அத்தியாயம் 47
கொற்றவை தேவியின் சிலை செம்பளுப்பு நிறத்தால் ஆன செம்பவள கற்களால், ஆதிகால மனிதர்களால் உருவாக்கப்பட்டது. தேவியின் கண்களில் உள்ள நீல மணிக்கற்கள், எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.
இயற்கை அன்னையாக மலைவாழ் மக்களால் போற்றப்பட்டவள். அவர்களின் குலதெய்வமான இந்த தாயை, சுற்றியிருந்த பல ராஜ்யங்களில் உள்ள அரசர்களும் வழிபட்டு வந்தனர். அந்த அளவுக்கு மகிமை பொருந்தியவள்.
போருக்கு செல்லும் முன் இந்த தாயை வழிபட்டால் வெற்றி நிச்சயம் என்பது அப்போது பரவலான கருத்தாக இருந்தது. அதனால் இந்த கொற்றவை தேவியின் சிலையை கடத்திச் செல்லவும், தமது நாடுகளுக்கு தூக்கிச் செல்லவும் பலர் முனைந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் மாண்டுதான் போயினர்.
ஒரு கட்டத்தில் அரச குடும்பங்களின் தொல்லைகள் பொறுக்க முடியாமல், மலைவாழ் மக்கள், தமது தேவியை பத்திரமாக ஒரு குகையில் வைத்து வழிபட தொடங்கினர்.
அதோடு பொதுவெளியில் கற்களால் ஆன கொற்றவை தேவியின் சிலையை எழுப்பி, அதற்கு விழா எடுத்து வருகின்றனர்.
இவர்கள் குலத்தில் நீல கண்களுடன் பிறக்கும் பெண் குழந்தை, கொற்றவை தேவியின் அருளுக்கு பாத்தியமானவராக கருதுகின்றனர். அவரே தேவியின் உண்மையான செண்பவள சிலைக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்பவர் ஆவார். அவரைத் தவிர வேறு யாருக்கும் தேவியின் சிலை உள்ள இடம் தெரியாது.
இருபத்து எட்டு வருடங்களுக்குப் பிறகு, இப்போது தான் அந்த மலைவாழ் மக்களின் குலத்தில் ஒரு பெண் குழந்தை நீலக் கண்களுடன் அவதரித்திருக்கின்றது.
இக்குழந்தையை பெற்றவர்கள் மிகவும் பாக்கியசாலிகளாக கருதப்படுகின்றனர். அவர்களும் அக்குழந்தையோடு சேர்த்து தேவியின் உண்மையான சிலையை தரிசிக்க முடியும்.
அவ்வாறு தேவியின் சிலையை தரிசித்து வந்த இருவர் தான், விஜய பூபதியின் கைகளால் உயர்த் துறந்தவர்கள்.
ஏந்திழை அம்மையாரும் இதேபோன்று இருபத்து எட்டு வருடங்களுக்கு முன், அரச குடும்பத்தினரால் தம் தாய் தந்தையரை இழந்தவர் தான்.
"அரக்கனே இரண்டு உயிர்களை அநியாயமாக அழித்துவிட்டு சிறு குற்ற உணர்வு கூட இல்லாமல் பேசுகிறாயே, நீயும் ஒரு மனிதனா? நீ அதை மட்டுமா செய்தாய்? ஒன்றும் அறியா இந்த பிஞ்சுக் குழந்தையையும் கொல்லத் துணிந்தாயே? சரியாக அந்த நேரத்தில் நான் வில் தொடுத்து விட்ட அம்பு, உன் உள்ளங்கையை பதம் பார்க்காமல் இருந்திருந்தால், பால்மணம் மறவா இந்த பிஞ்சுக் குழந்தையும், இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றிருக்கும்
வேந்தே நாங்கள்தான் அரச சங்கார்த்தமே வேண்டாம் என்று தானே, நாங்கள் உண்டு காடு உண்டு என்று இருந்தோம்.உங்கள் முன்னோர்கள் தான் எமது அரச பரம்பரையால் தங்களுக்கு எந்த தீங்கும் நேராது என்று தேவியின் மீது உறுதி பூண்டனர். அதனால் தான் தங்கள் நாட்டினரை மட்டும் தேவியை பூஜித்து கொள்ள சம்மதம் கூறி காட்டினில் வந்து செல்ல அனுமதித்தோம். இப்போது இதற்கு என்ன பதில் கூற போகின்றீர்கள். பெற்றோரை இழந்து நிற்கும் ஒன்றும் அறியா இந்த சிறு குழந்தைக்கு தாங்கள் கூறப் போகும் நியாயம் தான் என்ன?"
"தாயே எமது முன்னோர்கள் கொடுத்த வாக்கு எப்போதும் மாறாது. நான் வழங்க போகும் இந்த தண்டனை நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும். நான் தங்களுக்கு ஒரு வாக்கு கொடுக்கிறேன். நான் மட்டுமல்ல என் பரம்பரையே தங்களது குலத்திற்கு பாதுகாப்பாளராக இருப்பர். தங்கள் குலத்தில் உள்ளோருக்கு ஏதாவது ஆபத்து என்றால், எங்களது உயிரை கொடுத்தாவது காப்போம். இது எனது மணி முடி மீது ஆணையாக, நான் எடுத்துக்கொண்ட உறுதியாகும்.
விஜயா நீ செய்த தவறை எண்ணி வருந்துவாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீயோ சிறு குற்ற உணர்வு கூட இல்லாத நின்று கொண்டிருக்கிறாய். இரண்டு உயிர்களின் மதிப்பு அவ்வளவு எளிதாக போய் விட்டதா உனக்கு? இதோ உனது உயிரும் துடிக்கும் போது, அதை நீ உணர்ந்து கொள்வாய். யார் அங்கே இவனை நாட்டு மக்கள் அனைவரும் பார்க்குமாறு முச்சந்தியில் நிறுத்தி சாகும்வரை முள் சாட்டையால் அடியுங்கள்."
"மன்னா நான் ரத்தினபுரியின் இளவரசன், அத்தோடு தங்களின் மைத்துனனும் ஆவேன். இந்த காட்டுவாசிகளுக்காக என்னை எதிர்க்க துணிந்தீர்களா?"
"நீ யாராய் இருந்தால் என்ன? மகிழபுரியில் எப்போதும் நீதிக்கு மட்டுமே முதலிடம். செய்த குற்றத்திற்கு தக்க தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும். ம்ம்ம் இவனை இழுத்துக் கொண்டு செல்லுங்கள்."
வீரர்கள் விஜய பூபதியை சங்கிலியால் பிணைத்து இழுத்துக் கொண்டு சென்றனர்.
இந்த தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது. மேனகா தேவி அழுது கொண்டே குழந்தைகளுடன் சென்று விட்டார்.
கொற்றவை தேவி திருவிழாவிற்காக தன் பிறந்தகம் வந்தவர், தன் கணவரின் இந்த செயலை அவர் எதிர்பார்க்கவே இல்லை. செய்வதை எல்லாம் செய்துவிட்டு சிறு குற்ற உணர்வு கூட இல்லாது, எதிர்த்து கொண்டு நிற்கும் அவரை காண்கையில் மேனகா தேவிக்கு வருத்தமாக இருந்தது.
தனது அண்ணனின் நீதி நியாயங்களை தெரிந்தவர் ஆதலால், தன் கணவருக்காக பரிந்து கொண்டு பேசவும், அவரால் முடியவில்லை. இருதலைக்கொல்லி எறும்பாக தவித்து நின்றார்.
அரச கட்டளையை வீரர்கள் நடுவீதியில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, ஐந்தாறு குதிரைகளில் வந்த, கருப்பு துணியால் முகத்தை மூடிய வீரர்கள், காவல் வீரர்களை அடித்துப் போட்டுவிட்டு விஜய பூபதி தூக்கிக்கொண்டு சென்றனர்.
நடந்தவைகளை கேள்விப்பட்டதும் பார்த்திபேந்திரர் கடும் கோபம் கொண்டார். ரத்தினபுரி அரசருக்கு அவசரமாக மடல் ஒன்றை எழுதினார்.
உங்கள் தம்பி மகிழபுரி நாட்டின் குற்றவாளி, அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கேள்விப்பட்டால், எங்கள் நாட்டைப் பகைத்துக் கொண்டதாக அர்த்தம். போர் முரசு விரைவில் முழங்கும்.
மடலை கண்டதும் ரத்னபுரியின் அரசரும், விஜய பூபதியின் அண்ணனுமான நாகேந்திர பூபதி, அடித்து பிடித்துக் கொண்டு பார்த்திபேந்திரரை சந்திக்க வந்தார்.
"அரசர் பெருமானே, நான் அந்த பாவிக்கு அடைக்கலம் கொடுக்கவே இல்லை. அவன் எங்கு இருக்கிறான் என்று கூட எனக்கு தெரியாது. தயை கூர்ந்து நான் சொல்லுவதை நம்புங்கள்."
"நான் உன்னை நம்புகிறேன் நாகேந்திரா, ஒருவேளை நீ பொய் சொல்கிறாய் என்று தெரிந்தால், ரத்தினபுரி தனி நாடாக இல்லாமல் மகிழபுரியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்."
விஜய பூபதியின் உடல் முழுவதும் மூலிகை கட்டுகள் போடப்பட்டு, மஞ்சத்தின் மீது படுக்க வைக்கப்பட்டிருந்தான்.
ரத்னபுரியின் ராஜகுருவான, சர்வேஸ்வரர், விஜய பூபதிக்கு மூலிகை நீரை புகட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது நாகேந்திர பூபதியின் மகனும் விஜய பூபதியின் தோழனுமான, ரங்கராஜ பூபதி அவசரமாக அந்த அறையினுள் நுழைந்தான்.
No comments:
Post a Comment