அத்தியாயம் 1
கண்களுக்கு எட்டும் தூரம் வரை மனித பிணங்களின் குவியல்கள் மட்டுமே தெரிய, அங்கங்கு துப்பாக்கி ஏந்தியபடி சுற்றிக் கொண்டிருக்கும் முகமூடி ஆட்களின் கண்களில் சிக்காமல் இருக்க, பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள் கண்மணி.
தற்போது தான் முதல் வருட கல்லூரிப் படிப்பில் இருப்பவள், வட மாநிலத்திற்கு முதல் முறையாக கல்லூரி சுற்றுலா வந்திருக்க, எதிர்பாராத விதமாக அவர்கள் இருந்த இடத்திற்கு சற்று தள்ளி, திடீரென குண்டு வெடிப்பு நடந்தது.
அதில் மாணவர்கள் அனைவரும் திசைக்கொருவராக சிதறி போயிருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி அவள் சம்பவ இடத்திற்கே வந்திருந்தாள். அங்கு தான் முகமூடி அணிந்த சிலர் கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி, அங்கு இறந்து கிடந்தவர்களின் முகத்தை திருப்பிப் பார்த்தபடி யாரையோ தேடிக் கொண்டிருந்தனர்.
தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் சோலையூரில், செல்வந்தரான கிருஷ்ணமூர்த்தி மற்றும் வாசுகிக்கு மகளாக பிறந்த, அந்த வீட்டின் இளவரசியான இவள், அவர்களின் உயிர் மூச்சாவாள். ஆனால் கிருஷ்ணமூர்த்தியின் தாய் ரங்கநாயகி மட்டும், அவளை அவரது உயிரை வாங்குவதற்காகவே பிறந்தவள் என்பார்.
கிருஷ்ணமூர்த்திக்கோ தனது மகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் அவளுக்கு அது வந்தாள் தானே! எந்நேரமும் விளையாட்டுதனமாக இருக்கும் கண்மணி, தேர்வு நேரத்தில் கூட படிப்பது அரிது.
ஆனால் எப்படியும் ஓரளவுக்கு மதிப்பெண் பெற்று விடுவாள். ப்ளஸ் டூ முடித்து கலை அறிவியல் கல்லூரியில் அவள் சேர்வதாகக் கூற, அதற்கு ஆப்பு வைக்கும் வேலையில் இறங்கினார் ரங்கநாயகி.
"என்னப்பா மூர்த்தி நீ மறந்துட்டயா என்ன? நம்ம ஜோசியர் இவளுக்கு இந்த வருஷம் கல்யாணம் பண்ணியே ஆகனும்னு சொல்லல, நீங்களா பண்ணாட்டியும் அதுவா நிச்சயம் நடக்கும்னு சொன்னாரே, இப்ப எதுக்கு அவளுக்கு காலேசு படிப்பு? அவ வயசுல இருக்கும் போது, எனக்கு நீ பொறந்து நாலு வருஷம் முடிஞ்சு இருந்தது தெரியுமா?"
அவருக்கும் அது ஒன்று தான் யோசனையாக இருந்தது, தனது மகளை நன்கு படிக்க வைத்து ஊரார் வியக்கும் படி அவளை நல்ல வேலையில் அமர்த்த வேண்டும் என்று அவருக்கு ஆசை.
என்ன தான் சொத்து இருந்த போதும், சிறுவயதிலேயே அவரது தந்தை இறந்து விட, ஒட்டுமொத்த குடும்ப பொறுப்பும் அவர் தலையில் தான். தொழிலை நடத்திய படியே தந்தை ஸ்தானத்தில் இருந்து தனது தங்கைக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார். அடுத்தடுத்து அவருக்கு இருந்த குடும்பத் பொறுப்புக்களால் தனது படிப்பை அவரால் தொடர முடியவில்லை.
ஊரார் என்னதான் பணத்திற்கும் அவரது குணத்திற்கும் மதிப்பு கொடுத்து மரியாதையாக நடந்து கொண்ட போதும், அவரது வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட உறவுகள் சிலர், அவரை படிக்காத தற்குறி என்றே குத்தலாக பேசுவர். அதனால் தனது பெண்ணை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ஜோசியர் சொன்ன விஷயத்தால் கொஞ்சம் குழப்பமுற்றார்.
ஏனெனில் அவரது தங்கைக்கு அற்ப ஆயுசு என்று முன்பே ஜோசியர் கூறியிருக்க, அதை நம்ப மறுத்தார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் ஜோசியரின் கூற்றுப்படியே பிரசவத்தின் போது அவரது தங்கை இறந்து விட, அதன் பிறகு அவரால் ஜோசியத்தை நம்பாமல் இருக்க முடியவில்லை. கண்மணியின் பூப்புனீராட்டு விழாவிற்காக தேதி குறிக்க சென்ற போது அவளது ஜாதகத்தை ரங்கநாயகி எடுத்து நீட்ட,
"பிள்ளைக்கு 18 வயசு முழுமையா பூர்த்தியாகும் முன்னயே மாங்கல்யம் கழுத்துல ஏறிடும் ப்பா."
"என்னய்யா சொல்லறீங்க சின்ன பிள்ளை அது, எப்படி இந்த வயசுல கல்யாணம் பண்ணி வைக்கிறது?"
"தம்பி நீங்களா பண்ணாட்டியும் நடக்கப் போற விதியை மாத்த முடியாது இல்லையா?"
என்றபடி அவர் விழாவிற்கு நல்ல நாள் குறித்துக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்த கிருஷ்ணமூர்த்திக்கு முகம் வாடி விட்டது.
" என்னப்பா மூர்த்தி ஜோசியர் இப்படி சொல்லிட்டாரு? அவரு சொல்லறதெல்லாம் வேற கண்டிப்பா நடக்குமே? சரி என் மக பையன் தான் எம்பேத்தியை கட்டிக்க போறான்னு ஊர் அறிஞ்ச விஷயமாச்சே, கொஞ்ச நாள் கழிச்சு நடக்கப் போற கல்யாணம் அவ பள்ளிக்கூடம் முடிச்சதும் நடக்கட்டும் சரியா? "
மூர்த்தி அப்போது எதுவுமே பேசவில்லை, கடவுள் விட்ட வழியென்று அவர் மீது பாரத்தை போட்டு விட்டார். அதன் பிறகு ஜோசியர் சொன்னதையே மறந்து கூட போனார்.
தற்போது தனது தாய் இதை ஞாபகப்படுத்தவும் தான், மனக் குழப்பத்தில் சுற்றிக் கொண்டு இருந்தார். ஆனால் ரங்கநாயகி தனது பேரன் சேகருக்கு அழைப்பு விடுத்து கல்யாணத்துக்கான வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
சேகரோ ஒழுங்காக பள்ளி செல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டு ஊதாரியாகத் திரிபவன். தந்தை சொத்தில் உடல் வளர்த்து வந்தவனோ, சோம்பேறி தனத்திற்கு முன் உதாரணமாக திகழ்ந்தான். அதோடு கண்மணியை விட பதிமூன்று வயது மூத்தவன், இவனது இந்த குணத்திற்க்காகவே இவனுக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை.
வாசுகிக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என்றாலும், தனது மாமியாரை எதிர்த்து பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால் கண்மணிக்கு அதெல்லாம் இல்லையே சும்மாவே தனது பாட்டிக்கு தொல்லைகளை மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பவளுக்கு, இப்போது தானாக வந்து ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜீம் கிடைத்தால்…அவனது இரட்டை நாடி இளைக்கும் அளவுக்கு சேகரை நன்றாக, வேலை வாங்கத் தொடங்கினாள் கண்மணி.
வாழைப்பழத்தை உரிப்பதற்கு கூட கூடவே சில அல்லக்கைகளை வைத்துக் கொண்டு சுற்றும் சேகரிடம் சென்று, மாங்காய் பறித்து கொடு மாமா, அந்த பொருளை எடுத்துக் கொடு மாமா, நீர் இறைத்துக் கொடு மாமா என்று அவனை விரட்டிக் கொண்டே இருந்தாள்.
முதலில் அவளை கண்டாளே ஆசையாக ஓடி வருபவன், தற்போதெல்லாம் அவளது மாமா என்ற குரலை கேட்டாளே, பதறிக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறான். அதோடு தனது பாட்டியிடம்,
"ஐயோ அம்மாச்சி இப்பவே இவளால நான் பாதியா இளைச்சுட்டேன், நிம்மதியா சாப்பிடக் கூட விடாம மாமா மாமான்னு ஏதாவது வேலை கொடுத்துக்கிட்டே இருக்கா, இப்பவே இப்படின்னா கல்யாணத்துக்கு அப்பறம் ஐய்யய்யோ என்னால இவளை கட்டிக்க முடியாது ப்பா."
அவனது தலையில் தட்டி சுற்றும் முற்றும் பார்த்தவர் சற்று தணிந்த குரலில்,
"அடேய் இம்புட்டு வயசுக்கு மேல உனக்கு பொண்ணு தர யாருடா வரிசையில நிக்கிறா? கல்யாணம் முடியிறவரைக்கும் அவ பேச்ச கேட்டு நடக்கறது போல சும்மா நடி, கல்யாணம் மட்டும் முடியட்டும், அவ ஆட்டத்தை எல்லாம் அடக்கி மூலையில உட்கார வைக்கல, நான் ரங்கநாயகி இல்லடா."
ரங்கநாயகி தனது மகனிடம் நைச்சியமாக பேசி, அவசர அவசரமாக நிச்சயத்தை வீட்டளவில் ஏற்பாடு செய்து விட்டார்.
ஆனால் நிச்சியத்தன்று யாரும் எதிர்பார்க்காதபடி ரங்கநாயகியை போலீசார் கைது செய்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று விட்டனர்.


No comments:
Post a Comment