Search This Blog

Followers

Powered By Blogger

Tuesday, October 14, 2025

பிம்பம் 15


 

அத்தியாயம் 15


இன்று


  விக்ரம் ஜனாவை ட்ராக் செய்து, அந்த வழியாக தனது வண்டியில் வந்து கொண்டிருந்தான்.


ஜனாவை தூக்கிச் சென்றவர்கள் அந்த காட்டின் உள்ளே சென்று கொண்டே இருந்தனர், அப்போது அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்தது,


  "அண்ணா அந்த வார்டுபாய் குமாரு தான்  கூப்பிடறான்."


  " சரி ஸ்பீக்கர்ல போடு"


    "யோவ் எங்கய்யா போனீங்க? உங்களுக்காக எவ்வளவு நேரமா அந்த பொணத்தை வெளிய வச்சுட்டு நிக்கிறது?"


  " எது பொணத்தை  வச்சுக்கிட்டு நிக்கிறையா?  மார்ச்சுவரிக்குள்ள இருந்த பொணத்தை தான் நாங்க தூக்கிகிட்டு வந்துட்டோமே?'


    "என்னய்யா சொல்றீங்க? நீங்க கொண்டு போக வேண்டிய டெட் பாடியை மார்ச்சுவரிக்கு வெளியே தார்ப்பாய் போட்டு, யாருக்கும் தெரியாமல் மூடி வச்சிருக்கேன். டீ குடிக்க போயிட்டு வரதுக்குள்ள, வந்து வேற ஒரு பொணத்தை தூக்கிட்டு போய்ட்டீங்களா?"


அதைக் கேட்டதும் சட்டென்று வண்டி நின்றுவிட்டது.


   "என்னடா இவன் இப்படி சொல்றான்?"

   

"சரி வை நான் இப்ப திரும்ப கூப்பிடுறேன், டேய் அவனுங்க வேற எந்த பொணத்தடா கொடுத்து விட்டானுங்க? முதல்ல அவனுங்களுக்கு போன் போடு, எப்படியும் நம்ம பின்னாடி தானே வந்துட்டு இருப்பானுங்க? வண்டியில் இருந்து இறங்கு, பேசிட்டு அப்புறமா வண்டியை நம்ம இடத்துக்கு விடுவோம்."


மார்ச்சுவரியில் இருந்து ஜனாவின் உடலை வெளியே தூக்கி போட்ட இருவரில் ஒருவனுக்கு போனில் அழைத்தார்கள். அவர்களிடம் இந்த பிணம் மாறிய செய்தியை கூற, அவர்கள் அந்த பிணத்தை திரும்பக் ஊருக்குள் கொண்டு  செல்லும்போது யாராவது பார்த்தால் பிரச்சனையாகிவிடும், அதோடு அந்த பிணத்தை ஹாஸ்பிடலின் உள்ளே எடுத்துச் செல்வது சிரமம். அதனால் அந்த பிணத்தை அங்கேயே வைத்துவிட்டு  திரும்ப வருமாறு கூறினர். இந்த முறை சரியாக அனுப்பி வைப்பதாக கூறி போனை வைத்து விட்டனர்.


  இவர்கள் கீழே இறங்கி போனில் பேசி முடிப்பதற்குள் ஜனா தனது ஃபோனில் இருந்து விக்ரமுக்கு அழைப்பு விடுத்து விட்டான்.


  "பாஸ் எங்க பாஸ் இருக்கீங்க? என்னைய உசுரோட வச்சு எரிச்சிடுவானுங்க போல இருக்கு."


  "வந்துட்டு தான்டா இருக்கேன் வெயிட் பண்ணு. கூடிய சீக்கிரம் பக்கத்துல வந்துருவேன்."


  "பாஸ் அவனுங்க தேடி வந்த டெட்பாடி நான் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு, என்னை இங்கேயே காட்டுல ஓரமா போட்டுட்டு போய்,  திரும்ப அந்த டெட் பாடியை எடுக்க போறாதா பேசிக்கிறானுங்க. காடு வேற நல்லா இருட்டா கரு கும்முன்னு இருக்கு, ஏதாவது புலி சிங்கம் வந்து என்னை அடிச்சு சாப்பிட்டுட்டு போயிட போகுது சீக்கிரம் வாங்க பாஸ்."


  "ச்சே ச்சே அதுங்களுக்கு எல்லாம் டேஸ்ட் இல்லையா என்ன? உன்ன போய் சாப்பிடறதுக்கு? நொய்யி நொய்யிங்கமா போனை வைடா அப்பதான் நான் வர முடியும்."


  "எதே?... பாஸ் பாஸ் பாஸ் பாஸ் பாஸ் அடப்பாவி வச்சுட்டானே."


    அவர்கள் ஜனாவின் உடலை கீழே இறக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு, வண்டியை திருப்பிக் கொண்டு கவர்மெண்ட் ஹாஸ்பிடல் நோக்கிச் சென்றனர்.


    வண்டி தன்னை விட்டு அதிக தூரம் தள்ளி சென்றதை உணர்ந்த பிறகு தான், ஜனா அந்த போர்வைக்குள் இருந்து வெளியில் வந்தான்.  ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவன், தன்னைச் சுற்றி இருள் மட்டுமே சூழ்ந்து இருப்பதைக் கண்டான். போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்தால் அதன் மூலம் ஈர்க்கப்பட்டு, ஏதாவது உயிரினம் தம்மை நோக்கி வரும் ஆபத்து இருப்பதால், அந்த யோசனையை கைவிட்டான். ஒரு மரத்துக்கு பின்னே நின்று கொண்டு இருட்டுக்கு தன் கண்களை பழக்கத் தொடங்கினான்.


  ஏதோ வித்தியாசமான சத்தங்கள் காட்டின் உள்ளே இருந்து வருவதை உணர்ந்து காதை கூர் தீட்டி, அதை உன்னிப்பாக கேட்கத் தொடங்கினான்.


  அந்த சத்தமானது தனக்கு சற்று தள்ளி உள்ள இடத்தில் இருந்து கேட்பது போல் தோன்ற, அதை நோக்கி செல்ல காலை எடுத்து வைத்த போது, அவன் முதுகில் ஒரு கரம் பதிந்தது.


    அதிர்ந்து அவன் திரும்பிப் பார்த்தபோது அங்கே விக்ரம் நின்று கொண்டு, தனது விரலை வாய் மீது வைத்து பேசாதே என்று கூறி, அவனை இழுத்துக்கொண்டு ஒரு மரத்துக்கு பின்பு சென்று மறைந்து கொண்டான். 


விக்ரம் ட்ராக்கரின் உதவியுடன் ஜனாவை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். அவர்கள் சென்ற பாதையானது காட்டினை காட்ட, இனி நடந்து சென்று தேடுவது தான் நல்லது என்று நினைத்து, காட்டிற்கு வெளியே வண்டியை மறைவாக நிறுத்திவிட்டு, காட்டினுள் நுழைந்தான். சிறிது தூரம் மொபைல் வெளிச்சத்தின் உதவியுடன் மெல்ல அவன் பாதையில் நடந்து கொண்டிருக்கும்போது அந்தப் பாதை இரண்டாகப் பிரிந்தது.


  எந்த திசையில் செல்வது என்று குழப்பத்தோடு நின்று கொண்டிருக்கும் போது தான் ஜனாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தூரத்தில் ஒரு வெளிச்ச புள்ளி தெரிய ஜனாவை தூக்கிச் சென்று ஜீப் தான் திரும்பி வருகின்றது என்பதை புரிந்து கொண்டு, போனை அணைத்துவிட்டு மரத்திற்கு பின்னே ஒளிந்து கொண்டான். அந்த ஜீப் காட்டினை விட்டு வெளியேறியதும் ஜனா இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.


  அவர்கள் மறைந்து கொண்ட அடுத்து இரண்டு நிமிடங்களில், ஒரு பைக்கும் காரும் அவர்கள் இருந்த இடத்தை தாண்டி கொண்டு காட்டினுள் சென்றது.


  அது சென்ற திசையை நோக்கி இவர்களும் மெல்ல பயணிக்க தொடங்கினர். சற்று தூரத்திலேயே அந்த அடர்ந்த காட்டுக்கு நடுவே, சமதளமான நிலப்பரப்பை கண்டனர். அது காடுகளை அழித்து மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று தெளிவாகத் தெரிந்தது. அதன் நடுவில் இருக்கும் கட்டிடத்தை சுற்றிலும் ஆட்கள் பாதுகாப்பில் இருப்பதை உணர்ந்து, மெதுவாக மரங்களின் வழியே மறைந்து மறைந்து அதன் பின்பக்கத்தை சென்று அடைந்தனர். 


  அங்கிருந்த ஜன்னலின் வழியே அவர்கள் எட்டிப் பார்த்தபோது, வெள்ளை கோட் மாட்டிய பலர் நவீன மருத்துவ உபகரணங்களுடன், அவர்களுக்கு அருகே படுத்திருந்த மனிதர்களுக்கு ஏதேதோ இன்ஜெக்ஷனை செலுத்தியும், அவர்களது நிலைமையினை மானிட்டரில் கண்காணித்துக் கொண்டு குறிப்பு எழுதிக் கொண்டிருந்தனர். 


  படுத்திருந்த மனிதர்களை பார்க்கும்போது அவர்கள் உள்ளூர்வாசிகள் போலத்தான் தெரிந்தனர். ஆனால் அவர்கள் சுயநினைவு இல்லாத நிலையில் வெகு நாட்களாக படுத்திருப்பது போல தெரிந்தது.


  ஜனா ஜீப்பில்  தன்னை தூக்கி வந்தவர்கள் பேசிக்கொண்டதைப் பற்றியும், தனது யூகத்தைப் பற்றியும் விக்ரமிடம் விரிவாக எடுத்துரைத்தான்.  விக்ரம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.


    "என்ன பாஸ் இந்த கேஸ் இருக்க இருக்க வேற வேற ரூட்ல போகுது?... ஆல்ரெடி எதுக்காக வந்தோமோ அதையே கண்டுபிடிக்கல?... அதுக்கு அப்புறம் தொடர்ந்து ரெண்டு கொலை வேற நடந்திருக்கு, அதை பற்றியும் இன்னும் எந்த க்ளூவும் கிடைக்கல, இப்போ இந்த ஆராய்ச்சி கூடம்.... எப்ப தான் பாஸ் இந்த கேஸ் முடியும்????"


  "இல்ல ஜனா இந்த கேஸ் முடிவுக்கு வந்துடுச்சு.  நாம குற்றவாளியை நெருங்கிட்டோம்."


அன்று


  சித்ராவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ரேகாவே, கடை கணக்கு வழக்குகளை பார்க்க ஆரம்பித்தால். சித்ரா தானே பார்ப்பதாக கூறினாலும், சிவா அவளை இப்போதைக்கு ஓய்வெடுப்பது தான் உன்னுடைய வேலை என்று கூறிவிட்டான், அதனால் ரேகா அடிக்கடி சித்ராவின் வீட்டிற்கு வர தொடங்கினாள்.


  சித்ராவின் ஒதுக்கம் ரேகாவிற்கு சந்தேகத்தை கிளப்பியது. ரேகா உடன் இருக்கும்போது அவள் தண்ணீர் அருந்துவதை கூட தவிர்த்தால்.


தனது கணவரிடம் இவர்களைப் பற்றிய உண்மைகளை கூறி விடலாம் என்று நினைத்தாலும், தனது மாமியார்  இதனைக் அறிந்து, தன்னிடம் ஏதாவது பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்று பொறுமை காத்தாள். இப்போதுதான் அவர் நல்ல முறையில் நடந்து கொள்ள தொடங்கியிருக்கிறார், அதை கெடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை.


  இந்நிலையில் மெய்க்காரன்பட்டியில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்காக, கம்பம் நடப்பட்டது. ரேகா சித்ராவை கோவிலுக்கு சென்று வரலாம் என்று அழைக்க, சித்ரா தனக்கு சோர்வாக இருப்பதாகவும் சற்று நேரம் கழித்து அவருடன் தான் சென்று வருவதாகவும் கூறி மறுத்துவிட்டாள்.


    ரேகா அதற்குமேல் அவளை வற்புறுத்தாமல், தான் சென்று வருவதாக கூறி கோவிலுக்கு கிளம்பி விட்டால். மதியம் வீட்டுக்கு வந்த சிவாவிடம் கோயிலுக்கு சென்று வரலாம் என்று அவள் கூற, அவனும் அவளை கோயிலில் இறக்கி விட்டு விட்டு சிறு வேலை இருப்பதால் அதை முடித்து விட்டு வந்து, திரும்ப  அவளை கோவிலில் இருந்து கூட்டிக் கொண்டு செல்வதாக கூறினான்.


  சிவா அவளை கோவில் வாசலில் இறக்கிவிட்டு செல்ல, அவள் நடந்து மெதுவாக கோவிலினுள் சென்றாள். சாமி தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தில் அவள் உட்கார்ந்து இருக்க, அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் சுவாமி பிரசாதம் என்று கூறி சர்க்கரை பொங்கலை அவளுக்கு கொடுத்தார். அவளும் அதை பக்தியுடன் கண்ணில் ஒற்றிக் கொண்டு, சாப்பிட்டு முடித்தாள்.


    பிரசாதம் கொடுத்தவள் அடுத்து நேராக ரேகாவிடம் தான் சென்று நின்றாள். அவள் கொடுத்த ஐநூறு ரூபாயை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்று விட்டால்.ஆம் அவள் கொடுத்த பிரசாதத்தில் மருந்தை கலந்திருந்தால் ரேகா.


  சித்ரா தன் சுயநினைவை இழக்கும் வரை காத்திருந்தவள், அவள் கண்கள் நிலை குத்தி நின்ற பிறகு, அவள் அருகினில் வந்து தமது கட்டளைகளை சொல்லிவிட்டு, யாரும் பார்க்கும் முன்பே அருகில் எரிந்து கொண்டிருந்த தீபத்தின் அருகில், சித்ராவின் சேலை முந்தானையை நகர்த்தி வைத்து விட்டு, அங்கிருந்து சென்று ஓர் இடத்தில் மறைவாக நின்று கொண்டால்.


    தீபத்தில் அவளது முந்தானை பட்டு பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது. சுய நினைவை இழந்திருந்த சித்ரா முந்தானியில் தீ பற்றி எறிய அப்படியே எழுந்து நடக்கத் தொடங்கினாள்.


  அங்கு சுற்றி இருந்தவர்கள் தான் இவளது முந்தானையில் தீ பற்றி கொண்டதை பார்த்து அவசரமாக வந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் அது கூட நினைவில்லாது, அவள் பாட்டிற்கு  நடக்க ஆரம்பித்தாள்.


ஏற்கனவே ஊருக்குள் இவளை பற்றி ஒரு மாதிரி பேச்சு இருந்தது. இப்போது ஊரார் முன்பு இவள் இப்படி நடந்து கொண்டதை பார்த்து, அனைவரும் அதை உண்மைதான் என்று சொல்ல தொடங்கி விட்டனர்.


அப்படியே தன் போக்கில் நடந்து கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில் மயங்கி வீதியில் சரிந்தால். அக்கம் பக்கம் இருந்தவர்கள் தான், அவளது கணவருக்கு போன் அடித்து வரவழைத்தனர்.


    சரியாக அவனும் அந்நேரம் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்தான், இவ்வாறு செய்தி கேள்விப்பட்டதும் அவசரமாக வண்டியில் வந்து இறங்கினான். 


  வண்டியை பக்கத்தில் இருந்தவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, ஒரு ஆட்டோவை பிடித்து அவளை தூக்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றான்.


    இப்போது சிவாவிற்குமே சந்தேகம் ஏற்பட்டது, இவளுக்கு ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதோ என்று, அதை வெளிப்படையாகவே ஊராரின் முன்பு புலம்பவும் செய்தான்.


  சிறிது நேரம் கழித்து சித்ராவிற்கு சுயநினைவு வந்த பிறகு அவளிடம் இதை பற்றி கேட்க, அவளுக்கு நடந்தது எதுவுமே ஞாபகம் இல்லை. கடைசியாக அந்த பிரசாதம் சாப்பிட்டது வரைதான் அவளது ஞாபகத்தில் இருந்தது. ஏன் இவ்வாறு தன்னை சுற்றி நடக்கின்றது என்று அவளுக்குமே புரியவில்லை. சிவா தான் அவளை ஆறுதல் படுத்தி சிறிது நேரம் ஓய்வு எடுக்குமாறு கூறிவிட்டு வேலை இருப்பதாக கூறி வெளியே சென்று விட்டான்.


  சாந்தி, இந்த பைத்தியக்காரியிடம் இருந்து தமது குலவாரிசை காப்பாற்றுமாறு வெளிப்படையாகவே புலம்ப தொடங்கிவிட்டார்.


  சித்ராவிற்கு தன்னைச் சுற்றி ஏதோ மாயவலை பின்னப்பட்டது போலவே தோன்றியது. இன்று நடந்த நிகழ்வுக்காக ரேகாவை சந்தேகப்படவும் அவளால் முடியவில்லை. ஆனால் ஒரு முடிவோடு தனது டைரியை எடுத்தவள் இதுவரை நடந்தவைகள் அனைத்தையும் அதில் எழுதி முடித்தால். தனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றுமாறு அதில் எழுதினால். எதற்கும் இருக்கட்டும் என்று டைரியின் பின் பக்கம் தனது இமெயில் அட்ரஸையும் பாஸ்வேர்டையும் சேர்த்து எழுதி தனது அண்ணனுக்கு கொரியர் செய்து வைத்தாள்.


No comments:

Post a Comment