அத்தியாயம் 21
தேவ்வோடு ஆடிக் கொண்டிருந்த பெண்கள், அவன் கையில் ரத்தம் வருவது கண்டு, உடனே அவனை விட்டு விலகி நின்று கொண்டனர். அங்கு வேலை செய்யும் பட்லர் ஒருவர்,
“சார் பிளட் நிக்காம வருது, ஹாஸ்பிடல் போறதுக்குள்ள நிறைய பிளட் லாஸ் ஆகிடும். ரொம்ப நேரம் இப்படியே இருந்தா இன்ஃபெக்ட் ஆகவும் சான்ஸ் இருக்கு. நீங்க வேணும்னா பிரைவேட் ரூம்ல வந்து காயத்துக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணிக்கோங்க, அதுக்கப்புறம் கூட டாக்டரை பார்த்துக்கலாம்.”
வலி பொறுக்க முடியாததால் தேவ்வும் சரி என்று அவனோடு நடக்க, அவனுடன் ஆடிக் கொண்டிருந்த பெண்கள் யாருமே உடன்வரவில்லை. பட்லர் தான் அவனை தாங்கிக் கொண்டு அறையை நோக்கி நடந்தான். மினி மட்டும் வேண்டா வெறுப்பாக அவன் பின்னே சென்றாள்.
அறைக்கு வெளியே நின்று கொண்ட மினி உள்ளே வராமல்,
“டார்லிங் எனக்கு ரத்தம்னாலே அலர்ஜி மயக்கம் வந்திடும். அதனால நீங்க உள்ள போங்க, நான் வெளியவே உங்களுக்காக வெயிட் பண்ணறேன்.”
என்று தேவ்வை பட்லரோடு உள்ளே அனுப்பி விட்டு வெளியே நின்று கொண்டாள்.
உள்ளே ஒரு பெட்டியோடு நின்றிருந்த கண்மணி, தேவ்வின் இடது கையில் அடிபட்ட இடத்திற்கு சிகிச்சை செய்யத் தொடங்கினாள்.
“ஹேய் பேபி…உன் கண்ணு எவ்ளோ அழகா இருக்கு, மாஸ்க் கழட்டி உன் முழு அழகை எனக்கு காட்ட மாட்டியா?”
அவள் எதுவும் பேசாமல் தனது காரியத்தில் கண்ணாய் இருக்க,
“எவ்வளவு ரேட்ன்னு சொல்லு டார்லிங்…கோடி கோடியா உனக்கு நான் கொட்டி கொடுக்கறேன்.”
என்று அந்த நிலையிலும் அவன் உளறிக் கொண்டிருக்க, வந்த கோபத்திற்கு டின்ச்சரை அவன் காயத்தில், மொத்தமாக கொட்டினாள் கண்மணி. அதில் அவன் அலறிக் கொண்டு கைகளை உதற,
“சாரி சார் நீங்க போதையில இருக்கிறதால தான் நான் அதிகமா மருந்து வைச்சேன். அப்படி செய்யாட்டி காயம் செப்டிக்காகி அந்த இடமே புண்ணு விழுந்து அழுக ஆரம்பிச்சுடும். சார் உங்களுக்கு வலி தெரியாம இருக்க நான் வேணும்னா இன்ஜெக்ஷன் ஒன்னு போடவா.”
“சரி சரி எதுவா இருந்தாலும் கொஞ்சம் மெதுவா வலிக்காத மாதிரி பார்த்து பண்ணு.”
என்று கண்களை மூடிக்கொண்டவன் முகத்தையும் மறுபுறம் திருப்பிக் கொண்டான். அங்கு நின்று கொண்டிருந்த பட்லருக்கு கண்மணி கண்களை காட்டிட, அவன் அவளை மறைத்தவாறு இருவருக்கும் இடையில் நின்று கொண்டான்.
உடனே கண்மணி தனது பேக்கில் இருந்து ஒரு இன்ஜெக்ஷனை எடுத்தவள், தேவ்வின் கைகளில் இருந்து அவனது ரத்த மாதிரிகளை இன்ஜெக்ஷன் மூலமாக எடுத்து, ஒரு சீல் இட்ட குப்பிக்குள் செலுத்தினாள். பிறகு அதை தனது பேக்கில் உள்ள மெடிக்கல் கிட்டில் பத்திரமாக வைத்தவள், அவன் காயத்திற்கு மருந்திட்டாள்.
பட்லரின் உதவியோடு கைகளில் கட்டுடன் வெளியே வந்தவனை, அங்கு காத்துக் கொண்டிருந்த மினி தாங்கிக் கொண்டாள்.
அவர்கள் சென்றதும் உள்ளே வந்த பட்லரிடம்,
“ரொம்ப நன்றி ண்ணா, இந்தாங்க உங்களுக்கான பணம்.”
“நன்றி மேடம், ஆனா மேடம்…அவரைப் பார்த்தா ரொம்ப பணக்காரர் போல தெரியிது…இதுனால எனக்கு எதுவும் பிரச்சனை வந்திடாதே?”
“கண்டிப்பா வராது சொல்லப் போனா நீங்க ஒரு நல்ல காரியத்துக்காக தான், இதை பண்ணி இருக்கீங்க. அப்படியே ஏதாவது பிரச்சனை வந்தாலும், கண்டிப்பா நான் உங்களை இதுல இழுத்து விட மாட்டேன், ப்ராமிஸ்.”
தனது கைப்பையில் உள்ள குப்பி பத்திரமாக இருக்கின்றதா என்று உறுதி படுத்திக் கொண்டவள், அறையில் இருந்து வெளியே வந்து அவளுக்காக காத்துக் கொண்டிருந்த கவியை அழைத்துக் கொண்டு, பப்பில் இருந்து வெளியேறினாள்.
அங்கிருந்து கிளம்பியவள் நேராக ரத்த பரிசோதனை செய்யும் இடத்திற்கு சென்று, தனது பையில் இருந்த ரத்த மாதிரிகளை அங்கு பரிசோதனைக்காக கொடுத்தாள்.
இதற்கான ரிசல்ட் நாளை தான் கிடைக்கும் என்று அவர்கள் கூற, அதற்கான பணத்தை செலுத்தி விட்டு ரசீதோடு நிம்மதியாக ஹாஸ்டல் ரூமை நோக்கிச் நடந்தாள்.
ஹாஸ்டலுக்கு வந்த கவி ரூமினுள் நுழைந்ததும் கதவை தாளிட்டு விட்டு, கண்மணியின் தோள்களை பற்றி,
“என்ன பண்ணிட்டு இருக்க கண்மணி? அவன் தான் உன்னை ஏமாத்திட்டான்னு தெரியுதில்ல, இதுக்கு மேலயும் எதுக்காக அவன் பின்னாடியே அலைஞ்சுட்டு இருக்க? அவனை எதுவும் பெருசா ஒரு போலீஸ் கேஸ்ல மாட்டி விடப் போற ஐடியால இருக்கயா என்ன? அவனுக்கு வலை விரிக்கிறேன்னு சொல்லி, நீ ஏதாவது பிரச்சனையில சிக்கிக்காத டி. துஷ்டன்னு தெரிஞ்ச பிறகு அதிலிருந்து விலகறது தான் நமக்கு நல்லது.”
“கவி நான் அவனை விட்டு விலகி தான் இருக்கப் போறேன், ஆனா அவன்கிட்ட இருந்து எனக்கு ஒரே ஒரு கேள்விக்கான பதில் மட்டும் கிடைக்கனும். அதை மட்டும் கேட்டுட்டு நான் இங்கிருந்து கிளம்பிடுவேன்.”
“என்ன… உனக்கு ஏன் துரோகம் பண்ணான்னு கேட்கப் போறியா?”
“இல்ல என்னோட கணவர் தேவ் எங்க இருக்கார்? அவரை என்ன பண்ணிணான்னு, இங்க போலியா நடிச்சுகிட்டு இருக்க இந்த ஆள்கிட்ட கேட்க போறேன்.”
மும்பையில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில், நவீனுக்கு எதிரில் உள்ள சேரில் அமர்ந்தபடி அவனுடன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார் தேவ்வுடைய தாயார் சுமித்ரா.
“ஆன்ட்டி நம்ம தேவ் பத்தி உங்களுக்கு தெரியாதா? அவன் உங்களோட வளர்ப்பு. அவன் எப்படி தப்பான வழிக்கு போவான்.”
“இல்ல நவீன் நான் எதையும் யோசிக்காம, ஆதாரம் இல்லாம சொல்லுவேனா? அதுவும் என் பையன் விஷயத்துல?
கொஞ்ச நாளாவே எனக்கு ஏனோ நெருடலாவே இருக்கு, எங்க எல்லார் கூடவும் இருக்கும் போது வழக்கமான தேவ்வா இருக்கிறவன், வெளி இடத்துல அப்படி இல்ல. அரசல்புரசலா இது என் காதுல விழ, உடனே அவனை கண்காணிக்க தொடங்கினேன். அப்ப தான் அவனோட சுயரூபமே எனக்கு முழுசா தெரிஞ்சுது.
இவன் இப்ப தான் இப்படி மாறிட்டானா இல்ல முதல்ல இருந்தே எங்ககிட்ட நடிச்சுட்டு தான் இருக்கானா?”
“ஆன்ட்டி…”
“ இருப்பா நான் இன்னும் பேசி முடிக்கல, என்ன தான் பிஸினஸ் வொர்க் இருந்தாலும் இந்தியால அதுவும் மும்பைல இருந்தா, நைட் என்ன டைம் ஆனாலும் வீட்டுக்கு வராம இருக்க மாட்டான், ஆனா இப்போ அவன் வீட்டுக்கு வந்தே பல மாசம் ஆச்சு ஆபீஸே கதின்னு கிடக்கான். ஒருநாள் மனசு பொறுக்காம அவனை பார்க்க போனேன், அப்ப தான் அவன் லட்சனத்தை நானே என் கண்ணால பார்த்தேன்.”
“சரி ஒருவேளை இப்போ புதுசா கிடைச்ச தவறான சகவாசத்தால இப்படி ஆயிட்டானோன்னு நினைச்சு, சென்னையில இருக்க பிரான்ச்சுக்கு அவனை போகச் சொன்னேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா நவீன்?
இங்க இவ்ளோ பிஸ்னஸ் இருக்கும்போது, அங்க எதுக்காக தனியா ஒரு புது பிசினஸ்? அதுவும் பார்ட்னர்ஸிப்ல? அதை க்ளோஸ் பண்ணுங்கன்னு சொல்றான்.”
“என்ன? ஆனா ஆன்ட்டி அது தேவ்வோட கனவு ப்ராஜெக்ட் ஆச்சே?”
“எக்ஸாக்ட்லி அதைத் தான் நானும் சொல்ல வரேன், நான் இது அவனோட லட்சியம்னு எடுத்து சொல்லவும் தான் வேண்டா வெறுப்பா அங்க கிளம்பினான். அவன் கிட்ட ஏதோ சரியில்ல, ம்ஹீம்…எனக்கு அதை சரியா சொல்லத் தெரியல. நீ சென்னை போய் சில நாட்கள் அவனோட அங்க தங்கி இருந்து, அவன் நடவடிக்கைகளை கொஞ்சம் கண்காணிச்சு என்ன பிரச்சனைன்னு சொல்லுவியாப்பா?
இப்போ சென்னைல அவனோட நடவடிக்கைகள், இன்னும் ரொம்ப மோசமா இருக்கறதா வேற எனக்கு தகவல் வந்தது.
எப்படியாவது என் மகனை பழைய படி நல்லவனா கூட்டிட்டு வா நவீன். அவனுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுகிட்டு, அதுல இருந்து அவனை மீட்டு கொடுக்க முடியுமா ப்ளீஸ்?”
“ஐயோ ஆன்ட்டி முதல்ல கையை கீழே இறக்குங்க, நீங்க என் அம்மா மாதிரி, என் பிரண்டுக்கு ஒரு பிரச்சனைனா, அதுல இருந்து அவனை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கும் இருக்கு. நான் நெக்ஸ்ட் வீக்கே சென்னை கிளம்பறேன், அவனோட ஒரு வாரம் இருந்து என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிக்கிறேன்.”
சுமித்ரா அவனுக்கு நன்றி கூறிவிட்டு தனது காரை நோக்கிச் செல்ல, அவர் கிளம்பும்வரை பொறுமை காத்தவன், கார் கண்களை விட்டு மறைந்த மறுநொடி தனது மொபைலில் இருந்து யாருக்கோ அவசரமாக அழைத்தான்.
“ அடேய் யப்பா தேவராசா…இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் உனக்கு இந்த அவதாரம்? இங்க உங்கம்மாக்கு சந்தேகம் வந்தாச்சு, சோ அவங்களுக்காக உன்னை கண்காணிக்க, நெக்ஸ்ட் வீக் நான் சென்னை வரப் போறேன். எதையாவது கண்டுபிடிச்சயா இல்லையா?”
அட்டகாசமாக சிரித்த தேவ்,
“ம்ம் பாதி கிணறு தாண்டிட்டேன் டா, இதுவரைக்கும் எனக்கு வந்த அத்தனை ஆபத்துகளுக்கும், ஏன் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த குண்டு வெடிப்பு முதற்கொண்டு எல்லாத்துக்கும், இந்த கேங் தான் காரணம், மினி மூலமா எதாவது க்ளூ கிடைக்கும்னு பார்த்தேன், ஆனா அவளே ஒரு வேஸ்ட் பீஸ்ன்னு இப்ப தான் தெரிஞ்சுது. இனி அவகிட்ட இருந்து விலகியே இருக்கனும்.”
“ஆஹான்…ஆனாலும் பொண்டாட்டி முன்னாடியே வேற பிகரை கரெக்ட் பண்ணற பார்த்தியா, உனக்கு செம தில்லுடா.”
“நான் எங்க டா அவளை கரெக்ட் பண்ணேன், அவ தான் என்கிட்ட வாண்டட்டா வர்றா. நான் முடிஞ்ச வரை எஸ்கேப் ஆகி ஓடிட்டு இருக்கேன். ஆனா பாவம் டா என் பட்டர் ஸ்காட்ச் நொறுங்கி போயிட்டா.”
“ம்ம்ம் தன் புருஷனை வேற ஒருத்தி கூட சேர்ந்து, அதுவும் அப்படி ஒரு கோலத்துல பார்த்தா எந்த பொண்ணு டா தாங்குவா? பாவம் சிஸ்டர், டேய் இந்த ஏமாற்றத்துல அவங்க எதுவும் தப்பான முடிவை எடுக்கலையே?”
“எது அவளா? உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ரெண்டு நாளா மேடம் ஒரு இடம் விடாம ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்காங்க, அது மட்டும் இல்ல பப்புல ஒரு ஆக்சிடென்ட்டை ஏற்பாடு பண்ணி, இரத்த மாதிரிகளையும் சேகரிச்சு லேப்க்கு அனுப்பி வச்சாச்சு. நாளைக்கு அதுக்கான ரிசல்ட் வரப் போகுது, அப்போ அவ முகத்துல வரப் போற ரியாக்ஷனை பார்க்க நான் ரொம்ப ஆவலா இருக்கேன்.”
“ ஓஹோ அப்ப நாளைக்கு ஆபீஷ்ல ஒரு கொலை விழுகப் போகுதுன்னு சொல்லு. ஜோக்ஸ் அபார்ட் சீக்கிரம் அதை கண்டுபிடிக்கிற வழியப் பாருடா, பாவம் உங்க அம்மா அழுகறதை என்னால பாக்கவே முடியல. இதுக்கு இடையில உன் பொண்டாட்டி வேற, ஆத்தா எப்ப மலை ஏறப் போகுதோ தெரியல, அதுக்குள்ள பிரச்சனையை முடிக்க பாரு. என்னால முடிஞ்சவரை நானும் அங்க சீக்கிரம் வரப் பார்க்கறேன். ”


