அத்தியாயம் 98
பீரோவினுள் எதையோ தேடிக் கொண்டிருந்த வேந்தனுக்கு பின்னால் வந்து நின்றாள் மதுரா.
"சார்,..... அது வந்து,.... அம்மாக்கு உடம்பு சரியில்லை, அதனாலதான் என்னால நம்ம ரிலேஷன்ஷிப்பை பற்றி வெளிப்படையா எல்லார் முன்னாடியும் சொல்ல முடியல,.... அம்மாவோட மனசு சந்தோஷப்படணும்னு தான் நாம ஒற்றுமையா இருக்குற மாதிரி நடிச்சேன், சாரி,... நான் சொன்னபடி கண்டிப்பா உங்க வாழ்க்கைய விட்டு போயிடறேன்."
அவளது பேச்சைக் கேட்டு அதிர்ந்து நின்றவன், இன்னும் தனது மனதை அவள் புரிந்து கொள்ளவில்லையா என்று வேதனையோடு, திரும்பி அவளது விழிகளை ஊடுருவி நோக்க, அவனது பார்வை வீச்சை தாங்கிக் கொள்ள முடியாமல் தலை குனிந்து நின்றாள்.
அந்த வீட்டில் உள்ளவர்களின் அன்பை கண்டு, மதுராவின் மனம் எப்போதோ உருகத் தொடங்கி விட்டது. அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் இதேப் போல இருந்து விட மாட்டோமா என்று, இப்போதெல்லாம் அவளது மனது ஏங்க தொடங்கியது, இருந்தாலும் மனதை கல்லாக்கி கொண்டு, தனது சுயநலத்திற்காக வேந்தனது வாழ்க்கையை கெடுக்க கூடாது என்று நினைத்து, மறுபடியும் அன்று கொண்டு வந்து அந்த டிவோர்ஸ் பாத்திரத்தை அவன் முன்பு வைத்தால்,
"இதுல நான் எப்பவோ சைன் பண்ணிட்டேன் சார், நீங்களும் சைன் பண்ணிட்டீங்கன்னா இதை சப்மிட் பண்ணிடுவேன், என் அம்மாவுக்காக தான் இந்த கல்யாணத்தையே பண்ணிக்கிட்டோம், ஆனா என்னோட சுயநலத்துக்காக உங்களுடைய வாழ்க்கையை அழிக்க எனக்கு விருப்பம் இல்ல, நாம பிரிஞ்சதுக்கு அப்பறம், நீங்க உங்க ஆசைப்படி சந்தோஷமா உங்க வாழ்க்கைய வாழலாம் சார், நான் எந்த விதத்திலும் அதுக்கு தடையா நிற்க மாட்டேன்."
"என்னோட ஆசை எதுவா இருந்தாலும் நிறைவேற்றி வைப்பியா மதுரா?"
அவனது மதுரா என்ற அழைப்பு அவளது ஆழ் மனதுவரை சென்று தீண்டியது, அவளால் அவன் கண்களை விட்டு வேறு எங்கும் பார்வையை திருப்ப முடியவில்லை, கட்டுண்டது போல் அவள் தலை தானாக ஆம் என்று ஆடியது.
"ப்ளீஸ் இன்னொரு தடவை இந்த காகிதத்தை என் கண்ணு முன்னாடி கொண்டு வராதே, என்னை பொருத்தவரைக்கும் கல்யாணம் ஆகுறது ஒரு தடவை தான், அதுவும் மனம் கவர்ந்த ஒருத்தியோட தான். கண்டிப்பா என்னால இதை மாத்திக்க முடியாது. உனக்கு என்னை பிடிக்கலைன்னாலோ, இல்ல என் கூட சேர்ந்து வாழ உனக்கு விருப்பம் இல்லை என்றாலோ, நான் தடை செய்ய மாட்டேன். நிச்சயமா நீ உன் விருப்பப்படி எங்கே வேணும்னாலும் போகலாம். பட் எனக்காக இப்படி பண்ணறேன்னு மட்டும் சொல்லாத ப்ளீஸ் மதுரா."
குரல் தழுதழுக்க அவளிடம் பேசிய வேந்தன், இதற்கு மேலும் தான் இங்கு இருந்தால், வேறு ஏதேனும் பேசி விடுவேனோ என்று நினைத்து, அவ்விடத்தை விட்டு வேகமாக சென்று விட, அவன் சென்றது கூட உணராது அசையாத சிலையாக அங்கேயே நின்று விட்டால் மதுரா.
அவனது வார்த்தைகள் அவளை கட்டிப் போட்டது. அவருக்கு தன்னை பிடித்திருக்கின்றதா?... அவரது கண்கள் பொய் கூறவில்லையே?.... அதில் உண்மையான அன்பை நான் கண்டேனே!..... அப்படி என்றால் இது எனக்கான வாழ்க்கை, வேந்தன் எனக்குரியவர், அதோடு இந்த குடும்பமும் என்னுடையது தான்.... அவளது எண்ணப்போக்கை நினைத்து, அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது, சொல்லப் போனால் வேந்தன் இப்படி கூறியதற்கு இவள் கோபம் தான் கொண்டிருக்க வேண்டும், அதை விடுத்து மனம் முழுவதும் மகிழ்ச்சியோடு இருக்க காரணம், அவள் நெஞ்சில் வேந்தன் தனது காலடித்தடத்தை பதித்து விட்டான் என்பதே ஆகும். இதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவள் ஒன்றும் சிறு பெண் அல்லவே.
தனது நினைவுகளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தவளை அவளது போன் இசைத்து கலைத்தது. அவளது தோழி வினு தான் அவளுக்கு அழைத்திருந்தாள்.மகிழ்ச்சியோடு அவளது அழைப்பை ஏற்றவள்,
"வினு எப்படி இருக்க? உன்னோட பேசி எவ்வளவு நாளாச்சு? ஏன் எனக்கு கூப்பிடவே இல்ல?"
"ஏண்டி பேச மாட்டே, அங்க போனதும் கூட ஒருத்தி இருந்தாங்கறதே மறந்துட்டே? உன் போன் கூட ரொம்ப நாளா ஸ்விட்ச் ஆஃப்லயே கிடந்தது. உனக்கு ஏதாவது பிரச்சனையோன்னு நினைச்சு, வேந்தன் சாருக்கு கூப்பிட்டப்போ தான், நீ அங்க உன் குடும்பத்தோட மிங்கில் ஆகி பிஸியா இருக்கேன்கிறது தெரிஞ்சுது."
"அதுவா,... நான் இருந்த மனநிலைமையில் போனுக்கு சார்ஜ் போட மறந்திருப்பேன், அதுதான் சுவிட்ச் ஆப்னு வந்து இருக்கும்."
"அதுதான் தெரியுதே, நீ என்னை நல்லாவே மறந்துட்டேன்னு, நீ மறந்தாலும் வேந்தன் சார் மறக்காம அங்க நடக்குற திருவிழாவுக்கு என்னை கூப்பிட்டு இருக்காரு தெரியுமா? அதோட என் அப்பா அம்மா கிட்ட பேசி பர்மிஷனும் வாங்கிட்டாரு, இன்னும் ரெண்டு நாள்ல நான் அங்க வர போறேன்."
"ஹே!.... அவர் இதை பத்தி என்கிட்ட ஒண்ணுமே சொல்லல,.... ரொம்ப சந்தோஷம் டி."
"ஒருவேளை உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைச்சிருப்பாரோ என்னவோ! நான் தான் போன் பண்ணி கெடுத்துட்டேன், மது நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா?.... எனக்கு தெரிஞ்சு வேந்தன் சார் உன் மேல, ரொம்ப அன்பா இருக்கிற மாதிரி தான் எனக்கு தெரியுது. கண்டிப்பா நீ அந்த டிவோஸ் பேப்பர்ல அவர் கிட்ட கையெழுத்து வாங்கியே ஆகணுமா?... இது ஒரு நல்ல வாழ்க்கை தானே?.... நீ ஏன் இதையே கண்டினியூ பண்ண கூடாது."
"புரியுது வினு, ஆனா இது ஒன்னும் டிராமா கிடையாதே, பழக பழக பிடிச்சிரும்னு சொல்றதுக்கு, பிரிஞ்சு போகனும்னு நான் முடிவெடுத்ததே அவருக்காக தான், என்னோட சுயநலத்துக்காக தான் இந்த அவசர கல்யாணமே நடந்தது, இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவரும் என்னை பிடித்திருக்கிறதா சொன்னாரு."
"ஹேய் சூப்பர் டி! அப்புறம் என்ன உனக்கு பிரச்சனை? நீயும் ஐ லவ் யூ டூன்னு சொல்லி ஜோடி சேர்ந்துக்க வேண்டியது தானே, அதுதான் பார்த்தேனே, முதல் நாள் அப்படி சண்டை கட்டிட்டு, அடுத்த தடவை பார்க்கும்போது ஆபீஸ்ல அவரு கண்ணாலயே போயிட்டு வரேன்னு சொல்றதும், நீ அவருக்கு தலையை உருட்டி ஆட்டி சம்மதம் சொன்னதையும், நீங்க ரெண்டு பேரும் சரியான பேர் தெரியுமா?"
" போதும் போதும் உன் சார் புராணம், நீ ஊருக்கு வா, அதுக்கப்புறம் பேசிக்கலாம், மறக்காம அப்பா அம்மாவை கேட்டதா சொல்லு."
"சரி மது நான் ஊருக்கு வரும்போது, ரெண்டு பேரும் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கான ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன், புரியுது இல்ல."
" முதல்ல நீ ஊருக்கு வாடி அதுக்கப்புறம் அதெல்லாம் பேசிக்கலாம்."
அவளிடம் பேசிவிட்டு போனை வைத்தவள், முகத்தில் புன்னகை மலர கீழே வந்தாள். சில நாட்களாக மௌனமாக சுற்றிக் கொண்டிருந்தவள் விரிந்த புன்னகையோடு அனைவரிடமும் கலகலப்பாக பேசத் தொடங்கினாள், அடிக்கொரு முறை தன் கணவன் வருகிறானா என்று கண்களால், வாசலில் அவனை தேடவும் மறக்கவில்லை.
தான் எடுத்து வந்த பொருட்களை எதிரில் வந்த கோயில் ஆட்களிடம் கொடுத்துவிட்டு, தனது நண்பர்களை தேடிச் சென்றான் வேந்தன். அவர்கள் அப்போதுதான் கோவில் வேலைகளை முடித்துக் கொண்டு, கோவிலுக்கு சற்று தள்ளி இவர்கள் எப்போதும் சந்தித்து பேசும் வெளிமண்டபத்தின் திண்ணையில், மூலையில் அமர்ந்து திருவிழா ஏற்பாடுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
சோகமாக வந்தவன் அவர்களுக்கு இடையே வந்த அமர, வெற்றி தீபன் மூர்த்தி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்போதுதான் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றிருந்தான் மாறன். அவனும் இப்போது இவர்கள் கூட்டத்தில் சேர்ந்து, கலகலப்பாகவும் பெரியவர்களிடம் தன்மையாகவும் பழக தொடங்கி விட்டான்.
"என்ன மாப்ள காத்து தப்பா அடிக்குதே?... எப்பவுமே வீடு விட்டா கோவில் வேலை, கோயில் விட்டா வீடுன்னு இருக்க வேந்த மகராசா, இந்த ஏழைங்க பக்கம் கருணை பார்வையை வீசி இருக்காரு."
"டேய் மூர்த்தி ஓவரா பேசாதே, ஏன்டா நான் உங்க கிட்ட வர்றதே இல்லையா? இல்ல பேசுறது இல்லையா?"
"பேசுனீங்க மகராசா, ஆனா அதெல்லாம் உங்க கல்யாணத்துக்கு முன்னாடி, ஆனாலும் கல்யாணம் ஆனா பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவாங்கன்னு ஊரும் உலகம் சொல்ற பழமொழியை, உன்னோட வாழ்க்கையில இருந்து தான்டா நான் பிராக்டிகலா தெரிஞ்சுகிட்டேன்."
"டேய் மூர்த்தி எதுக்கு வேந்தனை வம்புக்கு இழுக்கறே?"
"ஆமா இவரு வயசு புள்ள, நான் கையை புடிச்சு வம்பு இழுக்கிறேன், ஏன்டா தீபா நீ வேற கடுப்ப கிளப்புறே, இவன் கல்யாணமே சங்கடத்தில் நடந்துச்சே, அந்த புள்ள முகத்தை திருப்பிட்டு இருக்கும், பாவம் இவன் கஷ்டத்துல இருப்பான்னு நினைச்சு இவனை பார்க்க போனா, கழுத்தை புடிச்சு வெளியே தள்ளாத குறையா விரட்டி விட்ராண்டா, சரி வெளிய எங்கயாவது நிறுத்தி பேசினா கூட, புது மாப்பிள்ளை மாலை நேரம் எங்கேயும் வெளியே சுத்தக் கூடாதுன்னு பாட்டி சொல்லி இருக்காங்கன்னு, அப்படியே கழட்டி விட்டு போறான்டா."
" டேய் பெரியவங்க சொன்னதை மதிச்சு நடந்தது ஒரு குத்தமா? இதுக்கு போய் இவ்வளவு பெருசா, டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்கே நீ."
"டேய் அவன் சந்தோஷமா இருந்தா உனக்கு ஏன்டா வேகுது? "
"டேய் வெட்டிப் பயலே நீ என்ன அவனுக்கு வக்காலத்தா?"
"வெற்றி மூர்த்தி இரண்டு பேரும் சண்டை போடுறதை முதல்ல நிறுத்துங்க, வேந்தா என்ன ஆச்சு? ஏன் உன் முகம் டல்லா இருக்கு? ஏதாவது பிரச்சனையா?"
சரியாக அந்த நேரத்தில் வேந்தனின் அலைபேசி இசைத்தது, அதில் சந்துருவின் பெயரை கண்டு முகச்சுழிப்போடு அதை கீழே வைத்தான்.
"டேய் சந்துரு தானே கூப்பிடறான், போனை ஏன் அட்டென்ட் பண்ண மாட்டேங்கறே? ஏதாவது அவன் கல்யாண விஷயமா கூப்பிட போறான் வேந்தா, எடுத்து பேசு."
"சார் எப்படி அவன் போனை அட்டென்ட் பண்ணுவாரு, போனை எடுத்தால் அவன் கழுவி கழுவி இல்ல ஊத்துவான், அவனோட கல்யாணத்த ஒரேடியா நிறுத்திய மகானாச்சே."
"என்ன சந்துருவோட கல்யாணம் நின்னுடுச்சா? டேய் மூர்த்தி என்ன தாண்டா சொல்ல வர, சொல்றதை ஒழுங்கா சொல்லு ."
"ஆமாண்டா சந்துருவோட அப்பா கிட்ட போய், சந்துரு லாவண்யாவோட லவ்வை பத்தி ஓபன் பண்ணிட்டான், அதோட லாவண்யா யாரோட பொண்ணுங்கறதையும் சொல்லிட்டு வந்துட்டான். அவங்களுக்கு நடக்க இருந்த ரெஜிஸ்டர் மேரேஜும் நின்னு போச்சு."
"அடப்பாவி, ஏண்டா உனக்கு இந்த கொலவெறி, அவங்க லவ்ல உனக்கு சீனியர் டா, அவங்க மேரேஜ் பண்ணா உனக்கு என்ன வந்தது?"
"இல்ல தீபா அப்பா அம்மாக்கு தெரியாம தான் மதுவும் நானும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்..."
"பண்ணிக்கிட்டோம்னு சொல்லாத மகனே, பண்ணிகிட்டேன்னு சொல்லு, ஏன்னா நீ பண்ண அந்த திருட்டு கல்யாணம் பத்தி, கையெழுத்து போட்ட அந்த பிள்ளை மதுவுக்கே தெரியாதே, சரி சரி முறைக்காத மேட்டருக்கு வா."
"அப்படி பண்ணியதால மதுவும் சரி, அவளோட அப்பா அம்மாவும் சரி எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நேரடியா பார்த்துட்டேன், என்னோட பேரன்ட்ஸீம் கூட எனக்கு எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா இருந்திருப்பாங்க, அவங்க கண்ணுல அந்த வலியை பார்த்துட்டு, என் பிரண்டு அவனும் அதே தப்பு பண்ணும் போது பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? அதுதான் சந்துருவோட அப்பாவை சந்திச்சு பேசினேன். எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா அவர் இவங்க மேரேஜ்க்கு ஒத்துக்குவாரு, அதனாலதான் இவங்களோட ரிஜிஸ்டர் மேரேஜ் பத்தியும் சொல்லிட்டு வந்தேன்."
இவன் பேசிக் கொண்டிருக்கும்போது தனது நண்பர்களின் பார்வை அதிர்ச்சியோடு வாசல் பக்கம் செல்வதை கண்டு, தனக்கு பின்னே திரும்பி பார்த்தான். அங்கே கண்கள் சிவந்த நிலையில் உச்சபட்ச கோவத்தில் சந்துருவுடன் நின்று கொண்டிருந்தால் மதுரா.
No comments:
Post a Comment