Search This Blog

Followers

Powered By Blogger

Friday, August 29, 2025

மன்னவரே 99


 

             அத்தியாயம் 99


மதுவிற்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது. எவ்வளவு பெரிய துரோகம், எதற்காக தன்னைச் சுற்றி இப்படி ஒரு சூழ்ச்சி வலை பின்னப்பட்டது. அதைவிட சற்று நேரத்திற்கு முன்பு மனதில் பூத்த காதல் மொட்டு, மலர்வதற்கு முன்பு நெஞ்சுக்குள் கருகி விட்டதே! அந்த வலி அவள் மனதை வெகுவாக அழுத்தியது. மனதின் வலி கண்களில் நீரை பெருக்கெடுக்க வைக்க, அதை துடைத்த படி தன் மீதே கோபம் கொண்டு, கண்களை இருக்க மூடி நின்றால் மது.


  இன்று காலையில் வேந்தனின் மீது தன் மனதில்  பூத்த காதலை, அவனிடம் வெளிபடுத்த, அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தவள், இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்தாளா என்ன?


  சற்று நேரத்திற்கு முன்பு வீட்டின் பின்புறம் அமைந்திருந்த பந்தலில்,  தன்னவனின் வரவை எதிர்பார்த்து, இங்கிருந்தபடியே ரோட்டை எட்டிப் பார்த்து கொண்டு, பூக்களை பறித்து கொண்டிருந்தாள் மது. 


  அப்போது ஒரு கார் தங்களது வீட்டை நோக்கி வருவதைக் கண்டு, யாராக இருக்கும் என்று எண்ணமிட்டபடியே வீட்டிற்குள் சென்றாள். ஹாலில் ஒரு வயதான தம்பதியர் வேந்தனின் தோழனான  சந்துருவுடன் அமர்ந்திருக்க, கேள்வியாக அவர்களை நோக்கிய படியே அங்கு வந்து நின்றாள்.


  வந்தவர்களை வரவேற்ற குடும்பத்தினர் அவர்களது நல விசாரிப்புகளுக்கு பிறகு, அவர்களுக்கு மதுவை அறிமுக படுத்தி வைத்தனர்.


  "அண்ணா இவ தான் எம் மருமக  வேந்தனோட சம்சாரம், பேரு மது. மது இவரு சந்திர சேகர் நம்ம வேந்தனோட தோஸ்த்து சந்துருவோட அப்பா, இவுக குடும்பமே டாக்டர் குடும்பம் தான்ம்மா, இவுகளும் இந்த ஊர் தான் வேலைக்காக வெளியூர் போய் செட்டில் ஆகிட்டாங்க, உங்க அம்மாவோட ஆப்ரேஷன் கூட இவங்க ஆஸ்பத்திரியில தான் நடந்தது."


  மதுவின் மனதிற்குள் ஏதோ ஒரு நம்பிக்கை உடைந்து கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு, குழப்பமான விழிகளோடு சந்துருவை ஏறிட்டவள், அவன் இவளது பார்வையை தவிர்த்தபடி, தனது மொபைலில் இருந்து, சீரியஸ்ஸாக வேந்தனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தான்.


      சந்துருவின் தந்தை சந்திரசேகர், சந்துருவுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருப்பதாகவும், அவனது திருமண பத்திரிக்கையை முதலில் வேந்தனுக்கு வைக்க வந்திருப்பதாகவும் கூறி, நடந்த விஷயங்களை பற்றியும் குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறினார்.


  "முதல்ல வேந்தன் என்கிட்ட வந்து சந்துருவோட லவ் விஷயத்தை பத்தியும், அவன் லவ் பண்ற பொண்ணோட  குடும்பத்தை பத்தியும் சொன்னப்ப நான் ரொம்ப கோவபட்டேன் தான், ஆனாலும் வேந்தன் தான் சொல்லி புரிய வைச்சான். கல்யாணத்துல கல்யாணம் பண்ணிக்க வேண்டியவங்களோட சம்மதம் மட்டும் இல்ல, அந்த குடும்பங்களோட சம்மதமும் அவங்க வாழ்த்துக்களும் கூட முக்கியம்கிறதை, அவன் எங்களுக்கு ரொம்ப தெளிவா எடுத்து சொல்லிபுரிய வெச்சான்.


  அதனாலதான் அந்த பொண்ணோட அப்பா இப்ப ஜெயில்ல இருக்கறது தெரிஞ்சும் கூட, இவங்க ரெண்டு பேர்த்துக்கும் நாங்களே கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு முடிவு பண்ணி, அவங்க வீட்ல போய் பேசினோம், அவங்க அம்மாவுக்கும் இதுல  சந்தோஷம்தான், அதனாலதான் உடனே கல்யாணத்தையும் பிக்ஸ் பண்ணி, மொத பத்திரிகையை வேந்தனுக்கு கொடுப்பதுக்காக வந்தோம். அவன் இல்லாட்டி இவங்க கல்யாணம் இப்படி பெரியவங்க ஆசீர்வாதத்தோடு  நடந்திருக்கவே செய்யாது, வேந்தன் எங்கம்மா?"


  மதுவின் மூளைக்குள் சந்துருவின் தடுமாற்றமும், அவன் தந்தை பேசிக் கொண்டிருந்த வார்த்தைகளும் சேர்ந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியது.


  "வேந்தன் கோவில் வரைக்கும் போயிருக்கான் ண்ணா, அதுதான் திருவிழா வேலை எல்லாம் இருக்கே, வீட்டு பெரியவங்களும் அங்க தான் இருக்காங்க, இருங்க யாரையாவது விட்டு நான் வர சொல்றேன்."


"நானே போய் கூட்டிட்டு வரேன் அத்தை, கோயிலுக்கு போயிட்டு வந்த மாதிரியும் ஆச்சு இல்லையா? நானே போயிட்டு வரேன்."


"ஆனா மதும்மா, நீ தனியா எப்படி போவே?"


  "அதுதான் சந்துரு அண்ணா இருக்காரே த்தே, அவருக்கு தெரியாம இருக்குமா, அவரோட பிரெண்ட்ஸ் எல்லாரும் எங்க இருப்பாங்கன்னு? அவரை கூட்டிட்டு போறேன்."


  "சரி சீக்கிரமா போயிட்டு வாங்க, நான் உங்களுக்கெல்லாம் சாப்பிடுவதற்கு ரெடி பண்றேன், அண்ணா கண்டிப்பா நீங்க சாப்பிட்டு தான் போகணும். திருவிழா அன்னைக்கு வீட்டுக்கு வந்திருக்கீங்க, சாப்பிடாம போக கூடாது, அதனால நீங்க இருந்து சாப்பிட்டு சாயங்காலமா சாமி கும்பிட்டு தான் கிளம்பனும்."


  அவர்கள் ஒத்துக்கொண்ட பிறகு சந்துரு பதட்டத்துடனே மதுவுடன் காரில் ஏறினான்.


  காரை ஓட்டிக் கொண்டிருந்த சந்துருவுக்கு பதற்றமாக இருந்தது, ஒரு கையால் வண்டியை ஒட்டியபடியே, மற்றொரு கையால் தொடர்ந்து வேந்தனுக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.


  "உங்க ப்ரெண்டு என் லைஃப்ல விளையாடுனது பத்தாதா? இப்போ நீங்க ஒத்த கையால வண்டியை ஒட்டி, என் லைஃப்பை க்ளோஸ் பண்ணிடலாம்னு நினைக்கிறீங்களா அண்ணா?"


  சந்துரு சட்டென்று பிரேக் அடித்து விட்டு மதுவை பார்த்து விழிக்க, நேர் பார்வையாக ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் புறம் திரும்பாமலேயே,


  " முதல்ல வண்டியை எடுங்க, சும்மா உங்க ப்ரெண்டுக்கு போன்ல கூப்பிட்டுகிட்டே  இருக்க வேண்டாம். அதுதான் நேரா போக தானே போறோம், இதுக்கு மேல  எதை என்கிட்ட இருந்து மறைக்கணும்னு நினைக்கிறீங்க?"


அவன் பதில் பேச வருவதற்குள் கைநீட்டி தடுத்தவள், போகலாம் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட, அதற்கு மேல் அவனும் வேறு எதுவும் பேசாமல் கோவிலை நோக்கி வண்டியை செலுத்தினான்.


  கோயிலுக்குச் சென்ற பிறகும் கூட வேந்தனுக்கு அழைத்துக் கொண்டுதான் இருந்தான் சந்துரு, ஆனால் அவன் தான் இவனது அழைப்பை ஏற்கவே  இல்லையே.


  வேந்தன் தன்னிடம் எதற்காக வேறொரு நபரை காட்டி சந்துருவின் தந்தை என்று,கோயில் அன்று கூறினார்? அவரைப் பார்த்த நாளன்று தானே குடும்பத்தில் அவ்வளவு பிரச்சனை என்று, மன குழப்பத்தோடு சந்துருவோடு வந்து கொண்டிருந்தாள் மது.


  சந்துரு தனது போனை எடுத்து மதுவிற்கு தெரியாத வண்ணம் மீண்டும் வேந்தனுக்கு அழைத்துக் கொண்டுதான் இருந்தான். 


    இன்று காலையில் வெகு நாட்களுக்குப் பிறகு அவனை அழைத்து பேசிய அவனது தந்தை, அவன் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாகவும் கூறினார்.


  அதோடு திருமணத்திற்கான முதல் பத்திரிகையை வைக்க, வெளியே செல்ல வேண்டும் வண்டியை எடு என்று கூற, ஆனந்தத்தில் இருந்தவன் அவரிடம் எதுவும் பேசாமல் வண்டி எடுத்தான்


  வண்டி வேடந்தூரை நெருங்கும் வேளையில் தான், வேந்தனின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது புரிந்து, அப்போதிருந்தே வேந்தனுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறான்.


  வழக்கமாக நண்பர்கள் சேர்ந்து இருக்கும் இடம் எது என்று அவனுக்கு தெரியும் என்பதால், சந்துரு மதுவுடன் நேராக அங்கு தான் சென்றான். ஆனால் அந்த நேரத்தில் வேந்தன் தனது திருமணத்தை பற்றிய விஷயங்களையெல்லாம் நண்பர்களிடம் கூறிக் கொண்டிருப்பான் என்று, அவனும் கூட சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வேந்தன் கூறிய அனைத்தையும் கேட்ட மதுவுக்கு பூமி பந்து, ராட்டினமாக சுழல்வது போன்ற ஒரு உணர்வு.


  மதுவின் உச்சபட்ச கோபத்தின் அளவானது, அவளது கண்களிலேயே தெரிய, நாகரிகம் கருதி நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற  முனைந்தனர்.


    "எங்க போறீங்க பிரதர்ஸ்,உங்க பிரண்டு என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கும்போது மட்டும், எந்த வார்த்தையும் பேசாம கூடவே தானே இருந்தீங்க. இப்போவும் கூடவே இருங்க முடிவு என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா என்ன? அப்பவாவது இனி எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி நம்பிக்கை துரோகம் பண்ண கூடாதுன்னு, உங்களுக்காவது தோனட்டும்."


  "மது அவங்களை எதுவும் சொல்லாத, ஏன்னா எல்லாமே நான்..."


  வேந்தனை  நோக்கி நிறுத்துமாறு கை நீட்டியவள், உச்சபட்ச கோவத்தில் கண்களை மூடி திறந்தால், மீண்டும் அவனது நண்பர்களை பார்த்து,


  "நான் உங்க ப்ரெண்ட்கிட்ட ரெண்டு மூணு வார்த்தை பேச வேண்டி இருக்கு, அதை பேசி முடிக்கிற வரைக்கும், உங்க ப்ரெண்டை வாயை திறக்க வேணாம்னு சொல்லுங்க, இல்ல எனக்கு வர கோபத்துக்கு என்ன வேண்ணா பேசிடுவேன்.  நான் இந்த குடும்பத்தோட மானம் ரொம்ப முக்கியம்னு  நினைக்கிறேன், அவருக்கு வேணும்னா குடும்பத்தை பத்தியும் அவங்க மனசு படர வேதனை பத்தியும் கவலை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு இருக்கு. அவர் இப்படி நடந்து கிட்டதுக்காக பொது இடம்னு கூட பாக்காம கத்தி சண்டை போட்டு, அவர் குடும்பத்துக்கு ஒரு மானக்கேடு வர்ற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்,  தயவு செஞ்சு உங்க ப்ரெண்டை நான் பேசி முடிக்கிற வரைக்கும் எதுவும் பேசாம இருக்க சொல்லுங்க."


  நண்பர்கள் அவளிடம் ஏதோ பேச வர,


" உங்க ப்ரெண்டுக்கு சொன்னது தான் உங்களுக்கும், உங்ககிட்ட அட்வைஸ் வாங்குற அளவுக்கு, நான் அவ்வளவு தாழ்ந்து போகலன்னு நினைக்கிறேன்."


   வேந்தனை நோக்கி திரும்பியவள் அவனை நேர் விழி கொண்டு,


  "என்னை பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு? நான் என்ன நீங்க விளையாடுற கை பொம்மைன்னு நினைச்சீங்களா, உங்க இஷ்டத்துக்கு எனக்கே தெரியாம இத்தனை வேலை பண்ணி வச்சிருக்கீங்க. நீங்க செஞ்ச வேலையால எங்க அம்மா உயிருக்கு போராடி ஹாஸ்பிடல்ல கிடந்தாங்களே, அப்ப கூட உங்களுக்கு, நீங்க செஞ்சு வச்ச காரியத்தோட வீரியம் தெரியலையா?


  எனக்கு வேண்டியது ஒரே ஒரு கேள்விக்கான பதில் தான், எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுணீங்க? என்னை எதுக்காக டார்கெட் பண்ணீங்க? ஒரு வேலை அன்னைக்கு நாம முதல் முதல்ல சந்திச்சப்ப நடந்த ஆக்சிடென்ட் கூட நீங்க போட்ட பிளான் தானா? எத்தனை பொய்கள் தான் என்கிட்ட சொல்லி இருக்கீங்க?"


" இல்ல மது நான் சொல்றதை  கொஞ்சம் பொறுமையா கேளு."


    "இதுக்கும் மேல என்ன பொறுமையா கேட்கணும்? அதுதான் உங்க வாய் மொழியா எல்லாத்தையும் கேட்டுட்டேனே,..... எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்?...... அன்னைக்கு கோயில்ல வச்சு அப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கீங்க, இன்னைக்கு இவங்க அப்பா இவரோட கல்யாணத்துக்காக பத்திரிக்கை வைக்க வந்ததால தான், எனக்கு உங்களோட நிஜமான முகமே  வெளியே தெரிந்தது, இல்லாட்டி வாழ்க்கை ஃபுல்லா நானும் உங்களை நம்பி,  ஒரு முட்டாள் மாதிரி நீங்க ரொம்ப நல்லவர்னும், என் குடும்பத்துக்காகவும் எனக்காகவும் தான் இப்படி ஒரு அவசர கல்யாணம் பண்ணிக்கிட்டதா நினைச்சு வாழ்ந்துட்டு இருந்திருப்பேன். என்னோட அம்மா அவ்வளவு சீரியஸா,..... ஐ சி யூ ல உயிருக்கு போராடிட்டு இருந்தப்ப கூட உங்களுக்கு உண்மையை சொல்லனும்னு தோணல இல்லையா?..."


  “மதுரா ப்ளீஸ் நான் சொல்றதை நம்பு, ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ணிக்கிட்டது என்னமோ உண்மைதான்.  அன்னைக்கு சந்துருவோட அப்பானு சொல்லி ஒருத்தரை நடிக்க வெச்சதுக்கு காரணம், கல்யாணமான அன்னைக்கே உன் நெத்தியில என் கையால குங்குமம் வெச்சு விடனும்னு ஆசை பட்டேன். அதுக்காக தான் அப்படி ஒரு ஆளை நடிக்க ஏற்பாடு பண்ணேன். ஆனா  நம்ம குடும்பம் மொத்தமும் அங்க வருவாங்கன்னும், அத்தைக்கு இப்படி சீரியஸா ஆகணும்னு நான் நினைச்சு கூட பார்க்கல."

No comments:

Post a Comment