Search This Blog

Followers

Powered By Blogger

Monday, September 22, 2025

பிம்பம் 8


 

அத்தியாயம் 8


இன்று


  அந்த பௌர்ணமி இரவு பொழுதில் விக்ரம் புளிய மரத்தின் அருகே கண்காணிக்க செல்ல, ஜனா சிவாவின் கொல்லை புறத்தையும், நாகலிங்கத்தையும் கண்காணிக்க சிவாவின் வீட்டிற்கு வந்திருந்தான். விக்ரம் நினைத்தது போலவே, சிவாவின் வீட்டை விட்டுவிட்டு ரேகாவின் வீட்டை நோக்கித்தான் முதலில் ஜனா சென்றான்.


ரேகா தனது அத்தை சாந்தியிடம், தான் இன்று கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கூறிவிட்டு அவளின் வீட்டிற்கு வந்து விட்டால். சிவாவின் மெடிக்கல் ஷாப்பில் இருந்து எடுத்து வந்த மாத்திரைகளை முதலில் முழுங்கியவள், பிறகு போனில் யாருக்கோ அழைத்து தீவிரமாக பேசத் தொடங்கினாள். அப்போதுதான் ஜனாவும் ரேகாவை நோட்டம் விடத் தொடங்கினான்.


"ஹலோ நான் தான்."


"      "


    "அதெல்லாம் மாத்திரை போட்டுட்டேன், இங்க பாருங்க இதுக்கு மேல மறுபடியும் இதே மாதிரி என்னை பண்ண வைக்காதீங்க சொல்லிட்டேன்."


  "      "


    "புரியுது இதுல எனக்கும் பங்கு இருக்குது தான், இருந்தாலும் இப்படியே எவ்வளவு நாளைக்கு தான் இருக்கிறது? எப்ப தான் என்னை கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கீங்க?"


    " "


    "புரியுது, ஆனா இந்த மாதிரி மறுபடியும் என்னை கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட வைக்காதீங்க."


  "    "


  " சரி சரி நீங்க பாருங்க."


    கேட்டுக் கொண்டிருந்த ஜனாவிற்கு திக்கென்று ஆனது, அடிப்பாவி கரெக்ட் பண்ணலாம்னு வந்தா, இவ வயித்துல இருக்க குழந்தையை கலைக்க மாத்திரையை போட்டுட்டு உட்கார்ந்து இருக்கா? என்று அவன் மனதில் எண்ணிக்கொண்டான்.


    "இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி ரகசியமாக வாழ்க்கை நடத்துறது?  வர்ற கோபத்துக்கு அவனை குத்தி கொன்னுடலாமான்னு கூட தோணுது."


நான் வேணும்னா அதுக்கு உதவி பண்ணட்டுமா? 


  திடீரென்று தனது தலைக்கு மேலே கேட்ட சத்தத்தில், ரேகா அண்ணார்ந்து பார்க்க, அங்கு தலைகீழாக சித்ரா இவளைப் பார்த்தபடியே, உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள்.


  சித்ராவை பார்த்த ரேகா பயந்து போய் அப்படியே தரையில் விழுந்தால்,


   " சி…  சி…. சித்ரா நீ..  நீயா? நீ எப்படி இங்க? அதுவும் உத்திரத்துல?"


  என்னை உத்திரத்துல தானே கட்டி தொங்க விட்டீங்க? அப்புறம் நான் வேற எங்கு தொங்கறது?


  "சித்ரா என்னை எதுவும் பண்ணிடாத, ப்ளீஸ் என்னை எதுவும் பண்ணிடாத நான் கர்ப்பமா இருக்கேன் எனக்குள்ள குழந்தை இருக்கு."


    ஏன் நீங்க எல்லாரும் என்னை கொலை செஞ்ச போது, என் வயித்துல குழந்தை இல்லையா? நான் எவ்வளவு கதறுனேன்? அதுல ஒரு வார்த்தையாவது கேட்டியா? ஆமா எப்ப இருந்து உன் வயித்துல வளர்ற குழந்தை மேல, இப்படி திடீர்னு பாசம் வந்தது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட  அந்த குழந்தையை கலைப்பதற்கு தானே மாத்திரை போட்டே?


  சித்ரா உத்திரத்தில் இருந்து படிப்படியாக தொங்கிக் கொண்டே கீழே வந்தாள். கண்களின் சிவப்பு நெருப்பாக கொழுந்து விட்டு எரிய, ரேகாவை நெருங்கினால்,


      " சித்ரா ப்ளீஸ் என்னை விட்டுடு, எனக்கு எதுவுமே தெரியாது, நான் வேண்டான்னு தான் சொன்னேன் அவங்க தான் கேட்கல ப்ளீஸ் என்ன விட்டுடு."


    ரேகாவின் அண்ணன் நாகலிங்கம் சரியாக அந்த நேரம் வாசல் கதவை திறந்து கொண்டு, கீ கொடுத்த பொம்மை போல அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தான்.


  ரேகா அவனை அழைக்க அழைக்க, காது கேளாதவன் போல் சமையல் கூடத்திற்குள் நுழைந்தவன், ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு ரேகாவை நெருங்கினான். அவனது கண்கள் வழக்கத்துக்கு மாறாக நேர்குத்தி இருந்தது.


  " அண்ணே என்ன பண்ற? என்னை பாருண்ணே, நான் உன் தங்கச்சி."


    உங்க  அண்ணனால எப்படி ரேகா பார்க்க முடியும்? அவன்தான் அன்னைக்கு நான் நடைபிணமா தெரியணும்னு குத்துனானே, அதே ஊசியை தானே இப்போ அவனும் குத்தி இருக்கான். அதனால நான் சொல்றதை மட்டும் செய்யற பொம்மையா தான் இருப்பான். 


     உனக்கு தெரியாததா? இந்த மருந்து அவன் உடம்புல இருக்குற வரைக்கும் இப்படித்தான் இருப்பான்னு,  உங்க அண்ணே செஞ்ச பாவத்துக்கும், உனக்கு அண்ணனா பொறந்த பாவத்துக்கும் சேர்த்து, உன்னை இந்த கத்தியால குத்திட்டு ஜெயிலுக்கு போக போறான். அங்க  பைத்தியமாவே மாறி, தூக்கு போட்டுகிட்டு தன் உயிரை விடப் போறான். 


  நாகலிங்கம் தப்பித்த ஓட முயன்ற ரேகாவை பிடித்து அவளின் வயிற்றில் ஓங்கி ஓங்கி கத்தியால் குத்தினான். ரேகாவின் அலறல் அங்குள்ள நாய் மற்றும் கோட்டான்களின் ஒலியோடு சேர்ந்து, அந்த இடத்தையே மயான பூமியாக மாற்றியது.


    இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனா பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தான், ஜன்னலுக்கு வெளியே இருந்த இவனை திரும்பிப் பார்த்த சித்ரா,


  தேங்க்யூ ஃபார் யுவர் ஹெல்ப் பிரதர் 


  என்று கூறிவிட்டு மறைந்து போனாள், அடுத்த நிமிடமே ஜனாவும் அப்படியே மயங்கி சரிந்தான்.


  அடுத்த நாள் லாக்கப்பில் இருந்த அவனைப் பார்க்க வந்த விக்ரமிடம், நடந்த அனைத்தையும் கூறியவன்,


  "பாஸ் என்னை அநியாயமா இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்து, இப்படி என்னை பேய்க்கு பிரதர் ஆக்கிட்டீங்களே பாஸ்? இது உங்களுக்கே நல்லா இருக்கா?"


  "சரிடா சரிடா அந்த பொண்ணு ஒன்னைய பிரதராதானே சொல்லுச்சு, என்ன உன்னையும் சேர்த்து பேயவா மாத்திடுச்சு?"


  "எதே? யோவ் பாஸு மரியாதையா என்னை ஊருக்கு கொண்டு போய் விடுயா, எங்க அப்பா அம்மாக்கு ஒரே புள்ளையா நானு."


   "எது மரியாதையாவா?"


  "பாஸ் பாஸ் பயத்துல கொஞ்சம் ரெஸ்பெக்ட் குறைஞ்சிடுச்சு, அட்ஜஸ்ட் பண்ணி, என்னை முதல்ல எப்படியாவது வெளியே எடுங்க பாஸ்." 

    விக்ரம் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் தங்களது அடையாளங்களை காட்டி, சித்ராவின் கொலை சம்பந்தமான இன்வெஸ்டிகேஷன்காக வந்திருப்பதாக கூறவும் தான், ஜனாவை வெளியே விட்டனர்.


    பிறகு விக்ரமை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால், சித்ராவின் கேஸ் ஃபைலை அவனிடம் கொடுத்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.


அப்போதுதான் அந்த ஊரைச் சேர்ந்த, கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், அவர் உபயோகப்படுத்தும் மருத்துவ உபகரணங்களால், தன்னைத்தானே குத்திக் கொண்டு  தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வர, அனைவரும் அங்கே விரைந்தனர்.


அன்று


சித்ரா கத்த தொடங்கவும் அவளது வாயை பொத்திய சிவா,


  "ஐயோ சித்து ஏன் கத்துற? அம்மா வந்திட போறாங்க, நான் தான். அம்மா அங்க வெளிய பக்கத்து வீட்டில கதை பேசிட்டு இருந்தாங்க, என்னை பார்த்தா நான் ஊர்ல இல்லாதப்ப நடந்ததை எல்லாம் கதை கதையா சொல்வாங்க.


    அப்பறம் உன்னை இப்போதைக்கு பார்க்க விட முடியாதுன்னு தான்  மறைஞ்சு மறைஞ்சு வீட்டுக்குள்ள வந்தேன், உன்ன பாக்கலாம்னு ஆசையா ஓடி வந்தா நீ எங்க போன?"


  "நீங்களா? பக்கத்துல ரேகா வீடு வரைக்கும் போயிருந்தேன். ஆமா நீங்க வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு சொன்னீங்க?"


"ஆமா, ஆனா எனக்கு உன்ன பாக்கணும் போல இருந்துச்சு. அதோட  என் குழந்தைக்கு ஒழுங்கா நீ சாப்பாடு கொடுக்கிறது இல்லையாமே? என் கனவுல வந்து கம்ப்ளைன்ட் பண்ணினான். அதனாலதான் நான் நேரா இங்கே ஓடி வந்துட்டேன், டேப்லெட் எல்லாம் இங்க அப்படியே இருக்கு, நீ என்னதான் சாப்பிடற? ஆமா ஏன் ஒரு மாதிரி இருக்க? முகமெல்லாம் வாடி போய் இருக்கு ?முதல்ல கிளம்பு டாக்டரை போய் பார்த்துட்டு வரலாம்."


  சித்ராவிற்கு ரேகாவின் வீட்டில் தான் கண்டதை சிவாவிடம் கூற மனம் வரவில்லை, ஒருவேளை தான் தெரியாமல் கூட இவ்வாறு நினைத்திருக்கலாம், எதற்காக வீணாக ஒரு கல்யாணமாகாத அப்பாவி பெண்ணின் மீது பழி விழ வேண்டும் என்று, அதைப் பற்றி அவள் யாரிடமும் கூற விரும்பவில்லை.


   "ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க நான் நல்லா தான் இருக்கேன், இப்ப சாப்பிட்டுட்டு மாத்திரை சாப்பிடுவதற்கு மறந்துட்டேன், அவ்வளவுதான், இதோ இப்பவே போட்டுடறேன்."


  "இதையெல்லாம் கூடவா மறப்பாங்க? சித்து...., உனக்கு உங்க அம்மாவை பாக்கணும்னு ஆசையா இருக்கா? இல்லே... இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க, தான் பொறந்த வீட்டுல இருக்கணும்னு ஆசைப்படுவாங்க, ஆனா  எனக்காக தானே நீ உன் வீட்டை விட்டு வந்துட்டே.....அதுதான்.."


  "ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க, நீங்க என் கூட இருந்தா அதுவே எனக்கு போதும்."


"சரி நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு."


"சர்ப்ரைஸா என்னதுங்க அது?"


"அதுதான் சர்ப்ரைஸ்ன்னு சொல்லிட்டேனே, நாளைக்கு நீ துள்ளி குதிக்க போற பாரு, நாளைக்கு காலைல சாப்பிட்டு ரெடியா இரு, நம்ம வெளிய போக போறோம்."


    அடுத்த நாள் காலையில் அவன் கொடுத்த இன்ப அதிர்ச்சியை பார்த்து சித்ரா அழுதே விட்டாள்.


Thursday, September 18, 2025

பிம்பம் 7


 

அத்தியாயம் 7


இன்று

 

  "ஐயோ பாஸ் மறுபடியும் அந்த புளிய மரத்துக்கா? என்னால முடியாது, ரொம்ப போர்ஸ் பண்ணீங்க அப்புறம் இத்தோட இந்த ஜனா, உங்களோட உறவை முறிச்சுக்க வேண்டியதா இருக்கும் பரவால்லையா?"


  "நல்லதாபோச்சு அப்படி ஒரு நல்ல நாள் வராதான்னு, நான் எவ்வளவு நாளா ஏங்கிட்டு இருக்கேன் தெரியுமா? சரி எப்போ ஊருக்கு கிளம்பற?"


      " எதே ? என்ன பாஸ் பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டீங்க? நான் புளிய மரத்துகிட்ட தானே கண்காணிக்க மாட்டேன்னு சொன்னேன், அதுதான் எப்படியும் சிவா வீட்டையும் அந்த நாகலிங்கத்தையும்  இன்னைக்கு கண்காணிக்கனும்னு சொல்லி இருக்கீங்களே! நான் அங்க போறேன் நீங்க புளியமரத்து கிட்ட போங்க, அவ்வளவுதான் மேட்டர் சால்வ்டு. என்ன பாஸ் சந்தேகமா பார்க்கறீங்க நீங்க புளிய மரத்தைமட்டும் பார்த்தாபோதும் ஆனா நான் உங்களுக்காக சிவா வீட்டு கொல்லைபுறத்தையும் அந்த நாகலிங்கத்தையும் போய் கண்காணிக்கறேன் பாஸ்."


    "நீ நாகலிங்கத்தை தான் கண்காணிக்க போறயா? இல்ல அவன் தங்கச்சி ரேகாவை  பார்க்கனுங்கறக்காக போறேங்கறையா?"


  " பாஸ், என்ன பாஸ் உங்க ஜனாவை சந்தேகப்படுறீங்களா?"


  " ச்சே ச்சே சந்தேகமெல்லாம் கிடையாது, கன்ஃபாமா சொல்றேன், நேத்து அந்த அம்மா பேயை பத்தி சொன்னதும் மயக்கம் போட்டு விழுந்துட்டு, அந்த புள்ளையோட குரல் கேட்டதும், அடுத்த நிமிஷமே எழுந்துகிட்ட பாரு? அப்பவே தெரிஞ்சது, எப்படியும் நீ அந்த புள்ள பின்னாடி சுத்தி ஊர்க்காரங்க கையால செருப்படி வாங்கப் போறேன்னு."


    "போன இடத்துல நம்ம வேலையை தவிர வேற ஏதாவது வேலையை பார்த்து, சிக்கல்ல மாட்டிக்கிட்டு நின்னேன்னா, நான் எல்லாம் வந்து சிபாரிசு பண்ண மாட்டேன். போலீஸ் ஸ்டேஷனே கதின்னு கெடே."


"பாஸ் இருந்தாலும் நீங்க என்னை இவ்வளவு தெளிவா.... புரிஞ்சு வச்சிருக்க கூடாது."


  "இதெல்லாம் வக்கனையா பேசு, பேய் பத்தி காதால கேட்டா கூட மயக்கம் போட்டு விழுந்திரு, ஏதோ  கண்ணாலேயே பேயை பார்த்த மாதிரி."


"கிண்டல் பண்ணாதீங்க பாஸ்."


  "கிண்டலா? டேய் நான் உண்மையை சொல்லிகிட்டு இருக்கேன்."


  " போங்க பாஸ் போற இடத்துல எல்லாம் அந்த புளியமரத்தை பத்தியே பேசறாங்க, நீங்க எந்த நேரத்துல வாயை வச்சீங்களோ நாம விசாரிக்க போற இடத்திலே எல்லாரும் அந்த புளிய மரத்துக்கிட்ட பேயை பார்த்ததாவே சொல்றாங்க, இதுக்கு மேலயும் நான் மயக்கம் போடாம இருந்தா, அப்புறம் அந்த பேய்க்கு என்ன மரியாதைன்னு கேட்கறேன்."

   

    அன்று இரவு இருவரும் தத்தமது வேலையை முடிக்க, விக்ரம் புளிய மரத்தை நோக்கியும், ஜனா சிவாவின் வீட்டில் உள்ள அவனது பெட்ரூம்மை ஒட்டிய, கொல்லை புறத்திற்கும் சென்றனர்.


விக்ரமின் வாய் முகூர்த்தமோ என்னவோ! அடுத்த நாள் காலையில் விக்ரமுக்கு ஜனா போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாகத்தான் செய்தி வந்தது. ரேகா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததால், அவளது அண்ணன் நாகலிங்கத்தால் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்கள் வீட்டிற்கு அருகில் ஜனா மயங்கி விழுந்திருந்ததால், ஒருவேளை அவன் ரேகாவின் ரகசிய காதலனாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அவனை போலீஸ் ஸ்டேஷனில் அவர்களின் கஸ்டடியில் வைத்து விசாரித்து கொண்டு இருப்பதாகவும், செய்தி வந்தது.


அன்று


      சித்ராவின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு ஆதாரமாக அவள் கருவுற்றாள். இதை அறிந்ததும் சிவா அவளை தன் கைகளில் வைத்து தாங்கினான். பக்கத்து ஊரில் உள்ள பிரபலமான மகப்பேறு மருத்துவமனைக்கு அவளை மாதாமாதம் கூட்டிக்கொண்டு செக்கப்பிற்கு சென்று வந்தான்.


    இந்நிலையில்தான் கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நாள் வந்தது. சிவாவின் கட்சியில் அந்தத் தொகுதியின் சார்பாக அவனை முன்னிறுத்துவதாக அறிவித்தனர். அவன் கட்சி வேலையில் மூழ்க தொடங்கியதால், சித்ரா ரேகாவுடன் மருத்துவமனைக்குச் சென்று வந்தாள்.


  சித்ராவின் குடும்பமும் அரசியல் பின்னனியை கொண்டது தான். அவளின் தாத்தா உள்துறை அமைச்சராக இருந்தவர். ஆனால் அவளின் அப்பா கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மட்டும் பெயரளவில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார். ஏனோ அவருக்கு கட்சி மற்றும் பதவியில் பெரிதாக விருப்பம் ஏதுவும் இல்லை. அவரின் மகனோ நாடு தான் பெரிது, ஜாதி கட்சிகள் கூட தேவையில்லை என்று, அவரை எதிர்த்து கொண்டு ராணுவத்தில் சேர்ந்து விட்டார்.


  சித்ராவிற்கு சிவா அரசியலில்  ஈடுபடுவது பிடிக்கத்தான் இல்லை, இருந்தாலும் இது அவனது கனவு, தனது மக்களுக்காக போராடி மேலே வந்தவன் அதனால் அவனது விருப்பங்களுக்கு மதிப்பளித்து வந்தாள்.


  ரேகாவின் வீட்டிற்கு சித்ரா அவ்வளவாக செல்வதில்லை, தற்போது சிவா அரசியல் விஷயமாக வெளியூர் சென்ற காரணத்தால், நாகலிங்கம் தான் மேற்பார்வையாளராக இருந்து மருந்து கடையை பார்த்துக் கொள்கிறான். அதனால் தற்போதெல்லாம் அவன் தான், கணக்குகளை சரி பார்த்து விட்டு, கடையை பூட்டிக் கொண்டு வருகிறான்.


    ஒரு மாலை வேளையில் ரேகா ஆபீஸ்ஸில் இருந்து வீட்டிற்கு வந்திருப்பாள் என்று நினைத்து, அவளைப் பார்த்து வரலாம் என்று அவளது வீட்டிற்கு சென்றாள் சித்ரா.


  சித்ரா ரேகாவின் வீட்டை நெருங்கிய போது உள்ளிருந்து ஏதோ பேச்சு குரல் வந்தது போல இருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே ரேகாவின் பெயரை கூறியபடியே வீட்டின் கதவை தட்டினாள்.


  சிறிது நேரத்திற்கு பிறகு தான் கதவு திறக்கப்பட்டது. உள்ளிருந்து வந்த ரேகா இவளை கண்டு பதட்டமானால், பிறகு சட்டென்று முகத்தை மாற்றிக்கொண்டு அவளை வாசலிலேயே நிற்க வைத்து,


" என்ன சித்ரா அதிசயமா இருக்கு நான் வீட்டுக்கு வா வான்னு கூப்பிட்டா கூட வர மாட்டேன்னு சொல்லுவ, இன்னிக்கு நீயாகவே என்னோட வீடு தேடி வந்திருக்க? ஏதாச்சும் பிரச்சனையா? அத்தை ஏதாச்சும் உன்னை திட்டினாங்களா? இல்ல...உனக்கு உடம்புக்கு எதுவும்  சரியில்லையே?"


  "முதல்ல மூச்சை விடு ரேகா, இத்தனை கேள்வியை ஒட்டுக்கா கேட்டா, நான் எந்த கேள்விக்கு தான் ஆன்சர் பண்ண? சரி என்னை இப்படி வாசல்ல நிக்க வைக்கத்தான், வீட்டுக்கு வா வான்னு அத்தனை தடவை  கூப்பிட்டியா?"


வீட்டின் பின்வாசலில் இருந்து டொம் என்ற சத்தம் கேட்க,


   "என்னடி இது? பின்பக்கம் ஏதோ சத்தம் கேக்குது?"


"அது ஒன்னுமில்ல சித்ரா, அந்த பக்கமா பூனை ஒன்னு சுத்திக்கிட்டு இருக்கு, அதோட வேலையா இருக்கும்.நீ உள்ள  வா "


  ரேகாவின் வீடு மொத்தமாக மூன்று அறைகளைக் கொண்டது. ஒரு சமையல் கூடம்,ஒரு பெட்ரூம் மற்றும் பின்பக்க வாசல் கதவோடு கூடிய வரவேற்பறை. அந்தப் பின்பக்க வாசல் கதவு திறந்திருப்பது போல தோன்றியது.


  சித்ராவை வரவேற்பறையில் உள்ள சோபாவின் மீது அமர வைத்துவிட்டு, ரேகா அவளுக்கு குடிக்க  ஏதாவது கொண்டு வருவதாக கூறி, சமையல் கூடத்திற்கு சென்றாள்.


  சித்ரா அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிர் திசையில் தான் பெட்ரூம் இருந்தது. கதவு திறந்திருந்ததால் உள்ளே இருப்பது அப்படியே தெரிந்தது. அந்த அறையில் துணிகள் அங்கங்கே சிதறி கிடந்தன, அத்தோடு மது பாட்டில்களும் அதனை ஊற்றிக் கொடுக்கும் கோப்பைகளும் இருந்தன.


        சித்ரா இது ரேகாவின் அண்ணாவுடைய வேலையாக இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கையில், அதற்கு அருகில் பாதி எரிந்து கொண்டிருந்த சிகரெட் துண்டினை கண்டு நெற்றி சுருங்க யோசிக்க தொடங்கினாள்.


    ஏனோ அங்கு அமர்ந்திருப்பது முள்ளின் மீது அமர்ந்திருப்பது போன்று தோன்ற, ரேகாவை அழைத்து தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக கூறிவிட்டு, தனது இல்லத்தின்  கொல்லைபுறத்தை நோக்கி நடந்தாள்.


  அவளது பெட்ரூமுக்குள் யோசனையினோடே நுழைந்து கொண்டிருக்கையில், யாரோ அவளின் மீது வந்து விழ, பதறிப் போய் உரத்த குரலில் கத்த தொடங்கினாள்.

Sunday, September 14, 2025

பிம்பம் 6


 

அத்தியாயம் 6


இன்று


  மயங்கி விழுந்த ஜனாவை பார்த்து விக்ரம், இவனுக்கு இதே வேலையா போச்சு என்று புலம்பிக் கொண்டே அவனை எழுப்ப முயன்றான். இவன் மயங்கி  விழுந்ததைக் கண்டு மிரண்டு போன சாந்தி, உதவிக்கு அக்கம்பக்கத்தினரை அழைப்பதை பார்த்து,


"ஒன்னும் இல்லம்மா இவனுக்கு பேய்ன்னா கொஞ்சம் பயம், நீங்க சொன்னதைக் கேட்டு பயந்து போய் மயங்கி  விழுந்துட்டான் அவ்வளவுதான்." 


  கீழே விழுந்த ஜனாவை எழுப்பி மேலே படுக்க வைக்க முயன்றான் விக்ரம், ஆனால் ஜனாவினுடைய கனமான சரீரத்தின் பாரத்தை அவனால் தூக்க முடியவில்லை. 


சாந்தியின் குரல் கேட்டு அவரின் வீட்டுக்கு பின்புறம் இருந்த, சாந்தியின் அண்ணன் மகன் நாகலிங்கம் கொல்லைப்புறம் வழியாக பதறியபடி ஓடி வந்தான்.


  விக்ரமுக்கு ஆச்சரியமாக இருந்தது இப்போது தானே, நான் பார்த்துவிட்டு வந்தேன், பின்பக்க கதவு தாழிடப்பட்டு இருந்ததே? இவன் எவ்வாறு பின்புறம் இருந்து வருகிறான்? என்ற யோசனையில் சிந்தித்துக் கொண்டிருந்தான்.


  "என்னத்தே? என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்திகிட்டு இருக்கே?"


    "ஏண்டா நாகு, நீ நேர் வழியாவே வீட்டுக்குள்ள வரமாட்டியா? எப்ப பாரு பொடக்காலி(கொள்ளைபுறம்) வழியாவே உள்ள வாரே?"


  "நான் வீட்டை சுத்திட்டு வர்றதுக்குள்ள நேரம் ஆயிடும் அத்தே, இதுதான் ஷார்ட் கட்டு. அதனால தான் இந்த வழியா வந்தேன். முதல்ல என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்துனேன்னு சொல்லு?"


  "இவங்க நமக்கு தெரிஞ்ச பசங்கடா, இந்த தம்பி திடீர்னு மயக்கம் போட்டுருச்சு. அந்த தம்பியால தனியா இவரை தூக்கி, மேல படுக்க வைக்க முடியல, நீ கொஞ்சம் உதவி செய்டா, நான் போய் மருத்துவச்சியை  கூட்டிட்டு வாரேன்."


  "ஐயோ அம்மா, அந்த அளவுக்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல. ஏதோ பயந்து போய் மயக்கம் போட்டுட்டான், கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க, அது தெளிச்சா சரியா போயிடுவான்."


    இதோ கொண்டு வரேன் தம்பி என்று அவர் உள்ளே சென்று தண்ணீர் செம்போடு வெளியே வந்தார். அதை வாங்கி ஜனாவின் முகத்தில் தெளித்து அவனை மயக்கத்தில் இருந்து தெளிய வைத்த விக்ரம், அவனை அப்படியே எழுப்பி சோபாவில் சாய்த்து அமர வைத்தான்.


  " யார் அத்தை இவங்க? ஊருக்கு புதுசா இருக்காங்க?"


      "சொல்ல மறந்துட்டேன் பாரு, இவங்க கதை எழுதறவங்களாம், நம்ம பண்ணையார் தான், நம்ம ஊர் கோயிலை பத்தி எழுத வந்திருக்க இவங்களை, கீழ தெருவுல இருக்க மாறன் வீட்ல தங்கவச்சிருக்காரு. இன்னைக்கு கோயில்ல மயக்கம் போட்டு விழுக போன என்னை, இவங்கதான் பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டாங்க."


    "ஓஹோ"


    "வணக்கம் சார், என் பேர் விக்ரம், இவன் என்னோட ஜூனியர் ஜனா."


    "வணக்கம் என் பேர் நாகலிங்கம் இவங்களோட அண்ணன் பையன்."


    "ரேகா வந்துட்டாளாடா? ஊர் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து கும்மி அடிக்க போறாங்க? என்ன இன்னும் அவளை காணோம்?"


  "வந்திடுவா அத்தே, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்துட்டு இருக்கறதா எனக்கு போன் பண்ணினா, இதோ பாரு அவளே வந்துட்டா."


  "என்னாச்சுத்தே யார் இவங்க எல்லாம்?"


  சாந்தி கோவிலில் நடந்ததை பற்றியும் இவர்களை பற்றியும் அவளிடம் கூறினார்.


  "ரொம்ப நன்றிங்க சார், சரியான நேரத்தில எங்க அத்தையை காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க."


    "பரவால்ல மேடம் எல்லாம் ஒரு மனிதாபிமான செயல் தானே."


    ஒரு பெண்ணின் குரல் கேட்டவுடன் ஜனா தானாக கண்களை திறந்து, ரேகாவை கண்டுவிட்டு முகத்தை துடைத்தும் தலையை சீவியும் தன்னை சரி செய்து கொண்டு,


  " ஆமாங்க எல்லாமே ஒரு  மனிதாபிமான செயல்  தானே." 


  என்று ரேகாவை பார்த்து வழிந்து கொண்டே கூறினான்.


அன்று


  வீட்டை விட்டு வெளியேறிய சித்ரா நேராக சென்று நின்றது சிவப்பிரகாஷின் இல்லத்தில் தான். சிவா அவளது நிலையை புரிந்து கொண்டு, தனது அன்னையிடம் பேசி, அவசர திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான்.


    அவர்கள் திருமணம் சிவாவின் ஊரில் உள்ள ஒரு கோயிலில் நடந்தது. இந்த திருமணத்தில் சிவாவின் அம்மா சாந்திக்கு விருப்பமில்லை, அவர் சிவாவிடம் எவ்வளவோ போராடி மறுத்துப் பார்த்தார், உயிரை விட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி கூட பார்த்தார், ஆனால் அவன் நீங்கள் இதற்கு சம்மதிக்கவில்லை என்றாலும் சித்ராவை தவிர வேறு யாரையும் என் மனைவியாக  ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றதால், வேறு வழி இல்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டார்.


    அவர்களின் திருமணம் எளிமையாக கோயிலில் ஊர் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. விஷயம் அறிந்து வந்த சித்ராவின் பெற்றோர்கள் அவளை சரமாரியாக வசைப்பாடி விட்டு,  இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மண்ணைஅள்ளி அவள் மீது வீசி, சபித்துவிட்டு சென்றனர்.


        திருமணமான சில நாட்கள் சித்ராவிற்கு நன்றாகவே சென்றது. ஆனால் சிவா வீட்டில் இல்லாத நாட்களில் சாந்தி அவளிடம்  காட்டும் முகமானது வேறாக இருந்தது. அவள் எந்த செயலை செய்தாலும் குற்றம் கூறுவதும் திட்டுவதுமாகவே, அவளை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அத்தோடு ஒன்றுமாத்தி ஒன்றாக பல வேலைகளை அவளை செய்யுமாறு கூறிக் கொண்டே இருப்பார்.


  இது தெரிந்தது தான் என்றாலும் போகப்போக சித்ராவிற்கு மனதுக்கு சங்கடமாக இருந்தது. இதை பற்றி சிவாவிடம் கூறி பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்று அவளும் அவர் கூறும் வேலைகளை செய்து கொண்டேயிருப்பாள்.


  திருமணத்திற்கு பிறகு சித்ரா வேலைக்கு செல்வதை விட்டுவிட்டாள். சிவாவின் மெடிக்கல் ஷாப் சம்பந்தப்பட்ட கணக்குகளை வீட்டிலேயே சரி பார்த்து கொடுக்க ஆரம்பித்தால்.


      அங்குள்ள வேலையாட்களின் விவரங்களையும், மருந்து கடையில் உள்ள மருந்துகளின் ஸ்டாக் விபரத்தையும் கணினியில் ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்து கணினியில் அவற்றை சேமித்து  வைத்தாள்.


    அப்படி வேலையாட்களின் விபரங்களை கணினியில் பதிந்து கொண்டிருந்த போதுதான், அன்றொரு நாள் சிறுமியிடம்  தவறாக நடந்து கொண்ட காரணத்தால், தன்னால் போலீஸில் பிடித்துக் கொடுக்கப்பட்டவன் அவர்களின் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருப்பதை கண்டால்.


    அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ரேகா, இதுதான் தன் அண்ணன் என்று அவளுக்கு அறிமுகப்படுத்த, சித்ரா அதிர்ந்து தான் போனாள் .


  சித்ரா ரேகாவிடம் அவளது அண்ணனை பற்றி கூறலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பெரும் போராட்டமே  நடத்தினாள். ஏனென்றால் சித்ராவிற்கு தான் தெரியுமே ரேகாவிற்கு அவள் அண்ணன் என்றால் உயிர் என்று. அத்தோடு அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தமும் அவன் தான். எனவே சிவாவிடம் மட்டும் அவனை பற்றி மேலோட்டமாக சொல்லி வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள், ஆனால் அடுத்த நாளே ரேகாவின் அண்ணன் நாகலிங்கம் அவளை காணவந்தான்.


    வந்தவன் அவள் கால்களில் விழுந்து  தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். தற்போது தான் மாறிவிட்டதாகவும் இப்போதெல்லாம் அவ்வாறான தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் கெஞ்சினான். சிவாவிடமும் தன் தங்கையிடம் தன்னை பற்றி எதுவும் தவறாக கூறிவிட வேண்டாம் என்று அவளிடம் மன்றாடினான்.


      சித்ராவும் இனி ஒரு முறை இவ்வாறு நடந்து கொண்டால், அவர்களிடம் தெரிவித்து விடுவேன் என்று மிரட்டி, அவனை அனுப்பி வைத்தாள்.


Wednesday, September 10, 2025

பிம்பம் 5


 அத்தியாயம் 5


இன்று


    பிரகாஷின் அம்மா சாந்தி கோயிலுக்குள் பூஜைக் கூடையுடன் நுழைந்து கொண்டிருந்தார். மூலவர் சன்னிதியை நோக்கி சென்றவர், கண்களை மூடி இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார்.


  கோயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை, அங்கிருந்த ஒரு சில பெரியவர்களும், அங்கொருவர் இங்கொருவராக வெளிப்பிரகாரத்தில் தான் அமர்ந்திருந்தனர்.


  விக்ரமின் திட்டப்படி சாந்தி அம்மாவுக்கு எதிரில் வந்த நின்று ஜனா, தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே, சாந்தி கண்களை மூடி இறைவனை வேண்டிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, தன் கையில் உள்ள மயக்க மருந்து ஸ்பிரேயை சாந்தியை நோக்கி சிறிது சிறிதாக தெளித்தான்.


    விக்ரம் முன்னமே கூறியிருந்தான் அதிகமாக ஸ்பிரே செய்யாமல், சிறிது சிறிதாக அவருக்கு தலைசுற்றல் வரும் அளவுக்கு மருந்தை தெளித்தால் போதும் என்று.

 

சாந்திக்கு அருகில் தான் விக்ரம் நின்று கொண்டிருந்தான். அந்த மருந்தின் விளைவால், அவர் கண்கள் இருட்டிக் கொண்டு வர, ஒரு பக்கமாக சாயப்போனவரை தன் கைகளில் தாங்கிக் கொண்டான்.



  "அய்யோ அம்மா, என்னாச்சு உங்களுக்கு? இந்தாங்க இந்த தண்ணியை குடிங்க."


  விக்ரம் தனது பையில் இருந்து நீர் பாட்டிலை எடுத்து, அவருக்கு சிறிது தண்ணீர் புகட்டினான்.


      அவருக்கு சுயநினைவு இருந்தது, ஆனால் கண்களை தெளிவாக திறக்க இயலவில்லை, எழுந்து நிற்கவும் முடியவில்லை.


    "தெரியலப்பா, நல்லா தான் இருந்தேன், ஏனோ படபடன்னு கண்ணை இருட்டிக்கிட்டு வந்துடுச்சு.."


    "கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா சரியா போயிடும். வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன், ஜனா அம்மா கையில இருக்க பூஜை கூடையை வாங்கிக்கோ. நீங்க அட்ரஸ் சொல்லுங்கம்மா, நான் உங்களை வீட்டில் கொண்டு போய் விட்டுடறேன்."


      "பயப்படாதீங்கம்மா, நாங்க பண்ணையாருக்கு தெரிஞ்சவங்கதான். அவர்தான் எங்களை இங்க ஒரு வீட்டில் தங்க வைச்சிருக்கிறார். நான் ஒரு எழுத்தாளர், இந்த கோயிலை பத்தி கட்டுரை எழுதுவதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கேன்."


    அதன் பிறகு சாந்தி அம்மா தனது விலாசத்தை கூற, விக்ரம் மற்றும் ஜனாவின் உதவியோடு அவரது வீட்டிற்கு வந்தார்.


     " ரொம்ப நன்றிங்க தம்பி, நீங்க ரெண்டு பேரும் இல்லனா, நான் எப்படி வீடு வந்து சேர்ந்திருப்பேனோ எனக்கே தெரியல."


" உங்களுக்கு இப்படி அடிக்கடி வரும்மாம்மா? எதுக்கும் நீங்க டாக்டர் கன்சல்ட் பண்றது நல்லதுன்னு நினைக்கிறேன்."


        "நான் நல்லாத்தான் தம்பி இருந்தேன், எப்ப என் மகன் அந்த விளங்காதவளை கட்டிட்டு வந்தானோ? அப்ப இருந்து எங்க குடும்பத்துக்கு புடிச்சது சனி. இப்போ செத்துப் போய் கூட என் பையனை விட்டுப் போக மாட்டேங்குறா, எந்நேரமும் அவ நினைப்புலயே என் மகனும் சுத்திகிட்டு இருக்கான்."


    "ஓ அப்படியாம்மா, உங்க முதல் மருமக தான் இறந்துட்டாங்களே, அப்புறம் என்ன பிரச்சனை? நீங்க உங்க பிள்ளை கிட்ட சொல்லி வேறொரு கல்யாணம் செஞ்சுக்க சொல்லலாமே?"


    "அதெல்லாம் அவ போன ஆறு மாசத்தில இருந்தே, வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி, அவனை வற்புறுத்திட்டு தான் இருக்கேன். உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன தம்பி, என் அண்ணன் பொண்ணு கூட, இவனுக்காகவே காத்துகிட்டு இருக்கா. எங்க நாம சொல்றதெல்லாம் அவன் காதுல ஏறுனா தானே? ஆனா அந்த விஷயத்தை தவிர என் பையன் ரொம்ப நல்லவன் தம்பி. அவன் தலை எடுத்ததுக்கு அப்புறம் தான் எங்க வீட்டையே இடிச்சு மாற்றி கட்டினான். அதுக்கு முன்ன இது ஒரு ஓட்டு வீடா தான் இருந்தது. என் புள்ள தான் இது எல்லாத்தையும் தட்டி எடுத்துட்டு அப்படியே பில்லர் வைச்சு டார்ச் கட்டடம் போட்டான்."


  "வீடு ரொம்ப நல்லா இருக்கும்மா, நாங்க நகரத்துல வாழ்றவங்க, இந்த மாதிரி காத்தோட்டமா எல்லாம் வீடு பார்த்ததே இல்லை."


  " ஒரு நிமிஷம் இருங்க தம்பி. நான் உங்களுக்கு காபி தண்ணி கொண்டு வரேன்."


  "ஐயோ, உங்களுக்கு எதுக்கும்மா சிரமம்?"


  "அட நீங்க இருங்க தம்பி, இதுல என்ன சிரமம், என்னை இவ்வளவு பத்திரமா வீட்ல கொண்டுவந்து சேர்த்து இருக்கீங்க, உங்களுக்கு ஒரு டம்ளர் காபி கூட தராட்டி எப்படி? இருங்க வாரேன்."


  அவர் சமையல் அறையினுள் நுழைந்தவுடன் விக்ரம் அவசரமாக ஜனாவிற்கு கண்ணை காட்டி விட்டு, சித்ரா தற்கொலை செய்ததாக கூறப்படும் அந்த அறையை நோக்கி சென்றான். அந்த அறை அட்டாச் பாத்ரூமோடு இருந்தது. அவர்கள் அறையில் ஒரு பின்பக்க கதவும் இருந்தது. அதற்கு பின்புறம் கொல்லை புறமாகவும், அங்கே தனியாக பாத்ரூமும் இருந்தது. அந்த அறையை சுற்றி சுற்றி தேடியும் அவர்களின் திருமண புகைப்படம் ஒன்று கூட அங்கு இல்லை.


  ஜனா சிக்னல் கொடுக்க விக்ரம் உடனடியாக, அந்த அறையை விட்டு வெளியேறி, வரவேற்பறையில் ஜனாவிற்கு அருகில் வந்த அமர்ந்தான்.   


      சாந்தி அவர்களுக்கு குடிப்பதற்கு  காபியும், திருவிழாவிற்காக செய்த பலகாரங்களையும் கொண்டு வந்து அவர்களின் முன்பு அடுக்கினார்.


      "என்னம்மா உங்க பையனோட கல்யாண போட்டோ எங்கேயுமே இல்லை?"


    இதைக் கேட்டு சாந்தியின் முகம் தீவிரமானது


    "என்னாச்சும்மா? ஏன் உங்க முகம் பேய் அறஞ்ச மாதிரி இருக்கு? ஏதாச்சும் பிரச்சனையா?"


    "அதை ஏன் கேக்குறீங்க தம்பி அவ செத்துப் போய் ரெண்டு நாள் கழிச்சு, என் பையன் கிட்ட தேர்தல் சம்பந்தமா பேசணும்னு, கட்சி ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டு இருந்தாங்க. இவனும் என்ன பண்றதுன்னு தெரியாம மனசே இல்லாம தான் அங்க போனான்."


  " அன்னைக்கு ராத்திரி அவ தற்கொலை பண்ணிகிட்ட, ரூமுக்கு பின்னாடி இருக்க கொல்லை புறத்திலயிருந்து, ஏதோ சத்தம் கேட்டுச்சு. நான் என்னவோ ஏதோன்னு போய் பார்த்தான்ப்பா. என் பையன் ரூம்ல இருக்க பின்பக்க கதவு திறந்திருந்துச்சு.


     அங்க இருக்க மரத்துக்கு கீழே ஒரு உருவம் தலையை விரிச்சு போட்டு நிக்கிற மாதிரி இருந்துச்சு, உத்து பார்த்தப்ப தான் தெரிஞ்சது, செத்துப்போனவ கையில அவங்க கல்யாண போட்டோவை வைச்சிட்டு அதையே வெறிச்சு பார்த்துகிட்டு  இருந்தா!. எனக்கு ஈரகொலையே நடுங்கி போச்சு. அடுத்த நாளே பூசாரியை  கூப்பிட்டு அந்த புளிய மரத்துல ஆணிய வச்சு அடிச்சு புட்டேன். அதுக்கப்புறம் அவளை ஊருக்குள்ள யாரும் பார்க்கல, ஆனா அடிக்கடி அந்த புளிய மரத்துக்கிட்டு அவளை பார்த்ததா சொல்லிக்கிறாங்க."


    இவற்றை கேட்டுக் கொண்டிருந்த ஜனா, அப்படியே மயங்கி சரிந்து விட்டான்.


அன்று


    சிவப்பிரகாஷ் ஹாஸ்பிட்டலில் இருந்தவரை ரேகாவுடன் சேர்ந்து சித்ரா, தினமும் அங்கு சென்று அவனை நலம் விசாரித்து வந்தாள்.


    அவர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, இருவருக்கும் புரிதலை தாண்டிய ஒரு நல்ல நட்பு மலர்ந்தது. அவன் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்பும் கூட இவர்களின் நட்பு தொடர்ந்தது.


  சித்ராவும் சிவாவும் பேசும் போது ரேகாவின் பார்வை ஒருவித கோபத்தோடு சித்ராவை நோக்கி தான் இருக்கும். ஆனால் அது தனது கற்பனையோ என்று சித்ரா எண்ணுமாறு, மறு நொடியே தனது முகத்தை சீராக்கிக் கொண்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக பேசத் தொடங்கி விடுவாள்.


  கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் நட்பு காதலாக உருமாறி, இருவரின் மனதிலும் வேரூன்றி கொண்டிருந்தது.


      சித்ரா முதன் முதலில் சிவாவின் மீது தனக்கு ஏற்பட்டுள்ள காதலை, ரேகாவிடம் தான் கூறினாள். அவள் தனக்கு இது சந்தோஷமே என்று கூறிய பிறகு தான், தனது காதலை சிவாவிடம் வெளிப்படுத்தினாள்.


    இவர்களின் காதல் சித்ராவின் வீட்டிற்கு தெரிய வர, அவள் வீட்டு காவலில் வைக்கப்பட்டால். அவசரமாக அவளின் திருமணத்திற்காக, வரனும் பார்க்கப்பட்டு, தேதியும் குறிக்கப்பட்டது.


  தன் பெற்றோரிடம் எவ்வளவு போராடியும் அவர்கள், அவளின் கருத்துக்களை கேட்பதாகவே இல்லை.


  ராணுவத்தில் உள்ள தனது அண்ணனுக்கு செய்தி அனுப்பியும் அங்கிருந்து எந்தவித பதில் கடிதமும் வராததால், ஒரு முடிவோடு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் சித்ரா.