அத்தியாயம் – 6 :
நம்பிக்கையின் விதை
"நம்பிக்கை ஒரே நாளில் பிறப்பதில்லை... சிறு சிறு செயல்களில் விதைக்கப்பட்ட விதை, ஒரு நாள் உறவாக மலர்கிறது."
காலை ஒன்பது மணி அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸில் வழக்கம்போல் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
வேந்தன் தனது அறைக்குள் நுழைந்ததும் மேசையின் மீது, இன்றைய வேலைகள் அனைத்தும் நேர வரிசையில் அடுக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு கோப்பின் மீதும் சிறிய மஞ்சள் குறிப்புத்தாள்.
10.00 AM – Export Meeting
11.30 AM – Bank Review
01.00 PM – Supplier Discussion
04.00 PM – Audit File Signature
எல்லாம் மிகத் துல்லியமாக இருக்க வேந்தன் ஒரு புருவத்தை உயர்த்தினான்.
"யாழினி..."
கதவு திறந்தது.
"குட் மார்னிங் சார்."
"இதெல்லாம்...?"
"இன்றைய ஸ்கெட்யூல் சார். நேத்து இரவு நீங்க சொன்ன குறிப்புகளை வைத்து தயார் பண்ணினேன்."
வேந்தன் கோப்புகளை மீண்டும் ஒருமுறை பார்த்தான். உதட்டில் ஒரு சிறிய புன்னகை.
"குட் இதுதான் எனக்கு வேணும்."
அந்த ஒரு பாராட்டு யாழினியின் முகத்தில் சிறிய மகிழ்ச்சியை வரவழைத்தது.
ஆனால் அது வெளியில் மட்டுமே.
உள்ளுக்குள் அவள் தன்னைத்தானே நினைவூட்டிக் கொண்டாள்.
"பாராட்டு வாங்குறதுக்காக நீ இங்க வரல..."
அன்று மதியம் வங்கி அதிகாரிகளுடன் கூட்டம் இருந்தது. கூட்டம் முடிந்து அனைவரும் எழுந்தபோது மூத்த அதிகாரி ஒருவர், சிரித்தபடி வேந்தனிடம் சொன்னார்.
"மிஸ்டர் வேந்தன் உங்க புதிய எக்ஸிகியூடிவ் ரொம்ப திறமையா இருக்காங்க. நீங்க சொல்லும் முன்னாடியே எல்லா டாக்குமெண்ட்டும் ரெடியா இருக்கு."
வேந்தன் யாழினியைப் பார்த்தான். அவள் வழக்கம்போல் அமைதியாகவே இருந்தாள்.
"தேங்க்ஸ்."
என்றான் அவளிடம், அவள் தலையசைத்தாள்.
மாலை அலுவலகத்தில் வேலை முடிந்து கொண்டிருந்த நேரம். திடீரென வெளியே பலத்த மழை. வானமே உடைந்து விழுவது போல. ஊழியர்கள் அனைவரும் வாசலில் நின்று மழை குறையக் காத்திருந்தனர்.
யாழினியும் நின்றிருந்தாள். அவள் குடை கொண்டு வரவில்லை. அந்த நேரம் வேந்தன் வெளியே வந்தான். அவளைப் பார்த்தவன்,
"யாழினி..."
"சார்?"
"எப்படி போவீங்க?"
"பஸ்..."
"இந்த மழையிலா?"
அவள் சிரித்தாள்.
"பரவாயில்லை சார்."
வேந்தன் ஒரு நொடி யோசித்தான்.
"டிரைவர்..."
காரை முன்னால் கொண்டு வந்தார்.
"இவங்களை ஹாஸ்டல்ல விட்டுட்டு வாங்க."
யாழினி உடனே மறுத்தாள்.
"வேண்டாம் சார் நான் போயிடுவேன்."
வேந்தன் அமைதியாகச் சொன்னான்.
"இது உத்தரவு இல்ல பாதுகாப்பு. இந்த நேரத்துல என்னோட ஸ்டாவ் யாரும் கஷ்டப்படக் கூடாது."
யாழினி இப்போது மறுக்கவில்லை.
"தேங்க்யூ சார்."
காரில் ஏறியபோது முதல் முறையாக அவளுடைய மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
"இவன் உண்மையிலேயே... நான் நினைச்ச மாதிரி மனிதனா?"
கார் மழையை வெட்டிக் கொண்டு நகர்ந்தது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த யாழினியின் மனதில், ஒரே ஒரு கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் எழுந்தது.
"நான் தேடுற உண்மை... உண்மையிலேயே இதுதானா?"
அந்த மழை மண்ணை மட்டுமல்ல பல வருடங்களாக புதைந்து கிடந்த நினைவுகளையும், மெதுவாக எழுப்பத் தொடங்கியிருந்தது.
ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்வது எளிது... ஆனால் அவரைப் புரிந்துகொள்வது, அவருடன் செலவிடும் சிறு சிறு தருணங்களில்தான் தொடங்குகிறது.
மழை இன்னும் விடாமல் பெய்துக் கொண்டிருந்தது. கம்பெனி வளாகத்தின் முன் தண்ணீர் தேங்கியிருந்தது. ஊழியர்கள் ஒவ்வொருவராக கிளம்பிக் கொண்டிருந்தனர். காரின் பின்பக்க இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தாள் யாழினி.
டிரைவர் மெதுவாக காரை இயக்கினார்.
கண்ணாடி வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்த அவள், மழைத்துளிகள் வழியும் கண்ணாடியில் தன் முகம் மங்கலாகத் தெரிந்ததை கவனித்தாள்.
அந்த மங்கலான பிம்பத்தைப் பார்த்தவள் மெதுவாக தன்னிடமே சிரித்தாள்.
"நீயும் இப்படித்தான் வெளியே ஒரு முகம் உள்ளே இன்னொரு முகம்..."
அவள் கண்களை மூடிக் கொண்டாள். அந்த நொடியே அவளுடைய நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன் ஓடின.
ஒரு சின்ன வீடு அந்த வீட்டின் வாசலில் சிரித்தபடி நின்ற ஒரு மனிதர்,
"யாழு...!"
அந்த குரல் காதில் ஒலித்தவுடன், அவள் சட்டென்று கண்களைத் திறந்தாள்.
"இல்ல..."
என்று தன்னைத்தானே அடக்கிக் கொண்டாள்.
"கடந்த காலத்தை நினைச்சு பலவீனப்படக் கூடாது."
அதே நேரம் அருணாச்சலம் இல்லம்.
மழை பெய்யும் மாலை நேரம் அந்த வீட்டுக்கு எப்போதும் ஒரு தனி அழகைத் தரும். முற்றத்தில் மழைத்துளிகள் விழும் சத்தம். துளசி மாடத்தில் ஏற்றியிருந்த விளக்கு காற்றில் மெதுவாக அசைந்தது.
சமையலறையில் இருந்து பஜ்ஜி பொரிக்கும் வாசனை. மீனாட்சி அம்மாள் பெரிய பித்தளை டப்பாவில் சூடான பஜ்ஜிகளை எடுத்துக் கொண்டிருந்தார்.
"கல்யாணி... வேந்தன் வந்துட்டானா?"
"இல்ல அத்தை... இந்நேரம் கிளம்பிருப்பான்."
அந்த நேரம் வாசலில் கார் வந்து நின்ற சத்தம்.
"அதோ வந்துட்டான்."
குழந்தைகள் ஓடி வெளியே சென்றார்கள்.
"வேந்தன் மாமா!"
வேந்தன் காரிலிருந்து இறங்கியவுடன், சின்னவள் தியா அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
"மாமா... எனக்கு நாளைக்கு ஸ்கூல் ப்ராஜெக்ட், நீங்கதான் செஞ்சு தரணும்."
வேந்தன் சிரித்தான்.
"சரி... ஆனா ஒரு கன்டிஷன்."
"என்ன?"
"நீயும் என் கூட உட்கார்ந்து செய்யணும்."
"யேய்!"
என்று குதித்தாள் தியா. அதைப் பார்த்து வீட்டிலிருந்த அனைவரும் சிரித்தனர்.
உள்ளே வந்த வேந்தன் வழக்கம்போல முதலில் பாட்டியிடம் சென்றான்.
"பாட்டி..."
"என்னடா ராசா?"
"பஜ்ஜி வாசனை தெருவரை வருது."
மீனாட்சி அம்மாள் சிரித்தார்.
"உனக்குத்தான் பிடிக்குமே."
ஒரு பஜ்ஜியை அவன் கையில் வைத்தார்.
சூடாக இருந்ததால் வேந்தன் விரலை உதறினான்.
"அப்பப்பா..."
அதைப் பார்த்து பாட்டி சிரித்தார்.
"முப்பது வயசு ஆகப்போகுது, இன்னும் சின்ன பையன் மாதிரி இருக்க."
வேந்தன் சிரித்தபடியே அவரது மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டான்.
"எனக்கு இந்த வீட்டுல நான் எவ்வளவு பெரியவனா இருந்தாலும் உங்க பேரன்தான்."
மீனாட்சி அம்மாளின் கண்கள் கலங்கின.
அவர் மெதுவாக அவன் தலைமுடியை வருடினார்.
அதே நேரம் பெண்கள் விடுதி. யாழினி தன் அறைக்குள் நுழைந்தாள். நனைந்த துப்பட்டாவை நாற்காலியில் போட்டுவிட்டு பையைத் திறந்தாள்.
அதிலிருந்து ஒரு பழைய டைரியை எடுத்தாள். அதை மெதுவாகத் திறந்தாள்.
இன்றைய தேதிக்குக் கீழே எழுத ஆரம்பித்தாள்.
"இன்று... அவனை இன்னும் கொஞ்சம் புரிந்துகொண்டேன்.
எல்லோரும் சொல்வது போல... அவன் நல்லவனாகவே இருக்கலாம். ஆனால்...
நான் தேடிக்கொண்டிருக்கும் உண்மை இன்னும் மாறவில்லை. உண்மை முழுமையாகத் தெரியும்வரை...
என் மனசு அமைதியாகாது."
அவள் பேனாவை மூடினாள். டைரியின் நடுவில் இருந்த பழைய புகைப்படம் சற்றே வெளியே வந்தது. அதை எடுத்துப் பார்த்தாள். அவளது உதடுகள் நடுங்கின.
"இன்னும் கொஞ்ச நாள்தான் அப்பா... நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்."
அவள் புகைப்படத்தை மீண்டும் டைரிக்குள் வைத்தாள். ஜன்னலுக்கு வெளியே மழை இன்னும் நின்றிருக்கவில்லை. அந்த மழையைப் போலவே ஒரு பக்கம் வேந்தனின் மனதில் நம்பிக்கை முளைத்துக் கொண்டிருந்தது.
மற்றொரு பக்கம் யாழினியின் மனதில் பழி இன்னும் ஆழமாக வேரூன்றிக் கொண்டிருந்தது.
ஒருவரின் மனதை வெல்ல வேண்டுமென்றால், முதலில் அவரின் உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்...
மறுநாள் காலை அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ் காலை ஒன்பது முப்பது.
வேந்தன் தனது அறையில் கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.
"கம் இன்."
யாழினி உள்ளே வந்தாள்.
"குட் மார்னிங், சார்."
"குட் மார்னிங்."
அவள் கையில் ஒரு கோப்பு.
"இன்னைக்கு உங்க ஸ்கெட்யூல்."
வேந்தன் அதை வாங்கிப் பார்த்தான்.
பத்து மணி – நெசவாளர் கூட்டம்.
பன்னிரண்டு மணி – வங்கி அதிகாரிகள்.
மூன்று மணி – புதிய ஏற்றுமதி ஒப்பந்தம்.
மாலை – அறக்கட்டளை ஆலோசனை.
அவன் தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
"ஒரு கரெக்ஷன்."
"சொல்லுங்க சார்."
"மாலை ஐந்து மணிக்குள்ள எல்லா வேலையும் முடிச்சிடுங்க."
"ஏன் சார்?"
"இன்னைக்கு என் தங்கச்சியோட பிறந்தநாள்."
யாழினி முதல் முறையாக அவன் முகத்தில் அந்த குழந்தைத்தனமான சந்தோஷத்தைப் பார்த்தாள்.
"வீட்டுல எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம்."
அவன் பேசும் போது அவன் கண்களில் இருந்த அந்த ஒளி நடிப்பால் வர முடியாத ஒன்று.
"சரி சார்."
சில மணி நேரங்கள் கடந்தன. மதியம் கூட்டம் முடிந்து வேந்தன் தனது அறைக்குள் வந்தான்.
யாழினி அமைதியாக குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தாள்.
"லஞ்ச் சாப்பிட்டீங்களா?"
என்று திடீரென்று கேட்டான் வேந்தன். அவள் தலை நிமிர்ந்தாள்.
"இன்னும் இல்ல சார்."
"ஏன்?"
"வேலை..."
வேந்தன் புருவத்தைச் சுருக்கினான்.
"வேலை எப்பவும் இருக்கும். ஆனா உடம்பு ஒண்ணுதான்."
அவன் இன்டர்காமை எடுத்தான்.
"கேண்டீன்ல இருந்து இரண்டு மீல்ஸ் அனுப்புங்க."
யாழினி உடனே,
"வேண்டாம் சார்."
என்று சொன்னாள். வேந்தன் சிரித்தான்.
"இது ஆர்டர் இல்லை கம்பெனி ரூல். இங்க யாரும் சாப்பிடாம வேலை பாக்கக்கூடாது."
அவளால் மறுக்க முடியவில்லை சில நிமிடங்களில் இரண்டு ஸ்டீல் டிபன் பெட்டிகள் வந்தன. அவன் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.
"வாங்க."
இருவரும் மேசையின் எதிரெதிரே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் அமைதி. பிறகு யாழினி மெதுவாகக் கேட்டாள்.
"சார்..."
"ம்..."
"நீங்க... இவ்வளவு பிஸியா இருந்தும், எப்படி எல்லாரையும் ஞாபகம் வச்சிருக்கீங்க?"
வேந்தன் சாப்பிட்டுக் கொண்டே சிரித்தான்.
"அது கஷ்டமா என்ன? ஒருத்தர் நம்மள நம்பி வேலை பாக்குறாருன்னா, அவரோட பேராவது ஞாபகம் வச்சிருக்கணுமே."
அவன் தண்ணீர் குடித்துவிட்டு தொடர்ந்தான்.
"எங்க தாத்தா ஒரு விஷயம் சொல்லுவாரு. தொழில் பணத்தால வளராது... மனுஷங்களால வளரும்னு, அதைதான் நான் பாலோ பண்றேன்."
யாழினி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் மனதில்...
மீண்டும் அதே கேள்வி.
"இவன் உண்மையிலேயே தவறானவனா?"
மாலை நான்கு மணி. அனைத்து வேலைகளும் முடிந்திருந்தன. வேந்தன் கோட்டை அணிந்தபடி வெளியே வரத் தயாரானான்.
"யாழினி..."
"சார்."
"நாளைக்கு காலை போர்ட் மீட்டிங். அதுக்கான ப்ரசன்டேஷன் ரெடி பண்ண முடியுமா?"
"கண்டிப்பா சார்."
"தேன்க்ஸ்."
அவன் கதவு வரை சென்றுவிட்டு மீண்டும் திரும்பினான்.
"இன்னும் ஒரு விஷயம்."
"சொல்லுங்க சார்."
"நீங்க இன்னும் இந்த ஊருக்கு புதுசு, ஏதாவது உதவி வேணும்னா தயங்காம சொல்லுங்க."
"நன்றி சார்."
அவன் புன்னகையுடன் வெளியேறினான். வேந்தன் சென்றதும் யாழினி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.
அவள் மேசையின் மேல் இருந்த குடும்ப புகைப்படத்தை எடுத்தாள்.
அதில் வேந்தன் அவனது பெற்றோர் பாட்டி தாத்தா சித்தப்பா குழந்தைகள் என
எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
அந்தப் புகைப்படத்தை சில நொடிகள் பார்த்தவள் மெல்ல சொன்னாள்.
"இன்னும் கொஞ்ச நாள்தான்..."
என்று மட்டும் சொல்லிவிட்டு புகைப்படத்தை அதன் இடத்தில் வைத்தாள்.
ஆனால் அதை வைக்கும் போது...
அவளது விரல்கள் லேசாக நடுங்கின.
அந்த நடுக்கம், அவளுக்கே புரியாத ஒன்று.
அதே நேரம் அருணாச்சலம் இல்லம்.
முழு வீடும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
வண்ண விளக்குகள். கேக், சிரிப்பு, குழந்தைகளின் ஓட்டம் என்று வீடு முழுக்க மகிழ்ச்சி.
வாசலில் நின்று அந்தக் காட்சியைப் பார்த்த வேந்தன் மெல்ல சிரித்தான். அவனுக்குத் தெரியவில்லை இன்னும் சில நாட்களில், இந்த வீட்டின் வாசலை ஒரு புதிய பெண் கடக்கப் போகிறாள்.
அந்த வருகை இந்தக் குடும்பத்தின் வாழ்க்கையில், யாரும் எதிர்பார்க்காத பல மாற்றங்களுக்கு காரணமாகப் போகிறது.


