அத்தியாயம் 22
“நானே சொல்லனுமுன்னு தான் நினைச்சேன் டா, நீ இங்க வந்து தான் ஆகுனும். நான் நம்ம ப்ராஜெக்ட்க்கு போட்டு வெச்ச செக்யூரிட்டி கோட் ப்ரேக் பண்ணிட்டானுங்க, எதுக்கும் இருக்கட்டும்னு நல்லவேளையா, யாருக்கும் தெரியாம, நான் இன்னொரு செக்யூரிட்டி கோட் உள்ள போட்டு வச்சிருந்தேன். அதனால உள்ள போய் அவனுங்களால டேட்டாவை தெரிஞ்சுக்க முடில.
அந்த கோபத்துல கம்பெனி சேர்ஸ்ஸை லோ ப்ரைஸ்க்கு விக்க போறானுங்க, இப்போ அதுக்கான வேலை தான் நடந்துகிட்டு இருக்கு. இதுக்கு நம்ம கம்பெனியில இருக்க ஒரு கருப்பு ஆடும் துணை.”
“நம்ம கம்பெனில எல்லாமே கருப்பு ஆடு தானாச்சே? நல்லவங்க கேட்டகிரியை தான் தேடி புடிக்கனும்.”
“இப்ப அது ரொம்ப முக்கியம் பாரு, மத்தவங்க எல்லாம் பாஸ் சொல்லறதை செய்யறவங்க. அதாவது தேவ் என்ன சொல்லறானோ அதை, ஆனா அந்த ஹெச் ஆர் இருக்கான் பாரு, அவன் இந்த கேங்க்கு எப்படியெல்லாம் கம்பெனியை முடிச்சு கட்டலாமுன்னு, ஐடியா கொடுத்துட்டு இருக்கான். நீ இங்க வந்து முதல் வேலையா அவனைத் தான் வெளியே அனுப்பற. அப்பறம் நான் சொன்ன வேலை என்னாச்சு.”
“முடிஞ்ச அளவு விசாரிச்சிட்டேன், உங்க பெரியப்பா தர்மராஜ்க்கு விகாஸ் கேசவ்னு ரெண்டு பசங்க. ரெண்டுமே உங்க பெரியப்பாவைப் போல டேன்ஜர் கேட்டகிரி தான், பெரியவன் விகாஸ் கொஞ்சம் இன்டெலிஜென்ட்.
ஆனா தன்னோட மூளையை தவறான இடத்தில் செலுத்தி, அங்கிருந்து பணம் சம்பாதிக்க தான், அதை யூஸ் பண்ணிட்டு இருந்திருக்கான். இரண்டாவது பையன் இருக்கான் பாரு அவன் சுத்த மோசம், அவனுக்கு அறிவும் இல்ல ஒழுக்கமும் இல்ல.
சின்ன வயசிலேயே தன்னோட மோசமான குணத்தால ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கான். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு ஆக்சிடென்ட்ல அவன் இறந்தும் போயிட்டான். இப்போ ரொம்ப கடன்ல மாட்டிக்கிட்டாங்க போல அதனால தான் உங்க தாத்தாவை தேடி வந்து, உங்க வீட்டோட ஒட்டிக்க பார்த்திருக்காங்க. உங்க தாத்தா அவங்க எண்ணம் தெரிஞ்சு தான் உள்ள சேர்த்துக்கல. ஆனா விகாஸ் உன் பாட்டியை யாருக்கும் தெரியாம அடிக்கடி சந்திச்சு பேசிட்டு தான் இருக்கான்.
நெக்ஸ்ட் நீ சொன்ன நம்ம கம்பெனி சம்பந்தப்பட்ட பைல்ஸ் எல்லாமே, பர்டிக்குலரா ஒரு ஐபி அட்ரஸ்க்கு தான் போயிருக்கு. அதைப் பத்தின டீடெய்ல்ஸை தேடிட்டு இருக்கேன் சிக்க மாட்டேங்குது. ஏன்னா அது திடீர்னு ஒரு இடத்துல இருக்கு, அதே ஐபி வேறொரு இடத்துலயும் சேம் டைம்ல காட்டுது.
அதுதான் கொஞ்சம் பிரச்சனை, நம்ம டீம் கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லிருக்கேன், எப்படியும் பசங்க இந்த வீக்குள்ள அதை கண்டுபிடிச்சிடுவாங்க.”
“நானும் முடிஞ்ச வரை இந்த மன்த்க்குள்ள எல்லாத்தையும் சரி பண்ண பார்க்கிறேன். நான் ஆசை ஆசையா ஆரம்பிச்ச என் கனவு ப்ராஜெக்ட், கை விட்டு போக கண்டிப்பா விடமாட்டேன். அதோட என் குடும்பத்தையும் காப்பாத்தணும் எனக்கு வந்த அதே ஆபத்து, என் குடும்பத்தில் இருக்க நபர்களுக்கு வரக் கூடாது. செக்யூரிட்டிஸ் எல்லாம் என்ன சொல்றாங்க? எதுவும் பிரச்சனை இல்லையே?”
“இதுவரைக்கும் எதுவும் பிரச்சினை இல்லன்னு தான் சொல்றாங்க. அவங்க எல்லாம் பத்திரமா தான் இருக்காங்க, நீ முதல்ல உன்னை நல்லா பார்த்துக்கோ. ஜாக்கிரதையா இரு, கூடிய சீக்கிரம் நானும் அங்க வர பார்க்கிறேன். இரண்டு பேரும் சேர்ந்து இந்த கண்ணாமூச்சி விளையாட்டை முடிவுக்கு கொண்டு வருவோம். “
“எனக்கு என்னடா கவலை? அது தான் என்ன பார்த்துக்க என் பொண்டாட்டி வந்துட்டாளே.”
“மறந்துட்ட பார்த்தியா, உன் பொண்டாட்டி தான் முதல்ல உன் கழுத்துல கத்தியை வைப்பா, ஏன்னா இப்ப அங்க இருக்கிற சிச்சுவேஷன் அப்படி.”
அடுத்த நாள் ஆர்வமாக பிளட் ரிசல்ட்டை வாங்கச் சென்ற கண்மணி, அதில் இடப்பட்டிருந்த ப்ளட் குரூப்பை கண்டு பேச்சற்று நின்றாள்.
கவிக்கு ஒரு மீட்டிங் இருந்ததால் அவள் நேரத்திலேயே அலுவலகம் சென்றிருக்க, ரிசல்ட்டை வாங்கிக் கொண்டு பிறகு அலுவலகம் செல்லலாம் என்று நினைத்து வந்த கண்மணி, அசைய மறந்து அங்கிருந்த சேரில் அப்படியே அமர்ந்து விட்டாள். ரிசல்ட்டை கொடுக்கும் போது அந்த ஊழியர்,
“ இந்த ஆள் உங்களுக்கு தெரிஞ்சவனா இருந்தா முதல்ல அவனோட கான்டாக்ட்டை கட் பண்ணுங்க மேடம். இவன் ப்ளட்ல இருந்த போதை அளவு ரொம்ப ஹெவியா இருந்தது. அதோட அது ரொம்ப மோசமான போதை வஸ்து வகையை சேர்ந்தது. முடிஞ்ச அளவுக்கு நீங்க அந்த ஆள்கிட்ட இருந்து விலகி இருக்கிறது நல்லது.”
என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
தேவ் ஒரு இன்டர்வியூவில் தனது குடும்பத்தைப் பற்றி பேசும் போது, தனக்கும் தனது தாத்தாவிற்கும் மிகவும் ரேர் குரூப்பான ஏபி நெகட்டிவ் ரத்த வகை என்று, பேச்சுவாக்கில் கூறி இருந்தான்.
இரண்டரை வருடங்களாக அவனைப் பற்றி இன்டர்நெட் உதவியுடன் பல விஷயங்களை அறிந்து வைத்திருக்கும் கண்மணிக்கு, இப்போது போலியாக வந்திருப்பவனின் முகத்திரையை கிழிக்க, இது உதவும் என்று நினைத்து தான் நேற்று பப்பில் அப்படி ஒரு சம்பவத்தை பட்லர் துணையோடு நிகழ்த்தினாள். ஆனால் அவள் சற்றும் எதிர்ப்பார்க்காத இந்த முடிவு அவளது மன உறுதியை சற்று அசைத்துத் தான் பார்த்தது.
ரிசல்டில் தேவ்வுடைய ப்ளட் குரூப்பான அதே ஏபி நெகட்டிவ் என்று வந்திருக்க, அவள் மனதிற்குள் அத்தனை போராட்டம். அப்படியென்றால் இது தேவ் தானா? என்று மூளை சொல்ல, மனது அதை நிச்சயமாக அவன் இல்லை என்று மறுத்துப் பேசியது.
“இல்ல இல்ல இது என் தேவ் கிடையாது, நிச்சயமா இது அவர் கிடையாது.”
இதற்கு மேல் என்ன செய்து உண்மையை அறிந்து கொள்வது என்ற சிந்தனையில் இருந்தவளை, அவளது அலைபேசி இசைத்துக் களைக்க சுரத்தே இன்றி அதை எடுத்தாள்.
அவளது தாயும் தந்தையும் தான் அவளது முதல் நாள் வேலைக்காக வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். கண்மணியின் கண்கள் குளமானது, அவர்களிடம் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு எழுந்தவள், அந்த காகிதத்தை தன் பேக்கில் பத்திரப்படுத்திக் கொண்டு கம்பெனி நோக்கி நடந்தாள்.
முதல் இரண்டு வாரங்கள் அவளுக்கு ட்ரைனிங் பீரியட், அதிகமான வேலைகளும் அவர்களுக்கு இருக்காது. அதனால் கவிக்கு முன்பே ஹாஸ்டலுக்கு திரும்பி விடுவாள் கண்மணி. ட்ரைனிங்கில் நன்றாக செயல்பட்டு இரண்டாவது வார ஆரம்பத்திலேயே டீமிற்க்குள் நுழைந்து விட்டாள் கண்மணி.
முதல் வாரம் முழுவதும் தேவ் அலுவலகத்தில் இருக்கும் நேரங்களில் எல்லாம், ராம் கண்மணியையே சுற்றிக் கொண்டிருந்தான். எப்போதும் அனைத்து ஆண்களின் கண்களும், தன்னையே வட்டமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று என்னும் மினிக்கு, ராம் தன்னை கண்டு கொள்ளாமல் கண்மணியின் பின்னே சுற்றி கொண்டிருப்பதை கண்டால் கடுப்பாகாதா என்ன?
அதனால் அவளை பார்க்கும் போதெல்லாம் கண்மணியின் வேலையில் குறை இருப்பதாக கூறி கத்திக் கொண்டே இருப்பாள். எப்போதும் தேவ்வுடனே அறைக்குள் இருப்பவள், கிளம்புவதற்கு சற்று முன்பு மட்டுமே வெளியே வருவாள், அதுவும் மேக்கப்பை டச்சப் செய்து கொள்வதற்காக, அந்த நேரத்தில் தான் ஆபீஸ் இவளது சத்தத்தில் சந்தைகடையாக காட்சியளிக்கும்.
கண்மணி தேவ்வை மறந்து வேலையில் கவனம் செலுத்தியது கவிக்கு நிம்மதியாக இருந்தது. ஒருவேளை அவனது குணம் அறிந்து அவனை விட்டு ஒதுங்கி விட்டாள் போல, என்று நினைத்த கவி மகிழ்ச்சி அடைந்தாள். கூடிய சீக்கிரம் இந்த கம்பெனியில் இருந்து விலகி, வேறொரு புதிய வேலையை இருவருக்காகவும் தேடிக் கொள்ள வேண்டும் என்று கூட, கவி எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த ஒரு வார காலமாக கண்மணி மினியையும், தேவ்வையும் பாலோ செய்து கொண்டிருப்பதை கவி அறியவில்லை.
இரண்டு நாட்கள் மினியை பாலோ செய்ததிலேயே, அவளுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்பில்லை என்பதை புரிந்து கொண்ட கண்மணி, தேவ்வை தீவிரமாக கண்காணித்தாள். இன்டர்நெட் மூலமாக தேவ்வின் குடும்பத்தை பற்றிய பல விஷயங்களையும் அறிந்து வைத்திருந்தாள்.
ஆபீஸில் இருக்கும் போது முழு நேரமும் தேவ்வையே ஒட்டிக் கொண்டிருக்கும் மினி, அவன் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வெளியிலேயே அவனை விட்டுவிட்டு, தனது வீடு நோக்கி சென்று விடுவாள். அதோடு ராம் சிங்குக்கும் அங்கு தனி ரூம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனால் அவனும் அறை வாசலில் தேவ்வை விட்டுவிட்டு தனது அறைக்குச் சென்று விடுவான். அந்த ஹோட்டலில் பாதுகாப்பிற்கு பஞ்சம் இல்லை என்பதால், ராம் சிங் ஹோட்டலின் உள்ளே தேவ்வுக்கு அருகிலேயே இருந்து, அவனை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
அவன் ஹோட்டலில் இருக்கும் நேரங்களில் எல்லாம், பல பெண்கள் அவனை சந்திக்க வரும் தகவல், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மூலம், அவளுக்கு கிடைத்தது. அதோடு அவர்களை அழைத்து வரும் காரின் டிரைவர் அவர்களிடம் தினமும் தனது போனை தவறாமல் கொடுத்தனுப்புவதையும் மறைந்திருந்து தெரிந்து கொண்டாள்.
இதன் மூலமாகத் தான் யாரிடம் இருந்தோ இவனுக்கு தகவல் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டவள், அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் நிச்சயமாக தனக்கு உதவி தேவைப்படும் என்பதையும் புரிந்து கொண்டாள், யாரிடம் உதவி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான், நவீன் இங்கு வரும் செய்தி அவளுக்குக் கிடைத்தது.


