அத்தியாயம் 12
இன்று
"சிஸ்டர் நாட்டுக்கோழி குழம்பு சூப்பர்!... அதுவும் இட்லிக்கு அப்படியே அள்ளுது... பாஸ் என்ன ஆச்சு? எதுக்காக இட்லியை குழம்புல ரொம்ப நேரமா குளிப்பாட்டிட்டு இருக்கீங்க?... பாஸ் இவ்வளவு நல்ல சாப்பாட்டை சாப்பிடாம என்ன ஒரே சிந்தனையிலேயே இருக்கீங்க?"
"ப்ச்சு அந்த டாக்டர் தாமோதரனோட வீட்ல இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியல, அவன் செத்து கிடந்த அந்த ரூம்லயும் நமக்கு உபயோகமா எதுவும் கிடைக்கல, அந்த டாக்டர் இறந்த இடத்தில ஒரு சிம் கார்டு கிடைச்சதுன்னு சொன்னேன் இல்ல, அது பக்கத்துல அவரோட போனும் கீழ விழுந்து சிதறி கிடந்தது. ஒருவேளை அவர் கீழே விழும்போது கைபட்டு அந்த போன் விழுந்திருக்கலாம்.
அதுக்குள்ள அவர் மறைச்சு வைச்சிருந்த ஒரு சிம் கார்டா கூட இருக்கலாம் என்று நினைச்சேன்?.. அது தான் கமலேஷ் கிட்ட சொல்லி அப்பவே வெரிஃபிகேஷன் பண்ண சொன்னேன். அதுல இருந்து, டோட்டலா ரெண்டு மூணு நம்பருக்கு தான் கால் போயிருக்கு, அதுல ஒன்னு நாகலிங்கத்தோட நம்பர், இன்னொன்னு யாருதுன்னு கண்டுபிடிக்க முடியல ஏன்னா இவரோட பேசரக்காக மட்டும் தான் அவன் யூஸ் பண்ணி இருக்கான், மூணாவது அதர் டிஸ்ட்ரிக்ட் காமிக்குது. இந்த கால் பண்ணும் போதெல்லாம் மோஸ்ட்லி அந்த டாக்டர் ஹாஸ்பிடலில் தான் இருந்திருக்கான்.
சோ அங்க தான் ஏதோ விஷயம் இருக்கு. அது மட்டும் இல்லாம அந்த ஒரே ஒரு பாட்டிலையும் இன்ஜெக்ஷனயும் மட்டும் தான் அந்த கபோர்டுல வச்சிருப்பாரா? ஒருவேளை வேற எங்காவது அந்த மருந்தை மறைச்சு வைச்சிருக்கலாம் இல்லையா? பாரன்சிக்கு கொடுத்திருந்த அந்த பாட்டிலும் காணாமல் போனதா சொல்றாங்க, நான் அதை போட்டோ எடுத்து வைச்சிருந்தேன், அதை பத்தி சர்ச் பண்ணி பார்த்தா அந்த காம்பினேஷன்ல எந்த ஒரு மருந்தும் இல்லைன்னு காட்டுது, எதுக்கும் இருக்கட்டும்னு நம்ம கமலேஷ்க்கு அதை ஃபார்வேர்டு பண்ணி, அவனுக்கு தெரிஞ்ச பார்மாசிஸ்ட்கிட்ட இத பத்தி விசாரிக்க சொல்லி இருக்கேன்."
"அப்புறம் என்ன பாஸ்? நம்ம காதல் மன்னன் கமல் எப்படியும் அதற்குண்டான ஆன்சரை கண்டுபிடிச்சிடுவான். ஆமா ஹாஸ்பிடல்ல அந்த இன்ஸ்பெக்டரை எதுக்கு தனியா ஒதுக்கி கூட்டிட்டு போனீங்க? அப்புறம் நாம எதுக்காக டாக்டர் தாமோதரனோட கேஸ்ல இன்வால்வ் ஆகறோம்?... நாம வந்தது சித்ராவோட கொலை வழக்கை பத்தி விசாரிக்க தானே? நீங்க ஏன் பாஸ் ட்ரேக் மாறறீங்க?"
"ட்ரேக் எல்லாம் மாறல, என்னோட கெஸ் சரின்னா, சித்ராவோட கொலையில இந்த தாமோதரனோட பங்கு இருக்கணும்னு நினைக்கிறேன். மறந்துட்டியா அவர் இறக்கறதுக்கு முன்னாடி நாகலிங்கமும் அவரோட தான் இருந்திருக்கான். நாகலிங்கத்துக்கு அந்த இன்ஜெக்ஷனை போட்டுவிட்டதே அந்த டாக்டர் தான். நீ கூட சொன்னியே, ரேகா இறந்தபோது சித்ரா ஒரு இன்ஜெக்ஷனை பத்தி சொன்னதா?.. ஒருவேளை இந்த இன்ஜெக்ஷனை போட்டு தான், சித்ராவை தங்களோட கட்டுப்பாட்டுல வைச்சு, ஊர் முன்னாடி அவளை பைத்தியமா காட்டி இருப்பாங்களோ? இதுக்கெல்லாம் விடை தெரியணும்னா முதல்ல அந்த மருந்து எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கணும். ஆனா இந்த டாக்டர் அதையெல்லாம் எங்க மறைச்சு வச்சிருக்கான்னு தெரியலையே அவன் இறந்து கிடந்து ரூம்ல, ஒரு பேப்பர் இருந்ததுன்னு சொன்னேனே, அது எல்லாமே மருந்துகளோட காம்பினேஷன் பட் அதுல இருக்க ஒரு பகுதி தான் இப்போ புழக்கத்தில் இருக்கு, இன்னொரு பகுதி புது காம்பினேஷன் மாதிரி தெரியுது அதை பற்றியும் விரிவா கமலை விசாரிக்க சொல்லி இருக்கேன்."
"அண்ணா என்ன அப்படியே வச்சிருக்கீங்க? இன்னொரு இட்லி வைக்கவா?"
"இல்ல தேவிம்மா, எனக்கு இதுவே போதும், நீ சாப்டியா? பையனுக்கு சாப்பிட குடுத்தியா? சரி ஒரு நிமிஷம் இரு இதோ வரேன்."
"இந்தாம்மா உன்னோட சம்பளம், நாங்க இங்க எவ்வளவு நாள் இருப்போம்னு தெரியாது? அதனால மாச கடைசில குடுக்குறதுக்கு பதிலா வாரா வாரம் கொடுத்திடறேன் சரியா?"
"இதெல்லாம் இப்போ வேண்டாங்கண்ணே, என் புருஷன் கண்ணுல மட்டும் இந்த காசு பட்டதுன்னா? அப்புறம் அவ்வளவு தான். கடல்ல கரைச்ச உப்பு மாதிரி ஆயிடும், அதனால இது உங்க கிட்டயே இருக்கட்டும். நீங்க இந்த ஊர்ல இருந்து கிளம்பும்போது நான் ஒட்டுக்காவே சம்பளத்தை வாங்கிக்கிறேன். முதல்ல எல்லாம் என் வீட்டுக்கு பின்னாடி இருக்க ஒரு புளிய மரத்தடியில் இருந்த கல்லறையில தான் காசை ஒளிச்சு வைப்பேன். அந்த ஆளு பேய் பயத்திலயே அங்க போக மாட்டான், அதனால என் காசு பத்திரமா இருந்துச்சு. ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் கோடாங்கிய கூட்டிட்டு வந்து அந்த கல்லறையை தோண்டி எடுத்துட்டான், இனி நான் எங்க போய் பத்திரப்படுத்துவேன்?"
"எது கல்லறைலையா? ஏன் சிஸ்டர் உங்களுக்கு காசு வைக்கிறதுக்கு வேற இடமே கிடைக்கலையா?"
"வேற என்ன பண்றதுண்ணே? இந்த ஊர்காரங்க பேய்க்கு மட்டும்தான் பயப்படறாங்க!... இது மட்டுமா ஊருக்குள்ள பல இடம் இருக்கு, பேய் பயத்தால ஊராளுங்க ஒருத்தரும் அது கிட்டயே போக மாட்டாங்க, ஊருக்குள்ள நுழையும் போது பார்த்திருப்பீங்களே!... அந்த புளியமரத்து கிட்ட யாரும் போகவே மாட்டாங்க,... அதேபோல கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல அந்த பிணவறைகிட்டயும் யாருமே போக மாட்டாங்க,... ஏதோ அங்கேயும் பேய் நடமாட்டம் இருக்கிறதா சொல்லுவாங்க!... அப்புறம் அந்த மருந்து கடைக்கு பின்னாடி இருக்கிற காட்டுக்குள்ளயும் ஒருத்தரும் போக மாட்டாங்க!... அந்த காட்டுக்குள்ள இருந்து நைட்டு நேரம் ஏதேதோ வினோதமா சத்தம் வர்ரதா கூட ஊர்ல எல்லாரும் சொல்லுவாங்க."
"என்ன அண்ணே இது? பெரிய அண்ணே அப்படியே உறைஞ்சு போயிட்டாரு?"
"அப்படின்னா அவர் ஏதோ யோசிச்சிட்டு இருக்காருன்னு அர்த்தம். ஆமா என்ன உன் பையனை கண்ணுலையே காட்ட மாட்டேங்குற? ஒன்னு முந்தானைக்குள்ள இருக்கான், இல்ல தொட்டில்ல தூங்கிட்டு இருக்கான். ரொம்பதாம்மா உன் பையனை பொத்தி பொத்தி வளர்க்கறே"
"என்ன பண்றது அண்ணே, இவன் மற்ற குழந்தைகளை மாதிரி பத்து மாசத்துல பிறந்திருந்தா பரவால்ல, கொறை பிரசவத்துல பிறந்தவன், எல்லாமே லேட்டா தான் செய்யறான் அதனாலயே கைக்குள்ளேயேதான் வச்சிருக்கேன். பார்ப்போம் அந்த ஆண்டவன் அவனுக்கு ஒரு நல்ல வழி காட்ட மாட்டானா என்ன?"
"ஐயோ தேவி சிஸ்டர், நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். மருமகனுக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க? கண்டிப்பா நாங்க ஊருக்குப் போகும்போது அவனை கூட்டிட்டு போய் நல்ல ஹாஸ்பிடல்ல சேர்த்து அவனை நாங்க பார்த்துக்கிறோம்."
"நீங்க எனக்கு இப்ப செய்ற உதவியே போதுங்கண்ணே.."
அப்போது டிவியில், சிறையில் இருந்த நாகலிங்கத்தை யாரோ கொலை செய்துவிட்டு தப்பி ஓடும் போது, அந்த மர்ம நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக முக்கிய செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
அன்று
சிவா சித்ராவை அவளது அன்னையின் வீட்டில் தங்க வைக்க முடிவு செய்த பிறகு, அவளிடம் தான் அதிகமாக கெஞ்ச வேண்டி இருந்தது. என்னை நம்ப மாட்டீங்களா? நான் போக மாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவள் இங்கு இருந்தால் தன் அம்மா ஏதாவது கூறி அவள் மனது நோகும்படி செய்துவிடுவார், இது குழந்தைக்கும் நல்லதல்ல என்று கூறி கூறியே ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்திருந்தான். பிறகு சித்ராவின் பெற்றோர்களிடம் ஓரளவுக்கு உண்மையை கூறி, அவளின் மன அமைதிக்காக அங்கு தங்க வைப்பதாக அவர்களிடம் அனுமதி பெற்று இருந்தான்.
மகள் மீது உயிரையே வைத்திருந்த பெற்றோர்கள், மகள் நெருப்பு வைத்துக் கொண்டால் என்று கேட்ட பிறகு பதறி விட்டார்கள். அவர்களை ஒருவழியாக சமாளித்து, டாக்டர் கூறியதை இவன் எடுத்துக் கூறி, கர்ப்ப காலத்தில் இது போன்ற மன அழுத்தம் ஏற்படும் என்றும், இதற்கு மன அமைதி ஒன்றே தேவை, அதனால் சித்ரா சிறிது காலம் தங்களோடு இருக்கட்டும் என்று கூறி இருந்தான்.
அன்று சித்ரா தனது பெற்றோரை சந்தித்த அந்த கெஸ்ட் ஹவுஸில், சிறிது காலம் தங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு, அவளை அங்கு விட்டு வந்தான் சிவா.
அன்னை தந்தை பராமரிப்பில் இருந்தாலும், தனது கணவன் தன்னுடன் இல்லாத காரணத்தால், சித்ரா மிகவும் சோர்வாகவே காணப்பட்டாள். என்னதான் மணி கணக்கில் தொலைபேசியில் பேசினாலும், அவன் கைகோர்த்து தோல் மீது சாயும் தருணங்களை எண்ணி, ஏங்க தொடங்கினாள். சிவாவும் வாரத்திற்கு இருமுறையாவது எப்படியாவது அவளை வந்து பார்த்துவிட்டு தான் செல்வான்.
என்னதான் சித்ராவின் பெற்றோர்கள் அவர்களது காதலை ஏற்றுக் கொண்டாலும், அவனுக்கு அங்கு தங்குவது ஒருவித சங்கடமான சூழ்நிலையை தான் கொடுத்தது. அதனாலேயே அதை தவிர்த்தான்.
ஒரு வாரம் கழித்து சித்ராவின் ரெகுலர் செக்கப்புக்கான நாள் வந்தது. தனது தாயை உடன் அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு சென்றிருந்தாள். அப்போது அந்த மருத்துவமனையில் ரேகாவை சந்தித்தாள்.
"அடடே சித்ரா,.. ரெகுலர் செக்கப்புக்காக வந்தியா? நல்லா இருக்கியா? அம்மா,... நீங்க நல்லா இருக்கீங்களா?"
சித்ராவின் தாயார் ஒரு தலையசைப்போடு நிறுத்திக் கொண்டார். ஏனோ ரேகாவை அவருக்கு பிடிக்கவில்லை, ஒருவேளை தன் மகள் காதல் திருமணம் புரிந்து கொண்டதற்கு காரண கர்த்தாவே அவளாக இருப்பதாலோ என்னவோ?..
"நீ என்ன ரேகா ஹாஸ்பிடல் வரைக்கும் வந்து இருக்கே? உடம்புக்கு ஏதும் சரி இல்லையா?"
"கொஞ்ச நாளாவே தலைவலியா இருந்தது, அதுதான் என்னன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன், எதுவும் பிரச்சினை இல்லை, நார்மல் தானாம், நேரா நேரத்துக்கு சாப்பிட சொல்றாங்க அவ்வளவுதான், காலைல வேற நான் சாப்பிடாம வந்துட்டேன்,.. சித்ரா வர்ரியா? அங்க இளநீர் கடைல ஒரு இளநீர் குடிக்கலாம்."
கண்களாலயே வேண்டாம் என்று சொன்ன, தனது தாயின் மறுப்பையும் புறக்கணித்துவிட்டு, ரேகாவிற்காக பாவம் பார்த்து அவளுடன் சென்றால் சித்ரா, அதுதான் தவறாகிவிட்டது.
இளநீர் கடையில் சித்ராவிற்கு வாங்கிய இளநீரில் யாருக்கும் தெரியாமல் ஒரு மருந்தை கலந்து விட்டாள் ரேகா.
சிரித்த முகத்தோடு அந்த இளநீரை சித்ராவிற்கு அருந்த கொடுத்து விட்டு, அவள் குடித்துக் கொண்டிருப்பதை ஒருவித மர்ம புன்னகையுடன் பார்க்கத் தொடங்கினாள் ரேகா.
No comments:
Post a Comment