Search This Blog

Followers

Powered By Blogger

Sunday, June 22, 2025

மன்னவரே 42


 

            அத்தியாயம் 42


  மூர்த்தி ஐயா தீபனுடனும் தனது மூத்த மகனுடனும் வேலப்பன் ஐயாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.


  பூவுபாட்டி இவர் வருவதற்கு முன்பே, தனது கணவருக்கு போனில் அழைத்து பேசினார்.


  "நான் பூவாத்தா பேசுறேன்."


  பல வருடங்கள் கழித்து தன்னுடன் மனைவி பேசுவது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 

  "பூவு நல்லா இருக்கியாம்மா? உடம்புக்கு இப்ப பரவாயில்லையா? டாக்டர் ஏதாவது சொன்னாங்களா? இன்னைக்கே வந்து உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாமா?"

  "ஏன், நான் நிம்மதியா இருக்கறது உங்களுக்கு பொறுக்கலையா?"


    "என்னம்மா இப்படி சொல்லிட்ட, நம்ம வீட்டுக்கு தானே உன்னை கூப்பிட்டேன்."


  "என்னை சாவடிக்க துணிஞ்ச வீட்டுக்குன்னு சொல்லுங்க."


  "என்னம்மா சொல்ற?"


  பாட்டி  மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு வீட்டில் நடந்தவைகளை விவரிக்க,


  "இப்படியா பண்ணாங்க? சத்தியமா இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாதும்மா. வரட்டும், இருக்கு அவங்களுக்கு."


  "நீங்க என்கிட்ட நடந்துக்கிட்டதை பார்த்து வளர்ந்தவங்க தானே, வேற எப்படி நடந்துக்குவாங்க?"


"......"


    "ஒரு பொண்ணுக்கு புகுந்த வீட்டுல  கிடைக்கிற மரியாதை, அவ புருஷன் அவகிட்ட எப்படி நடந்துக்குறான்ங்கறதை பொறுத்து தான்.


  நீங்கதான் என்னை பொண்டாட்டியா என்ன, மனுஷியா கூட மதிச்சது இல்லையே.


    நானா உங்ககிட்ட கேட்டது ஒரே ஒரு விஷயம் தான், என் அண்ணனோட கடைசி ஆசையும் அதுதான். என்னை அதை நிறைவேத்த விட்டீங்களா? அப்போ இருந்த சூழ்நிலையில, குடும்பம் உறவுன்னு ஒரு கயிறு என்னை கட்டி வைச்சிருந்தது, ஆனால் இப்போ அது விட்டுப் போச்சு."


"பூவு ஏன் இப்படி எல்லாம் பேசுற?"


  "என் மனசுல இருக்க ஆதங்கத்தை இன்னைக்காவது வெளியே கொட்டுறேன் அவ்வளவுதான். அப்போ என்னால என் மருமகள் கூட உறுதுணையா நிக்க முடியல.


  எனக்காக என் பையன் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனா இப்போ எங்க அண்ணனுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்த ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அது என் பேத்தியை பார்த்துக்கிறது மூலமா நான் நிறைவேத்த போறேன்."


  "பேத்தியா? சிவ...சிவராமனை பார்த்தியா?"


  "அவனோட தான் இருக்கேன். லட்சுமிக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க.


  உங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாருங்க, உங்களுக்கு தான் அவங்க ஆகாதவங்களாச்சே.


இன்னும் கொஞ்ச நேரத்துல, மூர்த்தி அண்ணன் அங்க வருவாரு."


    "மூர்த்தியா? எதுக்காக?"


      "வேந்தன் தான் காதலிக்கிற பொண்ணை, யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனுக்கு கல்யாணமான விஷயம் தெரிஞ்சதும், இவங்க முறைப்படி  பொண்ணு மாப்பிள்ளைய அங்க ஊருக்கு கூட்டிட்டு வராங்க.


    நான் சொல்ல சொல்ல கேட்காம, உங்கள மதிச்சு, நடந்த விஷயத்தை சொல்ல அங்க வர்றாரு. வேந்தன் கல்யாணம் செஞ்சிருக்க பொண்ணு வேற யாரும் இல்ல சிவராமனோட பொண்ணு தான்.


    உங்களுக்கு புண்ணியமா போகும் எனக்காக இது ஒன்னு மட்டுமாவது செய்ங்க. அந்த நல்ல மனுசனோட மனசு நோகற படி எதையும் பேசிடாதீங்க


நாங்க இப்போ ஊருக்கு தான் பொண்ணு மாப்பிள்ளையோட வந்துகிட்டு இருக்கோம். உங்களால முடிஞ்சா என் கூட துணையாக நில்லுங்க, இல்லையா என்னை இப்படியே விட்டுடுங்க, என் பேத்தியை நான் பார்த்துக்கிறேன்."


பூவுப்பாட்டி படபடவென்று பேசிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.


    வேலப்பன் ஐயா மனபாரத்தோடு அப்படியே நாற்காலியில் அமர்ந்து விட்டார். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு முடிவோடு, வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்தவர் பூவுப்பாட்டி கூறிய அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.


  கேட்ட அனைவருக்கும் மனதில் வெவ்வேறு உணர்வுகள்.


சிவராமனும் அன்னலட்சுமியும் கிடைத்து விட்டார்கள் என்று மகிழ்வதா? இல்லை வேந்தனின் திருமணத்தைப் பற்றி அறிந்தால் நிரஞ்சனாவின் மனம் படும் பாட்டை பற்றி வருந்துவதா?


  மாறன் தான் இந்த செய்தியை கேட்டவுடன் குதிக்க ஆரம்பித்து விட்டான்.

  

  "என்னப்பா நெனச்சிட்டு இருக்காங்க அந்த வீட்டுல இருக்கிறவங்க. இவ்வளவு நாளா என் தங்கச்சிக்கு ஆசை காட்டிட்டு, இப்போ வேற ஒரு பொண்ணை மருமகளா கொண்டு வந்தா என்ன அர்த்தம்? இதுக்கு உங்க அம்மாவும் உடந்தையா?


  இவ்வளவு நாளா அவங்க கூட இருந்து, பார்த்து கிட்ட நம்மளை விட, ஓடிப்போன அந்த ஆளோட, மக தான் முக்கியமா போயிட்டாளா?"


    "மாறா இது என்ன பேச்சு? பெரியவங்க சின்னவங்கன்னு மரியாதை இல்லாம. அவர் உனக்கு சித்தப்பா, மரியாதையா பேசு."


  "என்னப்பா, திடீர்னு உடன் பிறந்தவர் மேல பாசம் பொத்துக்கிட்டு வருது. என் தங்கச்சியை இங்கே அழவெச்சுட்டு, அங்க உங்க தம்பி பொண்ணு நல்லா வாழ்ந்துடுவாளா? இல்லே நான் தான் அவளை நல்லா வாழ விட்டுடுவேனா? "


  பொறுமை இழந்த வேலப்பன் ஐயா கத்த தொடங்கி விட்டார்.


  "மாறா...என்ன பேச்சு பேசுற நீ...? புகுந்த வீட்டில புதுசா வாழ போற  பொண்ணை பார்த்து பேசுற பேச்சா இது? அவளும் உனக்கு தங்கச்சி மாதிரி தானேடா? அவ வாழ்க்கை நல்லா இருக்க கூடாதுன்னு, நினைக்கிறது கூட ரொம்ப தப்பு."


     "கண்டதுங்களையெல்லாம் என்னால தங்கச்சியா ஏத்துக்க முடியாது தாத்தா. எனக்கு தங்கச்சியா இருக்கிற தகுதி, வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டு, குடும்பத்தை விட்டு ஓடிப்போனவரோட பொண்ணுக்கு இல்ல.


  இங்க என் தங்கச்சியை காணோம் ஆனா, அங்க அந்த வேந்தன் அவசர அவசரமா கல்யாணம் பண்ணி இருக்கான். எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு, ரஞ்சியை அவன்தான் ஏதோ பிளான் பண்ணி கடத்தி வச்சிருக்கணும்."


    "மாறா...போதும் வாயை மூடு…வேந்தனை என்னன்னு நெனச்சே? உன்னை மாதிரி சுயநலத்துக்காக சொந்த பாட்டியவே கொலை பண்ண முயற்சி பண்ணுறவன்னா?"


  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அப்படியே அதிர்ந்து நின்று விட்டனர்.


    "மாமா என்ன சொல்றீங்க, மாறன் அத்தையை கொலை பண்ண முயற்சி செஞ்சானா?"


  "ஆமாம்மா, உன் புள்ள தான், உன் புள்ள மட்டும் இல்ல உன் பொண்ணும் சேர்ந்து தான் இந்த வேலைய பார்த்து இருக்காங்க. பூவு பின் வாசல்ல தானா விழுகல, இவங்க அந்த இடத்துல எண்ணெய்யை கொட்டி விழுக வச்சிருக்காங்க. இதைக் காரணமா வச்சு வேந்தனுக்கும் நிரஞ்சனாவுக்கும் கல்யாண ஏற்பாட்டை செய்யறதுக்காக."  


  மாறன் மிரண்டு நின்று விட்டான். எப்படி தாங்கள் தீட்டிய திட்டம் வெட்ட வெளிச்சமானது என்று.


  சரியாக அந்த நேரத்தில் தான் மூர்த்தி ஐயா, தீபனுடனும் தனது மூத்த மகனுடனும் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தார்.

No comments:

Post a Comment