அத்தியாயம் 96
ராகுலுக்கு தனது குடும்ப சூழ்நிலை பற்றி தெளிவாக தெரிந்ததால், தொழிலில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து விட்டு, நிரஞ்சனாவை பெண் கேட்டு வரலாம் என்று தனது மனதிற்குள் ஒரு உறுதி எடுத்திருந்தான். ஆனால் திடீரென்று அவளை கண்டதும், தனது உணர்வுகளை அடக்க முடியாமல், நிரஞ்சனா அவனை கட்டிக் கொண்டபோது, அவனும் அவளை அணைத்திருந்தான்.
ஏனோ அவளை விட்டுக் கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. அவன் சுயநினைவுக்கு வரும் முன்பே, விஷயம் விபரீதமாகி இருந்தது. தன்னை நம்பி, திருவிழாவிற்கு அழைப்பு விடுத்திருந்த இந்த குடும்பத்திற்கு, இப்படி ஒரு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டேனே?.. இதனால் தன் குடும்பமும் இப்படி அனைவரின் முன்பும், தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை வந்து விட்டதே?... என்று மனம் வருந்தினான்.
சரோஜா பாட்டி தான் முதலில் தன் திருவாயை திறந்தார்.
"எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம வீட்டுக்குள்ள புகுந்து, நம்ம புள்ளகிட்டையே இப்படி நடந்திருப்பான்."
"ஆத்தா நீ கொஞ்சம் சும்மா இரு, தம்பி நாங்க எல்லாரும் உங்க மேல நிறையவே மரியாதை வெச்சிருந்தோம், கண்டிப்பா இப்பவும் வெச்சிருக்கோம், ஏன்னா எங்க வீட்டு பொண்ணை பத்திரமா நீங்க தான் கூட்டிட்டு வந்தீங்க, அவளுக்கு உங்களை பிடிச்சிருந்தா கட்டி கொடுக்கறதுல எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, ஏன்னா எங்க குடும்பத்துல இருக்கற எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, நாங்க காசு பணத்தையோ இல்ல, சாதியையோ பெருசா பார்க்கறது இல்ல, குடும்பத்தையும் பையனோட குணத்தையும் தான் பார்க்கறோம், ஆனா உங்க குடும்பமும் உங்க சாதி சனமும் எங்க பொண்ணை இது போலவே ஏத்துக்குமா?"
ராகுல் இவர்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் அதிர்ந்து போய் நின்றதிலேயே வெளிப்படையாக தெரிந்தது.
"என்ன தம்பி பேசாம நிக்கிறீங்க? எங்க முடிவை நாங்க சொல்லிட்டோம், இனி நீங்களும் உங்க அம்மாவும் தான் முடிவை சொல்லணும்."
தன் மகன் அதிர்ச்சியில் நிற்பதை கண்டு தானே பேச ஆரம்பித்தார் ராகுலின் தாயார்,
"எனக்கு என் மகனோட சந்தோஷம் தான் முக்கியம். எங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம், நாங்க எங்க ஊரை விட்டு வந்து பல வருஷம் ஆச்சு, என் பையன் தான் பாடுபட்டு என் பொண்ணுங்களை கரையேத்தினான், இப்போ அவனோட கல்யாணத்தை முடிச்சிட்டு, அவனோட இன்னொரு தங்கச்சிக்கு நான் மாப்பிள்ளை பார்த்துக்கிறேன், நீங்க ஆக வேண்டியதை பாருங்க."
அப்போதுதான் அவனுக்கு சுய நினைவு வந்தது, உடனே அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.
"ஐயா ஒரு நிமிஷம், எனக்கு நிரஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் தான், ஆனா இங்கே ராணி மாதிரி இருக்குற உங்க பொண்ணை கல்யாணத்துக்கு அப்பறம், நானும் ராணி மாதிரி பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். அதுக்காக ஒரு சில வருஷம் மட்டும் எனக்காக காத்திருக்க முடியுமா? நான் இப்ப தனியா தொழில் தொடங்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன், அதுல ஒரு நல்ல நிலைக்கு வந்துட்டு, என் தங்கச்சிக்கும் ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணத்தை முடிச்சிட்டு, நானே உங்ககிட்ட வந்து பொண்ணு கேட்கலாம் என்று தான் நினைச்சுட்டு இருந்தேன், அதுக்குள்ள இப்படி எல்லாம் ஆயிடுச்சு. ப்ளீஸ்,.... எனக்கு கொஞ்ச காலம் மட்டும் டைம் கொடுங்க, கண்டிப்பா ஒரு நல்ல நிலைமையில் வந்து நிரஞ்சனாவை கல்யாணம் செஞ்சு நான் கூட்டிட்டு போறேன்."
இப்போது வேந்தனும் அவனுக்குத் துணையாக வந்தான், ஏற்கனவே ராகுலுக்கு ஆதரவாக பேசி தான் தனது தாத்தாக்களை இவ்வாறு முடிவெடுக்க வைத்திருந்தான். இப்போது அவனது வேலையை பற்றியும், அவன் வேலையில் எவ்வளவு சின்சியர் என்பதை பற்றியும் கூறி, விரைவிலேயே அவன் முன்னேறுவதற்கு வாய்ப்புள்ளது, அதனால் நாம் அவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் கொடுப்பதில் தவறு இல்லை என்று கூற, அவர்களும் ஒரு மனதாக சம்மதித்தனார்.
மறுமொழி பேச வந்த சரோஜா பாட்டியை மாறன், தனது பார்வையாலேயே அடக்கி இருந்தான். எப்படியோ நிரஞ்சனா மற்றும் ராகுல் திருமணமும் ஒருமனதாக முடிவானது.
வெகு நாட்களாக தீபன் வீட்டிற்கு வராமல் இருப்பதால், அனைவரும் அவனுக்கு ஏதோ வேலை என்று நினைத்திருக்க, கவியால் மட்டும் தான் சரியாக அவனது மனதை புரிந்து கொள்ள முடிந்தது. குற்ற உணர்ச்சியால் தான் அவன் வீட்டிற்கு வருவதில்லை என்று புரிந்து கொண்டவள், நேராக அவனது இல்லத்திற்கே சென்றுவிட்டாள்.
அன்று அவனுக்கு விடுமுறை நாள் தான், எப்போதுமே விடுமுறை நாட்களில் வேந்தனின் இல்லத்தில் தான், தனது பொழுதை போக்கிக் கொண்டிருப்பான். ஆனால் இன்று ஏனோ, அங்கு செல்ல தயக்கமாக இருந்தது. என்னதான் அவர்கள் தன்னை தப்பாக நினைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று மனம் கூறினாலும், மூளை அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இனி எந்த தைரியத்தில் யார் துணையோடு சென்று கவியை போய் பெண் கேட்க?..
தனக்கு யார் இருக்கிறார்கள் என் சார்பாக திருமணத்தை முன் நின்று நடத்த?... அந்த கவலை வேறு மனதை வாட்டி வதைத்தது. முதலில் கவிக்கு என்னை பிடித்திருக்கின்றதா என்று கூட தனக்கு தெரியாதே?... காலை உணவை கூட உட்கொள்ளாமல் கட்டிலில் படுத்திருந்தவனின் மீது ஜக்கில் உள்ள தண்ணீரை ஊற்றி நனைத்து, எழுப்பினால் கவி.
திடீரென்று தன் மீது தண்ணீர் கொட்ட, அலறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவன், தன் எதிரே முறைத்துக் கொண்டு நின்றிருந்த கவியை கண்டு, இமைக்க மறந்தான்.
"என்ன?.. இன்னும் உங்க சோக கீதத்தை வாசிச்சு முடிக்கலையா?.... தலை மேல தூசு விழுந்தா தட்டி விட்டுட்டு போகனும், அதை விட்டுட்டு நான் அழுக்குன்னு ஒதுங்கி நிற்க கூடாது,... கொஞ்சமா நினைஞ்சாச்சு பாத்ரூம்ல போய் முழுசா தலையை முழுகிட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன் ."
அவள் சென்று விட்டாள், அவனுக்குத் தான் இது கனவோ என்ற சந்தேகம்!.... இல்லையே தலையில் இருந்து சொட்டிக் கொண்டிருக்கும் நீரானது அது உண்மை என்று பறைசாற்றியது. தனது கவியா இது?... தனக்காக வந்திருக்கின்றாளா?....மனம் துள்ளியது ஆனால் அடுத்த நிமிடமே மனம் தனது நிலையை எண்ணி வருந்தியது. ஆனால் அவள் பேசிய வார்த்தைகள் ரீங்காரமாக அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. கண்களில் மின்னல் வெட்ட, தனது தேவதையை காண அவசரமாக குளித்து முடித்து வெளியே வந்தான் தீபன்.
டைனிங் டேபிளில் அவனுக்கான உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் கவி. குறுகுறு பார்வையோடு புன்னகை முகமாக வந்தமர்ந்தவனை, முறைத்துக் கொண்டே அவனது தட்டில் உணவை பரிமாறினாள்.
"கவி எனக்காக வந்தியா?"
"இல்ல, பக்கத்து வீட்டு தாத்தாவை பார்த்துட்டு போகலாமுன்னு வந்தேன், பக்கத்துல உங்க வீட்டு கதவு திறந்து கிடந்தது, போலீஸ் வீட்டுக்குள்ள திருடன் புகுந்துட்டானோன்னு பார்த்துட்டு போலாமுன்னு வந்தேன். வாயை மூடிக்கிட்டு சாப்பிடுங்க,.... இல்லாட்டி என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்குவீங்க."
"வாயை மூடிக்கிட்டு எப்படி சாப்பிடறது?"
கவி அவனை பார்த்த கோபப் பார்வைக்குப் பின், அவன் நிமிர்ந்து கூட பாராது, தட்டில் வைத்த உணவுகளை, வெகு நாட்களுக்கு பிறகு, மனதோடு வயிறும் நிறையும் அளவுக்கு உண்டான்.
சின்ன வயசுல ஆசையா கட்டிக்கிறயான்னு கேட்டதுக்கே, என்னை வீடு ஃபுல்லா துரத்தி துரத்தி அடிச்சவளாச்சே, இப்போ செம கோபத்துல இருக்கிற மாதிரி தெரியுது, எங்கெங்கெல்லாம் அடிபட போகுதோ, நாளைக்கு வேற ஒரு முக்கியமான கேஸ் ஹியரிங் இருக்கே, ஆண்டவா அடி பலமா விழாம காப்பாத்துப்பா, கைகளை கழுவிய படி சிந்தனையில் இருந்தவன் திரும்பிய போது, கவி அவனை நோக்கி வருவதைக் கண்டு கண்களை மூடி நின்றுவிட்டான்.
ஓடி வந்தவள் அவனது நெஞ்சில் சாய்ந்து இறுக்கமாக அவனைக் கட்டிக்கொள்ள, சுயநினைவுக்கு வருவதற்கே அவனுக்கு இரண்டு நிமிடம் பிடித்தது. இவ்வளவு நாளும் அவன் தான் கவியின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தான், கவி எப்போதும் அவன் மீது விருப்பம் இல்லாதது போல தான் நடந்து கொள்வாள். திடீரென்று தான் தனிமையை உணரும் நேரத்தில், இவளது அருகாமை கிடைக்குமென்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டவனின் காதில், பெண்ணவள் தனது காதலை சொன்னால் வாய்மொழியாக.
"ஐ மிஸ் யூ டா மாமா, ஐ லவ் யூ சோ மச். இனி ஒரு முறை என்னை இப்படி தனியா தவிக்க விடாதே."
"இந்த வார்த்தையை உன் வாயால கேட்டதுக்கு அப்புறமும் உன்னை விட்டு தள்ளி இருப்பேனா கவி. ஏனோ மனசுல ஒரு சின்ன நெருடல் அவ்வளவுதான்."
" இனிமேல் அது சின்னதா கூட வரக் கூடாது."
தீபன் வெகு நாட்களாக வீட்டு பக்கம் வராததால், அவனுக்கு இன்று விடுமுறை என்று அறிந்த வடிவுப் பாட்டி, அவனுக்கு பிடித்த உணவுகளை ஆசையாக சமைத்து எடுத்து கொண்டு அவனது வீட்டிற்கு கிளம்பினார். சுந்தரமூர்த்தி தாத்தாவும் வேந்தனுடன் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தார், போகும் வழியில் அவரை விட்டுவிடுவதாக கூறி, தீபனின் இல்லத்திற்கு சென்றனர், அவர்கள் வீட்டினுள் நுழைந்த போது தான், கவியும் தீபனும் நின்றிருந்த நிலையை கண்டு வாய் பிளந்து நின்றனர். வீட்டில் உள்ள அனைவருக்கும் கவியை தீபனுக்கு கட்டிக் கொடுக்க விருப்பம் இருந்ததால், கவின் படிப்பு முடிந்ததும் இவர்கள் திருமணத்தை விரைவிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
திருவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது, வீட்டில் அனைவரும் இருக்க, தன் இரண்டாவது மகனின் குடும்பம் மட்டும் இல்லாதது சற்று சங்கடமாக இருந்தது பூவுப் பாட்டிக்கு, அதை தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டவர், அடுத்த நாளே கணவரோடு சென்று அவர்கள் வீட்டில் உள்ள அனைவரையும், நடந்தவற்றை மறந்து விட்டு திருவிழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
ஏற்கனவே மதுவை நினைத்து வாடிக் கொண்டிருந்த குடும்பம், அவளை பார்க்க வேண்டும் என்ற ஆசையில், நிச்சயம் திருவிழாவிற்கு வருவதாக வாக்கு கொடுத்தனர்.
திருவிழாவிற்கு முதல் நாள் குருந்த மரத்தின் அடியில், கொற்றவை தேவியின் சிலை பிரதிஷ்டை செய்யும் வேலை ஆரம்பமானது, வேந்தனுக்கு புரிந்து விட்டது இன்றோடு தங்களது புனர் ஜென்மம் தங்களை விட்டு நீங்க போகின்றது என்று, அன்றைய இரவு
குருதேவரின் முன்னிலையில் ஒரு மரகத வண்ண பெட்டிக்குள், வீரபத்திரரின் வாளையும், கொற்றவை தேவயின் அருள் நிறைந்த வளையல்களையும் அன்னையின் சிறிய வடிவ சிலையோடு சேர்த்து வைத்தனர். பெட்டிக்கு கீழே மந்திர தகடுகளை பதித்து பூஜை செய்தவர், அதன் மீது பெட்டியை வைத்து, கொற்றவை அன்னையின் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார். அடுத்த நொடி மதுரா மயங்கி சரிய, அவளை கைகளில் தாங்கிக் கொண்டான் வேந்தன். மதுராவும் தீரனும் தங்களது கடமை தீர்ந்தது என்று, இம் மண்ணுலகை விட்டு காற்றாகி கரைந்து போயினர். வேந்தனின் நெஞ்சுக்குள் மட்டும், அவர்களின் நினைவுகள் நீங்காமல் பதிந்து நின்றது.
நாளை காலை மதுரயாழினியாக துயில் எழப் போகும் தன் மனைவியிடம், நடந்தவைகளை மறைக்காமல் எடுத்துக் கூறி, தனது தவறுகளை ஒத்து கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான் வேந்தன். மனைவியை நெஞ்சில் தாங்கிய படியே பார்த்துக் கொண்டிருந்தவன், தாமதமாகவே உறங்கினான்.
அடுத்த நாள் கண்விழித்த மது, தான் வேந்தனின் மார்பில் துயில் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டவள் அவசரமாக அவனிடம் இருந்து விலகினாள்.
குளித்து முடித்த சிறு தயக்கத்தோடு கீழே இறங்கி வந்தவளை, வீட்டுப் பெண்கள் சகஜமாக பேசி தங்களோடு இணைத்துக் கொள்ள, முதல் நாள் வகுப்பில் சேரும் குழந்தை போல திருத்திருவென்று விழித்துக் கொண்டிருந்தாள் மது. சிறிது நேரத்தில் வெள்ளந்தியான அந்த வீட்டாரின் பாசத்தில், ஒன்றாக கலந்து போனால்.
வெகு நேரம் சென்றே கண் விழித்த வேந்தன், தனக்கு அருகில் மதுவை கைநீட்டி தேட, அவள் கைக்கு அகப்படாமல் போனதும், கஷ்டப்பட்டு கண் விழித்தவன், நேரத்தை கண்டு அவசரமாக கிளம்பி கீழே வந்தான்.
அந்த நேரத்தில் தான் மதுவின் தாய் தந்தையர் அவளது அண்ணனுடன் வீட்டுக்குள் நுழைந்தனர். வீடு தேடி வந்தவர்களை முறையாக வரவேற்க வேண்டும் என்ற விதிக்கு உட்பட்டு, அவர்களை வாருங்கள் என்று மட்டும் கேட்டுவிட்டு மது ஒதுங்கிக் நின்று கொண்டால்.
தனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த தனது குடும்பத்தாரை திரும்பியும் பார்க்காமல், நின்று கொண்டிருந்தாள். என்னதான் மற்ற குடும்ப உறுப்பினர்கள் இன்முகமாக வரவேற்று, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும், மது யாரோ போல் ஒதுங்கி நிற்பது அவர்களின் மனதுக்கு சங்கடமாக இருந்தது. அதைப் புரிந்து கொண்ட பூவுப் பாட்டி,
"ஏத்தா உனக்காக தானே வந்திருக்காங்க ரெண்டு வார்த்தை நல்லா இருக்கீங்களான்னு கேளு?.... என்ன கோவம் இருந்தாலும், இப்படி முகத்தை திருப்பிட்டு நிற்க கூடாது த்தா?"
"உங்க பையனும் மருமகளும் அவங்க குடும்பத்தோட உங்களை பார்க்க வந்திருக்காங்க, வந்த விருந்தாளிங்களை என்னால வாங்கன்னு மட்டும் தானே கேட்க முடியும், எனக்கும் அவங்களுக்கும் தான் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டாங்களே, அப்பறம் என்ன சிரிச்சு பேச சொல்றீங்க?.... நம்பிக்கை இல்லாத இடத்துல எனக்கு எப்பவுமே பேச்சு கிடையாது. நான் சமையல் வேலையை பார்கறேன் அத்தை"
அவள் மீது நம்பிக்கை இல்லாமல் நடந்து கொண்டதற்காக, அவளைப் பெற்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால், அவர்களை இவ்வாறு நினைக்கத் தூண்டியது தனது செயல் தான் என்று தெரிய வந்தால், என்ன ஆட்டம் ஆட போகின்றாளோ?... இப்போதைக்கு திருவிழா முடியும் வரை எந்த உண்மையையும், அவளிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று, தனக்குத்தானே முடிவெடுத்துக் கொண்ட வேந்தன், வந்தவர்களை வரவேற்று அவர்களுடன் பேசத் தொடங்கினான்.
நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன?...நடந்தவைகள் அனைத்தும் தெரிய வரும்போது, மதுவின் முடிவு என்னவாக இருக்கும்?
No comments:
Post a Comment