அத்தியாயம் 5
கண்மணி இன்பச் சுற்றுலா செல்லும் நாளும் வந்தது. அவளது தாயும் தந்தையும் கண்ணீரோடு பல அறிவுரைகளை கூறி அவளுக்கு விடை கொடுக்க, அதற்கு நேர் மாறாக சந்தோஷமாக அவளுக்கு டாட்டா காட்டினார் ரங்கநாயகி.
ஏனோ ரங்கநாயகியின் கண்களில் தெரிந்த அந்த உறுதியும், அவரது செய்கையும் கண்மணிக்கு சந்தேகத்தை கிளப்பிய போதும், கிளம்பும் நேரத்தில் அவரைப் பற்றி சிந்தித்து, தனது நாளை பாழாக்க வேண்டாம் என்று நினைத்தவள், நண்பர்களோடு பயணத்தை ரசித்தபடி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி விட்டாள்.
பல மணிநேர பயணத்திற்குப் பிறகு நள்ளிரவில் தாங்கள் தங்க வேண்டிய ரிசார்ட்டை அடைந்தவர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூமில் சென்று அடைந்து கொண்டனர்.
அடுத்த நாள் காலை உற்சாகமாக ஊரைச் சுற்றி பார்க்க கிளம்பியவர்கள், ஒரு ஷாப்பிங் மாலுக்குள் நுழைய முற்படும் போது, திடீரென்று அதிக சத்தத்தோடு வெடித்த வெடிகுண்டு, அங்கு பெரிய கலவரத்தையே ஏற்படுத்தி விட்டது.
அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் தடுமாறி தனது நண்பர்களை பிரிந்த கண்மணி, என்ன செய்வது என்று தெரியாமல் அந்த மொழி தெரியாத ஊரில், தனது உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள, அங்கங்கு பதுங்கி பதுங்கி முன்னேறிச் செல்லத் தொடங்கினாள்.
ஒரு கட்டத்தில் பிணங்களுக்கு நடுவே வந்து மாட்டிக் கொண்டவள், என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அங்கு விழுந்து கிடந்த ஆட்களை திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த, முகமூடி அணிந்த ஒரு ஆள் அவளை பார்த்து விட்டு தனது கூட்டத்தாரை நோக்கி ஏதோ புரியாத பாஷையில் கத்த, உடனே மறைந்திருந்த இடத்தை விட்டு எழுந்தவள், வேகமாக ஓடத் தொடங்கினாள். சிறிது நேர ஓட்டத்திற்கு பிறகு ஒரு அகலமான மரத்தின் பின்னால் சென்று ஒளிந்தும் கொண்டாள்.
அவளை துரத்திக் கொண்டு வந்தவர்கள் சுற்றும் முற்றும் தேடியபடியே அந்த மரத்தின் அருகில் வர, கண்களில் பீதியோடு நின்றிருந்திருந்த கண்மணியின் தோள் மீது, திடீரென்று ஒரு கை வந்து விழுந்தது.
பயத்தில் அலற வாய் திறந்தவளின் வாயைப் பொத்திய ஒரு வலிமையான கரம், அவளை அருகே இருந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் அப்படியே இழுத்துச் சென்றது.
அவள் வாயை தனது கைகளால் பொத்திய படி, வெளியே ஓடிக் கொண்டிருக்கும் முகமூடி ஆட்களை பார்த்துக் கொண்டிருந்தான் தேவராஜன்.
பிரபல தொழிலதிபர் வரதராஜன் மற்றும் சுமித்ராவின் ஒரே மகன் மற்றும் மும்பையின் தலைசிறந்த கம்பெனியான ராஜ் குரூப்பின் எதிர்கால வாரிசு. வரதராஜனின் பூர்வீகம் தமிழ்நாடு தான், ஆனால் அவரது தந்தை சிவராஜ் பிழைப்புக்காக குடிபெயர்ந்த இடம் மும்பையாதலால் இதுவே அவரின் முகவரியாக மாறிப் போனது.
படிப்படியாக தனது தொழிலில் வெற்றியை கண்ட சிவராஜ், மும்பை தொழில்துறையில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார்.
நல்லபடியாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில் அவரது மூத்த மகன் தர்மராஜனின் திருமணம் பெரிய இடியை ஏற்படுத்தியது. மும்பையை சேர்ந்த ஒரு மாடல் அழகியை, திடீரென்று திருமணம் செய்து கொண்டு வந்து நின்றவர், உடனே தனது பங்கு சொத்துக்களை பிரித்துக் கொடுக்குமாறு வக்கீல் நோட்டீஸ் விட, அதிர்ந்து போனார் சிவராஜ்.
விஷயம் கை மீறி விட்டதை உணர்ந்து கொண்டவர், தர்மராஜுக்கு உரிய சொத்துக்களை பிரித்து கொடுத்து விட, அப்போதே தனது ஆசை மனைவியோடு வெளிநாட்டுக்கு பறந்து விட்டார் தர்மராஜன். ஓய்ந்து போய் அமர்ந்திருந்த தனது தாய் தந்தையரை தேற்றி, குடும்ப தொழிலை கையில் எடுத்து நடத்த தொடங்கினார் அவரது இரண்டாவது மகனான வரதராஜன்.
அந்த சமயத்தில் தான் அவரது தாய் வழி சொந்தத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருந்து, வரதராஜனுக்கு எம்பிஏ வில் கோல்டு மெடல் பெற்ற சுமித்ராவை மணமுடித்து வைத்தனர். பிறகு ராஜ் குரூப் படிப்படியாக வரதராஜனின் தீராத உழைப்பாளும், சுமித்ராவின் மதிநுட்பத்தாலும் மும்பையின் தலைசிறந்த நிறுவனங்களில் முதன்மையாக திகழத் தொடங்கியது.
தனது தாய் தந்தையரைப் போலவே தொழில் ஈடுபாட்டோடு செயல்பட்ட தேவராஜன், தனது கம்பெனியின் கிளைகளை பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்தி, அதை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றான்.
தற்போது தனது உயிர் நண்பனின் திருமணத்திற்காக தன் தாய் தந்தையரே அறியாவண்ணம், தனக்கான பாதுகாவலர்களை விடுத்து தனியாக இங்கு வந்தவன், இந்த எதிர்பாராத கலவரத்தில் மாட்டிக் கொண்டான்.
அதோட அவன் வந்த வாகனம் தான் குண்டு வெடிப்பில் வெடித்து சிதறி இருந்தது. நல்லவேளையாக பொக்கே ஷாப்பில் பூச்செண்டு வாங்குவதற்காக அவன் இறங்கிச் சென்றிருக்க, அந்த நேரத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது.
அதில் அதிர்ந்து போய் நின்றவன் சுதாரிக்கும் முன்பே, துப்பாக்கிகளை கைகளில் ஏந்தியபடி வேகமாக ஐந்தாறு வண்டிகளில் வந்திறங்கிய முகமூடி அணிந்த ஆட்கள், அந்த இடத்தை சூரையாடியபடியே வெடித்துச் சிதறிய வாகனத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
தேவ்க்கு புரிந்து விட்டது இது தனக்கான குறி தான் என்று, உடனே கூட்டத்தோடு கலந்தவன் அங்கிருந்து தப்பித்து, இந்த மரத்தின் அடியில் வந்து ஒளிந்திருந்தான். அந்த நேரத்தில் யாரோ ஓடிவரும் சத்தம் கேட்க அருகில் வெறுமனே சாற்றி இருந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தவன் திரும்பி பார்த்த போது தான், கண்மணி தன்னை துரத்திக் கொண்டு வரும் கயவர்களிடம் இருந்து தப்பிக்க, அந்த மரத்தின் அடியில் வந்து ஒளிந்து கொண்டிருந்தாள்.
அதை கண்டு அவளை நோக்கிச் சென்றவன், அவளது தோள் மீது தனது கையை வைக்க, பயத்தில் கத்த முயன்றவளது வாயை பொத்தி, அந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் இழுத்துக் கொண்டு வந்து, கதவை மூடி இருந்தான் தேவ்.
அந்த முகமூடி ஆட்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் பெருமூச்சு விடும் அதே வேளையில், தன் வாயை பொத்தி இருப்பவனிடம் இருந்து தப்பிக்க, அவனது கைகளை நறுக்கென்று கடித்திருந்தாள் கண்மணி. வலி மிகுதியில் சட்டென்று கையோடு அவளையும் உதறியவன்,
“ஐயோ…அம்மா….ராட்சசி உன்ன காப்பாத்த நினைச்ச பாவத்துக்கு நீ என்னை கடிச்சே கொல்ல பாக்குறியா?”
அவன் பேசும் தமிழை கண்டு இவள் ஆனந்த அதிர்ச்சியில் வாயடைத்து போய் அப்படியே சிலையென நிற்க,
இந்த பொண்ணு என்ன இந்த முழி முழிக்குது ஒருவேளை பயந்துடுச்சோ என்று நினைத்தவன், ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அவள் யார் என்று விசாரிக்க, அவளிடம் எந்த பதிலும் இல்லை.
“ஒருவேளை செவிடா இருக்குமோ?”
என்று அவன் தனக்குத் தானே பேசிக் கொள்ள,
“ஹலோ யார் செவிடு? எனக்கு நல்லாவே காது கேட்கும், பாஷை தெரியாத ஊர்ல மாட்டிகிட்டு இருக்கும் போது, திடீர்னு நம்ம ஊரு தமிழை கேட்டதும் அதிர்ச்சியாகி அப்படியே நின்னுட்டேன் அவ்வளவு தான்.
ஆமா யாரை பார்த்து ராட்சசினு சொன்னீங்க?”
“இதுல என்ன சந்தேகம் உன்ன பார்த்து தான், அவனுங்க கிட்ட இருந்து காப்பாத்தலாம்னு வாய பொத்தி இங்க கூட்டிட்டு வந்தா, இப்படி பல்லு பதியிற அளவுக்கு கடிச்சு வைக்கிறே? அறிவு இருக்கா உனக்கு?”
“ஏன் உங்ககிட்ட ஸ்டாக் இல்லையா? சும்மா முறைக்காதீங்க, காப்பாத்தறேன்னு சொல்லி இப்படித்தான் மூச்சு நிக்கிற அளவுக்கு, மூக்கோட சேர்த்து வாயையும் பொத்துவாங்களா? இன்னும் ரெண்டு நிமிஷம் தாமதிச்சிருந்தா நான் எமலோகமே போயிருப்பேன்.”


No comments:
Post a Comment