அத்தியாயம் 48
"ராஜகுரு விஷயம் கேள்விப்பட்டீர்களா, என்ன தைரியம் இருந்தால் அந்த பார்த்திபன், நமது நாட்டை சிறை பிடிக்கப் போவதாக மடல் அனுப்பி இருப்பான். என் தந்தையும் வெட்கமின்றி அவன் கால்களில் போய் விழுந்து கிடக்கிறார்."
"நானும் கேள்விப்பட்டேன் ரங்கா, அவனுக்கு தலைக்கனம் கூடிவிட்டது. ஒரே அடியாக அவன் தலையை கொய்து, நமது தெய்வம் காலக்கோடனுக்கு காணிக்கையாக்கி விடுவோம்."
"விஜயன் சற்று பொறுமை காத்திருக்கலாம் என்று தோன்றுகிறது ரங்கா. அந்த இரண்டு காட்டுவாசிகளையும் துன்புறுத்தி, கொற்றவையின் இருப்பிடத்தை அறிந்திருந்தால், அவளது சிலைக்கு கீழ் உள்ள மந்திர தகடுகளை எடுத்து, நம் தெய்வத்திற்கு காணிக்கையாக்கி இருக்கலாம். அத்தோடு அந்த மகிழபுரி சாம்ராஜ்யமும் நமது கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கும். நிலைமை கைமீறி போய்விட்டது. இனி அந்த காட்டினுள் நுழைவது முடியாத காரியம். நாம் சற்று காலம் பொறுத்து தான் போக வேண்டும்."
"விஜயனுக்கு தற்போது எப்படி உள்ளது ராஜகுரு? தன் தங்கையின் கணவன் என்று கூட பாராமல், நடுவீதியில் நிறுத்தி, இப்படி உயிர் போகும் அளவுக்கு சித்திரவதை செய்ய சொன்ன, அந்த பார்த்திபனை பற்றி நினைக்கும் போது என் உள்ளம் கொதிக்கின்றது."
"எப்படியும் விஜயனின் உடல் தேறுவதற்கு சில மாதங்களாவது ஆகும். நீ உன் தந்தையிடம் இது பற்றி எதுவும் கூறி விடாதே, அந்த பார்த்திபனுக்கு பயந்து விஜயனை காட்டிக் கொடுக்கவும் அவர் தயங்க மாட்டார்."
மேனகா தேவி தன் குழந்தைகளுடன் புகுந்த வீடு போகாமல் பிறந்தகத்திலேயே தங்கி விட்டார்.
பிரதீபன் தன் தாயினைப் போன்று அமைதியான குணம் படைத்தவன். ஆனால் மோகனாவோ தன் தந்தையை ஒத்து வளர்ந்து வந்தாள்.
தனது கீழ் வேலை செய்யும் வேலைக்காரர்களை, அவள் ஒருபோதும் மதித்ததே இல்லை. ரஞ்சனியே அவளின் உற்ற தோழியானாள்.
அவளுக்கு பிடித்தது இரண்டு விஷயங்கள் தான், ஒன்று புத்தாடைகளும் ஆபரணங்களும் அணிந்து கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்வது. இன்னொன்று மித்ர தேவேந்திரன்.
மித்ரன் அரண்மனையில் எங்கிருக்கிறான் என்று தெரிய வேண்டும் என்றால் மோகனாவை கேட்டால் போதும், ஏனெனில் அவனின் பின்னே அவள் தான் வால் போன்று, எப்போதும் தொடர்ந்து கொண்டே இருப்பவள்.
மித்ரன் தனது நண்பர்கள் பிரதீபன் மற்றும் ரகுநந்தனுடன், கொற்றவை தேவி திருவிழாவை காண சென்று கொண்டிருந்தான். ரகுநந்தன் ரஞ்சனியின் அத்தை மகன்.
மித்ரன் கொற்றவை தேவி திருவிழாவிற்கு செல்வது, அந்த நீலவிழிப் பெண் குழந்தையை காண்பதற்காக தான். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக சென்று தேடியும் கூட, அவளை காண முடியவில்லை.
ஏந்திழை அம்மையார் தாய் தந்தை இல்லாத அந்த பிஞ்சு குழந்தைக்கு தானே கன்னி தாயாக மாறினார். அவளுக்கு மதுரவாணி என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்.
அரசு குடும்பத்தை சேர்ந்தவர்களின் கண்கள் அவள் மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காக, விழா நடைபெறும் போது எல்லாம் அவளை குகை கோயிலில் சென்று விட்டு விடுவார்.
நண்பர்கள் மூவரும் தமது குதிரைகளில் பேசிக்கொண்டே போய்க்கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு பின்னால் பல்லுக்கு வரும் சத்தம் கேட்டது.
நண்பர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மித்ரன் வெளிப்படையாகவே தலையினில் அடித்துக் கொண்டான்.
"அடே பிரதீபா, உன் தங்கைக்கு மித்ரனை பின் தொடர்வதை தவிர, வேறு வேலையே இல்லையா என்ன? அவன் எங்கு சென்றாலும் எப்படி தான் கண்டுபிடிக்கின்றாளோ தெரியவில்லை. இவளுக்குத் தெரிய கூடாது என்று தான், அரண்மனையை சுற்றிக்கொண்டு பின் வாசல் வழியே திருவிழாவுக்கு புறப்பட்டோம், அப்படியும் கண்டுபிடித்து துரத்தி வந்து விட்டாளே."
"என் தங்கை மித்ரனை எந்நேரமும் பின்தொடர்கிறாள் என்று உனக்கு எப்படி தெரியும்?"
"அதுதானே, நந்தா அவள் என்னை பின்தொடர்வது அரண்மனைக்குள் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். வெளியிடங்களில் அவ்வளவாக என்னை பின்தொடர மாட்டாளே? நீயோ ஓரிரு முறை தான் அரண்மனைக்குள் வந்து சென்றுள்ளாய், அது உனக்கு எப்படி தெரியும்?"
"அதை நான் கூறுகிறேன் மித்ரா, என் தங்கையின் தோழியை எந்நேரமும் ரகுநந்தர் பின் தொடர்வதால், அவருக்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது என்று நினைக்கிறேன்."
"என்ன? அப்படியா நந்தா?"
"அட நீங்கள் வேறு ஏனடா? கேலி செய்து கொண்டிருக்கிறீர்கள். என் மாமன் மகள் ஆறு வயது வரை, அத்தான் அத்தான் என்று என் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள். என்று உன் தங்கை அவளின் தோழியானாளோ, அன்றிலிருந்து என்னை பார்த்தால், முகத்தை திருப்பிக் கொண்டு செல்கின்றாள். அழகிய ஆடைகள் ஆபரணங்கள் கூட வாங்கி, என் அத்தையின் மூலம் அவளுக்கு கொடுத்து பார்த்தேன் பிரயோஜனமே இல்லை."
"மானங்கெட்டவன், மாமன் பெண்ணை வசீகரிக்க, ஆடை ஆபரணங்களை லஞ்சமாகக் கொடுக்கின்றான் பார்."
"உனக்கு என்னடா பிரதீபா? உன் மாமன் மகளை வசீகரிக்க, சங்கினில் சிறிது பாலை ஊற்றி புகட்டினால் போதும். எனக்கு அப்படியா?"
"எது? அடேய், கவிதாயினி இரண்டரை வயது குழந்தையடா. அவளைப் போய் என்னுடன் சேர்த்து வைத்து பேசுகிறாயே மடையா."
"முதலில் இருவரும் உங்களது சண்டையை நிறுத்துகிறீர்களா? பிரதீபா உன் தங்கை இன்று என்னை பின்தொடரக்கூடாது அது உன் பொறுப்பு. நந்தா, நான் இப்படியே குறுக்கு பாதை வழியாக கொற்றவை தேவி கோயிலை நோக்கி செல்கிறேன். அவர்களை எப்படியாவது திசைத்திருப்பு."
மித்ரன் குதிரையை தட்டி பாதையில் இருந்து விலகி காட்டினுள் நுழைந்தான்.
பாதையை விட்டு விலகி வந்ததால் கரடு முரடான மேடு பள்ளங்களில் புகுந்து தான், செல்ல வேண்டி இருந்தது.
அவன் சென்ற பாதை, கொற்றவை தேவி கோயிலின் பின்புறத்தை சென்று அடைந்தது. அங்கு கோயிலின் குளம் இருந்ததால், அதற்கு சற்று தள்ளியே குதிரையை கட்டிவிட்டு மித்ரன் இறங்கி நடக்கத் தொடங்கினான்.
தீர்த்த குளம் முழுவதும் அல்லி மலர்களால் சூழ்ந்திருந்தது. அழகாக பூத்திருந்த பூக்களை கண்டதும் அதை பறிக்க அருகில் சென்ற மித்ரன், குளத்தின் கரையினில் செல்லும்போது கால் வழுக்கி அதன் உள்ளே விழுந்தான்.
குளத்தில் உள்ளிருந்து எழ நினைத்த மித்ரனால், எழ முடியவில்லை. அவன் கால்களை அல்லி மலர் கொடிகள் நன்றாக சுற்றிக் கொண்டிருந்தது.
குளத்தினில் நன்றாக மூழ்கி அதை அகற்றிட நினைக்கும்போது, நீல விழிகள் கொண்ட குட்டிப் பெண் பூ ஒன்று, அவனை நோக்கி வந்தது. தன் பிஞ்சு கரங்களில் இருந்த கூர்மையான கல்லை கொண்டு, அவன் கால்களை சுற்றியுள்ள கொடிகளை அறுத்தெறிந்தது.