்றனர்.


விக்ரமின் வாய் முகூர்த்தமோ என்னவோ! அடுத்த நாள் காலையில் விக்ரமுக்கு ஜனா போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாகத்தான் செய்தி வந்தது. ரேகா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததால், அவளது அண்ணன் நாகலிங்கத்தால் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்கள் வீட்டிற்கு அருகில் ஜனா மயங்கி விழுந்திருந்ததால், ஒருவேளை அவன் ரேகாவின் ரகசிய காதலனாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அவனை போலீஸ் ஸ்டேஷனில் அவர்களின் கஸ்டடியில் வைத்து விசாரித்து கொண்டு இருப்பதாகவும், செய்தி வந்தது.


அன்று


      சித்ராவின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு ஆதாரமாக அவள் கருவுற்றாள். இதை அறிந்ததும் சிவா அவளை தன் கைகளில் வைத்து தாங்கினான். பக்கத்து ஊரில் உள்ள பிரபலமான மகப்பேறு மருத்துவமனைக்கு அவளை மாதாமாதம் கூட்டிக்கொண்டு செக்கப்பிற்கு சென்று வந்தான்.


    இந்நிலையில்தான் கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நாள் வந்தது. சிவாவின் கட்சியில் அந்தத் தொகுதியின் சார்பாக அவனை முன்னிறுத்துவதாக அறிவித்தனர். அவன் கட்சி வேலையில் மூழ்க தொடங்கியதால், சித்ரா ரேகாவுடன் மருத்துவமனைக்குச் சென்று வந்தாள்.


  சித்ராவின் குடும்பமும் அரசியல் பின்னனியை கொண்டது தான். அவளின் தாத்தா உள்துறை அமைச்சராக இருந்தவர். ஆனால் அவளின் அப்பா கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மட்டும் பெயரளவில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார். ஏனோ அவருக்கு கட்சி மற்றும் பதவியில் பெரிதாக விருப்பம் ஏதுவும் இல்லை. அவரின் மகனோ நாடு தான் பெரிது, ஜாதி கட்சிகள் கூட தேவையில்லை என்று, அவரை எதிர்த்து கொண்டு ராணுவத்தில் சேர்ந்து விட்டார்.


  சித்ராவிற்கு சிவா அரசியலில்  ஈடுபடுவது பிடிக்கத்தான் இல்லை, இருந்தாலும் இது அவனது கனவு, தனது மக்களுக்காக போராடி மேலே வந்தவன் அதனால் அவனது விருப்பங்களுக்கு மதிப்பளித்து வந்தாள்.


  ரேகாவின் வீட்டிற்கு சித்ரா அவ்வளவாக செல்வதில்லை, தற்போது சிவா அரசியல் விஷயமாக வெளியூர் சென்ற காரணத்தால், நாகலிங்கம் தான் மேற்பார்வையாளராக இருந்து மருந்து கடையை பார்த்துக் கொள்கிறான். அதனால் தற்போதெல்லாம் அவன் தான், கணக்குகளை சரி பார்த்து விட்டு, கடையை பூட்டிக் கொண்டு வருகிறான்.


    ஒரு மாலை வேளையில் ரேகா ஆபீஸ்ஸில் இருந்து வீட்டிற்கு வந்திருப்பாள் என்று நினைத்து, அவளைப் பார்த்து வரலாம் என்று அவளது வீட்டிற்கு சென்றாள் சித்ரா.


  சித்ரா ரேகாவின் வீட்டை நெருங்கிய போது உள்ளிருந்து ஏதோ பேச்சு குரல் வந்தது போல இருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே ரேகாவின் பெயரை கூறியபடியே வீட்டின் கதவை தட்டினாள்.


  சிறிது நேரத்திற்கு பிறகு தான் கதவு திறக்கப்பட்டது. உள்ளிருந்து வந்த ரேகா இவளை கண்டு பதட்டமானால், பிறகு சட்டென்று முகத்தை மாற்றிக்கொண்டு அவளை வாசலிலேயே நிற்க வைத்து,


" என்ன சித்ரா அதிசயமா இருக்கு நான் வீட்டுக்கு வா வான்னு கூப்பிட்டா கூட வர மாட்டேன்னு சொல்லுவ, இன்னிக்கு நீயாகவே என்னோட வீடு தேடி வந்திருக்க? ஏதாச்சும் பிரச்சனையா? அத்தை ஏதாச்சும் உன்னை திட்டினாங்களா? இல்ல...உனக்கு உடம்புக்கு எதுவும்  சரியில்லையே?"


  "முதல்ல மூச்சை விடு ரேகா, இத்தனை கேள்வியை ஒட்டுக்கா கேட்டா, நான் எந்த கேள்விக்கு தான் ஆன்சர் பண்ண? சரி என்னை இப்படி வாசல்ல நிக்க வைக்கத்தான், வீட்டுக்கு வா வான்னு அத்தனை தடவை  கூப்பிட்டியா?"


வீட்டின் பின்வாசலில் இருந்து டொம் என்ற சத்தம் கேட்க,


   "என்னடி இது? பின்பக்கம் ஏதோ சத்தம் கேக்குது?"


"அது ஒன்னுமில்ல சித்ரா, அந்த பக்கமா பூனை ஒன்னு சுத்திக்கிட்டு இருக்கு, அதோட வேலையா இருக்கும்.நீ உள்ள  வா "


  ரேகாவின் வீடு மொத்தமாக மூன்று அறைகளைக் கொண்டது. ஒரு சமையல் கூடம்,ஒரு பெட்ரூம் மற்றும் பின்பக்க வாசல் கதவோடு கூடிய வரவேற்பறை. அந்தப் பின்பக்க வாசல் கதவு திறந்திருப்பது போல தோன்றியது.


  சித்ராவை வரவேற்பறையில் உள்ள சோபாவின் மீது அமர வைத்துவிட்டு, ரேகா அவளுக்கு குடிக்க  ஏதாவது கொண்டு வருவதாக கூறி, சமையல் கூடத்திற்கு சென்றாள்.


  சித்ரா அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிர் திசையில் தான் பெட்ரூம் இருந்தது. கதவு திறந்திருந்ததால் உள்ளே இருப்பது அப்படியே தெரிந்தது. அந்த அறையில் துணிகள் அங்கங்கே சிதறி கிடந்தன, அத்தோடு மது பாட்டில்களும் அதனை ஊற்றிக் கொடுக்கும் கோப்பைகளும் இருந்தன.


        சித்ரா இது ரேகாவின் அண்ணாவுடைய வேலையாக இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கையில், அதற்கு அருகில் பாதி எரிந்து கொண்டிருந்த சிகரெட் துண்டினை கண்டு நெற்றி சுருங்க யோசிக்க தொடங்கினாள்.


    ஏனோ அங்கு அமர்ந்திருப்பது முள்ளின் மீது அமர்ந்திருப்பது போன்று தோன்ற, ரேகாவை அழைத்து தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக கூறிவிட்டு, தனது இல்லத்தின்  கொல்லைபுறத்தை நோக்கி நடந்தாள்.


  அவளது பெட்ரூமுக்குள் யோசனையினோடே நுழைந்து கொண்டிருக்கையில், யாரோ அவளின் மீது வந்து விழ, பதறிப் போய் உரத்த குரலில் கத்த தொடங்கினாள்.

No comments:

Post a Comment