Search This Blog

Followers

Powered By Blogger

Friday, June 27, 2025

மன்னவரே 46


 

            அத்தியாயம் 46


    குருந்த மரத்தடியினில் மண்ணினை தோண்ட ஆரம்பித்ததும், பலமான சூறை காற்று வீச ஆரம்பித்தது.


  இரண்டு மூன்று முறை மண்ணை கொத்தி எடுத்து தோண்ட ஆரம்பித்ததும், மோகினி பள்ளத்தை சுற்றி இருந்த வேர்கள் கடகடவென்று ஆட ஆரம்பித்தது.


  அங்கிருந்த மக்கள் பயந்து போய் மரத்தை விட்டு தள்ளி ஒதுங்கி நிற்க, ஒரு கட்டத்துக்கு மேல் மோகினி பள்ளத்தை சுற்றி இருந்த வேர்கள், பிய்த்துக்கொண்டு மரத்தின் வேரோடு, மூன்று நான்கு அடி தூரம் மேலே பறந்து போய், தள்ளி மண்ணில் விழுந்தது.


  மோகினி பள்ளத்தை மூடியிருந்த அந்த வேர்கள் அகன்றதும் கரும்புகை ஒன்று பள்ளத்தினுள் இருந்து சூறாவளியினோடே உயர எழுந்தது.


  அதனைக் கண்டு மக்கள் அனைவரும் திசைகொருவராக சிதறி ஓட, அந்த கரும்புகை, தனது மனம் கவர்ந்த மன்னவனை காண உயர பறந்து சென்றது.


  பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும், காதல் கொண்ட மனம், அவனை தான் முதலில் காண ஏங்கியது. ஆசையோடு அவனைக் காண வந்த அந்தக் கரும்புகை, தன்னுடைய இந்த நிலைக்கு காரணமானவளை அவனின் மனைவியாக கண்டபோது, அதற்கு அவளை கொன்று போடும் அளவுக்கு வெறியேறியது.


  கண்கள் ரத்தமென மின்ன, நான்கு அடிக்கு கீழே தொங்கும் நாக்கை சுழற்றி கொண்டே, அவளை நெருங்க தொடங்கிய போது, சில மந்திர உச்சாடனங்கள் அந்த கரும்புகையை எங்கோ இழுக்க தொடங்கியது.


  தனது எதிரி கைக்கெட்டிய தூரத்தில் இருந்தும், அவளை ஒன்றும் செய்யவிடாமல் தன்னை இழுக்கும் இந்த மந்திர உச்சாடத்தை உபயோகிப்பவனை நோக்கி, அதன் கோபம் பல மடங்காக திரும்பியது. அதே கோபத்துடன் அந்த மந்திர உச்சாடனத்தை தேடி சென்றது.


  அமைச்சரின் குருஜி தான் இந்த மந்திரத்தை உபயோகிக்க சொல்லி கொண்டிருந்தார். நிரஞ்சனா கிடைத்து விட்டதாக அமைச்சரின் ஆட்கள் கூற உடனே வேலையை தொடங்கினார் குருஜி. அங்குள்ள தன் சிஷ்யகோடிகளை நிரஞ்சனா இருக்கும் இடத்திற்கு அனுப்பி, பூஜையை தொடங்கினார்.


மது தன்னை தீரா என்று அழைத்ததால், அவளுக்கு முன் ஜென்ம நினைவு வந்ததாக எண்ணிய வேந்தன், அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து, அந்த பெட்டியில் இருந்த நீல நிற கற்கள் மின்னும் தங்க வளையல்களை அவள் கைகளில் அணிவித்தான்.


  அவளது நெற்றியில் ஒரு முத்தம் பதித்துவிட்டு, அந்த பெட்டியில் இருந்த சிறிய கத்தியை வெளியே எடுத்தவன், அதன் கைப்பிடியை பிடித்து திருக அது வாளாக உருமாறி ஒளி வீசியது. அந்த நேரம் பார்த்து கீழே ஏதோ சத்தம் கேட்க மீண்டும் அதை சிறிய கத்தியாக மாற்றி, தனது உடைக்குள் வைத்துக் கொண்டு அவ்வறையை விட்டு கீழே இறங்கினான்.


  அங்கு ராகுலை கண்டதும் இவன் என்ன ஏது என்று விசாரிக்க, ராகுல் கூறியவற்றை கேட்டு கோபம் கொண்ட வேந்தன் மூர்த்தியிடம், மதுவையும் வீட்டில் உள்ளவர்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ராகுலுடன் நிரஞ்சனாவை தேடி சென்றான்.


கட்டிலின் மீது படுத்திருந்த மதுவிற்கு நினைவுகள் கால சக்கரத்தில் சுற்றி, முன் ஜென்மத்தை நோக்கி பயணித்தது.


  இதோ நாமும் கிளம்புவோம் நடந்த வரலாறுகளை திரும்பவும் கண்டு வர,


  மகிழபுரி பேரினைப் போலவே சந்தோஷங்களையும் மகிழ்ச்சியையும் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்ட வளமான ராஜ்யம். கொற்றவை தேவியின் அருளால் போர் தொடுத்த அத்தனை இடங்களிலும், வெற்றி கொடி நாட்டிய நாடு.


  அதை ஆளும் பார்த்திபேந்திரர் நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் போன பேரரசர். அனாவசியமாக நடக்கும் போரினை விரும்பாதவர்.


    ஆனால் தவறு என்று பட்டால், தன் சொந்தமே ஆனாலும் அதை தட்டிக் கேட்க துணிபவர். அவரின் தர்மபத்தினி தாரகை தேவி. தம் மன்னவரைப் போலவே தூய உள்ளம் கொண்டவர். 


    தாய் தந்தையர் இல்லாத தமது நாத்தனார்களை, தனது பிள்ளைகள் போல பாவித்து அவர்களின் மனம் விரும்பிய மணாளர்களையே, தம் மன்னவரின் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தார்.


  தனது மூத்த நாத்தனாருக்கு பக்கத்து ராஜ்யமான ரத்னாபுரி இளவரசரையும், தனது இளைய நாத்தனாருக்கு தமது நாட்டின் படைத்தளபதியையும் திருமணம் செய்து வைத்தார். 


  இங்குதான் தான் தவறிவிட்டோமோ என்று மனம் வெதும்பி அரசு தர்பாரில் நடக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார், ஆறு மாத கைக்குழந்தையுடனும், அருகிலே தனது எட்டு வயது மகன் மித்ரதேவேந்திரனுடன்.


  அவர் அருகிலேயே படை தளபதியின் மனைவியும், அரசரின் இரண்டாவது தங்கையுமான ஆதிரை, தன் ஐந்து வயது குழந்தையான ரஞ்சனியுடன் மேல்மாடத்தில் நின்று கொண்டிருந்தார்.


  அரசு தர்பாரில் குற்றவாளி கூண்டில் ரத்னபுரியின் இளவரசர் விஜய பூபதி, இரண்டு உயிர்களைப் பறித்த பின்பும், சிறிதும் குற்ற உணர்ச்சி இன்றி, உன்னால் முடிந்ததை பார் என்று ஆணவமாக நின்று கொண்டிருந்தார்.


  அவருக்கு இடப்பக்கத்தில் ஒரு கையில் ஐந்து வயது குழந்தையான மோகனசுந்தரியை தூக்கிக்கொண்டும், இன்னொரு கையில் எட்டு வயதான தனது மகன் பிரதீபனை பிடித்துக் கொண்டும், கூனிக்குறுகி நின்று இருந்தார், அரசரின் மூத்த தங்கையான மேனகா தேவி.


    பிரதீபனுக்கு தன் தந்தை ஏதோ மன்னிக்க முடியாத குற்றம் செய்துள்ளார் என்பது புரிந்தது.எனவே அவன் அமைதியாக நின்று கொண்டான்.


    ஆனால் தந்தையின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்துள்ள மோகனாவிற்க்கு, தன் தந்தையை இப்படி குற்றவாளி போல நிற்க வைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் இந்த அரசு சபையில் உள்ளவர்களை முற்றிலுமாக வெறுத்தாள்.


  அவருக்கு எதிர்ப்புறத்தில், மலைவாழ் மக்கள் குருவாக வணங்கும், ஏந்திழை அம்மையார், தனது கையில் இரண்டு வயது பெண் குழந்தையை சுமந்து கொண்டு, ருத்ர காளியாக நின்று கொண்டிருந்தார். 


    அந்தப் பிஞ்சு குழந்தை ஏந்திழை அம்மையாரிடம், தன் தாயைத் தேடிக் கொண்டிருந்தது. சுற்றி உள்ள அறிமுகம் இல்லாத புதிய முகங்களால் சற்று மிரண்டு போய், அம்மையாரின் தோள்களில் அழுகையினோடு சாய்ந்து கொண்டிருந்தது.


  தாயின் அருகில் நின்று கொண்டிருந்த மித்ரதேவேந்திரனுக்கு அந்த பிஞ்சுக் குழந்தையின் நீல கண்களில் தெரிந்த, பயத்தை காணும் போது, அனைத்து ஆறுதல்படுத்த வேண்டும் போல தோன்றியது.


  அரசர் பார்த்திபேந்திரர், விஜய பூபதி நோக்கி, பேசத் தொடங்கினார்.

 

    "விஜயா உன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு நீ என்ன பதில் கூற போகிறாய்?"


  "நான் என்ன குற்றம் புரிந்தேன்? கொற்றவை தேவியின் சிலையை காட்டுமாறு, அந்த காட்டுவாசிகளிடம் எவ்வளவோ முறை எடுத்துக் கூறினேன். ஆனால் அவர்கள் அதை காது கொடுத்து  கேட்பதற்கு கூட தயாராக இல்லை. கடவுள் என்ன அவர்களுக்கு மட்டும் சொந்தமானவரா? வந்த கோபத்திற்கு அவர்கள் இருவரின் சிரத்தையும் கொய்தேன்."

No comments:

Post a Comment