banner image

அத்தியாயம் 4

 


அத்தியாயம் – 4 :


முகமூடி


"சில முகங்கள் சிரிப்பை அணிந்திருக்கும்... சில முகங்கள் அமைதியை அணிந்திருக்கும்... ஆனால் சில முகங்கள் மட்டும், தங்களுடைய உண்மையை மறைக்க ஒரு முகமூடியை அணிந்திருக்கும்."


    சென்னை அதிகாலை நான்கு மணி முப்பது நிமிடம். நகரம் இன்னும் முழுமையாக விழித்திருக்கவில்லை.


  மழை பெய்து முடிந்த சாலைகளில் தெருவிளக்கின் மஞ்சள் ஒளி மினுங்கிக் கொண்டிருந்தது. ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் உள்ள அறை எண் 307ல் அலாரம் அடிப்பதற்கு முன்பே ஒரு ஜோடி கண்கள் திறந்தன.


  அந்தக் கண்களில் தூக்கம் இல்லை, பழக்கப்பட்ட விழிப்பு மட்டுமே இருந்தது. அவள் மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்தாள்.


  அறை முழுவதும் அமைதி. அந்த அறையில் ஒரு இரும்பு அலமாரி, ஒரு மர மேசை அதில் சில புத்தகங்கள் மற்றும் சுவரில் ஒரு சிறிய கடிகாரம் இருந்தது. 


  அவளுடைய வாழ்க்கை எந்தவித  ஆடம்பரமும் இல்லாதது.


   அவள் ஜன்னலைத் திறந்த போது, குளிர்ந்த காற்று வந்து அவள் முகத்தை வருடியது.


  ஆனால் அந்த குளிரைக் கூட அவள் உணரவில்லை. மேசையின் மேல் இருந்த ஸ்டீல் டம்ளரில் தண்ணீர் குடித்துவிட்டு, அலமாரியைத் திறந்தாள்.


  அதிலிருந்து ஒரு கோப்பை எடுத்தாள். அதன் மேல் பெரிய எழுத்தில் அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது. அவள் விரல்கள் அந்த எழுத்தை மெதுவாக வருடின.


  சட்டென்று ஒரு நொடி அவளுடைய முகம் இறுகியது. ஆனால் அடுத்த நொடியே, ஆழமாக மூச்சை இழுத்து விட்டவள். தன்னையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.


"இன்று முதல் நீ பழைய யாழினி இல்லை."


அவள் உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை. அந்த புன்னகையில் மகிழ்ச்சி இல்லை. தீர்க்கமான ஒரு முடிவு மட்டுமே இருந்தது.


   அரை மணி நேரம் கழித்து அவள் தயாராகி வெளியே வந்தாள். இளநீல நிற காட்டன் சுடிதாரில் எளிமையாக இருந்தது அவள் தோற்றம். நெற்றியில் ஒரு சிறிய கருப்பு பொட்டு. முகத்திலோ எந்தவொரு ஒப்பனையும் இல்லை.


ஆனால் அவளை ஒருமுறைப் பார்த்தவர்களை, இரண்டாவது முறையாக திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு இயல்பான அழகு.


   பேருந்து நிறுத்தத்தில் ஒரு வயதான பாட்டி இரண்டு பெரிய பைகளைத் தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.


  சுற்றிலும் நிறைய பேர் இருந்தும் யாரும் அவரை கவனிக்கவில்லை. யாழினி நேராக அவரிடம் சென்றாள்.


"பாட்டி… நான் தூக்கிட்டு வரட்டுமா?"


"வேண்டாம்மா... உனக்கு எதுக்கு கஷ்டம்."


"எனக்கு எந்த கஷ்டமும் இல்ல."


என்று சிரித்தபடி இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டாள்.


"பாட்டி நீங்க எங்க போகணும்?"


"கோயம்பேடு ம்மா."


" சரி வாங்க."


   என்று அவள் உடன் நடக்க, பாட்டியும் நடந்தபடியே கேட்டார்.


"உன் பேரு என்னம்மா?"


ஒரு நொடி அமைதியாக இருந்தவள், பிறகு மெதுவாகச் சிரித்தபடி,


"யாழினி." என்றாள். 


"ரொம்ப நல்ல பொண்ணும்மா நீ."


யாழினி பதில் சொல்லவில்லை, அவளுடைய பார்வை மட்டும் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது நிலைத்திருந்தது.


   அதே நேரம் தஞ்சாவூர், அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ்.


"குட் மார்னிங் சார்!"


என்று அனைவரும் வணக்கம் சொல்ல, வேந்தன் வழக்கம்போல ஒவ்வொருவரிடமும் சிரித்துப் பேசிக்கொண்டே உள்ளே சென்றான். மனிதவள மேலாளர் பிரகாஷ் அவனைப் பார்த்ததும், 


"சார்… இன்னைக்கு இன்டர்வியூக்கான லிஸ்ட் வந்துருச்சு."


"எத்தனை பேர் இருக்காங்க?"


"இருபத்தெட்டு பேர்."


"சரி, எல்லாருக்குமே சமமான வாய்ப்பை கொடுங்க."


"சார் ரெக்கம்மண்டேஷன்..."


என்று பிரகாஷ் ஆரம்பிக்க வேந்தன் சிரித்தான்.


"அது இந்த கம்பெனில வேலை செய்யாது. திறமை இருந்தா போதும்."


பிரகாஷ் மரியாதையோடு தலையசைத்தார்.


  அந்த நேரத்தில் மேல்மாடி வழித்தடத்தில் நின்றிருந்த ராகவேந்திரன், அவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.


பிரகாஷ் அவரைப் பார்த்ததும் மரியாதையுடன்,


"குட் மார்னிங் சார்."


என்றார். ராகவேந்திரன் புன்னகைத்தார்.


"குட் மார்னிங்."


பிறகு வேந்தனைப் பார்த்து,


"இன்டர்வியூக்கு எல்லா ஏற்பாடும் ரெடியா?"


என்று கேட்டார். வேந்தன் தலையசைத்தபடி, 


"ஆமாம் சித்தப்பா. நாளைக்கு வர்ற ஒவ்வொருத்தருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கணும்."


என்று கூற, ராகவேந்திரன் சிரித்தார்.


"அதுதான் நம்ம கம்பெனியோட வழக்கம். திறமைக்கு எப்பவும் மதிப்பு இருக்கணும்."


என்று சொல்லிவிட்டு,


"சரி... நான் போர்டு மீட்டிங் கோப்புகளைப் பார்த்துட்டு வர்றேன்."


என்று அமைதியாக அங்கிருந்து நடந்துச் சென்றார்.


   அதே மாலை சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு புறப்படும் விரைவு பேருந்தில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் யாழினி.


  அவள் மடியில் அதே பழைய டைரி, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது ஒரு புகைப்படம். அதை வெளியே எடுத்தாள்.


  அந்த புகைப்படத்தில் இருந்த மனிதரின் முகத்தை விரலால் வருடியவளின் கண்கள் மெதுவாகக் கலங்கின.


"அப்பா..."


   அந்த ஒரு வார்த்தை மட்டும், அவளது உதடுகளை விட்டு வெளியே வந்தது. அடுத்த நொடியே கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் டைரியை மூடினாள்.


  பேருந்து இருளைக் கிழித்துக்கொண்டு முன்னேறியது. யாருக்கும் தெரியாமல், இரண்டு நபர்களின் வாழ்க்கை  பாதைகள், ஒரே நேர்கோட்டில் சந்திக்கப் போகும் நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது.


    தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்.

இரவு எட்டு மணி. சென்னையிலிருந்து வந்த விரைவு பேருந்து மெதுவாக நிலையத்திற்குள் நுழைந்தது. பயணிகள் ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருந்தனர். 


அவர்களுக்குள் ஒரு இளம் பெண்ணும் அமைதியாக இறங்கினாள். அவள்தான் நம் யாழினி.


தோளில் ஒரு கருப்பு நிற பை. கையில் பழைய சூட்கேஸ். பார்வையில் பதற்றம் இல்லை, அவசரமும் இல்லை. இந்த ஊருக்கு அவள் முதல்முறையாக வருவது போலத் தெரியவில்லை.


ஆனால் அவள் கண்கள் மட்டும் ஒவ்வொரு மூலையையும் அளந்துகொண்டிருந்தன.


அவள் வெளியே வந்ததும் ஒரு ஆட்டோ டிரைவர் அருகில் வந்தான்.


"எங்கம்மா போகணும்?"


யாழினி தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். ஒரு முகவரி.

அதை அவனிடம் காட்டினாள்.

டிரைவர் ஒரு நொடி படித்துவிட்டு கேட்டான்.


"அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ் அருகே இருக்கிற பெண்கள் விடுதியா?"


"ஆமாம்."


"ஏறுங்கம்மா."


ஆட்டோ இரவை வெட்டிக் கொண்டு நகர்ந்தது.


சாலையோரமாக நீண்ட நெல்வயல்கள்.

தொலைவில் மின்னும் கிராம வீடுகள்.

அந்தக் காட்சிகளை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த யாழினியின் முகத்தில் ஒரு வித்தியாசமான அமைதி.


அவள் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தை எடுத்தாள்.


முதல் பக்கத்தில் ஒரே ஒரு வரி.


"கோபத்தில் எடுக்கும் முடிவு தோற்கும்... பொறுமையில் எடுக்கும் முடிவு ஜெயிக்கும்."


அந்த வரியை ஒரு நொடி பார்த்தவள் மெதுவாகப் புத்தகத்தை மூடினாள்.


அதே நேரம் அருணாச்சலம் இல்லத்தில் இரவு உணவு முடிந்து அனைவரும் முற்றத்தில் அமர்ந்திருந்தனர்.


மின்விளக்கின் மெல்லிய ஒளியில், குழந்தைகள் இன்னும் விளையாடிக் கொண்டிருந்தனர்.


வேந்தன் தரையில் அமர்ந்து ஆதவுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.


"மாமா...எனக்கு இந்த வகுத்தல் வரல."


"அது ரொம்ப ஈஸிடா."


என்று அவன் காகிதத்தை எடுத்தான்.


"பாரு..."


அவன் பொறுமையாகச் சொல்லிக் கொடுக்க ஆதவின் முகம் மலர்ந்தது.


"மாமா... இப்ப புரிஞ்சிடுச்சு!"


"அதான் என் செல்லம்."


என்று அவன் ஆதவின் தலையை வருடினான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அருணாச்சலம் சிரித்தார்.


"வேந்தா நாளைக்கு இன்டர்வியூ ஞாபகம் இருக்குல?"


"இருக்கு அப்பா."


"நீயும் பேனல்ல இரு."


"நானா?"


"ஆமா."


"நம்ம கம்பெனிக்கு யாரை உள்ளே கொண்டு வரணும்னு நீயும் தெரிஞ்சிக்கணும்."


வேந்தன் சம்மதமாகத் தலையசைத்தான்.

அப்போது ராகவேந்திரன் மெதுவாகப் பேசினார்.


"அண்ணா... இந்த தடவை நல்ல திறமையான ஆளுங்களைத் தேர்வு பண்ணணும். வேந்தனுக்கு வேலைப்பளு நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்கு."


அருணாச்சலம் தலையசைத்தார்.


"அதுக்குத்தான் இந்த இன்டர்வியூ."


வேந்தன் சிரித்தபடி,


"எனக்கு உதவ வர்றவங்க... இந்த கம்பெனியை தங்களோட கம்பெனி மாதிரி நினைச்சு வேலை பார்த்தா போதும்."


என்றான். ராகவேந்திரன் புன்னகைத்தார்.


"அப்படிப்பட்ட ஆள் கண்டிப்பா கிடைப்பார்."


அந்த உரையாடலோடு அந்த இரவும் அமைதியாகக் கடந்தது. யாருக்கும் தெரியாமல் அடுத்த நாள் நடைபெறவிருந்த ஒரு நேர்முகத் தேர்வு, இரண்டு மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய பயணத்தின் கதவைத் திறக்கப் போகிறது.


அடுத்த நாள். காலை ஒன்பது மணி.

அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ்.

நேர்முகத் தேர்வுக்காக வந்திருந்த இளைஞர்களும், இளம்பெண்களும் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தனர்.

யாரோ பதட்டமாக கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருந்தார்.


யாரோ மனதிற்குள் பதில்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்திருந்தாள் யாழினி.


மற்றவர்கள் போல அவள் சுற்றி வேடிக்கை பார்க்கவில்லை. அவளது பார்வை ஒரே ஒரு இடத்தில் நின்றது.

சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு பெரிய புகைப்படம்.


"அருணாச்சலம் – நிறுவனர்."


அந்தப் புகைப்படத்தை பார்த்தவுடன் அவளது விரல்கள் மெதுவாக இறுகின.

முகத்தில் இருந்த அமைதி ஒரு கணம் மட்டும் உடைந்தது.


ஆனால் அடுத்த நொடியே மீண்டும் அதே புன்னகை. அதே அமைதி அதே முகமூடி.


"மேடம்..."


ரிசப்ஷனிஸ்ட் அழைத்தாள்.


"உங்க பேர்?"


யாழினி எழுந்து நின்றாள்.


"யாழினி."


"நீங்க மூணாவது Candidate. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களை கூப்பிடுவாங்க."


"தேங்க்ஸ்."


அவள் மீண்டும் அமர்ந்தாள். அவளுக்கு எதிரே கண்ணாடி சுவரின் மறுபக்கத்தில் தன் அறையிலிருந்து, வரவேற்பு அறையைப் பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன்.


   அவளுக்கு எதிரே கண்ணாடி சுவரின் மறுபக்கத்தில் நின்றிருந்த வேந்தனின் பார்வை ஒரு நொடி யாழினியின் மீது விழுந்தது.


அந்த நொடி இருவருக்கும் சாதாரணமான ஒன்றுதான்.

ஆனால் சில சந்திப்புகளின் முக்கியத்துவம், அவை நிகழும் நேரத்தில் யாருக்கும் தெரியாது. அந்தச் சந்திப்பும் அப்படித்தான்.


இன்டர்வியூ முடித்து வெளியே வந்த யாழினி ஆழமாக மூச்சை விட்டாள்.

அவளுடைய முகத்தில் இருந்த புன்னகை ஒரு கணம் மறைந்தது.


"முதல் கதவு திறந்தாச்சு..."


என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.


அதே வழித்தடத்தில் போர்டு மீட்டிங்குக்காக சென்று கொண்டிருந்த ராகவேந்திரன், வெளியே வந்த யாழினியை ஒரு நொடி பார்த்தார்.

அவ்வளவுதான்.


பிறகு தன் வேலையை நோக்கி அமைதியாக நடந்துச் சென்றார். யாழினியும் அவரைக் கவனிக்காமல் எதிர்திசையில் நடந்து சென்றாள்.


அந்தக் கட்டிடத்தின் நீண்ட வழித்தடத்தில் இரண்டு மனிதர்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் கடந்து சென்றார்கள்.


ஆனால் சில சந்திப்புகள்...

அவை நிகழும் அந்த நொடியில் சாதாரணமாகத் தோன்றும்.


நேர்முகத் தேர்வு முழுவதுமாக முடிந்து மாலை நான்கு மணியை நெருங்கியது.

மனிதவள மேலாளர் பிரகாஷ், தேர்வான விண்ணப்பதாரர்களின் கோப்புகளை எடுத்து வேந்தனின் அறைக்குள் வந்தார்.


"சார்... இதுதான் பைனல் லிஸ்ட்"


வேந்தன் கோப்பை வாங்கிப் பார்த்தான்.

ஒவ்வொரு பெயரையும் கவனமாக வாசித்தான்.


ஒரு பெயரின் மீது அவன் பார்வை சில நொடிகள் நின்றது.


யாழினி, அவன் கோப்பை மூடினான்.


"இந்த கேன்டிடேட் எல்லாருக்கும் பேக்ரௌண்ட் வெரிபிகேஷன் ஆரம்பிச்சிடுங்க."


"சரி சார்."


"ஒருத்தரையும் விட்டுறக்கூடாது."


"கண்டிப்பா சார்."


என்று விட்டு பிரகாஷ் வெளியேறினார்.


அதே நேரம் தஞ்சாவூர் பெண்கள் விடுதி.

யாழினி ஜன்னல் அருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பையைத் திறந்து, அந்தப் பழைய டைரியை எடுத்தாள்.


அதன் நடுவில் இருந்த புகைப்படத்தை சில நொடிகள் அமைதியாகப் பார்த்தாள்.


"இன்னும் கொஞ்சம்..." என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டாள்.


புகைப்படத்தை மீண்டும் டைரிக்குள் வைத்து,ஜன்னலை மூடினாள்.


இரண்டு நாட்கள் கழித்து அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ். காலை பத்து மணி.

மனிதவள அலுவலகம்.


"கங்கிராஜுலேசன் மிஸ். யாழினி. யூ ஆர் செலக்டட். "


பிரகாஷ் புன்னகையுடன் அப்பாயின்மண்ட் ஆர்டரை நீட்டினார். யாழினி அமைதியாக வாங்கிக் கொண்டாள்.


"தேங்க்யூ சார்."


"நாளையிலிருந்து ஜாயின் பண்ணிடுங்க."


"சரி."


"உங்க ரிபோர்டிங் நேரா எம். டி ஆபீஸ்."


"ஓகே சார்."


அவள் வெளியே வந்தாள்.

நீண்ட வழித்தடத்தில் நடந்தபடி ஒரு கணம் நின்றாள். எதிரே சுவரில் பொன்னிற எழுத்துகளில் மின்னியது.

மேனேஜிங் டைரக்டர் வேந்தன் அருணாச்சலம். அந்தப் பெயரை சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய விரல்கள் கையில் இருந்த அப்பாயிண்மண்ட் ஆர்டரை இறுக்கமாகப் பிடித்தன.


"முதல் படி ஆரம்பம்..."


அவளுடைய மனம் மட்டும் மெதுவாகச் சொன்னது.


அதே நேரத்தில் வேந்தன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்.

இருவரும் ஒரே வழித்தடத்தில்.

எதிரெதிரே நடந்தார்கள். யாழினி உடனே ஓரமாக நின்றாள்.


"குட் மார்னிங் சார்."


வேந்தன் வழக்கமான புன்னகையுடன்...


"கங்ராஜுலேஷன்."


என்றான்.


"தேங்க்யூ சார்."


"வெல்கம் டூ அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ்."


அவ்வளவுதான். அவன் நடந்து சென்றுவிட்டான். யாழினி திரும்பிப் பார்க்கவில்லை. வேந்தனும் திரும்பிப் பார்க்கவில்லை. மேல்மாடி பால்கனியில் இருந்து அந்தச் சிறிய சந்திப்பை ஒரு நொடி கவனித்தார் ராகவேந்திரன்.


அடுத்த நொடியே வேறு வேலை நினைவுக்கு வந்தது போல அமைதியாக அங்கிருந்து நடந்துச் சென்றார்.


அன்று மாலை வேந்தன் வீட்டுக்குப் புறப்படத் தயாரானபோது அவனுடைய மேசையில் ஒரு சிறிய குறிப்பு இருந்தது.


"நாளையிலிருந்து புதிய பர்சனல் எக்ஸிகியூடிவ் பணியில் சேருகிறார்."


அவன் அதைப் படித்துவிட்டு வழக்கம்போல் கோப்புக்குள் வைத்தான்.


அவனுக்கு அது ஒரு புதிய ஊழியரின் நியமன அறிவிப்பு மட்டுமே.


மறுநாள் காலை அந்த அலுவலகத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கவிருந்தது.


Powered by Blogger.