banner image

அத்தியாயம் 2

 


அத்தியாயம் 2


  குடும்பம்


     மாலை மணி ஐந்து, சூரியன் மேற்கு வானத்தில் சாய ஆரம்பித்திருந்தான்.

அருணாச்சலம் டெக்ஸ்டைல்ஸ் அலுவலகத்தில் இருந்த கடைசி கோப்பையும் மூடிவிட்டு நாற்காலியில் சாய்ந்தான் வேந்தன்.


    அவன் மேசை மீதோ ஒரு புகைப்படம். அதில் அவன் அப்பா அருணாச்சலம், அம்மா கல்யாணி, பாட்டி மீனாட்சி அம்மாள், தாத்தா சண்முகநாதன், குடும்பத்தினர் என்று அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.


   வேந்தன் அந்தப் புகைப்படத்தை ஒரு நொடி பார்த்தான். அவன் உதட்டில் தானாக ஒரு புன்னகை மலர்ந்தது.


  அப்போது கதவை மெதுவாகத் தட்டிவிட்டு உள்ளே வந்தார் அவனுடைய தனிப்பட்ட செயலாளர்.


"சார்..."


"வாங்க செல்வம்."


"இந்த வார போர்ட் மீட்டிங்க்கான கோப்புகள் ரெடி."


"சரி."


" சார் அப்பறம் இன்னும் ஒரு விஷயம்..."


"சொல்லுங்க செல்வம்."


"இந்த வருஷத்தோட நம்ம கம்பெனிக்கு இருபத்தைந்து வருஷம் ஆகுது. அதுக்காக பெரிய விழா வைக்கலாம்னு எல்லாரும் பேசிக்கிட்டுருக்காங்க."


வேந்தன் சிரித்தான்.


"விழாவா? ம்ஹூம் கண்டிப்பா வைக்கலாம்."


செல்வத்தின் முகம் மலர்ந்தது.


"ஆனா..."


என்றபடி வேந்தன் எழுந்து ஜன்னலருகே நடந்தான். கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களைப் பார்த்தவன், 


"இந்தக் கம்பெனி இந்த கட்டிடத்தால நிக்கல. அவங்க உழைப்பால நிக்குது."


திரும்பி செல்வத்தைப் பார்த்தவன், 


"இந்த வருஷ போனஸ் வழக்கத்தை விட  அவங்களுக்கு இரட்டிப்பா கொடுக்கணும்.”


செல்வம் அதிர்ச்சியுடன் பார்த்தார்.


"சார்... அது..."


"நம்ம லாபம் அவங்க உழைப்புல வந்தது. அதனால சந்தோஷமும் அவங்களுக்கே முதல்ல போகணும்."


செல்வத்தின் கண்கள் நனைந்தன.


"உங்களை மாதிரி முதலாளி கிடைக்க அவங்க கொடுத்து வச்சிருக்கணும் சார்."


வேந்தன் சிரித்துவிட்டு, 


"நானும் அவங்களை மாதிரி தொழிலாளிதான். என்ன எனக்கு  கேபின், அவங்களுக்கு மெஷின். அவ்வளவுதான் வித்தியாசம்."


    என்று கூற செல்வம் அங்கிருந்து வெளியேறினார். 


அதே நேரம் மேல் மாடியில் இருந்த ராகவேந்திரன் இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் சென்ற செல்வமோ,


"சார்... சின்ன முதலாளி இந்த நிறுவனத்துக்கு ரொம்ப பெரிய பலம்."


என்றார். ராகவேந்திரன் மெதுவாகப் புன்னகைத்தார்.


"அவன் அப்பாவோட வளர்ப்பு அப்படித்தான் செல்வம். பணம் சம்பாதிக்கிறத விட, மனிதர்களோட மனசை சம்பாதிக்கணும்னு அவன் நினைக்கிறான். அதனாலதான் எல்லாரும் அவனை இவ்வளவு மதிக்கிறாங்க."


சிறிது நேரம் வேந்தனையேப் பார்த்துக் கொண்டிருந்தவர்,


"வேந்தன் நல்ல மனசுக்காரன் செல்வம், அந்த நல்ல மனசுதான் இந்த நிறுவனத்தோட பெரிய பலம். அந்த குணம் எப்போதும் மாறாம இருக்கணும்."


என்று சொல்லிவிட்டு அமைதியாக அங்கிருந்து நடந்துச் சென்றார்.


   மாலை மணி 6.30, அருணாச்சலம் இல்லத்தின் முற்றத்தில் குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

சமையலறையிலிருந்து வந்த நெய்யின் மணம் நாசியை வருடியது. பாட்டி மீனாட்சி அம்மாள் துளசி மாடத்தில் விளக்கை ஏற்றிக் கொண்டிருந்தார்.


   வேந்தனின் கார் உள்ளே நுழைவதைக் கண்டதும், 


"வேந்தன் மாமா வந்துட்டாங்க..."


என்று சந்தோஷமாக குழந்தைகள் காரை நோக்கி ஓடி வந்தனர்.


    வேந்தனை நோக்கி ஓடி வந்தது வள்ளியின் மகன் ஆதவும், மகள் தர்ஷினியும்.


   விடுமுறை என்றாலே அவர்கள் அருணாச்சலம் இல்லத்தில்தான் இருப்பார்கள்.


   வேந்தன் அவர்களுக்கு வெறும் மாமா மட்டும் இல்லை, விளையாட்டு தோழன், நல்ல நண்பன், ஆசிரியன், எல்லாமே அவன்தான்.


"மாமா..."


"என்னடா ஆதவ் கண்ணா..."


"எப்பவும் நீங்க வாங்கிட்டு வர்ற சாக்லேட்?"


வேந்தன் சிரித்தான்.


"அதை எப்படி மறப்பேன்?"


காரின் பின்புறத்திலிருந்து ஒரு பெரிய பையை எடுத்தான். அதிலிருந்து சாக்லேட்டுகளை எடுத்துக் கொடுத்தான்.


எனக்கும்...எனக்கும்... என்று குழந்தைகள் இருவரும் அவனைச் சுற்றி நின்றனர். அவன் ஒவ்வொருத்தருக்கும் பெயர் சொல்லி சாக்லேட்களைக் கொடுத்தான். வாசலில் நின்றிருந்த கல்யாணி அம்மாள் மகனைப் பார்த்து சிரித்தார்.


"நீ வர்றதுக்காகத்தான் இவங்க டெய்லியும்  காத்திருப்பாங்க."


வேந்தன் தோளை குலுக்கினான்.


"நானும் இவங்களுக்காகத்தான் வீட்டுக்கு  சீக்கிரம் வர்றேன்."


   என்று கூறியபடி வேந்தன் உள்ளே நுழையப் போகும் நேரம், 


"வேந்தன் அண்ணா வந்துட்டாரு!"


    என்ற குரலுடன் ஹாலில் இருந்து வெளியே வந்தான் விக்ரம்.


  அவன்தான் விக்ரம் ராகவேந்திரன். ராகவேந்திரனின் மூத்த மகன்.

வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு சில மாதங்களுக்கு முன்புதான் நிறுவனத்தில் சேர்ந்திருந்தான். வேந்தனிடமிருந்து ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொண்டு, அவனுடன் இணைந்து நிறுவனப் பொறுப்புகளை கவனித்து வந்தான்.


வேந்தனைப் பார்த்ததும் புன்னகைத்தவன்,


"ஏன் அண்ணா... இன்னைக்கு ரொம்ப லேட்டாகிடுச்சு?"


என்று கேட்க, வேந்தன் சிரித்தான்.


"கிடங்குல கொஞ்சம் வேலை இருந்துச்சுடா."


என்று சொல்லியபடி அவன் தோளில் தட்டினான்.


"சரி நீ எப்ப வந்த?"


"அரை மணி நேரமாச்சுன்னே."


என்று விக்ரம் பதிலளித்தான். அதே நேரம் மாடிப்படிகளில் இருந்து வேகமாக இறங்கி வந்தாள் நந்தனா.


    ராகவேந்திரனின் இளைய மகள், வீட்டிலேயே அனைவரின் செல்லம். நேராக வேந்தன் முன் வந்து நின்றவள், 


"வேந்தன் அண்ணா எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்தீங்களா?"


என்று உரிமையாகக் கேட்டாள். வேந்தன் சிரித்தபடியே தனது சட்டைப் பையிலிருந்து ஒரு பெரிய டைரி மில்க் சாக்லேட்டை எடுத்தான்.


"உன்னை மறந்துடுவனா ம்மா?"


என்று அவளிடம் நீட்ட,நந்தனாவின் முகம் மலர்ந்தது.


"தேங்க்யூ அண்ணா!"


என்று சொல்லிவிட்டு அதை வாங்கிக் கொண்டவள் அடுத்த நொடியே, 


"அம்மா... இங்கு பாருங்களேன்... வேந்தன் அண்ணா எனக்கு மட்டும் பெரிய சாக்லேட் வாங்கியிருக்காங்க!"


என்று குழந்தைத்தனமாகக் கத்திக்கொண்டு சமையலறையை நோக்கி ஓடினாள். அவளைப் பார்த்து வீட்டிலிருந்த அனைவரும் சிரித்தனர். வேந்தன் மட்டும், 


"இந்தப் பொண்ணு மட்டும் எப்பவும் மாறவே மாட்டா..."


என்று சிரித்தபடி தலையசைத்தான். அப்போது...


"வேந்தா..."


என்று அழைத்தார் அருணாச்சலம்.


"வா... எல்லாரும் ஹால்ல இருக்காங்க."


வேந்தன் உள்ளே சென்றான்.


   பெரிய ஹாலில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருந்தனர். சூழ்நிலை மட்டும் வழக்கத்தை விட கொஞ்சம் அமைதியாக இருந்தது.

வேந்தன் சிரித்தபடியே சோபாவில் அமர்ந்தான்.


"என்னப்பா… ஏன் எல்லாரும் இப்படி சீரியஸா இருக்கீங்க?"


அருணாச்சலம் அவனை ஒரு நொடி பார்த்தார்.


"ஒரு முக்கியமான விஷயம் பேசணும்."


வேந்தன் புருவத்தை சுருக்கினான்.


"என்ன விஷயம்?"


அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல யாரும் அவசரப்படவில்லை. அந்தக் கேள்விக்கு உடனே யாரும் பதில் சொல்லவும் இல்லை. சில நொடிகள் அந்த ஹாலே அமைதியாக இருந்தது. இறுதியாக அருணாச்சலம் ஆழமாக மூச்சை இழுத்தார்.


"வேந்தா... உன் கல்யாணத்தைப் பற்றி பேச வேண்டிய நேரம் வந்துடுச்சு..."


அந்த ஒரு வாக்கியம், வேந்தனின் வாழ்க்கையை மட்டுமல்ல, இன்னும் சில நாட்களில் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கப் போகும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் மாற்றப் போவதை, அங்கே இருந்த யாரும் அறிந்திருக்கவில்லை.


   அருணாச்சலம் இல்லத்தின் பெரிய கூடம், எப்போதும் சிரிப்பும், சலசலப்புமாக இருக்கும் அந்த இடம், இன்று மட்டும் ஏதோ சொல்ல முடியாத அமைதியில் மூழ்கியிருந்தது. சுவரில் தொங்கியிருந்த பழைய பெண்டுலம் கடிகாரம் டிக்... டிக்... டிக்…என்று ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலியே அந்த அமைதியை இன்னும் கனமாக மாற்றியது. 


   வேந்தன் சுற்றிலும் அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்தான். அப்பா அருணாச்சலம், அம்மா கல்யாணி, தாத்தா சண்முகநாதன்,பாட்டி மீனாட்சி,சித்தப்பா ராகவேந்திரன்,சித்தி சங்கரி மற்றும் அவர்களின் பிள்ளைகள் என எல்லோருடைய முகத்திலும் ஏதோ ஒரு யோசனை.


"என்னப்பா...?"


என்று மீண்டும் கேட்டான் வேந்தன்.

அருணாச்சலம் ஆழமாக மூச்சை இழுத்தார்.


"வேந்தா… உனக்கு வயசு முப்பத்தொண்ணு."


வேந்தன் சிரித்தான்.


"அதுக்கென்னப்பா இப்போ?"


"அதில்லப்பா நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு."


அந்த ஒரு வரியில் அறையிலிருந்த பதற்றம் கொஞ்சம் குறைந்தது. வேந்தன் சத்தமாக சிரித்தான்.


"இதுக்குத்தானா எல்லாரும் இவ்வளவு சீரியஸா உட்கார்ந்திருக்கீங்க?"


கல்யாணி அம்மா மெதுவாக,


"நீ எப்பவும் வேலை... வேலைன்னு ஓடிட்டே இருக்க, உன் வாழ்க்கையைப் பற்றியும் யோசிக்கணும்ல வேந்தா..."


  என்றார். வேந்தன் தன் அம்மாவை பார்த்து மெதுவாக சிரித்தான்.


"எனக்கு தான் இந்தக் குடும்பம் இருக்கேம்மா, அதுவே போதும்."


   என்று கூற,உடனே பாட்டி குறுக்கிட்டார்.


"அது சரிதான் ராசா, ஆனா உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா?"


   வேந்தன் எதுவும் பேசவில்லை. தாத்தா சண்முகநாதன் பேச ஆரம்பித்தார்.


"நம்ம குடும்பம் எப்பவும் உறவுகளை மதிச்சு நடக்கற குடும்பம். உன் கல்யாணத்தையும் அவசரப்படுத்த மாட்டோம். ஆனா இப்போ இருந்து பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறோம்."


வேந்தன் சில நொடிகள் அமைதியாக இருந்தான். அவன் முகத்தில் கோபமோ, மறுப்போ இல்லை. ஆனால் ஒரு தயக்கம் இருந்தது.


"அப்பா..."


அருணாச்சலம் அவனை நோக்கி திரும்பி பார்த்தார்.


"சொல்லு ப்பா."


"கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கும் போது ஒரு விஷயம் மட்டும் நியாபகத்துல வச்சுக்கங்க. "


" எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லுப்பா உன் விருப்பத்தை மீறி நாங்க எதுவும் முடிவு எடுக்க மாட்டோம்? யாரையாவது விருப்பப்படறியா? எதா இருந்தாலும் சொல்லுப்பா எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. "


அவரது பதிலில் சட்டென்று சிரித்தவன்


" அதெல்லாம் ஒன்னும் இல்ல ப்பா. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு இந்த வீட்டுக்குள்ள மருமகளா மட்டும் வரக்கூடாது."


எல்லோரும் அவனையே பார்த்தனர்.


"இந்த வீட்டுப் பொண்ணா வரணும்."


கல்யாணியின் கண்கள் நனைந்தன. வேந்தன் தொடர்ந்து பேசினான்.


"பணம் இருக்கணும்னு அவசியமில்லை. பெரிய குடும்பமா இருக்கணும்னு அவசியமில்லை. ஆனா நம்ம வீட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரையும் மனசார நேசிக்கணும். அம்மாவை அம்மாவா,பாட்டியை பாட்டியா,இந்த வீட்டுல வேலை செய்றவங்களைக் கூட குடும்பமா பார்க்கணும். அப்படி ஒரு பொண்ணு இருந்தா, நீங்க யாரைக் காட்டினாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்."


அறை முழுக்க அமைதி. கல்யாணி அம்மா கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.


"என்னடா... நீ..."


அவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. மீனாட்சி அம்மாள் மனதுக்குள் இறைவனை வேண்டிக் கொண்டார். 


"இவனை மாதிரி பையனுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்..."


   அருணாச்சலம் பெருமையுடன் மகனைப் பார்த்தார்.


" கவலப்படாதப்பா நீ நினைச்ச மாதிரியே நம்ம குடும்பத்தோட மதிப்பை புரிஞ்சுக்கிற பொண்ணு தான், நம்ம வீட்டுக்குள் வரணும்."


என்றார். அந்த வார்த்தைக்கு ராகவேந்திரனும் மெதுவாகத் தலையசைத்தார்.


"அண்ணா சொல்றது சரிதான். வேந்தன் இந்த வீட்டை எந்த அளவுக்கு நேசிக்கிறானோ... அதே அளவுக்கு இந்த வீட்டை நேசிக்கிற ஒரு பெண் வந்தா, அதைவிட வேற என்ன வேணும்?"


என்று ராகவேந்திரன் புன்னகையுடன் கூறினார். அவருடைய வார்த்தைகளைக் கேட்ட கல்யாணி அம்மா,


"அப்படிப்பட்ட ஒரு பொண்ணை ஆண்டவன் கண்டிப்பா நம்ம கண்ணுல காட்டுவான்."


என்றார். அந்தக் குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவரின் மனதிலும் வேந்தனின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு அழகான நம்பிக்கை பிறந்தது.


   வெளியே இரவு இன்னும் ஆழமாகிக் கொண்டிருந்தது. அருணாச்சலம் இல்லத்தில் அனைவரும் நிம்மதியாக உறங்கத் தயாரானார்கள். ஆனால் விதி மட்டும் அவர்களுக்காக விழித்திருந்தது.


Powered by Blogger.