அத்தியாயம் 1
இன்று
அந்த சிறிய பேருந்தானது மெய்க்காரன்பட்டி என்று எழுதப்பட்டிருந்த, அறிவிப்புப் பலகைக்கு அருகில் வந்துநின்றது.
அதிலிருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கினர். ஒருவன் காட்டன் ஷர்ட்டும் கருப்பு நிற பேன்ட்டும் அணிந்து, கைகளில் லக்கேஜ் பேக்கோடு நின்றிந்தான்.
இன்னொருவனோ டி-ஷர்ட்டின் மீது கோட்டும், கிழிந்த ஜீன்ஸ்சும், கருப்பு கண்ணாடியும் அணிந்துகொண்டு, ஒரு தோல்பையுடன் அந்த ஊருக்கு சற்றும் பொருந்தாத ஒருவனாக வந்து இறங்கியிருந்தான்.
அவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு மனித நடமாட்டமும் இல்லை. இரு பக்கமும் மரங்களாலும் புதரினாலும் சூழப்பட்டிருந்தது அந்த மண் ரோடு.
"பாஸ் ஊர்ல அத்தனை வேலையை விட்டுட்டு, இந்த கிராமத்துக்கு எதுக்காக வந்திருக்கோம் நாம? அப்படி என்ன முக்கியமான ப்ராஜெக்ட் இது? நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன், நீங்க என்ன இந்த முள்ளு காட்டை ஏதோ பூஞ்சோலையை பார்க்கிற மாதிரி ரசிச்சு பார்த்துகிட்டு வர்றீங்க. கால் வலிக்குது கொஞ்சம் நின்னு போங்க பாஸ்."
"ஏண்டா லக்கேஜ் பேக்கை தூக்கிட்டு நானே ஸ்பீடா நடக்குறேன். தோல் பையைதானே மாட்டிகிட்டு இருக்க, உன்னால இந்த ஸ்பீடுக்கு கூட நடக்க முடியாதா என்ன? இவ்வளவு நேரம் பஸ்ல உட்கார்ந்து தானே வந்தோம், அப்புறம் என்ன?"
"எது உட்கார்ந்து வந்தோமா? நல்லா குதிச்சு குதிச்சு வந்தோம்னு சொல்லுங்க பாஸ். அதுதான் கரெக்டா இருக்கும். அதுவும் எத்தனை வளைவு! இந்த பஸ்ல ஒரு பத்து நாள் வந்தா போதும், யோகா பண்ணாமலே என் உடம்பு குறைஞ்சிடும் போல இருக்கு."
" நல்லது தானே, எப்போ பாரு ஃபாலோ பண்ணி போற ஆளுங்ககிட்ட மாட்டிகிட்டு அடி வாங்குறதே உனக்கு வேலையா போச்சு. ஒவ்வொரு தடவையும் நான் வந்து உன்னை காப்பாத்த வேண்டியதா இருக்கு. நீ ஒல்லியானால் அதிலிருந்து நான் ரிலீஃப் ஆகலாம் இல்லயா."
"பாஸ், தி கிரேட் துப்பறிவாளன் விக்ரம் பேசற பேச்சா இது. உங்களோடு பிஏவான இந்த ஜனாவை காப்பாத்தாம, வேற யாரை காப்பாத்த போறீங்க? நான் ஒல்லியானாலும், குண்டாக இருந்தாலும் எப்பவுமே பைனல் டச்சு நீங்க தான் கொடுத்தாகணும்."
விக்ரம் அவனை முறைத்து விட்டு வேகமாக நடக்க,
"பாஸ் பாஸ் இப்போ எதுக்கு இப்படி கோச்சுகிட்டு இவ்வளவு ஸ்பீடா நடக்குறீங்க? முதல்ல நாம இங்க எதுக்காக வந்து இருக்கோம்னு நீங்க காரணத்தை சொல்லாட்டி, நான் இந்த புளிய மரத்தை விட்டு நகர மாட்டேன்."
ஜனார்த்தனன் அங்கிருந்த புளிய மரத்தை, தன் கை கொண்டு இறுக்கமாக கட்டிக் கொள்ள,
"ஜனா ஊர்ல ஒரு பேச்சு உண்டு உனக்கு தெரியுமா? பேய்ங்க எப்பவுமே புளிய மரத்துல தான் தொங்குமாம்."
ஜனா சட்டென்று அந்த புளிய மரத்திலிருந்து பின்வாங்க, அதில் அடித்திருந்த ஒரு ஆணி, அவன் சட்டையோடு மாட்டிக் கொண்டது.
"அய்யய்யோ பாஸ் பேய் புடிச்சி இழுக்குது....., பேய் புடிச்சு இழுக்குது.... எப்படியாவது என்னை காப்பாத்துங்க."
விக்ரம் சிரித்துக் கொண்டே அவன் மண்டையில் அடித்து விட்டு, அந்த ஆணியை மரத்தில் இருந்து பிடுங்கி, அவன் சட்டையில் இருந்து நீக்கி தூர வீசினான்.
திடீரென்று கருமேகம் சூழ்ந்து சூறைக்காற்று அடித்தது.
"பாஸ் எந்த நேரத்துல பேய் பத்தி பேசினீங்களோ, இப்படி பேய் காத்தா அடிக்குதே!! இப்பவாச்சும் சொல்லுங்களேன், எதுக்காக இந்த பேய் கிராமத்துக்கு வந்திருக்கோம்."
அடை மழைக்கு ஒதுங்கி, அந்த புளிய மரத்திற்கு அடியில் நின்று கொண்டு, ஜனாவிற்கு பதில் கூற தொடங்கினான் விக்ரம்.
"கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மிலிட்டரி ஆபீசர் நம்மள பார்க்க வந்திருந்தாரே ஞாபகம் இருக்கா?"
"ஆமாம் பாஸ், அவர் பேரு கூட ஏதோ கிருஷ்ணமூர்த்தின்னு சொன்னாருல்ல. ஏதோ ஒரு டைரியை கூட உங்ககிட்ட கொடுத்தாரே. அதிலிருந்த போட்டோ கூட, தெரியாம நீங்க வெச்சிருந்த மை பாட்டில்ல விழுந்து குளிச்சிடுச்சே. முறைக்காதீங்க பாஸ், சரி.... தெரியாம என் கைபட்டு அது கவுந்துடுச்சு, நான் என்ன பண்ணட்டும்.ம்ம்ம் மேல சொல்லுங்க."
"அவரோட தங்கச்சி இறந்ததுல அவருக்கு ஏதோ சந்தேகம் இருக்காம். அது தற்கொலை இல்ல, கொலை தான்னு நம்பறாரு. அது பத்தி விசாரிக்க தான் நாம இங்க வந்திருக்கோம்."
"என்ன பாஸ், ஊர்ல அவ்ளோ பெரிய ப்ராஜெக்டை எல்லாம் விட்டுட்டு, இந்த தற்கொலை கேசை பத்தி விசாரிக்க, நீங்களே நேரடியா வந்திருக்கீங்களே? இதுக்கு நம்ம அசிஸ்டன்சே போதுமே?"
"ஜனா அந்த மிலிட்டரி ஆபீஸர் தன்னோட சொந்த பந்தங்களை எல்லாம் விட்டுட்டு, நம்ம நாட்டுக்காகவும் நம்மள போல இந்த நாட்டுல வாழ்ற மக்களுக்காகவும் தான், அந்த எல்லையில குளிர்லையும் பனியிலையும் வெயில்லையும் வேலை பார்க்கறாரு. அவருக்காக நாம, இந்த ஒரு விஷயத்தை கூட செய்ய கூடாதா? அதனாலதான் இந்த கேஸ்காக நானே நேரடியாக இங்க வந்திருக்கேன்."
"நாம இங்க இருக்க எல்லார்கிட்டயும் ஒரு எழுத்தாளரா, இந்த ஊர் கோயிலை பத்தி ஆராய்ச்சி பண்ணி, எழுத வந்திருக்கோம்னு தான் சொல்ல போறேன். நீ பாட்டுக்கு எதையாவது உளறி வச்சிடாதே, அப்புறம் நம்ம கண்ணு முன்னாடி இருக்கற ஒரு சில க்ளு கூட, நம்ம கண்ணுக்கு தெரியாம போயிடும்."
சட்டென்று அந்த பேய் மழை நின்று அமைதியானது. வானம் தெளிவாகவும், காற்று சற்று இதமாகவும் வீச ஆரம்பித்தது.
"என்ன பாஸ் இது! அலாவுதீன் அற்புத விளக்கை தேய்ச்சா வருமே, அந்த மாதிரி இந்த புல் மழை ஸ்வைங்குனு வந்துட்டு ஸ்வைங்குனு போயிடுச்சு.
ஆமா நாம இங்க தங்கறதுக்கும், திங்கிறதுக்கும் ஏதாவது ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா? இல்ல ஊருக்குள்ள போய் தான் நாம கதையை கிரியேட் பண்ணனுமா பாஸ்?"
"இந்த ஊரு வாத்தியார் எனக்கு தெரிஞ்சவர்தான். அவர் மூலமா இந்த ஊர் பண்ணையார்கிட்ட உதவி கேட்டிருக்கேன். செய்யறேன்னு சொல்லி இருக்காரு போய் பார்ப்போம்."
அன்று
அமைதியாக ஓடிக் கொண்டிருந்த அந்த அரசு மாநகர பேருந்தில், வீல் என்ற ஒருவரின் கன்னத்தில் அறையும் சத்தத்தில், பஸ்ஸில் இருந்த அனைவரும் அந்த சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தனர்.
சுடிதார் அணிந்த காளி தேவியாக, தனக்கு அருகில் நின்ற சிறு பெண்ணிடம், சில்மிஷம் செய்ய வந்த அந்த வாலிபனை வகையறையே இல்லாமல் அடித்து நொறுக்கி கொண்டிருந்தால் சித்ரா.
"ராஸ்கல் ஒரு சின்ன பொண்ண கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா? அவ குழந்தைடா, அவ கிட்ட போய் என்ன வேலை பார்க்குற? உன்னை எல்லாம் நடுரோட்டில நிக்க வச்சு, செருப்பாலயே அடிச்சு கொல்லனும்,பொறுக்கி நாயே."
"என்னடி ஓவரா துள்ளுறே? பஸ்ல கூட்டமா இருந்தது, அதனால அந்த பாப்பாவை கொஞ்சம் கை வைச்சு அந்தப் பக்கமா நகர்த்தி விட்டேன். அதுக்கு என்னமோ லபோ திபோன்னு கத்தற,எம்மேல கையை வைக்கிறே. நான் யாருன்னு தெரியுமா? கவுன்சிலரோட மச்சான்."
"நீ யாரா இருந்தா எனக்கென்னடா? கண்டக்டர் அண்ணா நேரா பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க. இந்த பொறுக்கி நாயை எல்லாம் வெளிய நடமாட விடக்கூடாது. என் மேல கை வச்சான்னு சொல்லியே, நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன்."
No comments:
Post a Comment