Search This Blog

Followers

Powered By Blogger

Wednesday, August 27, 2025

மன்னவரே 97


 

             அத்தியாயம் 97


  திருவிழாவிற்காக ஊரெங்கும் சொந்தங்கள் நிறைய ஆரம்பித்தனர். மது பெற்றோரையும் அண்ணனையும் கண்டு கொள்ளவே இல்லை, அவர்களை  வீட்டிற்கு வந்த விருந்தினர்களாக  மட்டுமே நினைத்தால், அவள்  அண்ணனாக முன் வந்து பேசினாலும்,  அவள் நின்று கூட பேசவில்லை, உடனே அங்கிருந்து சென்று விடுவாள்.


  சில நாட்களாகவே மது அந்த வீட்டில் சுற்றி கொண்டிருந்ததால், எது எது எங்குள்ளது என்று அனைத்தும் அத்துபடியாக தெரிந்தது. அது எப்படி என்று அவளுக்கே தெரியவில்லை . அடுப்படியிலும் சரி வீட்டின், உள்ளேயும் சரி, யாரேனும் ஒரு பொருளைக் கேட்டால், அவளது கால்களும் கைகளும் தன்னிச்சையாக அதை எடுத்து வந்து நீட்டியது. 


  அது எப்படி என்று அவளுக்கே தெரியவில்லை. அதுமட்டுமா? வேந்தன் தனது வீட்டை நெருங்கும் போதே, அவளது கால்கள் தானாகவே வாசலில் வந்து நிற்கும். இதைவிட தினமும் இரவு வேந்தனை விட்டு தள்ளி ஒரு  மூலையில் படுத்திருப்பவள், ஒவ்வொரு நாளும் காலையில், எப்படி வேந்தனின் நெஞ்சத்தில் தலை வைத்தபடி துயில் எழுகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. 


இதற்கும் வேந்தன் தான்  படுத்திருக்கும் இடத்தை விட்டு, ஒரு அடி கூட நகர்ந்ததில்லை, இவள் தான் அவனிடத்திற்கு சென்று அவன் நெஞ்சில் தலை சாய்த்து படுத்துக்  கொண்டிருக்கின்றாள். 


  இருவருக்கும் இடையே தலையணைகளை வைத்து பார்த்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை, அடுத்து வந்த நாட்களில் தரையில் பாய் போட்டு கூட படுக்க துவங்கி விட்டாள், என்ன ஆச்சரியம் மறுநாள் காலையில் எப்போதும் போல அவன் நெஞ்சில் இருந்துதான் துயில் எழுவாள்.


  இதைப் பற்றி அவனிடம் கேட்கலாமா என்று கூட பல நாள் யோசித்திருக்கின்றாள் , இருந்தும் அவன் ஏதேனும் தன்னை பற்றி தவறாக நினைத்து விடுவானோ?... என்று ஒரு மனம் கூற, அதை அப்படியே விட்டு விட்டாள். பாவம் அவள் அறியவில்லை இது எல்லாம் அவனது மணவாளனின் திருவிளையாடல் என்று.


  தினமும் இரவு தூங்கும் போது, நல்ல பிள்ளையாக சிறிது இடைவெளி விட்டு தான், மதுரா துயில்வாள். என்ன தான் படுத்தவுடன் அவள் உறங்கி விட்டாலும், என்றுமே அடுத்து சிறிது நேரத்தில் உறக்கத்தில் புரண்டு கொண்டே இருப்பாள், அரை தூக்கத்தில் இருக்கும் அவளை வேந்தன் இழுத்து, தனது மார்பிலே படுக்க வைத்துக் கொள்ள, அதன் பிறகு சுகமாக தூங்கிக் விடுவாள் அவனின் இதயராணி. எப்போது தனது மனைவியிடம் மாட்டிக் கொள்ள போகின்றானோ தெரியவில்லை!


மதுராவிற்கு இது திருமணம் முடிந்து வரும் முதல் பண்டிகை என்பதால்,  மாப்பிள்ளை பெண்ணிற்காக உடைகள் மற்றும் நகைகளை வாங்கி வந்திருந்தனர் அவளின் பெற்றோர், இது குறித்து  அவள் தாய் அவளிடம் பேச வந்த போது, அவரோடு பேச மறுத்து விலகி நடந்தால் மதுரா, ஒரு கட்டத்தில் அவளது கைகளை பிடித்துக் கொண்டு அவளது பாரா முகத்தைக் கண்டு அழத் தொடங்கி விட்டார் அன்னலட்சுமி.


பூவுப் பாட்டி தான் மதுராவை மிரட்டி, லட்சுமி அம்மாவின் அருகே அவளை அமர வைத்தார். அவளுக்குமே கண்களில் நீர் கோர்த்து விட்டது, இருந்தும் ஒரு பிடிவாதம், எப்படி தன்னை அவர்கள் தவறாக நினைக்கலாம், அந்த அளவு நம்பிக்கையை கூட, நான் அவர்களுக்கு கொடுக்கவில்லையா என்ன?... 


  அதுவும் தனது திருமணத்தை கூட பார்க்க மாட்டேன் என்று சொன்னவர்கள் தானே? என்று ஒரு கோபம். இருந்தும் தன் தாய் அழுவதை பார்க்க முடியாமல், அவர் அருகே மறுப்பு கூறாமல் அமர்ந்து விட்டாள்.


" லட்சுமி எதுக்காக இப்படி அழுதுட்டு இருக்க? இப்பதான்  ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்து, ஏதோ நாலு வார்த்தை பேசிட்டு இருக்கே, அது பொறுக்கலையா?... மது இது ரொம்ப தப்பும்மா, அம்மா செஞ்சது தப்பாவே இருக்கட்டும், எவ்வளவு முறை நீ ஏதாவது தப்பா பேசி இருந்தாலும், இறங்கி வந்து அவ சமாதானப்படுத்தி இருப்பா?...இப்போ ஏதோ புத்தி கெட்டுப் போய் தப்பா பேசிட்டா, அதுக்காக அந்த ஒரு வார்த்தையையே புடிச்சுகிட்டு அவளை நீ ஒதுக்கி வைக்கலாமா? எடுத்து தூக்கி வீச, இது என்ன வேண்டாத பொருள்ன்னு நினைச்சயாம்மா? உறவுமா,.... ஒரு குடும்பத்துக்குள்ள நல்லது கெட்டது, மன கசப்பு எல்லாமே இருக்க தான் செய்யும், அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு?... 


    அதுக்காக இது பெருசா இருக்கு, இது சிறுசா இருக்குன்னு சொல்லி அதை வெட்டி வீசவா செய்யறோம்? எல்லாத்தையும் ஒண்ணா தானே வெச்சி இருக்கோம், அந்த மாதிரி தான் வீட்ல இருக்குற பெரியவங்களா இருந்தாலும் சரி, சின்னவவங்களா இருந்தாலும் சரி, அவங்க பேச்சு நம்மள காயப்படுத்தினாலும் பொறுத்து தான் போகணும், அதுதான் ஒரு குடும்பத்தையே வடிவமைக்கும். 


   முதல்ல அவ கிட்ட பேசு. டாக்டர் ஏற்கனவே உங்க அம்மாவை பார்த்து சூதானமா பாத்துக்க சொன்னாங்க, அவ மனசு கஷ்டப்படுற மாதிரி எந்த விஷயத்தையும்  சொல்லாதீங்க, முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா வச்சுக்கங்கன்னு  சொன்னாங்க. இப்போ நீயே அவளை கஷ்டப்படுத்தலாமா மதும்மா?"


  ஏற்கனவே தனது அன்னை அழுத  போதே மதுராவிற்கும் கண்களில் நீர் கோர்த்து விட்டது. இப்போது அவரது உடல்நிலையை பற்றி கேள்விப்பட்டதும் மனது பொறுக்கவில்லை.


  “ரொம்பத்தான் உங்க மருமகளுக்கு சப்போர்ட் பண்றீங்க? உங்க ஆசை மருமக என்கிட்ட கோபப்பட்டு  பேசும்போது எங்க போனீங்களாம்? அப்போ எனக்கு சப்போர்ட்டுக்கு வந்தீங்களா என்ன? அவங்களுக்கு துணையாக தானே இருந்தீங்க,..... அப்படி நான் என்ன தப்பு  தப்பு பண்ணிட்டேன்?.... என் கல்யாணத்துக்கே வர மாட்டேன்னு ஒதுங்கி நிக்கிற அளவுக்கு?....லவ் பண்ணது ஒரு குத்தமா? அவங்க என்னை ஒதுக்கினதால தான்,  நானும் ஒதுங்கியே இருந்துட்டேன்."


  "  நீ  காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதை நான் ஒன்னும் தப்புன்னு சொல்லல மது, ஏன்னா நானும் அதே வேலையை தான் பண்ணிணேன். ஆனா நீ ஏன் உன் காதலை பத்தி எங்ககிட்ட எதுவுமே சொல்லல?...உன்னோட விருப்பத்தை வாய் விட்டு சொல்ல கூட முடியாத படியா நாங்க உன்னை வளர்த்தோம்?.... அதுவும் இல்லாம அந்த கோயில்ல வெச்சு நீ இந்த புனிதமான தாலியை பத்தி தப்பா பேசவும் என்னால பொறுத்துக்க முடியல,.... என்னோட வளர்ப்பு தப்பா போயிடுச்சோன்னு நினைச்சு தான், நான் அப்படியெல்லாம் பேசிட்டேன், மன்னிச்சுடுடா."


  "ம்ஹூம், மன்னிச்சாச்சு மன்னிச்சாச்சு  அதுதான் நான் உங்களை மன்னிக்கலைன்னா, அடிக்கறதுக்கு ஆள் துணைக்கு வச்சுட்டு இருக்கீங்களா? எந்த  ஊர்லையும் இவ்வளவு ஒற்றுமையான மாமியார் மருமகளை நான் பார்த்ததில்லைப்பா!..."


  "எம் மருமகளுக்காக நான் வராம  வேற யார் சப்போர்ட்டுக்கு வருவாங்க?... என் சப்போர்ட் எப்பவுமே என் மருமகளுக்கு தான்."


  "நீங்க உங்க மருமகளுக்கு சப்போர்ட்டு பண்ணா,  எனக்கு ஏன் மாமியார் சப்போர்ட்க்கு வருவாங்க, அதுவும் ஒருத்தரா என்ன?.... ரெண்டு பேர் இருக்காங்களே எனக்கு மாமியாரா.... என்னத்தை சொல்றீங்க?" 


  கோவில் விஷயமாக ஏதோ ஒரு முக்கியமான பொருளை எடுக்க வந்த வேந்தன், வெகு நாட்களுக்குப் பிறகு மதுவின் கலகலப்பான பேச்சை கேட்டு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான்.


  "கண்டிப்பா மது எங்க வீட்டுக்கு  குலமகள் நீ, இந்த வீட்ல இருக்கிற எல்லாரோட சப்போர்ட்டும் உனக்கு மட்டும் தான்."


      இந்த வார்த்தை போதாதா பெற்றவர்களுக்கு, மதுவின் குடும்பத்திற்கு மனது நிறைந்து விட்டது. மதுவிற்கு நல்ல குடும்பத்தில் வாழ்க்கை அமைந்துவிட்டதை கண்டு  நிம்மதியாக இருந்தது.


  மதுவை பொருத்தவரை அவளது பெற்றோருக்கு தான் வேந்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவே இருந்து விட்டுப் போகட்டும், நாளை எங்களுக்கு விவாகரத்தே ஆனாலும் அதை யாரிடமும் சொல்லாமல், இங்கிருந்து வெளியேறி விடுலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போதைக்கு தன் தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும் இத்தகைய சூழ்நிலையில், பிரிவது பற்றிய பேச்சு இப்போதைக்கு வேண்டாம் என்று ஒத்திப் போட்டு, வேறு விஷயங்களை பேசி அவர்களை சிரிக்க வைத்தாள்.


  "மது எனக்கொரு வாக்கு கொடுப்பயா நீ? எக்காரணத்தைக் கொண்டும் மாப்பிள்ளை கூட நீ சண்டை போடக் கூடாது, உன் கழுத்தில் இருக்கிற இந்த தாலிக்காக தான் நமக்கு சண்டையே வந்துச்சு, எக்காரணம் கொண்டும் இதை நீ கழுத்தில் இருந்து கழட்டக் கூடாது, இந்த வீடு தான் இனி உனக்கு உலகம், இங்க இருக்கிறவங்க யார் மனமும் நோகும் படி எப்பவும் நடந்துக்க கூடாது, என் வளர்ப்பு எப்போதும் தப்பா போகக் கூடாது மது."


  நீண்ட நேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்ததால், அவரின் மூச்சு தடை பட ஆரம்பித்தது. அவரது கைகளை பிடித்துக் கொண்ட மது,


"கண்டிப்பா இந்த வீட்ல யார் மனசும் நோகும் படி, நான் நடந்துக்க மாட்டேன்ம்மா. அதோட உங்க மாப்பிள்ளை கண் கலங்காதபடி, வாழ்க்கை முழுவதும் நல்லபடியா பாத்துக்குறேன் போதுமா?.. வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்து, என் தொல்லை அனுபவிக்கனும்னு அவர் தலையில் எழுதி இருந்தா, யாரால் அதை மாத்த முடியும்."


   வேந்தனுக்கு அவளது பேச்சை கேட்டு சந்தோஷமே, மனதுக்குள் குதூகளித்தாலும் அதை வெளி காட்டிக் கொள்ளவில்லை, ஒருவேளை தனது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்து விட்டால் மதுரா சந்தேகம் கொண்டு இவனை  கேள்விகளால் துளைத்தெடுக்க கூடுமே?... அதனால் அங்கு இருந்தவர்களை பார்த்து ஒரு சிறு புன்னகையை மட்டும் வீசிவிட்டு, தனது அறைக்கு சென்றான்.


மதுரா அவனை சற்றும் அங்கு எதிர்பார்க்கவில்லை, அதுவும் தான் இவ்வாறு பேசிய இந்த நேரத்தில். தனது இந்தப் பேச்சுக்கான  விளக்கத்தை அவனுக்கு கூற வேண்டும் என்று, அவன் சென்றதும் பின்னாலேயே அறைக்கு சென்று விட்டாள். சுற்றி இருந்த உறவுகள்  இவர்கள் செயலை கண்டு, நல்ல அன்னியோன்யம் என்று நினைத்துக் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் புன்னகைத்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment