அத்தியாயம் 95
"நீங்கள் இருவரும் மறுஜென்மம் எடுத்து வந்ததற்கான நோக்கம், முற்றுப் பெற்று விட்டது. இருந்தும் இன்னும் சில நாட்களுக்கு பூர்வ ஜென்ம ஞாபகங்களோடு தான் நீங்கள் வாழப்போகின்றீர்கள். இந்தக் குருந்த மரத்தின் அடியில் கொற்றவை அன்னையின் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும், அந்த சமயத்தில் உங்கள் இருவருக்கும் இடையே இருந்த பூர்வ ஜென்ம நினைவுகள் அனைத்தும் அப்படியே மறைந்து போகும். தங்கள் கைகளில் இருக்கின்ற வீரபத்திரரின் வாளையும், கொற்றவை அன்னையின் சக்திகளை உள்ளடக்கிய இந்த வளையல்களையும், இதோ கொற்றவை அன்னையின் இந்த சிறு விக்ரகத்தையும், ஒரு பெட்டியில் வைத்து, அந்த சிலைக்கு அடியில் அஸ்திவாரமாக புதைத்து வைக்க வேண்டும். இனி இந்த மோகினிப் பள்ளம் தீய சக்திகளை விரட்டும் ஒரு புண்ணிய ஸ்தலமாக வருங்காலத்தில் புகழ் பெறப் போகின்றது. இந்த எல்லை கோட்டை மிதிக்கும் போதே தீயவைகள் அனைத்தும் அடியோடு சாம்பலாகும், இது என் அப்பன் ஈசனின் அருள்வாக்கு. இதை முன் நின்று செயல்படுத்த வேண்டியது தங்களது பொறுப்பு இளவரசே."
"தங்கள் விருப்பப்படியே செய்கிறேன் குருதேவா."
அன்றைய அனைத்து செய்தித் தாள்களிலும் அமைச்சர் பொன்னுரங்கம் கைது செய்யப்பட்டது தான், பரபரப்பான தலைப்புச் செய்தியானது. பணத்திற்காக வெளிநாட்டுக்காரர்களிடம், இந்த மண்ணின் பொக்கிஷமான தெய்வ சிலைகளை, எடுத்து தருவதாக வாக்குறுதி கொடுத்து, அதற்காக பல உயிர்களை அந்த சாமியாரின் துணை கொண்டு பறித்த குற்றத்திற்காக, தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டிருந்தான்.
இவர்களின் சதிக்கு உறுதுணையாக, இந்த ஊரிலிருந்து உதவி செய்து வந்ததாக கூறி, தீபனின் தந்தை பூபதியும் கைது செய்யப்பட்டார்.
ஊர் மக்களால் இதை நம்பவே முடியவில்லை. இவர் இப்படி இவ்வளவு அமைதியாக, அதுவும் ஆன்மீக போர்வை போர்த்திக் கொண்டு, இத்தனை வேலைகளை செய்திருக்கிறாரா?.... என்று அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
வேலப்பன் ஐயாவின் குடும்பத்தார் வேடந்தூரில் இருக்கும் மூர்த்தி தாத்தாவின் வீட்டிற்கு வந்திருந்தனர். ராகுலையும் நிரஞ்சனாவையும் கூட்டிக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு வந்த மாறன், நடந்தவைகள் அனைத்தையும் தனது குடும்பத்தாரிடம் விரிவாக எடுத்துரைத்தான். இவ்வளவு நாட்களாக அரசியல் என்ற பெயரில், தமது குடும்பத்திற்கு பல இன்னல்களை ஏற்படுத்தியதற்கு, மன்னிப்பு வேண்டி வேலப்பன் தாத்தாவின் கால்களில் விழுந்தான்.
"நீ இந்த அளவுக்கு மாறினதே போதும் ராசா, இப்பவாவது அரசியல் தந்திரங்களை நீ கண்டுபிடிச்சியே!.... உன்னை வச்சு அந்த அரசியல்வாதிங்க இந்த ஊரை ஆட்டிப்படைக்க நினைச்சிருக்காங்க, நல்லவேளை எப்படியோ தப்பா எதுவும் நடக்கறதுக்கு முன்னாடியே உனக்கே எல்லா உண்மையும் தெரிய வந்துச்சே, ஆனா அவங்க புத்தி தெரிஞ்சு, நீயாவே திருந்தின பத்தியா,அதுவே சந்தோஷம்ப்பா, நான் உன்னை அரசியலில் இருக்க வேண்டாமுன்னு சொல்லல ராசா, அரசியலில் இருந்தாலும் நியாயமா, மக்களுக்கு நன்மை செய்யிற மாதிரி நடந்துக்கணும்."
"எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது, அதுக்கு அந்த அம்மனுக்கு தான் நம்ம நன்றி சொல்லணும். அடுத்த வாரம் நடக்க போற திருவிழால பூச்சட்டி எடுத்து, இந்த நன்றி கடனை அம்மனுக்கு செலுத்தணும், ஆமா வேந்தனும் மதுவும் எங்கே?"
அப்போது சரியாக வேந்தனும் மதுவும் வீட்டு வாசலில் வந்து நின்றனர்.
வடிவுப்பட்டி அவர்களை அப்படியே நிற்க வைத்து, ஆலம் சுற்றி தான் வீட்டின் உள்ளே அழைத்து வந்தார்.
வேந்தனும் மதுவும் இன்னமும் தீரன் மற்றும் மதுராவாகத்தான் தங்களை உணர்ந்தனர்.
அந்த வீட்டுக்குள் வேந்தனுடன் கரம் கோர்த்து, கால் எடுத்து வைக்கும் போது, மதுராவின் கண்கள் தன்னால் கலங்கியது. அவளது விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டு தீரன் புன்னகையுடனே வீட்டினுள் அழைத்து வந்தான்.
அவர்களை அமர வைத்து மீண்டும் ஒருமுறை பூவுப் பாட்டி திருஷ்டி சுற்றி போட்டார். வீட்டுப் பெண்கள் மதுவுடன் பேசிக் கொண்டிருக்க, ராகுல் வேந்தனின் அருகில் வந்து தான் வீட்டிற்கு கிளம்புவதாக கூற, தனது ஆருயிர் நண்பன் ரகுநந்தனை அனைத்து விடுவித்தவன். அடுத்த வாரம் நடைபெற இருக்கும் திருவிழாவிற்கு கட்டாயம் தங்களது குடும்பத்தாரோடு பங்கேற்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தான். மற்ற குடும்ப உறுப்பினர்களும் அதேபோன்று அவனிடம் கேட்டுக்கொள்ள, அவனும் ஒருமனதாக தனது குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறி விடை பெற்றான். அவன் கிளம்புவதற்கு முன்பு நிரஞ்சனாவை தனது கண்களுக்குள் நிறைத்துக் கொள்ள மறக்கவில்லை, அவளும் அதே போல அவனை தன் கண்களின் வழியே மனதிற்குள் புகுத்திக் கொண்டாள்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அறையில், தன் மதுராவிற்காக காத்துக் கொண்டிருந்தான் தீரன். நொடிகள் யுகமாக கழிய, தனது தேவதை வரும் திசை பார்த்து, கண்கள் பூத்து காத்திருந்தான் அந்த காதலன். எவ்வளவு தடைகள்?.... எவ்வளவு போராட்டங்கள்?...அனைத்தையும் கடந்து, இப்போது தன் கரம் சேர்ந்த நாயகியை, தன் நெஞ்சுக்குள் பொத்திக் கொள்ள அவனுக்கு ஆசை உண்டானது.
வன தேவதை அவள் பச்சை பட்டுடுத்தி வைரம் மற்றும் தங்க ஆபரணங்களை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, பொன் தாலியோடு அவனிட்ட பதக்கம் பதித்த சங்கிலி கழுத்தில் மின்ன, மணம் வீசும் மல்லிகை மலர்களை தலையினில் சூடிக் கொண்டு, தேவதை போல அசைந்து வந்தாள் தனது மன்னவனே தேடி.
அவள் அணிந்திருந்த நகைகளுக்கு போட்டியாக முகம் அது குங்குமமாக சிவந்திருக்க, இமைக்க மறந்து தன்னவளை பார்த்திருந்தான் தீரன். கதவை தாளிட்டு விட்டு திரும்பிய பின்னும் கூட, அவளை இன்னும் அவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, தனது வெட்கத்தை ஒதுக்கி அவனோடு வாயாட முடிவு செய்தாள்.
"என்ன தீரரே பார்வை எல்லாம் பலமாக இருக்கின்றது?...... ஏன் இன்று நீங்கள் தங்களது அத்தை மகளை காணச் செல்லவில்லையா?"
"என் ஆசை மனையால் இங்கிருக்க, அவர்களைத் தேடி நான் எதற்காக செல்லப் போகிறேன், என் அன்னக்கிளியே?"
"அப்படியா!... ஆனால் உங்கள் அத்தை மகளின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை கண்டு விட்டால் போதும், தங்களை சுற்றியுள்ள உலகம் கூட தங்களுக்கு மறந்து விடுமே?"
அவள் புருவத்தை ஏற்றி, கண்களில் கூர்மையுடன், வார்த்தைகளில் கொக்கியிட்டு நிறுத்த,
"உண்மை தான், உறவுகளின் மீது கொண்ட பாசத்தால், சிறிது நிதானத்தை இழந்து விட்டேன், ஆனால் என் உயிரில் கலந்தவளை தனியாக தவிக்க வைத்து விட்டு, எவ்வாறு அவளை மறந்து போவேன். உயிர் பிரியும் நேரத்தில் கூட அவளை பிரிந்து செல்ல மனம் வராமல், உனது முகத்தை மட்டும் என் கண்களுக்குள் நிறைத்த படி உயிர் நீத்தேனே!... அப்படி இருந்தும் கூட என் மீது நம்பிக்கை வரவில்லையா மதுரா?...."
அவன் வார்த்தைகளை முடிக்கும் முன்பே, ஒடிச் சென்று அவனை கட்டிக் கொண்டவள்.
"வேண்டாம் தீரா, நான் தங்களை நம்பவில்லை என்றால் என்னையே நான் மாய்த்துக் கொண்டதற்கு சமம். நான் தங்களிடம் விளையாட்டுக்காக அப்படி பேசுவேன் அவ்வளவே, இனியொரு முறை இதுபோல பேசி என் மனதை நோகடிக்காதீர்கள்."
மதுராவை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தீரனுக்கு தெரியாதா என்ன? தன்னை அணைத்துக் கொண்டவளை பூக்குவியலைப் போல கைகளில் அள்ளிக் கொண்டவன், ஜென்ம ஜென்மமாக அவள் மீது கொண்ட தன் ஒட்டுமொத்த காதலையும் அவளிடம் காட்டி, அவளை கொண்டாடி தீர்த்தான். அடுத்து வந்த நாட்களில் அவர்கள் தீரன் மதுராவாகவே தங்களது வாழ்வை வாழ்ந்தனர். தம்பதியராகவே திருவிழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டவர்கள். கொற்றவை அன்னையின் கோவிலிலிருந்து சீர் எடுத்து வரும் விழாவை பக்தியோடு மேற்கொண்டனர். குருந்தங்காட்டிற்குள் சென்றபோது மதுராவின் கண்கள் தானாக கலங்கியது, அவளது கரங்களை கோர்த்தபடி ஆறுதல் அளித்தான் வேந்தன். பல வருடங்களுக்குப் பிறகு அழகு நாச்சிஅம்மைக்கு கோலாகலமாக விழா எடுக்கப்பட்டது.
அந்த ஒரு வாரத்திற்குள் குருந்த மரத்தின் அடியில் கொற்றவை தேவிக்கு சிலை எழுப்பும் வேலையை ஆரம்பித்திருந்தான் வேந்தன். திருவிழா முடிந்து வரும் மறுவாரத்தில் ஒரு நன்னாளில், கொற்றவை அன்னையை பிரதிஷ்டை செய்து விடலாம் என்று ஊர் பெரியவர்களால் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான வேலைகள் மொத்தத்தையும் வேந்தன் தன் தலைமையில் ஏற்றுக்கொண்டான்.
திருவிழாவிற்கு ராகுலும் தனது குடும்பத்தாரை அழைத்து வந்திருந்தான். ஏனென்றால் ஒரு வித ஈர்ப்பு நிரஞ்சனாவின் மீது அவனுக்கு ஏற்பட்டு இருந்தது, பார்க்கும் பெண்களை எல்லாம் தன் உடன் பிறந்த தங்கையாக நினைத்தவனுக்கு, நிரஞ்சனாவை அவ்வாறு நினைக்கத் தோன்றவில்லை. ஏதோ பல வருடங்கள் பழகியது போல ஒரு பிணைப்பு, அவளை விட்டு தள்ளி இருக்க அவனால் முடியவில்லை. அதுபோன்ற ஒரு நிலையில் தான், நிரஞ்சனாவும் இருந்தாள்.
திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அடுக்கடுக்காக பல வேலைகள் குவிந்து கிடந்தன, அதனால் திருவிழா முடியும் வரை அனைவரும் வேடந்தூரிலேயே தங்கி இருந்து, வேலைகளை பகிர்ந்து கொள்வதாக ஏற்பாடாக இருந்தது.
திருவிழா வேலையாக ஆண்கள் அனைவரும் கோவில்வரை சென்றிருக்க, பெண்கள் வேலையாக உள்ளே இருந்தனர். அவர்களுடன் இல்லாமல் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் தனியாக அமர்ந்து, வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா, இன்று ஏனோ ராகுலின் நினைவு அதிகமாக அவளை தாக்கியது. அந்த நேரத்தில் தான், தனது குடும்பத்தாருடன் வாசலில் வந்து நின்றான் ராகுல், சத்தம் கேட்டு வீட்டு பெண்கள் வெளியே வந்து பார்க்க, தனது குடும்பத்தார் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியவன், அங்கு நிரஞ்சனாவை தன் கண்களால் துளாவ, அவனது தவிப்பை புரிந்து கொண்ட மது, ராகுல் அருகே வந்து யாரும் அறியாமல் பின்பக்கமாக கை நீட்ட, புரிந்து கொண்டவன் பாய்ந்தோடினான் தனது பிரியமானவளை காண, ஏதோ உந்துதல் தோன்ற, தனக்கு பின்னால் திரும்பி பார்த்த நிரஞ்சனா, அங்கு நின்ற ராகுலை கண்டவுடன் ஓடிச் சென்று அவனை கட்டிக் கொண்டாள்.
"என்னை உங்களோடவே கூட்டிட்டு போயிடறீங்களா?.... நீங்க இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல."
சரியாக அந்த நேரத்தில் தான், வீட்டு ஆண்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். கோவிலுக்கு வேலைக்காக எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் வீட்டின் பின்புறம் இருக்க, அதை எடுத்து செல்ல வந்தவர்கள், இந்த காட்சியை கண்டு அப்படியே சிலையாகி நின்றனர். இவ்வளவு நாட்களாக நிரஞ்சனாவின் அமைதிக்கு காரணம் வேந்தனின் திருமணம் என்று நினைத்துக் கொண்டிருக்க, இப்போதுதான் அவள் முகம் வாடி இருந்ததற்கு காரணம் ராகுல் என்று அறிந்து கொண்டனர்.
அவசரமாக வீட்டு உறுப்பினர்களுக்கு நடுவே பஞ்சாயத்து வைக்கப்பட்டது. ராகுலின் தாயாருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, இருந்தும் தன் மகனை பற்றி நன்கு அறிந்திருந்ததால், மகனின் காதலுக்கு பக்க துணையாக நின்றார்.
No comments:
Post a Comment