banner image

அத்தியாயம் 5

 



அத்தியாயம் – 5 : 


முதல் அடி


"ஒரு வீட்டுக்குள் காலடி வைப்பது எளிது... ஒரு மனதுக்குள் காலடி வைப்பதுதான் கடினம்."


காலை எட்டு மணி அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ் அலுவலக வளாகம் வழக்கத்தை விட பரபரப்பாக இருந்தது.


ஊழியர்கள் ஒவ்வொருவராக வருகைப் பதிவை முடித்துவிட்டு தங்கள் பிரிவுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர்.


அந்தக் கூட்டத்தில் மெதுவான நடையுடன் உள்ளே வந்தாள் யாழினி. வெள்ளை நிற காட்டன் சுடிதார். அடர்ந்த கருங்கூந்தலை ஒற்றைப் பின்னலாக போட்டிருந்தாள்.

கையில் ஒரு கோப்பு. முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை.


ஆனால் அவளுடைய கண்கள் மட்டும் ஒவ்வொரு விஷயத்தையும் அமைதியாகப் பதிவு செய்து கொண்டிருந்தன.


வாசலில் நின்ற பாதுகாப்பு காவலர் மரியாதையாகக் கேட்டார்.


"மேடம்... புதுசா ஜாயின் பண்றீங்களா?"


"ஆமாம். பர்ஷ்னல் எக்ஸிகியூடிவ்."


"சரி மேடம். இரண்டாவது மாடி."


"நன்றி."


அவள் லிஃப்ட்டை நோக்கி நடந்தாள். அதே நேரம் முதல் தளத்தில் ஒரு தொழிலாளி பதற்றமாக ஓடிக்கொண்டிருந்தான்.


"அய்யோ... லாரி வந்துடுச்சு ஆனா  இன்வாய்ஸ் இன்னும் ரெடி ஆகல..."


அவசரத்தில் அவன் கையில் இருந்த கோப்புகள் கீழே சிதறின. அனைவரும் அவசரமாக ஓடிக் கொண்டிருந்ததால் யாரும் கவனிக்கவில்லை.


யாழினி மட்டும் குனிந்து ஒவ்வொரு தாளாக எடுத்துச் சேர்த்தாள்.


"இந்தாங்க..."


என்று நீட்டினாள். அந்த தொழிலாளி மூச்சு வாங்கிக்கொண்டே, 


"ரொம்ப நன்றி மேடம்." என்றார். 


"பரவாயில்லை."


அவள் சிரித்துவிட்டு நடந்து சென்றாள். அந்தக் காட்சியை தொலைவில் இருந்து வேந்தன் கவனித்தான்.


அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவளுடைய செயல் அவன் மனதில் ஒரு சிறிய நல்ல அபிப்பிராயத்தை விதைத்தது.


"குட் மார்னிங் சார்."


பிரகாஷ் யாழினியை வேந்தனின் அறைக்குள் அழைத்துச் சென்றார்.

வேந்தன் மேசையில் இருந்த கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


"சார்... யாழினி ஜாயின் பண்ணிட்டாங்க."


வேந்தன் எழுந்து நின்றான்.


"வெல்கம்."


"தேன்க்யூ சார்."


"உட்காருங்க."


அவள் அமைதியாக அமர்ந்தாள்.

வேந்தன் ஒரு கோப்பை அவளிடம் நீட்டினான்.


"இது நம்ம கம்பெனி ப்ரொபைல். ஒரு வாரம் எந்த வேலையும் அவசரம் இல்லை. முதல்ல இந்த நிறுவனத்தைப் புரிஞ்சுக்கோங்க. நம்ம வேலை எப்படி நடக்குது, யார் என்ன பண்ணுறாங்க, எல்லாத்தையும் அப்ஷர்வ் பண்ணுங்க. அதுக்கப்புறம்தான் உங்களுக்கு முழு பொறுப்பு."


யாழினி ஆச்சரியமாக அவனைப் பபார்த்தாள் பல நிறுவனங்களில் முதல் நாளே வேலை கொடுப்பார்கள். இவன் மட்டும் முதலில் புரிந்துகொள்ளச் சொல்கிறான்.


"சரி சார்."


வேந்தன் சிரித்தான்.


"இன்னும் ஒரு விஷயம்."


"சொல்லுங்க சார்."


"இங்க நான் முதலாளி இல்ல."


யாழினி புரியாமல் பார்த்தாள்.


"இந்த கம்பெனில நாம எல்லாரும் ஒரே டீம். எனக்கு எஸ் சார்ன்னு மட்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தவறு இருந்தா தயங்காம சொல்லலாம்."


ஒரு நொடி யாழினியின் மனதில் ஏதோ அசைந்தது.


"இவன்... இப்படியா?"


அந்த எண்ணம் வந்த வேகத்திலேயே...

அவள் அதை அடக்கிக் கொண்டாள்.


"சரி சார்."


வேந்தன் கோப்பை மூடினான்.


"வாங்க ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்."


இருவரும் தொழிற்சாலைக்குள் நடந்தார்கள். எங்கு சென்றாலும்...

"காலை வணக்கம் சின்ன முதலாளி!"


என்று தொழிலாளர்கள் சிரித்தபடி வணங்கினார்கள்.வேந்தனும் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி நலம் விசாரித்தான்.


"கணேசன்... உங்க அம்மா இப்ப எப்படி இருக்காங்க?"


"மல்லிகா... பையன் காய்ச்சல் சரியாகிடுச்சா?"


"முரளி... வீட்டுக் கடன் விஷயம் முடிஞ்சுதா?"


யாழினி நடந்து கொண்டே அவனைப் பார்த்தாள். இது நடிப்பாகத் தெரியவில்லை. யாரோ சொல்லிக் கொடுத்த வசனங்களாகவும் இல்லை.


ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு குடும்பமும் அவனுக்கு மனப்பாடமாக இருந்தது. அவளது விரல்கள் அறியாமலேயே கையில் இருந்த நோட்டுப் புத்தகத்தை இறுக்கமாகப் பிடித்தன.


அவள் மனதுக்குள் மெதுவாக ஒலித்தது. அவள் பார்வை ஒரு கணம் வேந்தனின் மீது நிலைத்தது.


"இல்லை..."


என்று மனதுக்குள் மட்டும் சொல்லிக்கொண்டாள். அதற்கு மேல் எந்த எண்ணத்தையும் அவள் வளர விடவில்லை. அவள் மீண்டும் அமைதியான முகமூடியை அணிந்துக் கொண்டாள்.


தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவு நூற்றுக்கணக்கான விசைத்தறிகள் ஒரே தாளத்தில் சுழன்று கொண்டிருந்தன.


அந்த சத்தத்திற்குள் கூட ஒழுங்கு இருந்தது. வேந்தன் முன்னால் நடந்தான்.

யாழினி அவனைப் பின்தொடர்ந்தாள்.


"இங்கதான் நம்ம மெயின் புரொடக்ஷன். ஒரு நாளைக்கு சுமார் இருபதாயிரம் மீட்டர் துணி தயாராகும். இந்த மெஷின்கள் நின்னா நமக்கு நஷ்டம்."


அவன் சிரித்தான்.


"ஆனா ஒரு மனுஷன் கஷ்டப்பட்டா அது அதைவிட பெரிய நஷ்டம்."


யாழினி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த நேரம், 


"சின்ன முதலாளி!"


என்று ஒரு பதற்றமான குரல் கேட்டது.

எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். ஒரு தொழிலாளி தன் கையைப் பிடித்துக் கொண்டு வலியில் துடித்துக் கொண்டிருந்தான்.


மெஷினில் கை உரசியதால் ரத்தம் வழிந்தது. அங்கிருந்த மேற்பார்வையாளர் பதற்றமாக,


"ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க!"


என்று கத்தினார். ஆனால் வேந்தன் ஒரு நொடியும் தாமதிக்கவில்லை. அவன் வேகமாக ஓடிச் சென்றான்.


"ரவி... பயப்படாத."


தன் தோளில் இருந்த வெள்ளைத் துண்டை கழற்றி அவனுடைய கையில் இறுக்கமாகக் கட்டினான்.


"ரத்தம் நிற்கணும்."


பிறகு அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து,


"பர்ஷ்ட் எய்ட் பாக்ஸ் கொண்டு வாங்க."


மற்றொருவரிடம்,


"காரை எடுங்க."


அனைவரும் அவன் சொன்ன வேகத்தில் இயங்க ஆரம்பித்தனர். யாழினி அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். வேந்தன் ரவியின் தோளில் கை வைத்தான்.


"ஒண்ணும் ஆகாது நான் இருக்கேன்."


அந்த ஒரு வார்த்தை வலியில் இருந்த ரவியின் முகத்தில் கூட நம்பிக்கையை ஏற்படுத்தியது.


இரண்டு நிமிடங்களில் வேந்தன் தானே அவனை காரில் ஏற்றி மருத்துவமனைக்குப் புறப்பட்டான்.


அவன் சென்ற பிறகும் தொழிற்சாலை முழுக்க அமைதி. அப்போது அருகில் நின்றிருந்த வயதான தொழிலாளி சுப்பிரமணி யாழினியைப் பார்த்து மெதுவாகச் சொன்னார்.


"மேடம்... நீங்க புதுசா வந்திருக்கீங்கள்ல, ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கோங்க."


யாழினி அவரைப் பார்த்தாள்.


"இந்த கம்பெனிக்கு முதலாளியா நிறைய பேர் வந்துருக்காங்க. ஆனா எங்க வேந்தன் தம்பி மாதிரி எங்களை குடும்பமா பாத்தவன் ஒருத்தனும் இல்ல."


அவரது குரல் பெருமையில் நடுங்கியது.


"நாங்க சம்பளத்துக்காக மட்டும் வேலை பாக்கல. அந்தத் தம்பிக்காகவும் வேலை பாக்குறோம்."


அந்த வார்த்தைகள் யாழினியின் மனதில் ஏதோ ஒரு அசைவை ஏற்படுத்தின. ஆனால் அவள் முகத்தில் அது தெரியவில்லை.


மாலை மருத்துவமனையில் ரவிக்கு தையல் போடப்பட்டுக் கொண்டிருந்தது.

வேந்தன் வெளியே நின்றிருந்தான்.

ரவியின் மனைவி கண்ணீரோடு கைகளை கூப்பினாள்.


"தம்பி... எங்க வீட்டுக்காரரைக் காப்பாத்திட்டீங்க."


வேந்தன் சிரித்தான்.


"நான் இல்லம்மா டாக்டர்தான்.


"இல்ல தம்பி... நீங்க நேரத்துக்கு கொண்டு வரலன்னா..."


அவளால் பேச முடியவில்லை.

வேந்தன் மெதுவாக ஒரு கவரை அவள் கையில் வைத்தான்.


"இதுல கொஞ்சம் பணம் இருக்கு, மருந்து செலவுக்கு."


அவள் உடனே மறுத்தாள்.


"வேண்டாம் தம்பி."


வேந்தன் சற்று கடுமையாக,


"இது உதவி இல்ல. கம்பெனி ரூல். வேலை செய்யும்போது காயம் பட்டா,அது கம்பெனியோட பொறுப்பு."


அவள் கண்ணீருடன் வாங்கிக் கொண்டாள். இதையெல்லாம்...

மருத்துவமனை வாசலில் நின்று அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி. வேந்தன் அவளை கவனிக்கவில்லை.


அவள் ஏன் வந்தாள்? அவளுக்கே தெரியவில்லை.


அவன் காரில் அவசரமாகப் புறப்பட்டபோது அறியாமலேயே அவளும் பின்னால் ஆட்டோவில் வந்துவிட்டாள்.

இப்போது அவள் மனதில் இரண்டு குரல்கள்.


ஒரு குரல்:


"இவன் நல்லவன்..."


மற்றொரு குரல்:


"நல்லவனா இருந்தா... உனக்கு ஏன் இந்த நிலைமை வந்திருக்கு?"


அந்த இரண்டாவது குரல்தான் இறுதியில் வென்றது. யாழினி தன் கண்களை இறுக மூடினாள்.


"இல்ல... நான் எதையும் மறக்கக் கூடாது."


என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். ஒரு முறை திரும்பி மருத்துவமனை வாசலில் நின்றிருந்த வேந்தனைப் பார்த்தாள்.அவன் இன்னும் ரவியின் குடும்பத்தினரிடம்,


"எதுவும் தேவைப்பட்டா தயங்காம கம்பெனிக்கு சொல்லுங்க..."


என்று அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியை சில நொடிகள் பார்த்தவள் எதுவும் பேசாமல் திரும்பி நடந்தாள். அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும்ஷமனம் ஒரு கேள்வியைக் கேட்டது.


"உண்மை எது...?"


"நான் நம்பியது எது...?"


ஆனால் அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் நேரம் இன்னும் வரவில்லை.

அவளுடைய பயணம் இப்போதுதான் தொடங்கியிருந்தது.


மறுநாள் காலை அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ் வேந்தனின் அலுவலகத்தில் சரியாக ஒன்பது மணிக்கு யாழினி கதவைத் தட்டினாள்.


"மே ஐ கம் இன் சார்?"


"கம் இன்."


உள்ளே நுழைந்தவள் மேசை முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளைப் பார்த்து ஒரு நொடி திகைத்தாள்.


பல்வேறு பிரிவுகளின் அறிக்கைகள். ஏற்றுமதி ஒப்பந்தங்கள். வங்கி ஆவணங்கள். ஊழியர்களின் நலத்திட்ட கோப்புகள் என அனைத்தும் ஒழுங்காக இருந்தாலும் வேலை மட்டும் மலை போல இருந்தது.


வேந்தன் சிரித்தான்.


"பயமா இருக்கா?"


யாழினி உடனே மறுத்தாள்.


"இல்லை சார்."


"நல்லது."


அவன் ஒரு கோப்பை அவளிடம் நீட்டினான்.


"இது நேற்று நான் போக முடியாத மூணு மீட்டிங்களோட குறிப்புகள். இதுல முக்கியமான விஷயங்களை மட்டும் பிரிச்சு ஒரு சம்மரி தயார் பண்ணுங்க."


"சரி சார்."


"அவசரம் இல்லை. ஆனா... புரிஞ்சு பண்ணுங்க. காப்பி அடிக்காதீங்க."


யாழினி லேசாகப் புன்னகைத்தாள்.


"சரி சார்."


இரண்டு மணி நேரம் அலுவலகம் முழுவதும் அமைதியாக வேலை நடந்தது.

யாழினி ஒவ்வொரு கோப்பையும் கவனமாகப் படித்தாள்.


தேவையில்லாத விவரங்களை நீக்கி, முக்கியமான தகவல்களை மட்டும் தனியாக எழுதி வைத்தாள். அவள் வேலை செய்யும் விதத்தை அவளுக்கே தெரியாமல் வேந்தன் கவனித்துக் கொண்டிருந்தான்.


அவள் அவசரப்படவில்லை. யாரிடமும் தேவையில்லாமல் பேசவில்லை. ஒவ்வொரு வரியையும் இருமுறை சரிபார்த்தாள்.


மதியம்.


"சார்..."


யாழினி கோப்பை மேசையில் வைத்தாள்.


"சம்மரி ரெடி."


வேந்தன் அதை வாங்கிப் படிக்க ஆரம்பித்தான். முதல் பக்கம், இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம் என அவன் படிக்கப் படிக்க அவனுடைய புருவம் லேசாக உயர்ந்தது. கடைசிப் பக்கத்தை மூடிவிட்டு அவளைப் பார்த்தான்.


"நீங்க இந்த கம்பெனியோட பழைய ரிப்போர்ட்ஸை எல்லாம் படிச்சிருக்கீங்களா?"


யாழினி அமைதியாகச் சொன்னாள்.


"நேத்து இரவு வெப்சைட்ல இருந்த ஆனிவல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் படிச்சேன் சார்."


வேந்தன் ஆச்சரியமடைந்தான்.


"ஏன்?"


"எனக்கு வேலை புரியணும்னா, கம்பெனியை நான்  முதல்ல புரிஞ்சுக்கணும்."


சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்த வேந்தன் பிறகு மெல்லமாக சிரித்தான்.


"குட் வெரி குட்."


அது வேந்தன் ஒருவரைப் பாராட்டும் அரிதான தருணம். யாழினி தலையசைத்தாள்.


"தேங்க்யூ சார்."


அந்த நேரம் வேந்தனின் கைபேசி ஒலித்தது. திரையில் அம்மா என்று மிளிர, 


"சொல்லுங்க அம்மா."


அந்தப் பக்கம் கல்யாணியின் குரல் பதற்றமாக இருந்தது.


"வேந்தா... நம்ம வேலைக்கார அம்மாக்கு திடீர்னு நெஞ்சு வலி."


வேந்தன் முகம் வெளிறியது.


"என்னம்மா சொல்றீங்க? டாக்டர் வீட்டுக்கு வந்திருக்காரா?"


"நீ சீக்கிரம் வா."


"இதோ கிளம்புறேன்."


அவன் உடனே எழுந்தான். காரின் சாவியை எடுத்தான், அவசரத்தில் மேசை மீது இருந்த முக்கியமான ஏற்றுமதி ஒப்பந்தக் கோப்பை எடுத்துச் செல்ல மறந்துவிட்டான்.


அவன் வெளியேறியதும் யாழினி அந்த கோப்பைப் பார்த்தாள். அதைத் திறக்கவில்லை. அமைதியாக எடுத்தவள் அதை அலமாரியில் வைத்துப் பூட்டினாள்.

தன் டைரியில் ஒரு குறிப்பு மட்டும் எழுதினாள்.


"எம் டி பைல் லாக்டு பார் சேப்டி."


அவள் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றாள். வேந்தன் வீட்டில் வேண்டிய உதவிகளை செய்து விட்டு, அலுவலகத்திற்குத் திரும்பியபோது முதல் வேலையாக அந்தக் கோப்பைத் தேடினான்.


"யாழினி..."


"சார்."


"இங்க ஒரு எக்ஸ்போர்ட் பைல் இருந்துச்சே..."


அவள் உடனே அலமாரியைத் திறந்து கோப்பை எடுத்துக் கொடுத்தாள்.


"நீங்க அவசரமா கிளம்பும்போது இதை மறந்துட்டு போயிருந்தீங்க."


வேந்தன் சில நொடிகள் அவளைப் பார்த்தான்.


"நீங்க திறந்து பார்க்கலையா?"


"இல்லை சார்."


"ஏன்?"


யாழினி அமைதியாகப் பதிலளித்தாள்.


"என்னோட வேலை... பாதுகாக்குறது. அனுமதி இல்லாம பார்க்குறது இல்லை."


அந்த ஒரு பதில் வேந்தனின் மனதில் முதல் நம்பிக்கையை விதைத்தது. அவன் மெதுவாகச் சொன்னான்.


"தேன்க்யூ."


யாழினி லேசாகப் புன்னகைத்தாள்.


"யூ ஆர் வெல்கம் சார்."


வேந்தன் மீண்டும் தனது வேலையில் கவனம் செலுத்தினான். யாழினி அமைதியாக அறையை விட்டு வெளியேறினாள். அவளுடைய முகத்தில் இருந்த அதே அமைதி இன்னும் மாறவில்லை.


ஆனால் அந்த அமைதிக்குப் பின்னால் என்ன இருந்தது என்பதை இன்னும் யாரும் அறிந்திருக்கவில்லை.


Powered by Blogger.