Search This Blog

Followers

Powered By Blogger

Friday, November 7, 2025

பூ மழையே 4


 

அத்தியாயம் 4


    அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு ரங்கநாயகியின் பேச்சு அந்த வீட்டில் அதிகமாக எடுபடுவதே இல்லை. எப்போதாவது தாய் பாசத்தைக் காட்டி, கிருஷ்ணமூர்த்தியை அவர் தனது பிடியில் வைத்துக் கொள்ள முயலும் போது கூட, கண்மணி தனது மகளதிகாரத்தை பயன்படுத்தி, தந்தையை தன் பக்கம் வைத்துக் கொள்வாள். 


   அதனால் ரங்கநாயகியால் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி, நடப்பவைகளை வேடிக்கை மட்டுமே  பார்க்க முடிந்தது.


    சுப்பிரமணியம் வாத்தியாரின் அறிவுரைப்படி, கண்மணி அவளுக்கு பிடித்த கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கப்பட்டாள். 


   இதோ அவள் கல்லூரியில் சேர்ந்து கூட, கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்து விட்டது. போன வாரம் தான் கண்மணிக்கு பதினெட்டு வயதும் ஆரம்பமானது. இம்முறை கல்லூரியில் வட மாநிலத்திற்கு இன்ப சுற்றுலா செல்ல ஏற்பாடாகி இருக்க, அங்கு செல்ல அனுமதி வேண்டி தன் பெற்றோரின் பின்னே ஒரு வாரமாக கெஞ்சியபடியே சுற்றிக் கொண்டிருந்தாள் கண்மணி. 


    பிறந்ததில் இருந்தே ஒரு நாள் கூட தங்களை விட்டு பிரியாது இருக்கும் தங்களது செல்ல மகளை, ஒரு வாரம் சுற்றுலாவிற்கு அதுவும் வெளி மாநிலத்திற்கு அனுப்ப கிருஷ்ணமூர்த்திக்கும், வாசுகிக்கும் ஏனோ மனம் வரவில்லை.


    தனது கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து, முதன் முறையாக வெளியே சென்று வரும் வாய்ப்பை இழக்க விரும்பாமல், இன்பச் சுற்றுலா சென்று வர அனுமதி கேட்டு கிருஷ்ணமூர்த்தியின் பின்னே அவள் தற்போது சுற்றிக் கொண்டிருக்க, 


     “ஏன்டி என் மகனை இம்சை பண்ணிகிட்டு இருக்க, நீ  இவ்வளவு தூரம் தள்ளி இருக்க காலேசுக்கு படிக்கப் போறதே நான் தப்புன்னு சொல்லிகிட்டு இருக்கேன், ஆனா நீ டூருக்கு அதுவும் வேற ஊருப்பக்கம் போக ரெடியாகிட்டு நிக்கிறே?


   அப்பு மூர்த்தி அவ கெஞ்சறான்னு மனசு வுட்டறாதேப்பா,  உனக்கு ஞாபகம் இல்லையா ஜோசியர் சொன்ன கெடு  ஆரம்பிச்சாச்சு, போன இடத்துல இவ எவனயாவது கட்டிக்கிட்டு வந்து நிக்க  போறா, அப்பறம் ஊருக்குள்ள நாம தலை காட்ட முடியாது.”


     ரங்கநாயகியின் வார்த்தையில் கிருஷ்ணமூர்த்தி சற்று தயங்கி நிற்க, உடனே தனது பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்து விட்டாள் கண்மணி. 


   “அப்பா நான் உங்க கண்மணி ப்பா, என்னை நீங்க நம்ப மாட்டீங்களா? நான் போய் உங்களுக்கு துரோகம் பண்ணிடுவேனா?”


   அவள் கண்களை கசக்க அதற்கே கிருஷ்ணமூர்த்திக்கு பொறுக்கவில்லை, 

 

   “அச்சோ பாப்பா நீ ஏன்ம்மா அழற, அப்பா உன்ன நம்பாம வேற யாரை நம்புவேன்? என் குலசாமி கண் கலங்கலாமா? பாட்டி ஏதோ தெரியாம சொல்லிட்டாங்க, நீ அதையெல்லாம் மனசுல ஏத்திகிட்டு உன்னை கஷ்டப்படுத்திக்காத தாயி. ”


    “இல்ல இப்படி ஒரு வார்த்தை வந்த பிறகு நான் என்னை நிரூபிக்க எதாவது பண்ணணும் இல்ல. 


   இப்போ எழுதி வச்சுக்கோங்க ப்பா நான் நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அவரோட நல்லபடியா குடும்பமும் நடத்தி உங்க பேரை காப்பாத்துவேன். அதோட இந்த வீட்ல தான் ப்பா என் கல்யாணமும் நடக்கும், இது நீங்க தெய்வமா மதிக்கிற உங்க தெய்வத்தாய் மேல சத்தியம் ப்பா.”


   என்று ரங்கநாயகியின் தலையில் அடித்து சத்தியம் செய்வதற்காக, சிங்கம் சூர்யாவைப் போல கண்மணி கைகளை ஓங்கிக் கொண்டு வர, 


   “அய்யய்யோ இவள தடுக்க நினைச்ச பாவத்துக்கு என் சோலியை முடிச்சு விட்டுடுவா போலயே இந்த கொலகாரி.” 

  

  என்றபடி ரங்கநாயகி திண்ணையில் இருந்து குதித்து தெருவுக்குள் ஓடத் தொடங்கி விட, அவரைத் தொடர்ந்து ஓட முனைந்தவளின் கைகளைப் பற்றியவர், 


   “பாப்பா எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு தாயி. உன்ன விட்டு பிரிஞ்சு இருக்கணுமேன்னு நாங்க யோசிச்சோம். உனக்கு இது தான் சந்தோஷமுன்னா உன் விருப்பப்படியே, நல்லபடியா போயிட்டு வாம்மா.”


   சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவளோ அன்று இரவு தனது உடமைகளை பேக்கில் எடுத்து வைத்தபடி, இங்கு நடந்தவைகளை, வெளியூரில் தங்கி இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும், தன் உயிர்த் தோழி கவியிடம் கூறிக் கொண்டிருந்தாள். அனைத்தையும் கேட்டுவிட்டு கண்களில் நீர் வரும் அளவிற்கு சிரித்த கவிதா, 


   “உங்க பாட்டி எப்படியாவது உங்க மாமனுக்கு உன்னை கட்டிக் கொடுத்தே ஆகணும்னு ஒத்த கால்ல நிக்கும் போலயே, கிடைக்கிற கேப்ல எல்லாம் இந்த ஒரு வார்த்தையை போட்டே ஃபில்அப் பண்ணிட்டு இருக்காங்க, போற போக்க பார்த்தா உன் மாமன் தான் உனக்கு ஹஸ்பண்டா வருவாரு போலயே.”


  “என் மாமன கட்டிகிட்டா நான் குடும்பம் நடத்த முடியாது, நம்ம பிள்ளையார் கோயில்ல விநாயகருக்கு பக்கத்துல அவரை உட்கார வச்சு, நல்லா வசூல் வேணுமுன்னா பண்ணலாம். எனக்கு அன்பை திகட்ட திகட்ட கொடுக்கறவன் தான் வாழ்க்கைத்துணையா வேணும், இந்த வாழைப்பழ சோம்பேறி இல்ல.


    உனக்கு தெரியுமா கவி நாங்க டூர் போறது பிப்ரவரி பதிமூனாம் தேதி, சோ எங்க செட்ல நிறைய பேர் பிப்ரவரி பதினாலு அன்னைக்கு அவங்க அவங்க லவ்வர்க்காக நிறைய சப்ரைஸ் ரெடி பண்ணி வச்சிருக்காங்க. ஹும் நமக்குன்னு ஒருத்தன் எப்ப வந்து….இந்த மாதிரி எல்லாம் பண்ணி…”


    “ ஆமா ஆமா அப்படியே வந்தா மட்டும் உங்க அப்பத்தா அவனை திருஷ்டி சுத்தி வரவேற்கும் பாரு. ஆமா…என்ன நீ உங்க அப்பாகிட்ட டையலாக்கா அடிச்சு விட்டுட்டு வந்துட்டு, இப்ப லவ்வை பத்தி பேசிட்டு இருக்க? அப்பறம் உன் மாமனோட நிலைமை? முக்கியமான உங்க அப்பத்தா நிலைமை?”


    “ அவன் கிடக்குறான் அரிசி மூட்டை, நான் நிச்சயமா காதல் கல்யாணம் தான் பண்ணிக்க போறேன். அதோட ஒவ்வொரு நாளையும் ரசிச்சு ரசிச்சு அவரோட வாழனும், அவருக்காக என் உயிரையே கொடுக்க நினைக்கனும் அப்படி ஒரு ஆளு எப்ப வருவாரோ…”


   “ஓ…பார்த்த உடனே காதல்ல விழனுமோ?”


    *ச்சே ச்சே பார்த்தவுடனே வர்றதெல்லாம் ஜஸ்ட் சினிமாதனமான ஒரு அட்ரேக்ஷன் தான், அவங்க கூட பழகும் போது அவங்க இல்லாட்டி நான் இல்லை அப்படிங்கிற ஒரு நிலைமை வருமில்ல, அந்த இடத்துல துளிர்க்கிற காதல் தாண்டி உண்மையானது.”


   “பார்றா என்ன காதல் டயலாக் எல்லாம் பலமா இருக்கு, ஆல்ரெடி ஆளைக்கான செலக்ட் பண்ணிட்டயா என்ன?”


   “இதுவரைக்கும் இல்ல பார்ப்போம் போற ஊர்ல எவனாவது தேரறானான்னு?”


   “ஆமா ஆமா உன்ன வச்சு மேய்க்கிற அளவுக்கு அவனுக்கு உடல் வலிமை மட்டும் இல்ல, மன வலிமை அதிகமா இருக்க வேண்டாமா?”


  இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளிப்புறம் இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரங்கநாயகி, கேலிப் புன்னகையோடு தனது மனதிற்குள் ஒரு புதிய திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தார்.


No comments:

Post a Comment