அத்தியாயம் 14
இன்று
ஜனாவும் விக்ரமும் வெள்ளை போர்வைக்குள் தங்களை சுருட்டிக்கொண்டு, காலியாக இருந்த ஸ்ட்ரக்சரில் படுத்துக்கொண்டனர்.
உள்ளே வந்த பைக் ஆசாமிகள் மூவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
"டேய் பாஸ் இங்க ஒரு டெட்பாடி தான் வெளிய ஸ்ட்ரக்சர்ல இருக்கும், அதை தூக்கிட்டு வாங்கன்னு சொன்னாரு, இங்க என்ன ரெண்டு இருக்கு?
" ஏதாவது புதுசா வந்த கேஸா இருக்கும், அதான் பாஸ் அடையாளம் சொல்லிவிட்டாரே நல்ல குண்டா கொழு கொழுன்னு இருக்கும்னு, இதுவா தான் இருக்கும், இதை தூக்கி பின்னாடி வழியா வண்டிக்கு அனுப்பு"
"ஏண்ணே நாம இப்படி எப்பவும் டெட்பாடியை தூக்கிட்டு போறோமே? இதோட சொந்தக்காரங்க வந்து கேட்டா பிரச்சினையாகாதா?"
"ஃபுல்லா கவர் பண்ண ஒரு அனாதை பிணத்தை அவங்க கிட்ட கொடுத்துடுவாங்க, இது ஆல்ரெடி உடம்பு சரியில்லாத கேஸ்கிறதால முகத்தை திறக்க கூடாது, மீறி திறந்தா நோய் உங்களுக்கும் தோத்திக்கும்னு சொல்லி தான் கொடுப்பாங்க. அதனால யாரும் முகத்தைத் திறந்து பார்க்க மாட்டாங்க."
அவர்கள் மார்ச்சுவரியில் கிழக்கு மூலையில் இருந்த ஒரு டேபிளை நகர்த்த, அங்கு ஒரு சிறிய சுரங்க வழி தெரிந்தது. ஜனாவை தூக்கிக் கொண்டு போய் அதன் வழியே போட்டனர். அதில் சறுக்கி கொண்டே போய், ஆஸ்பத்திரிக்கு வெளியில் இருந்த சுவரை ஒட்டி வெளிவந்தான் ஜனா. அங்கு தயாராக காத்திருந்த இரண்டு பேர், ஜனாவின் உடலை அங்கிருந்த ஜீப்பில் ஏற்றினர்.
"இந்த தாமோதரன் அன்னைக்கு சாகாம இருந்திருந்தா அடுத்த நாளே இந்த டெட் பாடியை தூக்கிட்டு போயிருக்கலாம், சரி கிளம்பலாமாண்ணே?"
" டேய் நம்ம வந்தது இந்த பாடி எடுக்குறதுக்கு மட்டும் இல்ல, பாஸ் இன்னைக்கு இன்னொரு வேலையையும் சேர்த்து சொல்லி இருக்காரு, மறந்துட்டியா ?"
" ஆமாண்ணே, நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க. நம்பர் 57 தானே? அதோ அங்க கீழ இருக்கு."
அந்த நம்பர் 57 என்ற ரேக்கை திறந்த போது, அது ஒரு டம்மி கதவாக தான் இருந்தது. அதன் உள்ளே ஒரு கம்ப்யூட்டர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. வந்தவர்கள் அவசரமாக அந்த கம்ப்யூட்டரையும் கீபோர்டு சிபியூ என்று அனைத்தையும் அங்கிருந்த அட்டைப்பெட்டியில் வைக்க தொடங்கினர். சிபியூவை கழற்றி எடுக்கும் போது அதை கை தவறி கீழே போட்டனர். அப்போது அதிலிருந்த ஹார்ட் டிஸ்க் சற்று தூரம் சென்று விழுந்தது அதை அவர்கள் கவனிக்க தவறினார், ஆனால் விக்ரம் அதனை கவனித்துவிட்டான்.
"ஐயையோ பாஸ் இதையெல்லாம் எங்கேயாவது கண்காணாம கொண்டு போய் எரிச்சிட சொன்னாரு, நான் இதை பாதி காசுக்கு வித்திடலாம்னு நினைச்சேன் இப்படி சில்லு சில்லா போயிடுச்சே"
வந்தவர்கள் அந்தப் டேபிளை நகர்த்தி பழைய படி வைத்து விட்டு மார்ச்சுவரிக்கு வெளியே கம்ப்யூட்டர் பொருட்களை தூக்கிக்கொண்டு சென்றனர். அவர்கள் சென்று விட்டனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, எழுந்த விக்ரம், கீழே விழுந்த அந்த ஹார்ட் டிஸ்கை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான்.
பிறகு பாதுகாப்புக்காக எப்போதும் ஜனாவிடம் இருக்கும் ட்ராக்கரின் உதவியுடன் அவன் இருக்கும் இடத்தை ட்ராக் செய்ய தொடங்கினான்.
ஜனாவை ஏற்றிக்கொண்ட ஜிப் ஒரு காட்டுப் பகுதியை நோக்கிச் செல்ல தொடங்கியது. ஒரு நிறுத்தத்தில் சுற்றி யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, அந்த காட்டினுள் இருந்த சிறிய வழியில் செல்லத் தொடங்கியது.
போர்வைக்குள் இருந்த ஜனா கஷ்டப்பட்டு படுத்திருந்தான். அந்தப் போர்வையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் குடலைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வருவது போல இருந்தது. அவ்வப்போது குலுங்கி கொண்டே ஓடிக்கொண்டிருக்கும் ஜீப்பானது, அவனுக்கு முதுகு வலியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. விறைத்த கட்டை போல படுத்திருக்க வெகுவாக சிரமப்பட்டான்.
"ஆமா இந்த டெட்பாடிக்கு வழக்கம் போல நெருப்பு வெச்சிடலாமா? இல்ல டெஸ்ட் ஏதாவது பாக்கி இருக்கா?"
"அங்க போனா தான் தெரியும், இந்த பாடி ஹாஸ்பிடல்ல இருக்குறத பாத்தா, வேற ஏதோ டாக்டர் கிட்ட போய் ட்ரீட்மென்ட் பார்த்திருப்பான் போல இருக்கு. அதனால என்ன சைடு எஃபெக்ட் வந்திருக்குன்னு ரிப்போர்ட் ரெடி பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்."
"அந்த வெளிநாட்டுக்காரனுங்க தயாரிக்கிற மருந்துகளை பரிசோதிக்க, இவனுங்களை சோதனை எலியா பயன்படுத்திக்கிறான். அதனால செத்துப் போறவனுகல நாம ஊருக்கு தெரியாம இங்கே கொண்டு வந்து எரிச்சுக்கிட்டு இருக்கோம் , நல்ல பொழப்பு நம்மளுடையது நாலு காசு கிடைக்கும்னு இங்க வந்து சேர்ந்தா? இப்படி டெட் பாடியா கலெக்ட் பண்ணி, வெட்டியான் வேலைதான் பார்த்துக்கிட்டு இருக்கோம்."
"ஏண்டா சலிச்சுக்கிற சம்பளம் வாங்கும் போது மட்டும் இனிக்கிதோ?"
"அது என்னமோ உண்மைதான்ப்பா, ஆமா நாளைக்கு எம்எல்ஏ எலக்சனுக்கு நாமினேஷன் நடக்குதாமே? எப்படியும் ஊருக்குள்ள நிறைய பணம் புழங்கும். நாமளும் அந்த கூட்டத்தோடு சேர்ந்துக்கலாமா?...... எப்படியும் ஒரு மாசத்துக்கு எந்த ட்ரான்ஸ்ஷாக்ஷனும் பண்ண போறது இல்லைனு பாஸ் சொல்லிட்டாரு, இனி அங்கேயாவது போய் காசு சேர்த்தலாம்."
அன்று
அந்த பிரபலமான மனநல மருத்துவமனையின் வராண்டாவில் நின்று கொண்டு சிவா, சித்ராவின் பெற்றோர்களிடம் சண்டையிட்டு கொண்டிருக்க, அவனின் சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க மனநல மருத்துவரான ஜானகி அம்மாள்.
சிவாவை அமைதிப்படுத்தி சித்ரா இங்கு இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்து கூறத் தொடங்கினார்.
"மிஸ்டர் சிவா கண்ட்ரோல் யுவர் செல்ப். படிச்சவர் தானே நீங்க?.... மனநல மருத்துவரை பார்க்க வர்றவங்க எல்லாருமே பைத்தியம் கிடையாது முதல்ல அதை புரிஞ்சுக்கோங்க? நீங்க சொன்ன மாதிரியே இது ஹார்மோன் சேஞ்சஸாகவே இருந்தாலும், அதை அப்படியே விட்டு விட முடியுமா? அவங்களை அமைதிப்படுத்தி நார்மலா வச்சுக்கிட்டா தானே அவங்களுக்கும் நல்லது, பிறக்க போற உங்க குழந்தைக்கும் நல்லது. அது புரியாம இப்படி ஹாஸ்பிடல்ல கத்திக்கிட்டு இருக்கீங்க?"
"மன்னிச்சுடுங்க டாக்டர்,நான் இப்படி நடந்துக்கிட்டது தப்புதான், சித்ரா போன் பண்ணி அழுகவும் எனக்கு கோபம் வந்துடுச்சு."
"இட்ஸ் ஓகே, உங்க வைஃப்க்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்ல, மேபி இது உங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஏற்பட்ட பாதிப்பா கூட இருக்கலாம்? அவங்க மனசுல இருக்குற பிரச்சனையை நாங்க பேசி தான் சரி பண்ண முடியும். அதனால ஒரு ரெண்டு மூணு நாள் அவங்க இங்க இருந்து சரியாகட்டும். அவங்களுக்கு உங்களோட இருக்குறது தான் சந்தோஷம்னா, கட்டாயம் நானே அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணதும், உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்க சொல்றேன் போதுமா?"
சிவா அன்று முழுவதும் சித்ராவுடனேயே இருந்துவிட்டு, இரவு தான் தனது வீட்டிற்கு சென்றான். அங்கிருந்த அனைத்து செவிலியர்களும் சித்ராவிடம், சிவாவை பற்றி தான் பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர்.
அடுத்த நாள் சித்ராவை பார்க்க ரேகா வந்திருந்தாள். அவளது நலம் பற்றி விசாரித்துவிட்டு சென்றாள்.
ரேகாவை கண்ட ஒரு செவிலியர் அவளைப் பற்றி சித்ராவிடம் வந்து விசாரிக்க,
" என் வீட்டுக்காரரோட மாமா பொண்ணு தான்க்கா, என்னோட பிரண்டு தான்."
"முதல்ல அவ பிரண்ட்ஷிப்பை கட் பண்ணுமா?"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"அது ஒரு நச்சு பாம்புமா, அவ மட்டும் இல்ல அவ அண்ணா இருக்கான் பாரு அவளுக்கு மேல விஷம்.
என்னோட பிரண்டு ஒருத்தி இருந்தாம்மா,பேரு மாயா. எப்பவுமே பணக்காரங்களை போல உடை உடுத்திப்பா, கொஞ்சம் ஆடம்பரப்பிரியை. ஆனா அவங்க ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி தான், அவ ஒர்க் பண்ண அதே இடத்தில் தான் இந்த சித்ராவும் வேலைக்கு வந்து சேர்ந்தா.
மாயாவை ஒரு பணக்காரின்னு நினைச்சு தன்னோட அண்ணணை பத்தி ஆகா ஓகோன்னு பெருமையா சொல்லி சொல்லியே, இரண்டு பேத்துக்கு லிங்க் பண்ணி விட்டுட்டா. ஒரு கட்டத்துல இவளோட உண்மையான குடும்ப சூழ்நிலை தெரிய வர, அந்த சித்ராவோட அண்ணன் நாகலிங்கம், இவளை யூஸ் பண்ணிக்கிட்டு கழட்டி விட்டுட்டான்.
அதுக்கு அப்புறம் அந்த சித்ராவும் வேற வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டா, இந்த நாகலிங்கமும் சரியா பேசறது இல்லைன்னு இவ நேரடியா அவன் கிட்ட பிரச்சனை பண்ண ஆரம்பிச்சா, என்ன ஆச்சுன்னு தெரியலமா?.... திடீர்னு ஒரு நாள் நடு வீட்டுல அவங்க அப்பா அம்மா கண்ணு முன்னாடியே தனக்குத்தானே நெருப்பு வச்சுக்கிட்டா. அவங்க அப்பா அம்மா எப்படியோ நெருப்பை அணைச்சு ஹாஸ்பிட்டல்ல கொண்டுவந்து சேர்த்துட்டாங்க. ஆனா, அவளுக்கு நினைவு வந்ததும் கேட்டா, நான் நெருப்பு வச்சுக்கவே இல்லன்னு சொல்றா, கடைசியா அந்த நாகலிங்கத்தை தான் காபி ஷாப்க்கு போய் பார்த்துட்டு வந்து இருக்கா.
கடைசியா அவனோட ஒரு கப் காபி சேர்ந்து குடிச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கிறதா சொன்னா, அதுதான் அவ பேசின கடைசி வார்த்தை, அந்தப் பாவி காபில என்னத்த கலந்தானோ?.... இவ இப்படி பண்ணிக்கிட்டா!.. அதனாலதான்ம்மா சொல்றேன், அதுங்க எல்லாம் ஒரு விஷம், நீ எதுக்கும் பார்த்து பத்திரமா இருந்துக்கோ?"
அப்போதுதான் சித்ரா சிந்திக்கத் தொடங்கினாள், ஒவ்வொரு முறையும் தான் இவ்வாறு நடந்து கொள்வதற்கு முன்பு, ரேகாவுடன் தான் இருந்திருக்கிறாள், அப்படி என்றால் இது அவளின் வேலையாக இருக்குமோ?... என்று சரியாக சந்தேகிக்க தொடங்கினாள்.
அடுத்த நாள் சித்ராவை டிஸ்சார்ஜ் செய்து சிவா தனது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
சித்ரா ரேகாவிடம் எச்சரிக்கையாக சற்று எட்டி இருந்தே பழகத் தொடங்கினாள். அவளோடு பேசுவதையே முற்றிலுமாக தவிர்த்து வந்தால்.
No comments:
Post a Comment