அத்தியாயம் – 3 :
வேர்கள்
"ஒரு பெரிய மரம் உயரமாக நிற்பதற்குக் காரணம் அதன் கிளைகள் அல்ல... மண்ணுக்குள் ஆழமாகப் புதைந்திருக்கும் அதன் வேர்கள்."
அடுத்த நாள் காலை ஐந்து மணி. அருணாச்சலம் இல்லமானது கோழியின் கூவலோடும் வாசலில் தெளிக்கப்பட்ட தண்ணீரின் மண்வாசனையோடும் முற்றம் முழுவதும் வெள்ளைக் கோலத்தாலும் மலர்ந்திருந்தது.
வீட்டின் முன் இரண்டு வேலைக்காரப் பெண்கள் சிரித்துக் கொண்டே கோலம் போட்டுக் கொண்டிருந்தனர்.
"அக்கா... இன்னைக்கு சின்ன முதலாளி சீக்கிரமா கிளம்புவாராமே?"
"ஆமாம்... கும்பகோணத்துல புதிய யூனிட் வேலை பார்க்கப் போறாராம்."
"எவ்வளவு பெரிய ஆளு... ஆனா நம்மகிட்ட கூட நின்னு பேசுவாரு."
"அதான் இந்த வீட்டோட புண்ணியம்."
அந்த நேரம் கோயில் மணியோசை கேட்டது. அதோடு சேர்ந்து பூஜை அறையிலிருந்து வந்த வேத மந்திரங்களின் சத்தம்.
சண்முகநாதன் அவர்கள் தினமும் போல இன்றும் பூஜையை முடித்துக் கொண்டிருந்தார்.
அந்த வீட்டில் ஒரு விதி, யாராக இருந்தாலும் முதலில் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டுத்தான் நாளை ஆரம்பிக்க வேண்டும்.
"பாட்டி..."
என்று மெதுவாக அழைத்தபடி சமையலறைக்குள் நுழைந்தான் வேந்தன்.
பெரிய அடுப்பில் வெண்பொங்கல் கொதித்துக் கொண்டிருந்தது. கல்யாணி அம்மாவும், மீனாட்சி அம்மாளும் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தனர்.
"அடடா..."
என்று அவனை கண்டு மீனாட்சி அம்மாள் சத்தமாக சிரித்தார்.
"இன்னைக்கு சூரியன் மேற்கே உதிச்சிட்டானோ?"
வேந்தன் புரியாமல் பார்த்தான்.
"ஏன் பாட்டி?"
"நேத்து கல்யாணப் பேச்சு வந்ததுல இருந்து, இன்னைக்கு நேரா சமையலறைக்கே வந்துட்டியே!"
கல்யாணி அம்மாவும் சிரித்து விட்டார். வேந்தன் தலையைச் சொறிந்தான்.
"அம்மா எனக்கு காபி கிடைக்குமா?"
"உனக்கு மட்டும் இல்ல, இந்த வீட்டுல இருக்குற எல்லாருக்கும் கிடைக்கும்."
என்று கல்யாணி சிரித்தபடி டம்ளரை நீட்டினார். வேந்தன் அதை வாங்காமல் அம்மாவின் கையிலிருந்த கரண்டியை எடுத்துக் கொண்டான்.
"நீங்க போய் உட்காருங்க. நான் கிளறுறேன்."
"ஐயோ சட்டை கெட்டுப்போயிடும்."
"சட்டையை துவைச்சுக்கலாம், உங்க கை வலியை எப்படி துவைக்க முடியும்?"
ஒரு நொடி கல்யாணி அம்மாவின் கண்கள் நனைந்தன.
"நீ சின்ன வயசுல இருந்தே இப்படித்தான்..."
மீனாட்சி அம்மாள் மெதுவாக இறைவனைப் பார்த்து முணுமுணுத்தார்.
"இவனுக்கு கண்ணே படக்கூடாது..."
அந்தக் காட்சியை சமையலறை வாசலில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தார் ராகவேந்திரன். அவருடன் சங்கரியும் இருந்தார்.
"என்னங்க, என்ன யோசனை?"
என்று சங்கரி கேட்டார். ராகவேந்திரன் மெதுவாகச் சிரித்தார்.
"ஒண்ணுமில்லை வேந்தனைப் பார்த்துட்டிருந்தேன்."
சங்கரியும் அவனைப் பார்த்தார்.வேந்தன் கல்யாணியின் கையிலிருந்த கரண்டியை வாங்கி பொங்கலைக் கிளறிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த ராகவேந்திரன் புன்னகைத்தார்.
"இந்தப் பையன் எவ்வளவு பெரிய ஆளா வளர்ந்தாலும்,இந்த வீட்டுல மட்டும் இன்னும் அதே பழைய வேந்தன்தான்."
சங்கரி தலையசைத்தார்.
"அதுதான் எல்லாருக்கும் அவன் மேல இவ்வளவு பாசம்."
"ஆமாம் அந்த மனசு எப்பவும் மாறாம இருந்தா போதும்."
என்று சொல்லிவிட்டு அமைதியாக அங்கிருந்து நடந்தார் ராகவேந்திரன்.
காலை உணவு அருணாச்சலம் இல்லத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது ஒரு வழக்கம்.
நீளமான தேக்கு மர டைனிங் மேசை. அதன் ஒரு முனையில் சண்முகநாதன். அடுத்ததாக அருணாச்சலம். பிறகு ராகவேந்திரன். பெண்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
வேந்தன் உள்ளே வந்தான்.தன் இடத்தில் அமராமல், நேராக வேலைக்காரர்களுக்காக வைக்கப்பட்டிருந்த மேசைக்கு நடந்தான்.
அங்கே முருகம்மாள் என்ற வயதான சமையல்காரி தனியாக சாப்பிட அமர்ந்திருந்தார்.
"என்னம்மா தனியா சாப்பிடறீங்க?"
அவர் பதறி எழுந்தார்.
"தம்பி... நீங்க இங்க ஏன்?"
வேந்தன் சிரித்தான்.
"உங்க கூட இரண்டு வாய் சாப்பிடக்கூடாதா?"
அவர் அருகில் அமர்ந்து அதே பாத்திரத்தில் இருந்த இட்லியை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். முருகம்மாளின் கைகள் நடுங்கின.
"தம்பி... இது சரியில்ல..."
"என்ன சரியில்ல?"
"நீங்க இந்த வீட்டோட வாரிசு..."
வேந்தன் மெதுவாக சொன்னான்.
"பசிக்கு எல்லாருக்கும் ஒரே ருசிதானே ம்மா."
அந்த வார்த்தையை தொலைவில் நின்று கேட்ட கல்யாணி அம்மா,தன் கணவரைப் பார்த்து மெதுவாகச் சிரித்தார். அருணாச்சலம் பெருமையாக மகனைப் பார்த்தார்.
வேந்தன் முருகம்மாளுடன் அமர்ந்து சாப்பிடுவதைப் பார்த்த ராகவேந்திரன் மெதுவாகச் சிரித்தார்.
"அண்ணா வேந்தனைப் பார்க்கும்போதெல்லாம் சந்தோஷமா இருக்கு.இந்த வீட்டோட எல்லா மதிப்பையும் அவன் மனசார சுமந்துட்டு போறான்."
அருணாச்சலம் மெதுவாகச் சிரித்தார்.
"அது என் வளர்ப்பு மட்டும் இல்ல ராகவா...நம்ம குடும்பத்தோட வளர்ப்பு."
ராகவேந்திரன் உடனே தலையசைத்தார்.
"அதுதான் அண்ணா... நம்ம குடும்பம்
இப்படியே ஒற்றுமையா இருக்கணும்."
மீனாட்சி அம்மாள் பெருமையாக மகனைப் பார்த்தார்.
"எல்லாரும் சேர்ந்து வளர்த்த பிள்ளைதான் அவன்."
அந்தக் குடும்பத்தின் அன்பையும் ஒற்றுமையையும் பார்த்த சங்கரி மனதாரப் புன்னகைத்தார்.
அந்தக் காலை யாருக்கும் தெரியாமல் ஒருவர் அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸின் தலைமை அலுவலகத்திற்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்பிக் கொண்டிருந்தார்.
பெயர் : யாழினி.
அந்த ஒரு பெயர் இன்னும் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை.
ஆனால் இன்னும் சில நாட்களில் அந்த ஒரு பெயர், பலருடைய வாழ்க்கையையும்,பல வருடங்களாக மறைந்திருந்த சில உண்மைகளையும், ஒரே நேரத்தில் விழித்தெழச் செய்யப் போகிறது.
காலை உணவு முடிந்ததும் அருணாச்சலம் மெதுவாக எழுந்தார்.
"வேந்தா..."
"சொல்லுங்கப்பா."
"இன்னைக்கு கும்பகோணம் யூனிட் போறதுக்கு முன்னாடி மில்லுக்கு ஒரு ரவுண்ட் போயிட்டு வா. நேத்து புதுசா வந்த பருத்தி லோடு வந்திருக்கு."
"சரிங்கப்பா."
என்றுவேந்தன் உடனே சம்மதித்தான்.
அவன் எந்த வேலையையும் நான் எம்.டி. என்ற எண்ணத்தோடு பார்த்ததில்லை. அவன் மனதில் ஒரே ஒரு எண்ணம்.
"இந்தத் தொழில் நம்ம குடும்பத்தோடது மட்டும் இல்ல... ஆயிரம் குடும்பங்களோட வாழ்க்கை."
காரில் ஏறப் போனவன் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தான். பத்து வயதுக்கு மேல் இருக்காது. கையில் பழைய பள்ளிப்பை, முகத்திலோ பயம்.
"யாருப்பா நீ?"
சிறுவன் பதறி நின்றான்.அருகில் இருந்த காவலர் சொன்னார்.
"சார்... நம்ம முருகன் டிரைவரோட பேரன்."
வேந்தன் உடனே சிறுவனின் அருகே சென்றான்.
"என்னடா கண்ணா?"
சிறுவன் கையில் இருந்த ஒரு கவரை நீட்டினான்.
"பாட்டி கொடுத்தாங்க..."
வேந்தன் கவரைத் திறந்தான்.உள்ளே மருத்துவமனையின் செலவுப் பட்டியல்,அதோடு ஐநூறு ரூபாய் நோட்டுகள் நான்கு.வேந்தன் புருவத்தைச் சுருக்கினான்.
"இது என்ன?"
சிறுவன் மெதுவாக,
"நீங்க ஆஸ்பத்திரிக்குக் கொடுத்த பணத்துல இப்போ எங்களால முடிஞ்சது இதுதான். மீதியை கொஞ்சம் கொஞ்சமா தர்றோம்னு பாட்டி சொல்லச் சொன்னாங்க."
வேந்தன் சில நொடிகள் அந்தப் பணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அந்தப் பணத்தை மீண்டும் சிறுவனின் சட்டைப் பையில் வைத்தான்.
"உன் பேரு என்ன?"
“கார்த்திக்."
"கார்த்திக் இந்தப் பணத்துல உனக்கு நல்ல ஸ்கூல் பேக் வாங்கிக்கோ."
சிறுவன் குழம்பிப் பார்த்தான்.
"ஆனா..."
வேந்தன் அவன் தோளில் கை வைத்தான்.
"நான் கொடுத்தது கடன் இல்லடா. உங்க தாத்தா இந்த வீட்டுக்கு செய்த உழைப்புக்கு முன்னாடி, அது ரொம்ப சின்னது."
அவன் குனிந்து சிறுவனின் கண்களைப் பார்த்தான்.
"நல்லா படிப்பியா?"
"படிப்பேன்."
"பெரிய ஆளா ஆகணும்."
"சரி?"
சிறுவன் தலையசைத்தான். அவன் முகத்தில் இருந்த பயம் மெல்ல மறைந்து ஒரு புன்னகையாக மாறியது.
இதை முழுவதும் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி அம்மாள், தன் கணவரிடம் மெதுவாக சொன்னார்.
" இவன் நமக்கு பேரன் இல்லங்க, நம்ம வீட்டுக்கு கிடைச்ச வரம்."
சண்முகநாதன் சிரித்தார்.
"வரம்தான்… ஆனா...வரத்தையும் சோதிக்கிறதுதான் காலம்."
அந்த வார்த்தை யாருக்கும் புரியவில்லை. ஆனால் விதிக்கு புரிந்தது.
அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ் மூலப்பொருள் கிடங்கு,பெரிய பெரிய பருத்தி மூட்டைகள்,லாரிகள், ஃபோர்க்லிஃப்ட்கள் என தொழிலாளர்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.
வேந்தனின் கார் உள்ளே வந்ததும் யாரும் வேலையை நிறுத்தவில்லை. அதுதான் அவனுக்குப் பிடிக்கும்.
"நான் வந்ததுக்காக வேலை நிக்கக் கூடாது."
என்று அவன் எப்போதும் சொல்வான். அவன் நேராக கிடங்கு மேலாளர் சண்முகத்திடம் சென்றான்.
"எல்லா லோடும் வந்தாச்சா?"
"வந்துருச்சு சார்."
"குவாலிட்டி செக்?"
"நடந்துட்டு இருக்கு."
வேந்தன் தானே ஒரு பருத்தி மூட்டையைத் திறந்தான்.
அதை கையில் எடுத்து பார்த்தான். சில நொடிகள் அமைதி, பிறகு அவன் முகம் மாறியது.
"சண்முகம்..."
"சார்?"
"இந்த லாட்டை யார் வாங்கினது?"
"சப்ளையர் அனுப்பினதுதான் சார்."
"திருப்பி அனுப்புங்க."
அங்கிருந்த எல்லாரும் அதிர்ச்சியடைந்தனர்.
"சார்... இன்னும் முழுசா செக் பண்ணலையே..."
வேந்தன் அமைதியாகச் சொன்னான்.
"இந்த பருத்தியில ஈரம் அதிகம், இதைப் பயன்படுத்தினா துணியோட தரம் குறையும், இதனால நம்ம பேரு கெடக்கூடாது. நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை, நம்ம தரம் குறையக்கூடாது."
அங்கிருந்த வயதான தொழிலாளி ஒருவர் பெருமையாகச் சொன்னார்.
"இதானால தான்... இந்தக் குடும்பம் இன்னும் தொழில்ல கம்பீரமா நிக்குது."
அதே நேரம் மேல் மாடி அலுவலகத்தில் ராகவேந்திரன் சில கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது மேசையின் மீது இருந்த ஒரு கோப்பு அவரது கவனத்தை ஈர்த்தது.
பர்ஷனல் எக்ஷிகியூடிவ் இன்டர்வியூ இன்னும் மூன்று நாட்களில் என்று எழுதி இருந்தது.
அவர் அதை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அப்போது அருகில் நின்றிருந்த மனிதவள மேலாளர்,
"சார்... இந்த இன்டர்வியூக்கான பேனல் லிஸ்ட் ரெடி பண்ணட்டுமா?"
என்று கேட்டார். உடனே ராகவேந்திரன் கோப்பை மூடிவைத்தவர்,
"ஆமாம் எல்லா விண்ணப்பதாரர்களையும் திறமையைப் பார்த்துதான் தேர்வு பண்ணணும். வேந்தனுக்கு உதவ வர்றவங்க பொறுப்பான ஆளா இருக்கணும்."
"சரி சார்."
என்று மனிதவள மேலாளர் மரியாதையுடன் வெளியேறினார். பிறகு ராகவேந்திரனும் வேறு கோப்புகளைப் பார்க்கத் தொடங்கினார்.
அந்த விண்ணப்பங்களில் ஒன்றில் இருந்த பெயர் யாழினி.
அந்த ஒரு பெயர் இன்னும் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை.
ஆனால் இன்னும் மூன்று நாட்களில், அந்த ஒரு விண்ணப்பம் பல வருடங்களாக அமைதியாக இருந்த, சில நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கப் போகிறது.
மதியம் இரண்டு மணி. அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ்ல், வேந்தன் தனது அறையில் இருந்த கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அறையின் கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.
"மே ஐ கம் இன், சார்?"
"வாங்க."
உள்ளே வந்தது நிறுவனத்தின் மனிதவள மேலாளர் பிரகாஷ்.
"சார், அடுத்த வாரம் தொடங்கப் போற புதிய ஏற்றுமதி திட்டத்துக்கான வேலைகள் ரெடியா இருக்கு."
"குட்."
"ஆனா..."
"என்ன?"
"உங்களுக்கு ஒரு பர்ஷனல் எக்ஸகியூடிவ் தேவைப்படும்."
வேந்தன் கோப்பிலிருந்து தலையை உயர்த்தினான்.
"இப்போ இருக்கிற டீம் போதாதா?"
"போதும் சார். ஆனா இந்த ப்ராஜெக்ட் வேற லெவல். வெளிநாட்டு க்ளைன்ட்ஸ், தினமும் மீட்டிங், டிராவல்னு நிறைய இருக்கும். நீங்க எல்லாத்தையும் தனியா ஹேன்டில் பண்ண முடியாது."
வேந்தன் சில நொடிகள் அமைதியாக இருந்தான். பிறகு,
"சரி. அதற்கான இன்டர்வியூ வச்சுடுங்க."
பிரகாஷின் முகம் மலர்ந்தது.
"இந்த வெள்ளிக்கிழமை வைக்கலாமா சார்?"
"வையுங்க ஆனா ஒரு விஷயம் மட்டும் நினைவில் வைங்க."
"சொல்லுங்க சார்."
வேந்தன் நாற்காலியில் இருந்து எழுந்து ஜன்னலருகே நின்றான்.
"சர்டிபிகேட் பார்த்து மட்டும் ஆள் எடுக்காதீங்க."
"சார்?"
"படிப்பபை கத்துக்கொடுக்க முடியும். ஆனா ஒழுக்கத்தை கத்துக்கொடுக்க முடியாது. அதனால முதல்ல மனிதனாப் பாருங்க. அதுக்கப்புறம் எம்ப்ளாயியா பாருங்க."
பிரகாஷ் சிரித்தான்.
"அதனாலதான் எல்லாரும் உங்களை மதிக்கிறாங்க சார்."
வேந்தன் பதில் சொல்லவில்லை. அவன் வெளியே வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களைப் பார்த்துக்கொண்டே நின்றான்.
அதே நேரம் சென்னையில் மழை பெய்து முடிந்த சாலையில், பேருந்து நிலையத்தின் அருகில் ஒரு இளம் பெண் தோளில் பை மாட்டிக் கொண்டு, வேகமாக நடந்து கொண்டிருந்தாள். மழைத்துளிகள் அவளது தலைமுடியிலிருந்து கீழே வழிந்தன. தோளில் தொங்கியிருந்த பையையும், கையில் இருந்த பழைய டைரியையும் அவள் இறுகப் பற்றியிருந்தாள். அவள் ஒரு இணைய மையத்துக்குள் நுழைந்தாள்.
"அக்கா..."
என்று அங்கிருந்த பெண்ணை அழைத்தாள்.
"உங்க அப்ளிகேஷனின் கன்பாம் ஆயிடுச்சு. அதோட இன்டர்வியூக்கான டேட்டும் வந்துருச்சு."
அந்த இளம் பெண் அமைதியாகத் தலையசைத்து தேங்க்ஸ் என்று கூறினாள்.
" அது ரொம்ப நல்ல கம்பெனி. அங்க ஜாப் கிடைச்சா பியூச்சர் செமயா இருக்கும்."
அந்தப் பெண்ணின் உதட்டில் ஒரு மெல்லிய சிரிப்பு.
ஆனால் அந்த சிரிப்பு அவள் கண்களை எட்டவில்லை. அவள் மனதுக்குள் மட்டும்,
"இது ஒரு வேலை மட்டும் இல்ல, என் வாழ்க்கையோட அடுத்த அத்தியாயம்."
என்று சொல்லிக்கொண்டாள். பிறகு அவள் அங்கிருந்து விடைபெற்று திரும்பி நடந்தாள். அவளது டைரிக்குள் இருந்து, ஒரு பழைய புகைப்படம் சற்றே வெளியே தெரிந்தது.
அதில் ஒரு தொழிற்சாலை தெரிந்தது , அதன் வாசலில் நின்றிருந்தார் ஒரு மனிதர், அவரது முகம் தெளிவாகத் தெரியவில்லை. அந்தப் புகைப்படத்தை அவள் மீண்டும் டைரிக்குள் நுழைத்தாள்.
மாலை அருணாச்சலம் இல்லத்தின் முற்றத்தில் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
"வேந்தன் மாமா ஒரே ஒரு ஓவர் மட்டும்."
வேந்தன் சிரித்தான்.
"சரி... ஆனா அவுட் ஆனவங்க அழக்கூடாது."
"சத்தியம்."
பந்து வீசப்பட்டது. வேந்தன் அடித்த பந்து நேராக மாமரத்திற்கு மேல் சென்றது. அதனை கண்டு குழந்தைகள் உற்சாகமாகக் கத்தினார்கள்.
"சிக்ஸ்ஸ்ஸ்ஸ்!"
வேந்தனும் அவர்களோடு சேர்ந்து குழந்தை போலச் சிரித்தான். வாசலில் நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கல்யாணி மெதுவாகச் சொன்னார்.
"எவ்வளவு பெரிய பொறுப்பு இருந்தாலும்,இந்தப் பையன் மனசு மட்டும் இன்னும் குழந்தைதான்."
மீனாட்சி அம்மாள் புன்னகைத்தார்.
"அதுதான் இவனோட அழகு."
அதே நேரம் தொலைவில் நின்று அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவேந்திரன் அருகே வந்தார்.
"என்ன சித்தப்பா..."
என்று வேந்தன் பந்தை கையில் சுழற்றியபடி கேட்டான். ராகவேந்திரன் சிரித்தார்.
"என்னடா குழந்தைகளோட சேர்ந்து நீயும் குழந்தையாவே மாறிட்டியே!"
வேந்தன் சிரித்தபடி தோளைக் குலுக்கினான்.
"அவங்களோட விளையாடுற சந்தோஷம்... வேற எதுலயும் கிடைக்காது சித்தப்பா."
ராகவேந்திரன் பெருமையாக அவனைப் பார்த்தார்.
"அந்த குணத்தை மட்டும் எப்பவும் விட்டுடாத வேந்தா. அதுதான் உன்னோட பெரிய பலம்."
வேந்தன் மரியாதையாகத் தலையசைத்தான். அதைக் கேட்ட கல்யாணி சிரித்து விட்டார்.
அந்த மாலை அந்த வீட்டில் ஒலித்தது குழந்தைகளின் சிரிப்பும் குடும்பத்தின் மகிழ்ச்சியும் மட்டுமே.


