அத்தியாயம் 26
தனது வெளிநாட்டு நண்பர்களின் உதவியோடு கேசவ் பற்றிய தகவல்களை திரட்ட ஆரம்பித்திருந்தான் தேவ். இரண்டு நாட்களுக்குள் அதை அனுப்பி வைப்பதாக, அவன் நண்பர்கள் உறுதியாக கூறி இருந்தனர்.
கேசவ்வின் மூலமாக கண்மணியைப் பற்றி அறிந்து கொண்ட விகாஸ், இப்போதைக்கு அவள் மீது கை வைக்க வேண்டாம், அவளை கண்காணித்துக் கொண்டு மட்டும் இரு என்று கூறி விட்டான். அதன் காரணமாகத் தான் கேசவ் சற்று அமைதியாக இருந்தான். .
ஆனால் இனியும் கண்மணி இங்கிருப்பது நல்லதல்ல என்பதை புரிந்து கொண்ட தேவ், அவள் தோழி கவிதாவிடம் தனக்கு தெரிந்த ஒரு நல்ல கம்பெனியில், வேலைக்கு ஆட்கள் தேவைபடுவதாக கூறி, தோழிகள் இருவரையும் அந்த இன்டர்வியூவில் பங்கு பெற அனுப்பி வைத்தான். ராம்சிங்காக இருக்கும் தேவ்வை முறைத்துக் கொண்டே, தனது தோழிக்காக அதில் கலந்து கொண்டாள் கண்மணி.
இரண்டொரு நாட்கள் ஆபீஸ்ஸையே கலக்கிக் கொண்டிருந்த நவீன், கம்பெனியின் தற்போதைய நிலை கண்டு, ஹெச் ஆர்ரையும் தேவ்வையும் சரமாரியான கேள்விகளால் துளைத்தவன், அவர்களை வேலை வாங்கவும் மறக்கவில்லை.
நவீன் உடன் இருக்கும் காரணத்தால் கேசவ்வின் வழக்கமான வேலைகளான போதை, மது, பெண்கள், பப் போன்றவை பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் கூட அவனோடு தங்க எண்ணுவதாக கூறிய நவீன், தனது அவுட்ஹவுஸ்க்கு அவனை அழைக்க பதறிப் போனான் கேசவ்.
ஒவ்வொரு முறையும் வேலை இருப்பதாக போக்கு காட்டி, நவீனை முதலில் அனுப்பி வைப்பவன், அடுத்த நிமிடமே ஹோட்டலுக்கு சென்று முழு போதையில் மூழ்கத் தொடங்குவான். இதனால் கேசவ் மற்றும் விகாஸினால் தொடர்ந்து இரு நாட்களாக பேசிக் கொள்ள இயலவில்லை.
நண்பர்கள் இருவருமே எதிர்ப்பார்த்தது இதைத் தான். ஏற்கனவே ஹெச் ஆர்ரின் வேலையில் குறை இருப்பதாகக் கூறி, அவன் கணக்கை முடித்து அனுப்பும் வேலையை ஆரம்பித்து விட்டான் நவீன்.
அதோடு மும்பையில் இருந்தபடி கம்பெனி டேட்டாக்களை ஹேக் செய்து கொண்டிருந்த, விகாஸின் ஐபியையும் கண்டுபிடித்து, அதை செய்வது அவன் தான் என்ற ஆதாரத்தையும் சேகரித்து, அவன் லொகேஷனை நெருங்கி இருந்தனர் நவீன் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலர்கள்.
எப்படியாவது அண்ணன் தம்பிகளின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய தேவ், நவீனோடு சேர்ந்து ஒரு திட்டத்தை தீட்டினான்.
தாங்கள் ஆதாரத்தோடு நெருங்கி கொண்டிருப்பதைப் பற்றி மட்டும் விகாஸ் அறிந்தால், தனது குடும்பத்தினருக்கு அவனால் பெரிய ஆபத்து ஏற்படக் கூடும் என்பதை உணர்ந்தவன், நவீனை உடனே மும்பைக்கு கிளம்புச் சொன்னான்.
அதன்படி இன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தான் வீட்டிலேயே ரெஸ்ட் எடுப்பதாக கூறி கேசவ்வை நம்ப வைத்து விட்டு, நவீன் யாருக்கும் தெரியாமல் மும்பையை நோக்கிச் சென்று, விகாசை பாதுகாவலர்களோடு அவன் சுற்றி வளைக்கும் அதே நேரத்தில், இங்கு மேடியை கண்காணித்து அவன் மூலமாக கேசவ்வை தான் லாக் செய்வதாக தேவ் கூறி இருந்தான்.
இதில் ஏதாவது ஒன்று முந்திக் கொண்டாலும், விகாஸ் உஷாராகி விடவான். அதனால் இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் அவர்கள் தப்பிக்க முடியாதவாறு பிடிக்க வேண்டும்.
நவீன் இன்று ஆபீஸுக்கு வர மாட்டான் என்ற செய்தியை அறிந்த, ஹெச் ஆர் மற்றும் கேசவ்வுக்கு நிம்மதியாக இருந்தது.
இரண்டு நாட்கள் நவீன் ஆபீஸில் இருந்ததால் மினி கூட வேலை பார்க்கும்படி ஆகிவிட்டது, இன்று அவன் வரமாட்டான் என்று கேள்விப்பட்டதும் சந்தோஷமாக கேசவ்வைப் காண, அவள் கிளம்பும் போது தான், கவி தனது ஆபீஸ் நண்பர்களிடம் தனக்கும் தனது தோழிக்கும் குறிப்பிட்ட கம்பெனியில் இருந்து, வேலையில் சேருவதற்கான ஆப்பர் லெட்டர் வந்திருப்பதாக கூறிக் கொண்டிருந்ததை கேட்டாள். அதை அப்படியே சென்று கேசவ்விடமும் அவள் கூற, அவனோடு அறையில் இருந்த ஹெச் ஆர்,
“சார் இது தான் சரியான நேரம், அந்த பொண்ணை கொன்னு நவீன் சார் வீட்ல போட்டுருவோமா?”
என்று கேட்க,
“ம்ம் பண்ணிடலாமே, ஆனா அதுக்கு முன்ன அவளுக்கு ஒரு கன்னி பூஜையையும், ஹோட்டல்ல வச்சு போட்டிடலாம் என்ன சொல்றீங்க?”
“புரியுது சார் ஆனா இதை நீங்க தங்கி இருக்க ஹோட்டல வைச்சு பண்ணினா பிரச்சனை வரும். நான் மேடிகிட்ட அவனுக்கு தெரிஞ்சதாவும், அதோட நமக்கு பிரச்சனை வராதபடியும் ஒரு ஹோட்டலை பார்த்து ரூம் புக் பண்ண சொல்லறேன்.”
என்றபடி மேடிக்கு போன் செய்யத் தொடங்கினான் ஹெச் ஆர். இவர்களின் சதி திட்டத்தை பற்றி அறியாத கண்மணி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மூழ்கி இருந்தாள். தேவ் மேடியை கண்காணித்துக் கொண்டிருக்க, நவீன் விகாஸை சுற்றி வளைத்துப் பிடிப்பதற்காக மும்பைக்கு சென்று விட்டான். பாவம் கண்மணிக்கு இவர்களால் வரப் போகும் ஆபத்தைப் பற்றி நண்பர்கள் இருவருமே அறியவில்லை.
கண்மணியிடம் வந்த ஹெச் ஆர்,
“ஏம்மா நவீன் சார் வீட்டுக்கு இரண்டு நாள் முன்ன, நீ தானே பைல் கொண்டு போன?”
“ஆமாம் சார், நான் தான் போனேன்.”
“ஓஓஓ அதுல எதோ ஒரு பைல் மிஸ் ஆகிடுச்சாம், அதனால உன்னை அவர் உடனே பார்க்கனுமுன்னு சொல்லறாரு, நானும் அவர்கிட்ட ஒரு கையெழுத்து வாங்க வேண்டி இருக்கு, வா உன்னை நானே விட்டுடறேன்.”
என்று அவன் கூற, ஒருவேளை கேசவை பற்றிய உண்மைகளை நவீன் அண்ணா கண்டுபிடித்து விட்டாரோ? அதைப் பற்றி பேசுவதற்க்காகத் தான் தன்னை வர சொல்லி இருக்கிறார் போல என்று நினைத்த கண்மணி, உற்சாகமாக ஹெச் ஆர்ருடன் கிளம்பினாள்.
அவள் வெளியேறும் போது உள்ளே நுழைந்து கொண்டிருந்த மினி, அவளை கேலிப் புன்னகையோடு கடந்து செல்ல, அதனை சட்டை செய்யாமல் காரின் உள்ளே ஏறினாள் கண்மணி.
கார் சென்று கொண்டிருக்கும் பாதையை கவனித்தவள்,
“சார் நவீன் சாரோட அவுட் ஹவுஸ் இந்த பக்கம் இல்லையே?”
“அவர் க்ளைன்ட்டை பார்க்க போயிருக்காரும்மா, உன்னை அங்க தான் கூட்டிட்டு வரச் சொன்னார்.”
கண்மணியின் மூளைக்குள் ஏதோ ஆபத்து என்று அலாரம் அடித்தது, மினியின் நக்கல் சிரிப்பு கண்முன் தோன்றி அதை உறுதி செய்தது.
நவீனை சந்திக்கப் போகும் ஆர்வத்தில், கைப்பையில் இருந்த அவளது மொபைலையும் எடுத்து வர மறந்திருந்தாள். காரில் தனக்கான ஆயுதம் எதுவும் உள்ளதா என்று தேடியவள், அங்கிருந்த லைட்டரை எடுத்து தனது ஆடைக்குள் பதுக்கிக் கொண்டு, எப்படியாவது கேசவ்விடம் இருந்து தேவ் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், வரும் ஆபத்தை எதிர்க்கொள்ள தயாரானாள் கண்மணி.
அதனால் ரிசார்ட் வந்தவுடன் மறுபேச்சின்றி ஹெச் ஆர்ரின் பின்னே சென்றாள். அறைக்குள் அவளை கூட்டிச் சென்றவன் கண்மணி உள்ளே நுழைந்ததும், அறையை விட்டு வெளியேறி கதவை மூடி விட்டான்.
அதில் அவள் திடுக்கிட்டு போய் திரும்ப,
“ஹாய் பேபி ஏன் அங்கேயே நிக்கிற உள்ள வா.”
என்றபடியே பாத்ரூமில் இருந்து வெளியேறிய கேசவ், பிரிட்ஜில் இருந்த மது பாட்டில்களை எடுத்து தனது கோப்பையில் ஊற்றத் தொடங்கினான்.
கண்மணிக்கு தான் மட்டும் தான் மாட்டிக் கொண்டோமா, இல்லை நவீன் அண்ணாவையும் பிடித்து இவர்கள் ஏதேனும் செய்து விட்டார்களா? இன்று அவர் ஆபீஸுக்கு கூட வரவில்லையே என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியது.
“நவீன் சார் எங்க?
“ஏன் நீ அவனுக்கு மட்டும் தான் கம்பெனி கொடுப்பயா? என்கிட்ட வா நான் உனக்கு அவனை விட அதிக பணம் கொடுக்கறேன்.”
“ஏய் வார்த்தையை அளந்து பேசு , அவர் எனக்கு அண்ணா மாதிரி.”
“அப்படியா அப்ப என்னையும் உன் மாமா மாதிரி நினைச்சுகிட்டு முன்னாடி வா பேபி.”
“ச்சை உன் புத்தி வேற எப்படி யோசிக்கும்?”
“ஏய் என்ன ஓவர் சவுண்டு வுடற? நான் யார் தெரியுமா?”
“நல்லாவே தெரியும் மிஸ்டர் கேசவ் தர்மராஜன்.”
அவளது வார்த்தைகளில் அவன் திடுக்கிட்டு போக, கண்மணியின் சந்தேகம் தற்போது ஊர்ஜிதமானது.
“ஆமா நீயும் உங்க அண்ணனும் என்ன நினைச்சீங்க? ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி செத்துப் போனது போல ஒரு ட்ராமாவை போட்டு, தேவ் முகத்தை போல பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சு ஒட்டிக் கிட்டா, நீ தேவ் ஆகிடுவயா?
என்னதான் பசுத் தோலை போர்த்திட்டு வந்தாலும், ஓநாய் பசுவா ஆகவே முடியாது. அது போல தான் நீயும், எப்பவுமே நீ அவரைப் போல ஆகவே முடியாது.”
“யார் நீ?”
என்று அவனது குரல் நடுக்கத்தோடு ஒலிக்க, அதற்கான அவளது பதில் உறுதியாக ஒலித்தது.
“ மிஸ்ஸஸ் கண்மணி தேவராஜன்.”


