Search This Blog

Followers

Powered By Blogger

Sunday, October 26, 2025

பிம்பம் 19 (இறுதி அத்தியாயம்)


 

அத்தியாயம் 19 (final)


     காரில் வந்தவர்கள்  தம்மை காப்பாற்றுவார்கள் என்று நினைத்து, அவள் கைகளை கூப்பி தன்னை காப்பாற்றுமாறு கதறி கொண்டே அழுதாள்.


     ஆனால், அதிலிருந்து இறங்கிய தாமோதரனை கண்டு இனி தான் தப்பிக்க வழியே கிடைக்காதோ என்று பதறியபடி, அக்கம் பக்கம் ஏதாவது உதவி கிடைக்குமா என்று தேட முற்பட, அவள் அங்கிருந்து தப்பிக்கும் முன்பே சிவா, தன் கையில் இருந்த துண்டாள் அவள் கழுத்தை இறுக்க தொடங்கினான்.


  ரேகா அவளது காலை பிடித்துக் கொள்ள, டாக்டர் தாமோதரனும், நாகலிங்கமும் சுற்றி முற்றி யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டனர். சிவா அவளது கழுத்தை துண்டால் இறுக்கிக் கொண்டே சென்றான், சித்ரா தனது கைகளால் கழுத்தில் இருக்கும் துண்டினை எடுத்து விட அவனுடன் போராடிக் கொண்டிருந்தாள்.


  ஒரு கட்டத்துக்கு மேல் தனது உயிரை காப்பாற்றி கொள்ள அவளால் போராட முடியவில்லை, தனது கைகளை கொண்டு வயிற்றை கட்டிக்கொண்டவள், அந்த வானில் ஒளிரும் பூர்ண சந்திர பிம்பத்தை, விழிகளில் நிரப்பிக் கொண்டே, தனது இறுதி மூச்சினை நிறுத்தினாள்.


  கோர்ட்டில், நடந்த சம்பவங்களை அனைவரின் முன்னிலையிலும், நாகலிங்கம் ஒரு கூண்டில் நின்றுகொண்டு எடுத்துக் கூறிக் கொண்டிருக்க, அவனுக்கு எதிர் கூண்டில் சிவா நின்றிருந்தான்.


  ஆம் சிவா கைது செய்யப்பட்டிருந்தான், எம்எல்ஏ நாமினேஷனின் போதே அவன் கைக்கு காப்பு போடப்பட்டது.


    சித்ரா எவ்வாறு கொல்லப்பட்டால் என்று அவன் எடுத்து கூற கேட்டதும், அந்த கோர்ட்டில் கனத்த அமைதி நிலவியது. அங்கு சித்ராவினுடைய பெற்றோர்களுக்கு, தன் மகள் பட்ட கஷ்டங்களை கேட்டபோது, அவர்களின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டேயிருந்தது.


  அரசு தரப்பு வக்கீல் மேற்கொண்டு நடந்தவற்றை கூறுமாறு நாகலிங்கத்திடம் கூற,


  "கொஞ்ச நேரத்துலயே சித்ராவோட உயிர் போயிடுச்சு, உடனே நானும் சிவா மச்சானும் சித்ராவோட கையையும் காலையும் புடிச்சு,  கொல்லை புறம் இருக்க கதவு வழியா வீட்டுக்குள்ள கொண்டு போனோம். அங்க பெட்ரூமில் இருந்த சீலிங் ஃபேன்ல அவளோட சேலையில தூக்கு மாட்டி, சித்ராவோட உடலை தொங்க விட்டோம். அவ காலுக்கு கீழயே ஒரு ஸ்டூலை கவுந்த மாதிரி போட்டு, இதை ஒரு தற்கொலை மாதிரி ரூமை செட் பண்ணினோம், அப்புறம் பின்னாடி கொல்லப்புற  கதவு வழியா வெளிய வந்து, அதை சாத்தி கம்பியை  உள்ள விட்டு தாழ் போட்டுட்டு, நாங்க எல்லாரும் திரும்பவும் கோயிலுக்கே கிளம்பிட்டோம்.


  கொஞ்ச நேரத்துல கோயிலில் பூஜை முடிஞ்சு, சிவா மச்சானை தவிர மத்த எல்லாரும் திரும்ப வீட்டுக்கு வந்தோம். அப்ப முன்பக்க கதவு சாத்தி இருந்ததை பார்த்து, சாந்தி அத்தை கதவை  தட்டி பார்த்து, சித்ராவை ரொம்ப நேரமா கத்தி கூப்பிட்டாங்க, ஆனா அவகிட்ட இருந்து எந்த விதமான பதிலும் வரலன்னு அவங்களுக்கு பயம் அதிகமாயிடுச்சு, உடனே அக்கம் பக்கத்துல இருக்குறவங்களை சத்தம் போட்டு கூப்பிட்டாங்க. நானும் அவங்களோட சேர்ந்து கதவை உடைக்கிறதுக்கு ட்ரை பண்ணினேன். ஒரு கட்டத்துல எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளவும் கதவு திறந்துடுச்சு,  அவசரமா சாந்தி அத்தை சித்ராவை தேடி அவ பெட்ரூமுக்கு போய் பார்த்தாங்க.


    அங்க அவ தூக்குல தொங்குறதை பார்த்து, அதிர்ச்சியில் அத்தை கத்தி அழ ஆரம்பிச்சு எல்லாரையும் கூப்பிட்டாங்க. நான் தான் போலீசுக்கும் ஆம்புலன்ஸ்க்கும் இன்பார்ம் பண்ணினேன். கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல டாக்டர் தாமோதரன் இருந்ததால எங்களுக்கு வசதியா போயிடுச்சு, ஒரு வழியா சித்ராவோட கொலையை அவர் மூலமா  தற்கொலையா மாத்திட்டோம்.


    சித்ரா ஏற்கனவே ஊர்காரங்க முன்னாடி ரெண்டு மூணு தடவை தற்கொலை செஞ்சுக்க முயற்சி செஞ்சதால,  அவளோட இறப்பு தற்கொலையாத்  தான் இருக்கும்னு எல்லாரும் நம்புனாங்க, அவ உடம்புல மருந்து செலுத்தி அப்படி நடந்துக்க வச்சதே நாங்க தான்னு யாருக்கும் தெரியாது, அதனால யாருக்கும் எங்க மேல எந்த சந்தேகமும் வரல, சிவா மச்சான் வந்ததும் அவரும் திறமையா நடிக்க ஆரம்பிச்சாரு.



      சித்ராவோட அப்பா அம்மாவுக்கும் நான் தான் போன் பண்ணி சொன்னேன், அவங்க ஏதோ குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு சித்ராவை பார்க்கத்தான் ஊருக்கு வந்துட்டு இருந்தாங்க,நான் போன் செஞ்ச கொஞ்ச நேரத்திலேயே அவங்களும் வீட்டுக்கு வந்துட்டாங்க. அவங்க  சிவா மச்சான் கதறி அழுததை பாத்துட்டு சித்ராவுடைது தற்கொலை தான்னு முடிவே பண்ணிட்டாங்க. ஒரு வழியா சிவா மச்சானும் சித்ராவோட அப்பா அம்மா மனசுல, சிம்பதியை கிரியேட் பண்ணிட்டான். அது மூலமா தான் இந்த வருஷம் நடக்க போற எம்எல்ஏ எலக்சனுக்கு, இந்த ஊர் சார்பாக எம்எல்ஏ போஸ்டிங்க்கு கட்சி மேல் இடத்துல சிவா மச்சானுக்காக சித்ராவோட அப்பா ரெக்கமண்ட் பண்ணாரு."


  நாகலிங்கத்தின் வாக்குமூலத்தை கேட்டுக்கொண்ட நீதிபதி, அவரது தீர்ப்பினை எழுத ஆரம்பித்தார்.


  ஜெயிலில் இருக்கும் நாகலிங்கத்தை கொலை செய்ய யாரேனும் வரக்கூடும் என்று விக்ரம் முன்னமே யூகித்தான். அவன் கூறியது போலவே ஒருவன் நாகலிங்கத்தை கொலை செய்ய ஜெயிலுக்குள் முயற்சி செய்தது உண்மைதான், ஆனால் போலீசார் அவனை மடக்கி பிடித்து விட்டனர்.


    உண்மையான குற்றவாளி வெளியில் வரவேண்டும் என்றால்,  உண்மையை மறைத்து சில நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும் என்று விக்ரம் கூறியதை கமிஷனரும் ஒத்துக் கொண்டார். அதனால் அவர்கள் நாகலிங்கமும் அவனை கொள்ள வந்தவனும் இறந்து விட்டதாக பொய்யான செய்தியை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தினர்.


      அவர்கள் நினைத்தது போலவே சிவா தைரியமாக வெளியே வந்தான். அப்படி அவன் வெளிவந்து எம் ஆர் குரூப்பிற்கு தொலைபேசியில் அழைத்ததன் காரணமாகத்தான் இங்கு மாட்டிக் கொண்டான், அன்று விக்ரமும் ஜனாவும் சென்றிருந்த ஆராய்ச்சி கூடத்தில் இருந்து, இன்னொரு தனி வழி மெடிக்கல் ஷாப்பை நோக்கி சென்றது அதுவே அவர்களின் சந்தேகத்திற்கு வழி வகுத்தது. பிறகு நாகலிங்கத்திற்கு போலீசார் கொடுத்த டிரீட்மென்டின் காரணமாக, அவன் மற்ற உண்மைகளையும் மடமடவென்று கொட்டி விட்டான்.


  சித்ராவின் டைரியில் கிடைத்த இமெயில் மூலம், விக்ரம்  அவளது இமெயிலுக்கு சென்று பார்த்தபோது, அவளுக்கு யாரும் இமெயில் செய்தது போலவும் தெரியவில்லை, அவளது இமெயிலுக்கு எந்த ஒரு புதிய செய்தி வந்ததாகவும் தெரியவில்லை. அதனால் அதை விக்ரம் சாதாரணமாக விட்டு விட்டான். 


  ஆனால் நாகலிங்கத்திடம் இருந்து கிடைத்த செய்திக்கு பிறகு, அவன் மறுபடியும் அந்த இமெயில்களை ஓபன் செய்து, அதில் வேறு ஏதாவது இருக்கின்றதா என்று தேட, அங்கு டிராப்டில் சேமிக்கப்பட்டிருந்த கோப்புகளை கண்டான். உடனே அதனை திறந்து பார்த்தபோது அதில் ஆராய்ச்சி செய்யப்படும் மருந்துகளின் விபரங்களும், அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களும் அதில் இருந்தது. அதன் மூலம் இதற்குக் காரணமான முக்கிய குற்றவாளியையும் கண்டுபிடித்து விட்டான். 


    அந்த இமெயிலில் இருந்த அட்ரஸின் மூலம் மும்பையில் இருக்கும் எம் ஆர் குரூப் பற்றிய விபரங்களையும் சேகரித்து, போலீசாருக்கு அளித்து விட்டான். அதை ஆதாரமாகக் கொண்டு, அவர்களை கைது செய்ய ஒரு தனிப்படை மும்பையை நோக்கி விரைந்தது.


  ஆனால் அவர்கள் அங்கு சென்று சேர்வதற்கு முன்பே, அந்த கம்பெனியில் ஏற்பட்ட மின்கசிவால், அந்த கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. அதன் உள்ளே இருந்த அத்தனை பேரும் எரிந்து சாம்பல் ஆயினர்.


  போலீஸ் தரப்பில் இருந்து சித்ராவின் இமெயிலில் இருந்து எடுக்கப்பட்ட அத்தனை டேட்டாக்களும், மற்றும் மார்ச்சுவரியில் கிடைத்த ஹார்ட்டிஸ்கில் இருந்து, கிடைத்த அத்தனை டேட்டாக்களும் ஆதாரங்களாக நீதிபதியிடம் கோட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.


  அவற்றை சரி பார்த்த நீதிபதி, தமது தீர்ப்பினை கூறத் தொடங்கினார். நாகலிங்கத்துக்கு ஆயுள் தண்டனையையும், அவனை கொல்ல வந்த சுதாகர் என்ற சிவாவின் கையாளுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையையும், சிவாவிற்கு தேச துரோக குற்றத்திற்காக  இரட்டை ஆயுள் தண்டனையையும் தீர்ப்பளித்தார். 


    இந்த கேசில் சாட்சிகளையும் ஆதாரங்களையும் சேகரிக்க உறுதுணையாக இருந்த டிடெக்டிவ் விக்ரமுக்கு தமது பாராட்டை தெரிவித்துக் கொள்வதாக நீதிபதி கூறினார்.   


  மும்பையில் இருந்த எம் ஆர் குரூப்ஸ் எரிந்து நாசமானதால் இந்த ஆய்வுகளைப் பற்றிய விரிவான விவரம் எதுவும் தெரியவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகள், பிற மாநிலங்களிலும் பரவி இருக்க வாய்ப்புள்ளது, அதனால் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு பரிந்துரைத்தார். அத்தோடு பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சையை ஆரம்பிக்குமாறும் உத்தரவிட்டார்.


  தமிழ்நாட்டில் சித்ராவின் வழக்கு தான் பிரேக்கிங் நியூஸாக அனைத்து செய்தித்தாள்களிலும், டிவி சேனல்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.


    விக்ரமும் ஜனாவும் தமது உடைமைகளை ஊருக்கு செல்வதற்காக எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சித்ராவின் குடும்பத்தார் கண்ணீர் மல்க அவருக்கு நன்றிகள் பல கூறினர். சித்ராவின் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி விக்ரமை கட்டிக் கொண்டு நன்றி கூறினார்.


  "இதெல்லாம் எங்களோட கடமை தானே சார், சொல்லப் போனா நாங்க தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்,  நீங்க மட்டும் உங்க தங்கையோட கேஸை மறுபடியும் ஓபன் செய்யணும்னு சொல்லாம இருந்திருந்தா, இவ்வளவு பெரிய தேச துரோகத்தை எங்களால் கண்டுபிடித்து இருக்கவே முடியாது. அத்தனை பேரோட உயிரை காப்பாற்றிய பெருமை உங்களுக்கு தான் சேரும்  சார்."


    அப்போது மெய்காரன் பட்டியை சேர்ந்த ஊர் பொதுமக்களும் ஊர் தலைவரோடு சேர்ந்து அவர்களுக்கு நன்றியுரைக்க, அவர்கள் வீடு தேடி வந்திருந்தனர்.


    "அதெல்லாம் எதுவும் வேண்டாம் சார் இங்க இருக்கிற மக்களோட ஒத்துழைப்பு இல்லைன்னா எங்களால கண்டிப்பா இதையெல்லாம் கண்டுபிடித்திருக்க முடியாது. உங்க உதவிக்கு நாங்க தான் ரொம்ப நன்றி சொல்லணும்.


    ஊர் தலைவரே  புதுசா இந்த ஊருக்கு வந்த எங்களுக்கு, இருக்க இடமும் கொடுத்து, சாப்பாடு செஞ்சு போட ஒரு துணையையும் அனுப்பி வைச்சீங்க, அதனால தான் எங்களால எங்க வேலையே தெளிவா செய்ய முடிஞ்சுது இல்லாட்டி நாங்களும் தவிச்சு தான் போயிருப்போம்."


    "என்ன சொல்றீங்க தம்பி? நான் யாரையும் அப்படி அனுப்பி வைக்கலையே?  ஊர் திருவிழா பிசில நீங்க வந்த விஷயத்தை நான் மறந்தே போயிட்டேன். ஆமா யார் உங்க வீட்ல வந்து வேலை செஞ்சது?"


    அப்போது ஜனா அன்றைய செய்தித்தாளை தூக்கிக் கொண்டு, அவசரமாக விக்ரமை நோக்கி ஓடி வந்தான், ஓடிவந்த வேகத்தில் கையில் உள்ள பேப்பர் தவறி கீழே விழுக, அதை எடுத்த சித்ராவின் அண்ணன் விக்ரமை நோக்கி பேசத் தொடங்கினார்.


      "பாருங்க சார் இந்த அப்பாவி முகத்தை கொல்ல அவனுக்கு எப்படி தான் மனசு வந்தது.  அந்த படுபாவியால என் தங்கச்சி எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாளோ, தன் கருவை சுமந்து நிக்கறவன்னு கூட நினைக்காம, கழுத்தை நெரிச்சு கொன்னுட்டானே அந்த  பாவி, என் தேவிம்மா அப்ப என்னவெல்லாம்  கஷ்டப்பட்டாளோ, எப்படி எல்லாம் வலியால துடிச்சாளோ?"


செய்தித்தாளில் இருந்த போட்டோவை பார்த்து விட்டு அதிர்ந்து போய் நின்ற விக்ரம்,


  " சார் தேவி??... உங்க தங்கச்சி பேரு சித்ரா தானே?"


    "அவ பேரு சித்ராதேவி, எங்க குடும்பத்துக்கே அவதான் சார் குலசாமி மாதிரி, ஏன்னா எங்க வம்சத்துல பிறந்த முதல் பெண் குழந்தை அவதான். அதனால வீட்ல எல்லாருமே அவள தேவிம்மான்னு தான் கூப்பிடுவோம்."


அந்த போட்டோவில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் விக்ரமுக்கும் ஜனாவிற்கும் தேவி என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட சித்ராதேவி.


ஆறு மாதங்களுக்குப் பிறகு


  விக்ரமை தேடி ஏதோ கேஸ் விஷயமாக வந்திருந்தார் மெய்க்காரன்பட்டியை சேர்ந்த இன்ஸ்பெக்டர்.


    அவருடைய கேசை பற்றி விரிவாக கூறிவிட்டு கிளம்ப எத்தனிக்கும் போது, விக்ரம் அவரிடம் நாகலிங்கத்தை பற்றியும் சிவாவை பற்றியும் கேட்டான்.


    "சார் உங்களுக்கு விஷயமே தெரியாதா??.. அவங்க ஜெயிலுக்கு போன  ஒரு மாசத்திலேயே, அந்த நாகலிங்கம் பைத்தியம் புடிச்சவன்  மாதிரி, தன்னைத்தானே துன்புறுத்திக்க ஆரம்பிச்சான். எப்ப பார்த்தாலும் செவுத்துல இருக்க ஒரு இடத்தை பார்த்து கத்திக்கிட்டே இருப்பான், இதுவே  தொடர்ந்து நடந்திக்கிட்டு இருந்ததால, அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டோம். 


     ஆனா அங்க போன ஒரு வாரத்திலேயே அவன் தூக்குல தொங்கிட்டான் சார்."


  "அப்போ சிவா?"


    "அவனுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல சார். எப்ப பாரு, மேல பாத்து பயந்துகிட்டே உட்கார்ந்து இருப்பான், சாப்பிடுன்னு சொன்னாலும் சாப்பிட மாட்டான், ரெண்டு மூணு தடவை தற்கொலை பண்ணிக்க கூட முயற்சி பண்ணி இருக்கான்.


     ஆனா அதிர்ஷ்டவசமா ஒவ்வொரு தடவையும் தப்பிச்சுக்கிட்டே இருக்கான். ஒரு பொட்டு கூட தூங்குறது இல்லை, மயக்க ஊசியை கூட செலுத்தி பார்த்துட்டோம், அப்படியும் அவனையும் மீறி எந்திரிச்ச அலறிகிட்டே ஓடறானே ஒழிய, அவன் நிம்மதியா தூங்கி நாங்க பார்த்ததே இல்லை. இப்ப அவனையும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில தான் சேர்த்திருக்கோம். 


     டிரீட்மென்ட் போயிட்டு இருக்கு, பார்ப்போம் அவன் வாயில இருந்து ஏதாவது உண்மைய சொன்னா தான், இந்த ஆராய்ச்சி செய்தவர்களை பத்தியும் எந்த நாட்டுக்காரங்க இதை செஞ்சிட்டு இருக்காங்கன்ற உண்மையும் வெளியே வரும்."


  கோர்ட் இந்த கேசை சிபிஐக்கு மாத்தி  விட்ட காரணத்தால், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று விக்ரம் மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டான். இப்போது இன்ஸ்பெக்டர் கூறிய செய்தியை கேட்டு, அடுத்த நொடியே ஜனாவை அழைத்து இந்த ஆராய்ச்சியை பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று கூறினான்.


  இவர்கள் அந்த ஆராய்ச்சியை பற்றிய உண்மைகளை கண்டுபிடிப்பார்களா? எந்த நாட்டில் இருந்து மருந்துகள் அனுப்பப்படுகின்றது என்பதையும், இந்த ஆராய்ச்சிகளை செய்பவனை பற்றிய உண்மைகளையும் கண்டுபிடிப்பார்களா? பார்க்கலாம் முடிந்தால் அடுத்த பாகத்தில் ....


                        என்றும் அன்புடன்,


                    சரண்யா சதீஷ்குமார்.



No comments:

Post a Comment