அத்தியாயம் 2
காவல் நிலையத்தில் தலைக்கு கைக் கொடுத்து அமர்ந்திருந்த ரங்கநாயகி பலமான யோசனையில் இருந்தார். இந்த திருமணத்தை நிறுத்த கண்மணி எடுத்த முயற்சிகள் அத்தனையையும் அவளுக்கே தெரியாமல் தகர்த்தெறிந்து விட்டேனே, பிறகு எப்படி இது நடந்தது என்ற சிந்தனையில் இருந்தார்.
கடைசி நேரத்தில் கண்மணி தனது ஆசிரியரின் மூலமாக, கல்வி தான் முதன்மை என்று தனது தந்தையிடம் பேச வைத்து, அவரது மனதை மாற்றி திருமணத்தை நிறுத்த எண்ணியிருந்தாள். அதற்காக பல முன் ஏற்பாடுகளையும் அவள் செய்து வைத்திருக்க, ஆசிரியர் இன்று வருவதற்கு முன்பாகவே கண்மணியின் எண்ணத்தை கண்டறிந்த ரங்கநாயகி, அவரை நேரில் சந்தித்து மிரட்டி இருந்தார்.
“இங்க பாருங்கம்மா நீங்க பண்றது ரொம்ப தப்பு, படிக்கிற பிள்ளைக்கு இப்படி அவசரமா கல்யாணம் பண்ணி வைக்கிறது எவ்வளவு பெரிய குற்றம்னு தெரியுமா? பதினெட்டு வயசு ஆனா தான் உங்களால அந்த பொண்ணுக்கு கல்யாணமே பண்ண முடியும், அதுவும் அந்த பொண்ணு சம்மதத்தோட தான் நீங்க பண்ணணும், இல்லாட்டி அது மிகப் பெரிய கிரிமினல் குற்றம்.”
“என்னய்யா வாத்தி எல்லாம் மறந்து போச்சா என்ன? இந்த ஸ்கூலுக்கு அரசாங்கம் செஞ்சத விட எம்புள்ள தான் நிறைய உதவி பண்ணி இருக்கான், அதனால தான் சுத்து வட்டார சனமெல்லாம் படிக்க முடியுது. பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்னு சொன்னவங்க எல்லாரும், எம்புள்ள ஒரு சொல்லு சொல்லவும் தான் இங்க அனுப்பி வைச்சாங்க, அதெல்லாம் மறந்து போயிடுச்சோ? நியாபகம் இருக்கட்டும் அடுத்தடுத்து வேற எந்த பிரச்சினையானாலும் நீ எங்க கிட்ட தான் வந்தாகனும், இதுல நீ என்னையவே தப்பு சொல்லறயா?
எங்க வீட்டு பிள்ளைக்கு எப்ப கல்யாணம் பண்ணனுமுன்னு எங்களுக்கு தெரியும். நீ அவ கூட சேர்ந்துகிட்டு இதுல மூக்கை நுழைச்சுகிட்டு இருந்த, அப்புறம் நடக்குற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல பார்த்துக்க.
ஆமா யார் சொன்னா அவளுக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகலைன்னு? நாங்க லேட்டா ஸ்கூல் சேர்த்ததால அவளோட வயசு கம்மியாகிடுமா? அவளுக்கு பதினெட்டு வயசு பிறந்து இரண்டு வாரம் ஆகுது, இதோ இது தான் அவ பிறப்பு சான்றிதழ்.”
அந்த சான்றிதழை கண்டு அதிர்ந்து நின்றார் சுப்பிரமணியம் வாத்தியார், ஏனென்றால் அவரும் இதே ஊரில் தானே இருபது வருடங்களாக வசித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிச்சயமாக தெரிந்தது இது போலி என்று. ஆனால் என்ன சொல்லி நிரூபிப்பது. அவரது தீவிரமான முகபாவனையை கண்டு, கைகளில் இருந்த சான்றிதழை வெடுக்கென்று பிடுங்கியவர்,
“அவளுக்கு பதினெட்டு வயசாச்சு, இதுக்கு மேல அதை இதை சொல்லி கல்யாணத்தை நிறுத்த பார்த்தேன்னு வச்சுக்க, அப்பறம் பள்ளிக் கூடத்துக்குள்ள பேய் இருக்குன்னு புரளியை கிளப்பி, ஊருல இருக்க அத்தனை பிள்ளைங்களையும் படிக்க விடாம பண்ணிருவேன்.”
“என்னம்மா இப்படி எல்லாம் பேசறீங்க?”
“ஆமா நீ நான் சொல்லறதை கேட்காட்டி நான் அப்படி தான் பண்ண வேண்டி இருக்கும். உனக்கு என் பேத்தி கல்யாணத்தை நிறுத்தனுமா, இல்ல ஊர்ல இருக்கிற மத்த பிள்ளைங்க படிக்கணுமா? அவ ஒருத்திக்காக மத்த பிள்ளைகளோட படிப்ப விட்டுத் தர போறியா? பள்ளிக்கூடத்துக்குள்ள பேய் இருக்குன்னு ஒரு புரளியை மட்டும் கிளப்பி விட்டா போதும், இந்த ஊருக்குள்ள ஒருத்தனும் தன் பிள்ளைகளை படிக்கறதுக்கு அனுப்ப மாட்டான். அப்புறம் அங்க உனக்கென்ன வேலை? அதனால பெரிய மனுசனா கல்யாணத்துக்கு வந்தமா அட்சதைய போட்டோமான்னு இருக்கணும், வேற ஏதாவது குட்டையை குழப்பிக்கிட்டு இருந்த அவ்வளவு தான்.”
அவருக்கு தன் வேலையைப் பற்றி கூட கவலை இல்லை, ஆனால் தற்போது தான் ஊர் பெரியவரான கிருஷ்ணமூர்த்தியின் சொல் கேட்டு, அந்த ஊர் மக்கள் அனைவரும் குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்பி கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவரது தாயே இப்படி ஒரு செயலை செய்தாறென்றால் என்னவென்று சொல்வது?
அதோட கிருஷ்ணமூர்த்திக்கு தன் தாய் என்றால் எவ்வளவு இஷ்டம் என்று இந்த ஊருக்கே தெரியுமே, அதனால் தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றவரை பார்த்து, ஏளன சிரிப்பை உதிர்த்த ரங்கநாயகி,
“ஒழுங்கு மரியாதையா கவர்மெண்ட் கொடுக்கற காசோட நான் கொடுக்கற காசையும் வாங்கி வச்சுகிட்டு வேலையை பார்த்துகிட்டு இரு, அதை விட்டுட்டு எனக்கு எதாவது குடைச்சல் குடுக்க நினைச்சே, அதுக்கப்புறம் இந்த பள்ளிக்கூடமே இருக்காது ஞாபகத்துல வச்சுக்கோ.”
அப்படி அவரை மிரட்டி தனது காரியத்தை சாதித்தவர், திருமணத்திற்கு முதல் நாள் நடந்த நிச்சயத்தில் சங்கீத் பங்க்ஷனின் போது, கூலிங் கிளாஸ் சகிதம் தனது கூட்டாளிகளோடு இணைந்து, கோல்டன் ஸ்பேரோ பாட்டுக்கு அட்டகாசமாக ஆடிக் கொண்டிருந்தார். அவரது ஆட்டத்தை பார்த்த கண்மணிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
இந்தக் கிழவி இவ்வளவு கான்ஃபிடன்ட்டா இருக்குதுன்னா ஏதோ ஒரு வேலை பார்த்திருக்குன்னு அர்த்தம் என்று மனதில் எண்ணியவள், உடனே அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவள், பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு அறைக்குச் சென்று, தனது தோழி கவிதாவிற்கு அழைத்திருந்தாள்.
கவிதா அவளது உயிர் தோழி, சிறுவயதில் இருந்தே அவளுடன் படிப்பவள், கவி என்று அவள் ஆரம்பிப்பதற்கு முன்பே அங்கு கவிதா சுப்பிரமணியம் வாத்தியார் தற்போது தனது வீட்டில் தான் இருப்பதாகவும், தனது தந்தையிடம் ரங்கநாயகி பேசியவற்றை கூறி புலம்பிக் கொண்டிருப்பதாகவும், ஒன்று விடாமல் கூறினாள்.
“நல்ல வேலை கண்மணி, என் பாட்டி காமாட்சி தன் சிநேகிதியோட ஆட்டம் போட கல்யாண வீட்டுக்கு போயிடுச்சு, இல்லாட்டி இங்க நடக்கறதை எல்லாம் ஒன்னு விடாம உன் பாட்டி ரங்கநாயகி கிட்டப் போட்டு கொடுத்திருக்கும்.
உன்னோட பாட்டி வாத்தியாரை மிரட்டி இப்படி நம்ம பிளான்ல ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுடுச்சே, இனி எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்தறது?”
“எங்க வீட்டு கிழவியை பத்தி தெரிஞ்ச விஷயம் தானே கவி, அந்த கிழவி இப்படி எல்லாம் பண்ணுமுன்னு நான் முன்னவே எதிர்பார்த்தேன், ஒரு பிளான் போனா என்ன, அது தான் அடுத்து பிளான் பி கையில ரெடியா இருக்கே, நீ இப்ப என்ன பண்ற, நான் இப்போ உனக்கு அனுப்புற வீடியோவை, அப்படியே சாருக்கு காட்டு, அப்புறம் நான் சொல்றபடி செய்யச் சொல்லு, அப்புறம் இந்த கல்யாணம் தன்னால நிக்கும்.”
பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள், தனது பேரனின் கை பிடித்தபடி ஆடிக் கொண்டிருந்த ரங்கநாயகியை பார்த்தபடியே மனையில் சென்று அமர்ந்தாள்.
அங்கிருந்து குழம்பிய முகத்தோடு சென்றவள், திரும்பி வரும்போது தெளிவாக இருப்பதைக் கண்டு ரங்கநாயகியின் மனதிற்குள் ஏனோ பூச்சி பறந்தது. இருந்தும் தன்னை மீறி எதுவும் நடந்து விடாது என்ற எண்ணத்தில், தனது பேரனோடு கோல்டன் ஸ்பேரோவிற்கு ஸ்டெப் போட்டுக் கொண்டிருந்தவரின் கைகளில், இரும்புச் சங்கிலியை மாட்ட சிறிது நேரத்திலேயே அந்த ஊரின் காவல் துறையினர் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அங்கிருந்த அனைவரும் திருமணத்தை நிறுத்துவதற்காக தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று நினைக்க, ஆனால் அவர்களோ ரங்கநாயகியை கைது செய்ய பிடிவாரண்ட்டோடு வந்திருந்தவர்கள், அங்கிருப்போரின் எதிர்ப்பையும் மீறி கையோடு அவரை அழைத்துச் சென்று விட்டனர்.











