banner image

பூ மழையே 30


 

அத்தியாயம் 30


   கண்மணி எதையாவது பேசி இந்த திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்ற பயத்தில், அவர்கள் என்ன  பேசுகிறார்கள் என்பதை ஒட்டு கேட்பதற்காகவே, மூடிய கதவுகளின் மீது காதை வைத்துக் கொண்டு நின்றிருந்த  ரங்கநாயகிக்கு, எந்த சத்தமும் கேட்காமல் போக, பொறுமை இழந்தவர் வேகமாக கதவை தட்டினார். 


   அதில் தன்னவனிடம் இருந்து விடுபட்ட கண்மணி, அவசர முத்தத்தை அவன் கண்ணங்களுக்கு பரிசாக அளித்து விட்டு, வேகமாக சென்று கதவை திறந்தாள். 


    வெளியே நின்று கொண்டிருந்த ரங்கநாயகி அவளை இடித்து தள்ளிக்கொண்டு நேராக தேவ்வை நோக்கி வந்தார்,


   “கண்ணா என்னப்பா உன் முகம் இப்படி சிவந்திருக்கு, இவ உன்கிட்ட எதுவும் சண்டை போட்டாளா, இல்ல மிரட்டினாளா?”


  அவசரமாக தாடியை ஒட்டிக் கொண்டவன், அதை அழுத்தித் தடவியபடியே, 


   “எப்படி பாட்டி கரெக்டா  கண்டுப்பிடிச்சீங்க? இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்தலைன்னா என்னை கொன்னுடுவேன்னு மிரட்டறாங்க.”


   என்றபடி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவன் சோக கீதம் வாசிக்க, 


   “நினைச்சேன் இவளுக்கு இதுவே வேலையா போச்சு, கவலப்படாதப்பா நீ தான் இந்த வீட்டு மாப்பிள்ளை, இந்தமுறை இவளா நானான்னு ஒரு கை பார்த்திடறேன்.”


    கைகளை கட்டிக் கொண்டு புருவத்தை உயர்த்திய படி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த கண்மணியிடம், 


   “ஏன்டி இவ்வளவு நாளா சோர்ந்து போய், விரக்தியா சுத்திகிட்டு இருந்த என் பையன் முகத்துல, இந்த கல்யாணப் பேச்சை எடுத்த பிறகு தான் சந்தோஷம் தெரியுது, அது பொறுக்கலையா உனக்கு. இந்த நிலைமையிலையும் உன் வேலையைக் காட்டி, அவனை மறுபடியும் ஹாஸ்பிடல்ல சேர்க்க பார்க்கறயா?


   மரியாதையா கீழ வந்து எல்லார் முன்னாடியும் இந்த கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லு. அதை விட்டுட்டு வேற எதுவும் பேசின, என் புள்ளையை  கூட்டிட்டு நான் காசிக்கு போக வேண்டி இருக்கும். அப்பறம் நீயும் உங்க அம்மாவும் மட்டுமே சந்தோஷமா உங்க இஷ்டப்படி இருங்க.”


   தேவ் வாயை பொத்திக் கொண்டு தனது சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க,  அவனை முறைத்தவளோ, 


   “சரி சரி என் அப்பாவுக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கறேன்.”


   இந்த வார்த்தை போதாதா  ரங்கநாயகிக்கு, அவள் வாயாலேயே மீண்டும் அனைவரின் முன்பும், அவள்  சம்மதத்தை கூற வைத்து, அன்றே அவர் திருமண தேதியையும் முடிவு செய்துவிட்டார்.  


   திருமணம் நடக்க இருப்பதோ, மூன்று வருடங்கள் கழித்து தேவ்வை தான் சந்திப்பதாக கண்மணி சொன்ன, அதே பிப்ரவரி பதினான்காம் தேதியில் தான். விஷயம் கேள்விபட்டு கவியும் தனது தோழியின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பங்கு கொள்ள வந்து விட்டாள். 


  கண்மணியின் ஊரிலேயே திருமணத்திற்காக பிரம்மாண்டமாக செட் போடப்பட்டது. திருமணம் முடிந்த பிறகு மாப்பிள்ளை வீட்டினர்  பிரம்மாண்டமான வரவேற்பையும் மும்பையில் ஏற்பாடு செய்திருந்தனர். 


      அடுத்தடுத்து அரங்கேறிக் கொண்டிருந்த சடங்கு சம்பிரதாயங்களில் அந்த ஊர் திருவிழா கோலம் கண்டது. 


    சாதி சனத்துக்குள் பெண்ணை கொடுக்கவில்லையே என்று, புகைந்தபடியே சுற்றி வந்த ரங்கநாயகியின் உறவுகள் கூட, தாடியும் டர்பனும் இன்றி மாப்பிள்ளையை கண்டவுடன் வாயடைத்துப் போனார்கள். வாசுகி மற்றும் கிருஷ்ண மூர்த்திக்கும் கூட மன நிறைவாக இருந்தது. 


   விடிந்தால் திருமணம், ஆட்டம் பாட்டத்தில் திளைத்திருந்த உறவுகள் அனைத்தும், களைப்போடு உறக்கத்தை தழுவி இருக்க, இரண்டு உருவங்கள் பதுங்கி பதுங்கி பிறர் கண்களில் படாதவாறு மணமகள் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தது. நீங்கள் நினைப்பது சரிதான் அதில் முன்னால் செல்வது நமது கண்மணியின் தேவ் தான். அவன் பின்னால் வால் பிடித்தபடி வந்து கொண்டிருந்தான் நவீன். 


   “டேய் உன்னோட காதல் அக்கப்போருக்கு அளவே இல்லையாடா? நாளைக்கு காலைல முகூர்த்தத்தை  வச்சுக்கிட்டு, இப்படி அர்த்த ராத்திரில மீட் பண்ணியே ஆகனும்னு என்னையும் காவலுக்கு இழுத்துகிட்டு வர்றியே, இது உனக்கே அநியாயமா தெரியல? நாளைக்கு இந்நேரம் உனக்கு சாந்தி முகூர்த்தமே நல்லபடியா முடிஞ்சிருக்கும் டா.”


  “கரெக்டு தான் டா மாப்ள, ஆனா என் பட்டர் ஸ்காட்ச் தான் இரண்டு நாளா, என்னை கண்டாலே முகத்தை திருப்பிகிட்டு போறாளே, இப்படி இருக்கும் போது நாளைக்கு எப்படி நல்லபடியாக நடக்கும்?”


  “கொஞ்ச நஞ்ச சேட்டையாடா பண்ணிண நீ? அவங்க பாட்டி கூட சேர்ந்துகிட்டு சிஸ்டரை விரட்டிகிட்டே இல்ல இருந்த, அதுவும் பேபி டால், மை பியாரின்னு சொல்லிகிட்டு அவங்க பாட்டியோட சேர்ந்து நீ பண்ண அட்டகாசம் ஒன்னா இரண்டா? எப்படியும் ஒரு இரண்டு மாசத்துக்கு நீ கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தான் டி. உன் பொண்டாட்டி சும்மாவே மலை ஏறும், இப்போ நீ மந்திரிச்சு வேற விட்டிருக்க, நாளைக்கு  உனக்கு பேயோட்டும் பூஜை தான் டா நடக்கப் போகுது.”


  “வாயை வைச்சு தொலைக்காதடா அவளை மலை இறக்கத் தான்,பயத்தோட  போயிட்டு இருக்கேன்.”


   என்று கூறியபடியே மணமகள் அறையை நெருங்கிய இருவரும், சடன் பிரேக் போட்டது போல திகைத்து நின்றனர். 


    கழுத்தில் தாலி ஏறும் வரை கண்மணியை நம்ப முடியாது என்று, அசைக்க முடியாத நம்பிக்கையை தன் பேத்தி மீது வைத்திருந்த ரங்கநாயகி, மணமகள் அறைக்கு வெளியே தன் தோழியோடு காவலில் அமர்ந்திருந்தார். 


    கதவை நோக்கி வந்தவர்கள் இவர்களை கண்டு ஜர்க்காகி, பின்பக்கம் நோக்கிச் செல்லத் தொடங்கினர். 


   பின்பக்க ஜன்னல் திறந்திருக்க அதன் வழியாக உள்ளே எட்டிப் பார்த்த போது, கண்மணியும் கவியும் கட்டிலில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.


Powered by Blogger.