அத்தியாயம் 7
வழியெங்கும் குத்துச்செடிகள் மற்றும் சிறுசிறு பாறைகளுக்கு நடுவே இருவரும் ஒளிந்து ஒளிந்து சென்று கொண்டிருந்தனர். அங்கு உள்ள வழிகள் எல்லாம் மலைப் பாதைகள் போல, மேடும் பள்ளமுமாக இருந்தது. சற்று நேரத்தில் மழை வேற பலமாக பெய்யத் தொடங்கி விட்டது. அந்த பாதைக்கு இடப்புற சரிவில் ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் காட்டின் ஆரம்பத்தை சுட்டிக் காட்டின.
வெகுநேரமாக நடந்து கொண்டே இருந்ததாள் கண்மணியின் கால்கள் ஓய்வுக்கு ஏங்கின.
“ஆத்தாடி இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி மழைல ஜாங்கிங் போறது, குளிர்ல எனக்கு காய்ச்சலே வந்திடும் போல, இதுக்கு ஒரு எண்டே இல்லையா யுவரானர்.”
“ம்ம்ம் மலைப்பிரதேசத்துல டப்பா டப்பாவா ஐஸ்கிரீமை முழுங்கினா காய்ச்சல் வராம வேற என்ன வரும்? இங்க ஒதுங்கி நிற்கவும் வழி இல்ல, அதுக்கு முடிஞ்சவரை முன்னேறிக் போவோம், கண்டிப்பா எதாவது வழி கிடைக்கும்.”
சற்று தூரம் தள்ளி இருந்த ஒரு மேட்டில், வெளிச்சப் புள்ளியாக வீடு ஒன்று இருப்பதை அவர்களால் பார்க்க முடிந்தது. ஆனால் மழை நீர் பெருகி பாதையில் வெள்ளமென ஓடிக் கொண்டிருக்க, மேலே செல்ல சற்று சிரமமாக தான் இருந்தது. பாதையின் ஓரத்தில் இருந்த சிறு பாறைகளைக் பிடித்தபடி அவன் முன்னேறிக் கொண்டிருக்க, கண்மணியோ மழைநீரில் நடக்க முடியாமல் நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள்.
இதற்கும் சற்று நேரத்திற்கு முன்பு அவளை நோக்கி கைகளை உயர்த்தியவன்,
“ஓய் பட்டர்ஸ்காட்ச் என் கையை கெட்டியா பிடிச்சுக்க, இந்த மழை தண்ணீர்ல மேல ஏற சிரமமா இருக்கும், ம்ம் பிடிச்சுக்க.”
அவனது அழைப்பில் கோபம் துளிர் விட,
“எங்களுக்கும் நடக்கத் தெரியும், நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல.”
என்றபடி முன்னேறியவளை கண்டு மையமாக தலையை ஆட்டியவன், முன்னே நடக்கத் தொடங்கி விட்டான்.
கண்மணிக்கு தற்போது சுத்தமாக நடக்க முடியாமல் போக, அங்கிருந்த சிறிய பாறை மீது அப்படியே அமர்ந்து விட்டாள். ஒருமுறை நின்று திரும்பி பார்த்தவன் அவளை நோக்கி கீழே வந்து, அமர்ந்திருந்தவளது கைகளை தானே பற்றிக் கொண்டு, மேலே ஏறத் தொடங்கினான்.
“விடுங்க கால் வலிக்குதுன்னு தான் உட்கார்ந்தேன். நீங்க போங்க நான் வரேன்.”
“பரவாயில்ல கூட வர்றவங்களை எந்த ஒரு சூழ்நிலையிலும், பாதியில விட்டுட்டு போக கூடாதுன்னு என் பாட்டி சொல்லி இருக்காங்க. அதனால உன்னை இப்படியே விட்டுட்டு என்னால முன்னாடி போக முடியாது.”
என்றபடி அவளது கைகளை கோர்த்துக் கொண்டவன் பாறைகளை பிடித்தபடியே மேலே ஏறினான். சற்று நேரத்தில் அந்த வீட்டை எட்டியவர்கள் உதவி வேண்டி வாசல் கதவை தட்ட, கதவை திறந்து கொண்டு வெளியே வந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, இவர்களது நிலை கண்டு உள்ளே வருமாறு கூறிவிட்டு, உட்புறம் திரும்பி தனது கணவரையும் அழைத்தாள்.
அவரோட அவரது மூன்று பிள்ளைகளும் மற்றும் அவரது வயதான தாய் தந்தையரும் வெளியே வந்தனர்.
இவர்கள் மழையில் நனைந்திருப்பதைக் கண்டு அந்த வீட்டுப் பெண்மணி, தங்கள் வீட்டில் இருந்த அவர்களது உலர்ந்த ஆடைகளோடு துண்டையும் கொடுத்து, முதலில் மாற்றிக் கொண்டு வருமாறு அனுப்பி வைத்தார்.
அவள் உடையை மாற்றிக் கொண்டு வெளியே வரும் போது, வேறு உடைக்கு மாறி இருந்த தேவ், அவர்களிடம் ஏதோ புரியாத பாஷையில் பேசிக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்மணி ஆர்வமாக இவளை நோக்கி திரும்பி கண்மணியிடம் எதையோ கேட்க, ஒன்றும் புரியவிட்டாலும் ஆம் என்பது போல் தலையை ஆட்டி வைத்தாள்.
ஒரு நிமிடம் தேவ் அவளை உற்று கவனித்து விட்டு மீண்டும் அவர்களோடு அவர்களது மொழியிலேயே பேசத் தொடங்கி விட்டான்.
நல்ல வேலையாக அவர்கள் பேசுவது எதுவும் கண்மணிக்கு புரியவில்லை.
உடை மாற்றிக் கொண்டு முதலில் வெளியே வந்த தேவ், அவர்களிடம் போன் இருக்கிறதா என்று தான் முதலில் விசாரித்தான்.
அந்த வயதான பெரியவர், தனது இரண்டாவது மகனிடம் மட்டுமே போன் இருப்பதாகவும், அவனும் தற்போது பொருட்களை விற்பதற்காக வெளியே சென்றிருப்பதாகவும் கூறி இவர்களை பற்றி விசாரிக்க, உண்மையை கூறினால் இவர்கள் பயந்து விடுவார்கள் என்று நினைத்தவன், வெளியூரிலிருந்து ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக வந்ததாகவும், திடீரென தாங்கள் கூட்டத்தில் வழி தவறி விட்டதாகவும், மழைக் காரணமாக இங்கு வந்ததாகவும் கூறினான்.
அந்த நேரத்தில் தான் கண்மணியும் அங்கு வந்திருந்தாள், உடனே அந்த வீட்டு பெண்மணி கண்மணியை நோக்கி திரும்பி, தேனிலவுக்கா வந்திருக்கிறீர்கள் என்று ஆர்வமாக கேட்டிருந்தார், கண்மணியுமே அவர்கள் பேசுவது புரியாமல் ஆம் என்று தலையாட்டி வைத்திருந்தாள்.
அதற்காகத் தான் தேவ்வும் அவளை உற்று நோக்கி இருந்தான். அவள் அப்படி கூறிய பிறகு மாற்றிப் பேசினால் நன்றாக இருக்காதே என்று நினைத்து தான், அவனும் அதற்கு ஏற்றது போல அடுத்தடுத்து பேசத் தொடங்கியவன், அருகில் ஏதாவது காவல் நிலையம் இருக்கிறதா என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
வீட்டுக்கு பின்பக்கம் இருக்கும் காட்டு வழி பாதையிலேயே சென்று இடது பக்கம் திரும்பினால், சிறிது நேர நடை பயணத்தில் பாரஸ்ட் ஆபீஸ் இருப்பதாகவும், அதை ஒட்டியே இந்த பகுதியைச் சேர்ந்த காவலர்களும் இருக்கக்கூடும் என்று அந்த பெரியவர் கூறிக் கொண்டிருந்தார். வெகு நேரமாக அவர்கள் பேசுவது புரியாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கண்மணி,
“என்ன சொல்லறாங்க? முதல்ல இங்க பஸ் ஸ்டாண்ட் எங்கிருக்குன்னு கேளுங்க, முதல்ல ஊர் போய் சேரனும்.”
அவளை நோக்கி திரும்பியவனோ,
“ம்ம்ம்…பக்கத்துல தான் இருக்கு கொஞ்சம் மழை குறையட்டும் போகலாம்.”
அவர்கள் கொடுத்த உணவை உண்ட படி அடுத்த என்ன செய்வது என்று தேவ் யோசனையில் இருந்தான், முதலில் இவளை பத்திரமாக அவளது இருப்பிடத்தில் விட்டுவிட்டு பிறகு தனது வழியில் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, வீட்டின் கதவு வேகமாக தட்டப்பட்டது.
கண்மணி சற்று பயந்து போய் தேவ்வின் கைகளை பிடித்துக் கொண்டாள், பெரியவர் கதவை திறந்து என்றும் இல்லாமல் இப்படி நேரமே வீடு திரும்பி இருக்கும் தனது இரண்டாவது மகனிடம் காரணம் கேட்க, அவனோ டவுனில் நடந்த குண்டு வெடிப்பு பற்றியும் அங்கு சுற்றி கொண்டிருக்கும் முகமூடி ஆட்கள், கடை வீடு என்று ஒரு இடம் விடாமல் சுற்றிக் கொண்டிருப்பதை பற்றியும் கூறினான். போலீசார் வரும்வரை அங்கு செல்வது ஆபத்து என்பதால் திரும்பி விட்டதாகவும் கூறினான்.
கேட்டுக் கொண்டிருந்த தேவ்வின் முகத்தில் கவலை ரேகை, அங்கே தேடிக் கொண்டிருப்பவர்கள் இங்கு வரவும் வாய்ப்புள்ளது. தன்னால் இந்த குடும்பத்தினர் பாதிக்கப் படக்கூடாது என்று யோசித்தவன், உடனே அங்கிருந்த கிளம்ப வேண்டும் என்று நினைத்தான்.
ஆனால் தன்னுடன் இருப்பவளை என்ன செய்வது? தற்போது அவளை வெளியே கூட்டிச் செல்வதும் அவ்வளவு நல்லதல்ல என்பதை புரிந்து கொண்டவன். முதலில் அந்த வீட்டு ஆட்களிடம் அவர்களது மொழியில் பேசத் தொடங்கினான்.
“ஐயா எனக்கு ஒரு உதவி பண்ணறீங்களா? இந்த சூழ்நிலைல என் மனைவியை வெளியே கூட்டிட்டு போறது அவ்வளவு நல்லதா படல, இப்ப உங்க பையன் சொன்னதை கேட்டீங்க இல்ல. அதனால நான் மட்டும் இப்போ தனியா போலீஸைத் தேடி போறேன். கண்டிப்பா நான் திரும்ப வருவேன். ஒருவேளை நாளைக்கு காலைல வர, நான் திரும்ப வரலைன்னா நீங்களே அவளை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போக முடியுமா?”
“தம்பி நீங்களும் இங்கேயே இருக்கலாமே வெளியே போய் உங்க உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துட போகுது.”
“இல்லய்யா அந்த குழுவுக்கு நான் தகவல் கொடுத்தே ஆகணும், அதோட நான் போக வேண்டிய அவசியம் இருக்கு.”
பெரியவரின் இரண்டாவது மகனிடம் இருந்து மொபைலை வாங்கி, தனது உள்ளுர் நண்பனுக்கு அழைத்தான் தேவ். ஆனால் டவர் பிரச்சனையால் இணைப்பு கிடைக்க மறுத்தது. உடனே அவனுக்கு தனது நிலையை சுருக்கமாக கூறி மெசேஜ் அனுப்பியவன், டவர் கிடைக்கும் போது இது சென்றுவிடும் என்று நம்பினான். பிறகு அவனது பட்டர்ஸ்காட்ச்சிடம் தனது முடிவை தெரிவிக்க, அவளோ அவனோடு வந்தே தீருவேன் என்று அடம்பிடித்தாள்.
“சொன்னா கேளு ம்மா, இப்ப வந்தவர் கூட சொன்னாரு, அவங்க இன்னும் வெளியே தேடிட்டு தான் இருக்காங்களாம், இந்த சூழ்நிலையில என்னோட நீ வர்றது நல்லதில்ல.சோ நீ இவங்களோடவே இரு. நாளைக்கு மார்னிங்க்குள்ள நமக்கான பாதுகாப்போட நான் திரும்பி வந்திடுவேன்.”
ஒருவழியாக அவளை சமாதானப்படுத்தி மழை சற்று குறைந்ததும் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
செல்லும் வழி சேரும் சகதியுமாக இருந்தது. அந்த பெரியவர் சொன்னபடியே நடந்தவன், இடப்பக்கமாக இருந்த சின்ன வளைவை கவனிக்க தவறினான். அதனால் அவன் செல்ல வேண்டிய பாதை மாறி காட்டுக்குள் புகுந்திருந்தான். அவன் சென்ற பாதை ஒரு மலை சரிவில் முடிவடைய, அவனுக்கே தான் வந்த பாதை சரிதானா என்ற சந்தேகம் தோன்றியது.
தான் இருந்த இடத்தை அவன் சுற்றி முற்றிப் பார்க்க, திடீரென கால் இடறி அதை ஒட்டி இருந்த சரிவில் பின்பக்கமாக சரிந்தான் தேவ்.


No comments:
Post a Comment