அத்தியாயம் 11
தேவ் மற்றும் கண்மணியை தேடிக் கொண்டு காட்டின் வழியாக வந்த அண்ணன் தம்பி இருவரும், காட்டின் மறுபக்கத்தில் இருக்கும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது தான் கண்மணிக்கு மலர் அலங்காரத்தோடு சடங்கு நடந்து கொண்டிருந்தது.
இருவரும் அதை கண்டு அதிர்ச்சியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, அவள் அங்கிருந்து எழுந்து ஓட முற்பட்டால், உடனே கங்கம்மா அவளை மிரட்டி அமர வைத்ததை கண்டு ஒருவாறு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்டனர்.
ஏனெனில் சுற்றி வட்டார கிராமங்களுக்கு கங்கம்மாவை பற்றி நன்கு தெரியும் என்பதால், அங்கிருந்த பிற குடில்களில் தேவ்வை தேடத் தொடங்கினர். அவர்களின் உதவியோடு தான் தேவ் அந்த குடிலில் இருந்து தப்பித்து இங்கு வந்திருந்தான்.
ஜெகதீஷ் தன் அண்ணனுடன் இணைந்து கிராமத்தாரிடம் தேவ் மற்றும் கண்மணியை பற்றி கூறிக் கொண்டிருந்தான். அதை மறுத்துப் பேசிக் கொண்டிருந்த கங்கம்மாவின் திட்டங்கள் அனைத்தையும், அங்குள்ளவர்களுக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருந்தாள் தேவ்வோடு குடிலில் இருந்த புதியவள்.
அவர்களுக்கு சற்று தள்ளி ஒரு கல்லின் மீது அமர்ந்தபடி அழுது கொண்டிருந்த கண்மணியை, சமாதானம் செய்து கொண்டிருந்தான் தேவ்.
“பட்டர் ஸ்காட்ச் ரிலாக்ஸ், அது தான் எதுவும் நடக்கலையே, இன்னும் எதுக்கு இந்த அழுகை? ஒருவேளை நான் வர மாட்டேன்னு முடிவு பண்ணி கல்யாணத்துக்கு தயார் ஆகிட்டையோ? அந்த ஏமாற்றத்தால வர்ற கண்ணீரா இது?”
கண்களை உருட்டி அவனைப் பார்த்து முறைத்தவள் மீண்டும் அழத் தொடங்கிட,
“அடடா என்ன பட்டர் ஸ்காட்ச் இது? என்னைப் பாரும்மா, ப்ச்சு பாருன்னு சொல்லறேன் இல்ல, உன்னை நல்லபடியா உன் இருப்பிடத்துல சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. இதுக்கு இடைல எந்த பிரச்சனை வந்தாலும், அது என்னை தாண்டி தான் உன்கிட்ட வர முடியும்.”
அவள் கண்களை சிமிட்டாமல் அவனையே பார்க்க,
“இந்த கண்ணுக்குள்ள என்னை இழுக்கப் பார்க்கிறியா? நான் சிக்க மாட்டேன் ப்பா… எனக்கும் நிறைய ஆம்பிஷன் இருக்கு, கம்பெனியை நல்ல நிலைக்கு கொண்டு வரனும், பெஸ்ட் பிஸ்னஸ் மேன் அவார்டு வாங்கணும், அப்பறம் அம்மா அப்பா பார்க்கற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும், வேணும்னா உன்னை க்ரஷ் லிஸ்ட்ல வச்சுக்கறேன். ஏன்னா இந்த டிரஸ்ல பார்க்க நீ ரொம்ப அழகா இருக்க பட்டர் ஸ்காட்ச்.”
அவளை போலவே அவன் பேசிய விதத்தில் கண்மணி சட்டென்று சிரித்து விட,
“ம்ம் இப்போதைக்கு வேணும்னா நாம பிரெண்ட்ஸ் ஆகிக்கலாமா பட்டர் ஸ்காட்ச்?”
என்றபடி அவன் கை நீட்ட அவனது கைகளை பற்றியவளோ,
“கண்மணி…”
“உன்னை போலவே ரொம்ப அழகா இருக்கு உன் பேர், பட் எனக்கு நீ பட்டர் ஸ்காட்ச் தான்.”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களை நோக்கி வந்த ஜெகதீஷ்,
“சார் இந்த ஊர்காரங்க நியாயத்துக்கு கட்டுபட்டவங்க. அவங்ககிட்ட உங்களை பத்தி எடுத்து சொன்னேன். அந்த பொண்ணும் அந்த கங்கம்மாவாள தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை பத்தி சொல்லுச்சு.
ஆனா…அந்த கங்கம்மா நீங்க இரண்டு பேரும் கணவன் மனைவியே இல்லைனு சொல்லறா, அதோட அந்த பொண்ணு பொய் சொல்லி தன் மகன் கல்யாணத்தை நிறுத்த வந்ததா சொல்லறா.”
“இல்ல ஜெகதீஷ் அந்த பொண்ணு சொல்றது உண்மை தான், அவகிட்ட இருந்து தப்பிச்சு காட்டுக்குள்ள வந்த பொண்ணை, தெரியாம மறுபடியும் அந்த பொம்பளகிட்டயே பிடிச்சு கொடுத்துட்டேன். நான் வேணும்னா ஊர்காரங்க கிட்ட பேசி பார்க்கவா? ”
“சார் இப்ப அது பிரச்சனை இல்ல, நான் தான் முன்னாடியே சொன்னனே இந்த ஊர்காரங்க நியாயத்துக்கு கட்டுபட்டவங்க, அதனால தான் கங்கம்மா தன் பைத்தியக்கார மகனுக்கு மனநிலை சரியில்லாத பொண்ணை தான் கட்டி வைக்கறேன்னு, ஊரார் கிட்ட சொல்லி அனுமதி வாங்கி இருக்கா.
இங்க ஒரு வழக்கம் உண்டு, ஒருமுறை மணமேடையில மணபொண்ணு ஏறின பிறகு கல்யாணம் நின்னா அது அபசகுனம். அதுக்கப்புறம் இங்க நடக்கற கல்யாணம் எல்லாத்துளையும் அடுத்தடுத்து சிக்கல் வரும்.
கங்கம்மா இப்ப இதை வச்சு ஊரார் வாயை அடைச்சுட்டா, குடிசைல உங்க கூட இருந்த பொண்ணை இப்போ அவ பையனுக்கு கட்டி வச்சு வழக்கத்தை காப்பாத்த சொல்லறா. பாவம் அந்த பொண்ணு அழுதுட்டு இருக்கு, அந்த பெண்ணை பெத்தவங்க தான் இப்ப ஊர்காரங்க கிட்ட கெஞ்சிகிட்டு இருக்காங்க.”
“என்ன அநியாயம் இது? பாவம் அந்த பொண்ணு, அந்த கங்கம்மா பத்தி எடுத்து சொன்னதுக்கு பிறகுமா எல்லாரும் அமைதியா இருக்காங்க? நான் வேணும்னா பேசி பார்க்கிறேன்.”
அவர்கள் பேசுவது புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த கண்மணி, தேவ் ஆவேசமாக பேசிக் கொண்டிருப்பதை கண்டு அவன் கைகளை பிடித்துக் கொண்டாள். அவளிடம் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பற்றி விவரமாக கூறியவன்,
“பாவம் பட்டர் ஸ்காட்ச் அந்த பொண்ணு மறுபடியும் நம்மளாலயே, அந்த கங்கம்மாகிட்ட மாட்டிகிச்சு.”
“சார் இந்த பிரச்சனைக்கு நான் வேணும்னா ஒரு தீர்வு சொல்லவா? எப்படியும் நீங்க கணவன் மனைவி தானே, சோ எங்க முறைப்படி திரும்பவும் நீங்க இரண்டு பேரும் ஏன் இப்போ கல்யாணம் பண்ணிக்க கூடாது? இதை தவிர அந்த பொண்ணை காப்பாத்த வேற வழியும் இல்ல.”
சில வினாடி யோசித்த தேவ் கண்மணியை நோக்கி திரும்பினான்.
“பட்டர் ஸ்காட்ச் அந்த பொண்ணோட ஹெல்ப்பால தான், என்னால சரியான நேரத்துக்கு இங்க வந்து இந்த கல்யாணத்தை நிறுத்த முடிஞ்சது. இப்போ அந்த பொண்ணை அம்போன்னு விட்டுட்டு நாம போனா, நல்லா இருக்குமா? நீயே சொல்லு?
என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா பட்டர் ஸ்காட்ச்?”
“நிறையவே இருக்கு.”
“அப்போ நம்மளை காப்பாத்தின அந்த பொண்ணுக்காக நான் இப்ப ஒரு வேலை செய்யப் போறேன், அதுக்கு நீ எனக்கு துணையா இருப்பயா?”
அவள் ஆம் என்று தலையை ஆட்ட கண்மணியின் கைகளை பிடித்தபடி கூட்டத்தை தாண்டிக் கொண்டு மணமேடை ஏறியவன், கண்மணியோடு ஜோடியாக மனையில் அமர்ந்தான்.
கங்கம்மாவால் எதுவுமே செய்ய முடியவில்லை, அதனால் கோபத்தோடு தனது மகனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அவளால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணோ கண்களில் நீர் கோர்க்க தேவ்வை நோக்கி கைகளை கூப்பினாள்.
அவனது மனதை புரிந்து கொண்ட கண்மணி, கண்களுக்குள் அவனை நிரப்பியபடியே புன்னகையோடு அமர்ந்திருந்தாள்.
மந்திரங்கள் ஒலிக்க ஐயரின் சொல்படி குங்குமத்தை தன் கைகளால் கண்மணியின் நெற்றியிலிட்ட தேவ், கருகமணியை அவள் கழுத்தில் அணிவித்து தனது மனைவியாக்கிக் கொண்டான்.
சரியாக அந்த நேரத்தில் தான் தேவ்வுடைய நண்பன் நவீன் காவலர்களோடு அங்கு வந்து சேர்ந்தான்.


