banner image

பூ மழையே 28


 

அத்தியாயம் 28 

   கண்மணி கண் விழிக்க கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆனது, அதுவரை அவள் அருகே கவலையோடு காத்துக் கொண்டிருந்தாள் கவி.


    சிறிது நேரத்தில் வெகு சிரமப்பட்டு கண்களை திறந்தவள் கேட்ட முதல் கேள்வி, 


  “ தேவ்… தேவ் எங்க?”


    பதட்டத்தோடு எழுந்தவள் கைகளில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்ததையும் மறந்து, கைகளை தூக்கியதால் நிலைதடுமாறி விழப் போக, அவள் தோள்களை பிடித்து நிறுத்திய கவி, 


   “கண்மணி… கண்மணி என்னப் பாரு முதல்ல, என்ன பண்ணிட்டு இருக்க நீ? கையை மேல தூக்கினா ப்ளட் வர ஆரம்பிச்சிடும், ஏற்கனவே நிறைய ப்ளட் லாஸ் ஆகியிருக்கு. ”


    கண்களின் தேங்கிய நீரோடு அவள் தேவ் என்ற வார்த்தையை உச்சரிக்க, 


  “அப்போ நான் சொன்னது எதுவுமே காதுல வாங்காம, அவனைத் தேடித் தான் இன்னும் அலைஞ்சிட்டு இருக்க இல்லையா?


   முதல்ல என்னைய செருப்பால அடிக்கனும், நீ தான் அவன் மேல இருக்க லவ்ல பைத்தியமா இருந்த, ஆனா அவன் தப்பானவன்னு தெரிஞ்ச பிறகும், உன்னை நான் சரியா கவனிக்காம விட்டது எனோட தப்பு தான். அதோட நான் தான் உன்னை இந்த கம்பெனிக்கு கூட்டிட்டு வந்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். அதனால தானே உனக்கு இப்படி ஒரு நிலைமை.”

   

   “இல்ல கவி, அது… அது அவன் தேவ்…”


   “போதும் கண்மணி…இதுக்கு மேல அந்த பேச்சே வேணாம், சரியான நேரத்துல ராம்சிங் மட்டும் அங்க வந்து, உன்னை காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்க்காமல் இருந்திருந்தா…எனக்கு நினைச்சு பார்க்கவே உடம்பு நடுங்குது. 


   அப்பறம் உன்னை நம்பி தானே என் பொண்ணை அனுப்பி வைச்சேன், அவளுக்கு இப்படி ஒரு நிலைமையான்னு உன் அப்பா அம்மா வந்து கேட்டா, நான் என்ன டி பதில் சொல்லியிருப்பேன்.


    என்னோட உயிருடி நீ, சின்ன வயசுல இருந்து என் அப்பா அம்மாவை விட, உன் கூடத் தான் நான் அதிகமாக இருந்திருக்கேன். உனக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா,கண்டிப்பா என்னால என்னையே மன்னிக்க முடியாது. இதுக்கு மேலயும் அவன் தான் உனக்கு முக்கியமா பட்டா, இனி நாம ப்ரெண்டா இருக்க வேண்டாம்.”


   என்றபடி நகரப் போனவளின் கைகளை பிடித்த கண்மணி. 


   “விட்டுட்டு ஓடிடலாம்னு பார்க்கறியா? நான் நரகத்துக்கே போனாலும், உன்னை கூட கூட்டிட்டு தான் போவேன்.”


   என்று கை காயத்தால் ஏற்பட்ட வலியையும் பொறுத்துக் கொண்டு, கண்மணி கஷ்டப்பட்டு புன்னகைக்க முயல, அவளைத் தாவி அணைத்துக் கொண்டாள் கவி. 


    அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கண்மணியின் பெற்றோர்கள் இருவரும் அங்கு வந்து விட்டனர். வாசுகிக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும்  வாடிய கொடி போல, கட்டிலில் படுத்துக் கிடக்கும் தங்கள் அன்பு மகளை,  இப்படி ஒரு நிலையில் பார்க்கப் பார்க்க கண்களில் கண்ணீர் திரண்டது. கண்மணியை அதன் பிறகு ஹாஸ்பிடலில் இருந்து நேராக, தங்கள் ஊருக்கே அழைத்துச் சென்று விட்டனர்.


    வீட்டிற்கு வந்த பிறகும் கூட கண்மணி தன்னை மௌன சிறைக்குள்ளேயே பூட்டிக் கொண்டாள். 

  

    கவி தற்போது வேறு வேலையில் சேர்ந்து விட்டதால், அங்கு கம்பெனியில் அடுத்த என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள முடியவில்லை. 


   நவீனுக்கு அழைத்து தேவ்வை பற்றி ஏதாவது தெரிய வந்ததா என்று கேட்க அவளது மனது துடிக்கும், ஆனால் கேசவ் சொன்ன அதே வார்த்தையை அவரும் சொல்லி விட்டால்?  தேவ்வுக்கு எதுவும் ஆகி இருக்காது என்று மனது கூறினாலும், மூளை நிஜத்தை நம்பச் சொன்னது. எப்போதும் இது பற்றிய சிந்தனைகளிலேயே மூழ்கி இருந்ததால்,  வீட்டில் அமைதியாகவே இருந்தாள். 


    ஆனால் அதன் பிறகு ரங்கநாயகியின் பேச்சுக்கள் அதிகமாகத் தொடங்கியது. எந்நேரமும் கிருஷ்ணமூர்த்தியிடம், 


   “நான் போக வேண்டாம்னு அத்தனை தூரம் எடுத்துச் சொல்லியும், என் பொண்ணு ஆசைப்படறான்னு அனுப்பி வைச்சயே, இப்ப பார்த்தியா அவ எந்த நிலைமையில வீட்டுக்கு வந்திருக்கான்னு? இதுக்கு தான் பெரியவங்க சொன்னா கேட்கனுங்கறது.”


   என்று ஒரு நாளைக்கு பத்து முறையாவது இந்த பல்லவியை அவர் பாடாமல் இருக்க மாட்டார். அந்த நேரங்களில் எல்லாம் கண்மணி எதிர்த்து பேசத் தோன்றாமல் அங்கிருந்து சென்று விடுவாள். இதை பார்த்து குதூகலித்த ரங்கநாயகி அவளை வெறுப்பேற்றுவதற்காகவே வீட்டிற்கு வருவோரின் முன்பு கூட, இதை சொல்லத் தொடங்கினார்.  எப்போதும் அமைதியாக அவரது பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாது இருக்கும் வாசுகியே, ஒரு கட்டத்தில் அவரது பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்து விட்டார். 


   “போதும் அத்த, என் பொண்ணு ஒன்னும் தப்பு செய்யனுங்கறதுக்காக அங்க போகல, வெளி உலகத்தை பத்தி தெரிஞ்சுக்கத் தான் போனா. அவ போன இடத்துல ஒருத்தன் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினா, அதுக்கு என்னோட பொண்ணு எப்படி பொறுப்பாவா? 


  இதுக்கு இப்படி ஒரு பையனை பெத்ததை நினைச்சு அவனோட அப்பாவும் அம்மாவும் தான் அவமானப்படணுமே ஒழிய, என் பொண்ணை பெத்த நாங்களும் என் பொண்ணும் அவமானப்பட வேண்டிய அவசியமே கிடையாது. அதோட  அவனை என் பொண்ணு ஒன்னும் சும்மா விடல, தன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணவனை தீயிட்டு எரிச்சுட்டு வந்திருக்கா.”

 

    “நான் பேசறதுல என்ன தப்பு? இவ அங்க போகாம இருந்திருந்தா அந்த பிரச்சனையே வந்திருக்காதே?”


   “உங்களுக்கு அவளை அங்க அனுப்புனது தான் பெரிய தப்பா தெரியுதா? ஏன் நம்ம ஊரிலேயே பக்கத்து வீட்டுல, ஸ்கூல்ல காலேஜ்ல ஏன் கோயில் குளங்கள்ல கூட பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி அநீதி நடக்கிறது இல்ல? அதுக்காக எங்கேயும் வெளியேவே போகாம இருக்கணும்னு சொல்ல வர்றீங்களா? ஏன் சில இடத்துல சொந்த வீடுகள்லயே  பொண்ணுங்களுக்கு இந்த அநீதி  நடக்குதா இல்லையா? 


   முதல்ல குழந்தைகளை அதை செய்யாதேன்னு சொல்றதுக்கு பதிலா, எப்படி பாதுகாப்பா இருக்கறது? அப்படி ஒரு சிச்சுவேஷன் வந்தா எப்படி பேஸ் பண்ணறதுன்னு சொல்லிக் கொடுக்கணும். என் பொண்ணுக்கு நான் அதை சொல்லிக் கொடுத்திருக்கேன். அவளும் அதுக்கு ஏத்த மாதிரி நடந்திருக்கா, அதுக்கு நாங்க கண்டிப்பா பெருமைப் படறோம்.”


   “மூர்த்தி உன் பொண்டாட்டி என்னை என்ன பேச்சு பேசுறா? நீ பார்த்துட்டு சும்மா இருக்க?”


    “அவ பேசறதுல என்னம்மா தப்பிருக்கு? நீங்க பார்க்கற விதத்தில் தான் எல்லாமே இருக்கு. இதுக்கு மேல பாப்பாவ பத்தி  வீட்டுக்குள்ள மட்டும் இல்ல, வெளிய யார்கிட்டயாவது பேசினீங்கன்னு தெரிஞ்சது, அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்.”


    “இப்ப நான் என்ன பெருசா தப்பா பேசிட்டேன், இந்த மாதிரி வெளியூரில் போய் அவ எதுக்காக வேலை செஞ்சு கஷ்டப்படணும், ஏன் நம்ம கிட்ட பணம் இல்லையா என்ன? இந்நேரம்  என் பேரனை கல்யாணம் பண்ணி இருந்தா, என் பேத்தி மகாராணி மாதிரி வாழ்ந்திருப்பாளேன்னு தான் சொல்ல வந்தேன். 


    ஆனா அப்ப யார் என் பேச்சை கேட்டீங்க? அவ ஆசைப்படறான்னு  சொல்லி, அங்க போய் கஷ்டப்பட வைச்சு, இப்போ இப்படி ஒரு பிரச்சினையில சிக்கி இருக்கா. பெரியவங்க என்ன சொன்னாலும் அதைக் கேட்கவே கூடாதுன்னு இருக்கீங்க இல்லையா? இப்ப இவளுக்கு இந்த மாதிரி நடந்து இருக்குன்னு தெரிஞ்சா யார் அவளை கட்டிக்குவா? “


   “அத்த திரும்பவும் சொல்றேன் என் பொண்ணுக்கு அங்க எதுவும் நடக்கல, அப்படியே எதாவது நடந்திருந்தாலும் அவளை அப்படியே ஏத்துக்கிட்டு வர்றவனைத் தான் நாங்க  மாப்பிள்ளையாவும் ஏத்துப்போம், எங்க  தங்கமான பொண்ணையும் கொடுப்போம். 


   ஒருவேளை உங்க பேரனுக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லைனா, தாராளமா நீங்க அவருக்கு வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுக்கங்க.”


   என்று பேச்சு முடிந்து விட்டது என்பதை போல வாசுகி உள்ளே சென்றுவிட,  கிருஷ்ணமூர்த்தியும் அங்கு அதிர்ந்து போய் நின்றிருந்த ரங்கநாயகியை கண்டு கொள்ளாமல், வெளியே சென்று விட்டார். 


    தனது தாய் தந்தையரின் பேச்சை கேட்டு மனம் உருகிய கண்மணி  தெளிவு பெற்று, அவர்களுக்காகவாவது தான் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக் கொள்ளத் தொடங்கினாள். 


  ஆனால் அதையே காரணமாக வைத்து ரங்கநாயகி கல்யாண பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க, நொந்து போனாள் கண்மணி. 


    இந்த திருமண பேச்சுவார்த்தை  சேகருக்கும் நெருக்கடியை தந்தது. ஏனென்றால் அவன் தான் லட்சுமியை விரும்பத் தொடங்கி விட்டானே. 


    அன்று சேகருக்கு கால் முறிந்து ஹாஸ்பிடலில் முடியாமல் கிடந்த போது, இவ்வளவு நாட்களாக காசுக்காக அவனை சுற்றிச் சுற்றி வந்த அவனது  நண்பர்கள் கூட்டம், எங்கே பல நாட்கள் அவனுக்கு ஆயா வேலை பார்க்க வேண்டிய நிலை வந்து விடுமோ என்று பயந்து, காக்கா கூட்டத்தில் கல்லை தூக்கி வீசியது போல கலைந்து சென்று விட்டது. 


   அந்த நேரத்தில் லட்சுமி மட்டுமே அவனுடன் இருந்து, ஒரு குழந்தையை போல அவனை பார்த்துக் கொண்டாள். 


   அப்போது இருந்தே அவளை நெஞ்சில் சுமக்கத் தொடங்கி விட்டான் சேகர். அவளுக்காகவே சிறிது சிறிதாக தனது சோம்பேறித்தனத்தை கைவிட்டவன், தன் குடும்ப சொத்தை பராமரிக்க தொடங்கினான். 


   இப்போது வரை தனது காதலைப் பற்றி  அவளிடம் வெளிப்படையாக கூறாமல், அவள் தன்னோடு  இருப்பதே போதும் என்று அமைதியாக இருந்தான். 


    இப்போது திடீரென்று அவன் பாட்டி அவனுக்கும் கண்மணிக்கும் திருமணம் என்று பேசத் தொடங்கிவிட, நேராக லட்சுமியிடம் சென்றவன், 


   “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா லட்சுமி. நான் இப்ப எல்லாம் முன்ன மாதிரி இல்ல, கெட்ட சகவாசத்தை எல்லாம் விட்டுட்டேன். குத்தகைக்கு விட்டிருந்த நம்ம வயலையெல்லாம் இப்ப நானே விளைச்சல் போட்டு அறுவடை பண்ணிட்டு இருக்கேன். என்னை கட்டிக்குவயா?”


   கண்களில் திரண்ட நீரோடு பேச்சற்று நின்றவள் தலையை மட்டும் ஆட்டி தனது சம்மதத்தை தெரிவிக்க, அடுத்த முகூர்த்தத்திலேயே ஒரு கோவிலில் வைத்து, லட்சுமியின் கழுத்தில் தாலி கட்டி, தனது மனைவியாக்கிக் கொண்ட சேகர், மாலையும் கழுத்துமாக தன் தாய் மாமாவைத் தேடித் தான் வந்தான்.


Powered by Blogger.