அத்தியாயம் 101
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மொத்த குடும்பமும் ஐ.சி.யூ விற்கு வெளியே சோகமாக புலம்பியபடியே காத்திருந்தனர்.சந்துருவின் பெற்றோர்களும் அங்கு தான் இருந்தனர். சந்துரு மருத்துவர்களோடு உள்ளே இருந்து, வேந்தனது உடல்நிலையை கண்காணித்துக் கொண்டிருந்தான். வெற்றியும் மூர்த்தியும் தான் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறிய படி, பெரியவர்களுக்கு அவ்வப்போது அருந்துவதற்கு நீர் கொடுத்து கவனித்துக் கொண்டனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்த சந்துரு, வேந்தன் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவித்தான்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல வேந்தனை நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க, இப்பதான் காயம் ஆன இடத்துல ஸ்டிச்சஸ் போட்டிருக்காங்க, அதனால கொஞ்ச நேரம் ஐ சி யூ ல அவனை வெச்சு தான் ஆகணும்."
குடும்பத்தினருக்கு ஒரு இரண்டு மணி நேரமே இரண்டு யுகமாக தான் கடந்தது. அதற்கு பிறகு வேந்தன் தனியறைக்கு மாற்றப்பட, அனைவரும் அங்கு சென்றனர்.
இன்னும் அவன் கண் விழிக்காததை கண்டு அனைவரும் கவலை கொண்டனர். சிறிது நேரத்திற்கு முன்பு வேந்தனை விட்டு பிரிந்து செல்லப் போவதாக கூறிய மதுவோ, தற்போது அவனது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அதுவும் அவன் மருத்துவ உபகரணங்களுடன் சுவாசித்துக் கொண்டிருப்பதையும், அவன் உடல் முழுவதும் மருத்துவ உபகரணங்கள் மாட்டியிருப்பதையும் கண்டு கண்ணீர் சிந்தினாள்.
"அவனுக்கு கான்சியஸ் வர கொஞ்ச நேரமாகும் தாத்தா, அவனுக்கு நினைவு வந்தவுடனே நானே கால் பண்றேன், அதுவரைக்கும் இத்தனை பேர் ஹாஸ்பிட்டல்ல இருக்க வேண்டாம், மற்ற பேஷன்ட்ஸ்க்கு தொந்தரவா இருக்கும், அதுதான் நாங்க எல்லாம் இருக்கிறோமே, நாங்க அவனைப் பார்த்துக்கிறோம், நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் பிரஷ் ஆகிட்டு வாங்க ."
"சந்துரு சொல்றது சரிதான், அது தான் நாங்க மூணு பேர் இருக்கோமே, நாங்க பாத்துக்குறோம்." என்று வேந்தனின் நண்பர்கள் கூற,
"ஆமாப்பா முதல்ல நான் போய் சாமிக்கு நேர்த்திக்கடனை செய்யனும், என் பேரன் மறு ஜென்மம் எடுத்தது போல திரும்பி வந்திருக்கான், கண்டிப்பா நான் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு, கோயிலுக்கு போயி நேர்த்திக்கடனை முடிச்சிட்டே இங்க வரேன்."
என்றபடி பூவுப் பாட்டி கிளம்ப, இங்கே இருந்து வேறு ஏதும் செய்ய முடியாது என்ற காரணத்தால், குடும்ப உறுப்பினர்களும் அங்கிருந்து கிளம்பினார். ஆனால் மது மட்டும் அங்கிருந்து செல்லாமல் வேந்தனது கைகளை பிடித்தபடியே அமர்ந்திருக்க,
"மது நீயும் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வாம்மா, அதுதான் நாங்க எல்லாம் இங்க இருக்கோமே."
"இல்லண்ணா அவர் கண்ணு முழிச்சதுக்கு அப்பறமே நான் போறேன், அவர் கூட ஒரு வார்த்தை பேசிட்டா, எனக்கும் நிம்மதியா இருக்கும்."
"என்னம்மா தங்கச்சி நீ?..... அவன் கண் முழிக்கும்போது நீ இப்படி கை புல்லா ரத்தக்கறையோட இந்த நிலைமையிலயா அவன் கண்ணு முன்னாடி வந்து நிற்ப்பே, நீதானம்மா அவனோட எனர்ஜி பூஸ்டர், வீட்டுக்கு போய் குளிச்சிட்டு பிரஷ்ஷா வா, கண்டிப்பா அவன் கண்ணு முழிச்சா, உடனே உனக்கு கால் பண்றேன். எப்படியும் அவன் கண் முழிக்கறதுக்கு இன்னும் ரொம்ப நேரம் ஆகும், அதுக்குள்ள நீ வீட்டுக்கு போயிட்டே வந்துடலாம் ."
பெரியவர்களுக்கும் அதுவே சரி என்று பட, அவளை வற்புறுத்தி தான் வீட்டிற்கு தங்களுடன் அழைத்துக் கொண்டு சென்றனர். கிளம்புவதற்கு முன்பு வேந்தனது கை விரல்களை இறுக்கமாக பிடித்து, ஒரு முறை அவனை உற்று நோக்கி விட்டுத்தான், அங்கிருந்து சென்றாள் மது.
தீபன் அப்போதுதான் போலீஸ் ஸ்டேஷனில் அடியாட்களை சிறையில் அடைத்து, அவர்களின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துவிட்டு, வேந்தனிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக, அவனைக் காண மருத்துவமனைக்கு வந்திருந்தான். அவர்கள் சென்று விட்டதை உறுதி படுத்திக் கொண்ட தீபன், கதவை தாழிட்டு விட்டு வேந்தனின் அருகே வந்து நின்றான்.
இப்போது அந்த அறைக்குள் வேந்தனோடு அவனது நண்பர்கள் நால்வர் மட்டுமே இருந்தனர். சந்துரு அங்கிருக்கும் மானிட்டரை செக் செய்து, குறிப்பேட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, அவனுக்கு சற்று தள்ளி வெற்றியும் மூர்த்தியும் கவலையுடன், வேந்தனை சோகமாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர்.
சந்துருவை நேர்விழி கொண்டு நோக்கிய தீபன்,
"அப்புறம் டாக்டர் சார், வேந்தன் இப்போ ரொம்ப சீரியஸா இருக்கானா?"
"ஆ....ஆமா, ஆமா நீ ஏன் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு, இப்படி கேக்குறே? உன் கண்ணு முன்னாடி தானே கத்தியால குத்துனாங்க, தோள்ள தோட்டா உரசிட்டு போன இடத்துலயே, கத்தியால குத்தினதால பிளட் லாஸ் அதிகமா ஆயிருக்கு, அவன் தோள்ள ரொம்ப பெரிய ஸ்டிச்சஸ் போட்டிருக்கு, அவன் கண் முழிக்க இன்னும் கொஞ்ச நேரமாகும், நீ வேணா போயிட்டு அப்புறமா வா டா, வாக்குமூலம் தானே வாங்கணும், அவன் கண் முழிச்சதும் நானே உன்னை கூப்பிடுறேன்."
"உங்களுக்கு எதுக்கு டாக்டர் சார் சிரமம், இதோ நானே அவன்கிட்ட வாக்குமூலம் வாங்கிக்கறேன்."
சந்துரு திரு திரு திருவென்று முழிக்க, தீபன் வேந்தனின் வலது கால் அருகே சென்று ஏறி அமர, அம்மா என்று அலறியபடியே எழுந்து அமர்ந்த வேந்தன்,
"ஏண்டா உனக்கு அறிவு இருக்கா?... எருமை மாடு மாதிரி இருந்துட்டு என் கால் மேல ஏறி உட்காருறயே, காலு எதுக்குடா ஆகறது?"
"ம்ம்ம் சூப்பு வைக்கத்தான்."
"எதே?"
"ஆமா உன் பொண்டாட்டி கிட்ட சொன்னா தோலை உரிக்க கூட வேண்டாம், அப்படியே வெட்டி சூப்பு வைச்சிடும், கூட்டிட்டு வரட்டுமா?"
"ஏண்டா உனக்கு இந்த கொலவெறி?"
"சாருக்கு இப்ப எதுவும் வலிக்கலையா?நீ ரொம்ப நேரம் மயக்கத்துல இருப்பேன்னு, இதோ இந்த டாக்டர் சொன்னானே."
"ஆ...ஆமா ஆமா, ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ, எனக்கு அப்படியே தலை சுத்துற மாதிரி இருக்கு."
"அடச்சீ கேவலமா நடிக்காத, எந்திரி நாயே."
வேந்தன் திடீரென்று எழுந்து அமர்ந்ததை கண்டு, சோகமே உருவாக நின்று கொண்டிருந்த மூர்த்தி, வாயில் கை வைத்தபடி, அதிர்ச்சியோடு சிலையாகி விட்டான். வேந்தன் நார்மலாக பேசுவதைக் கண்டு நெஞ்சில் கை வைத்து படி,
"அடப்பாவி,அப்போ நீ நல்லாத்தான் இருக்கியா? ஏதோ சீரியஸா இருக்கிற மாதிரி இவன் அந்த சீன் போட்டானே டா?... டேய் போலி டாக்டர்,..... உன்ன போய் சீரியஸா வேலை பாக்குறதா நெனச்சு, ஐஸ் வாட்டர் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தேனேடா?.....ச்சை அப்போ அதெல்லாம் வெறும் நடிப்பா கோபால்... வெறும் நடிப்பா?..."
"டேய் நானே செம காண்டுல இருக்கேன், அவனுங்களோட சேர்ந்துகிட்டு நீயும் ஓவரா நடிக்காத,... எதுக்குடா இப்போ எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கீங்க? எதுக்காக இப்படி ஒரு நாடகம்? ஏற்கனவே போட்ட நாடகத்தால தான் இவ்வளவு பிரச்சனை, இப்ப எதுக்காக மறுபடியும், உனக்கு சீரியஸ்ன்னு நாடகம் போட்டு குடும்பத்தையே இப்படி அழவெச்சிட்டு இருக்கே?"
வேந்தன் எதுவோ பேச வர, கைநீட்டி அவனை தடுத்த தீபன்,
"நீ நிறுத்து, நீ பேசினா எது உண்மை எது பொய்யின்னே கண்டுபிடிக்க முடியாது, டேய் சந்துரு நீ சொல்லு, உனக்கு தான் ஃப்லோவா பொய் சொல்ல வராது."