banner image

பூ மழையே 14


 

அத்தியாயம் 14


     அங்கு கண்மணியின் வீட்டில் அவள் சொன்னது போலத் தான் ரங்கநாயகி அடுத்த திட்டத்தைத் தீட்டிக்  கொண்டிருந்தார். 


   சரியாக கண்மணி வரும் நேரத்தில்  முகூர்த்தத்தை வைத்தால், அந்த நேரத்தில் அவளாள் எதுவும் செய்ய முடியாது.  தந்தை சொல்வதைக் கேட்டு கழுத்தை நீட்டுவாள், திருமணமும் நல்லபடியாக எந்த தடையும் இன்றி நடந்து விடும், அவளுக்கு யோசிக்க நேரம் கிடைக்காது என்று தான், இப்படி ஒரு டிராமாவை அரங்கேற்றி இருந்தார் ரங்கநாயகி. 


   அவருக்கு தெரியுமா என்ன இப்படி திடீரென்று டூர் கேன்சலாகி முதல் நாளே அவள் வந்துவிடுவாள் என்று. கிருஷ்ணமூர்த்தியின் மூலம் அவள் வரும் செய்தி கேள்விப்பட்டதில் இருந்து இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துக் கொண்டிருந்தார்.


   ஏற்கனவே வழுக்கி விழுந்ததால் உடல்நிலை சரியில்லாதது போலவும், சாகும் நிலையில் இருப்பது போலவும்  நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரால் அங்கிருந்து எங்கும் நகரவும் முடியவில்லை. 


   என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவர், சேகரின் மூலம் அவள் வந்துவிட்டாளா என்று அடிக்கடி விசாரித்துக் கொண்டுதான் இருந்தார். எப்படியும் இந்த கல்யாணத்தை நடத்தியே தீர வேண்டும் என்று, போட்ட ஆக்டிங்குக்கு மேலாகவே, மூச்சு விடுவதற்கே சிரமப்படுபவர் போல நடிக்க தொடங்கினார். 


   தனது மகனின் முன்பு  மூச்சு வாங்கியப்படியே பேசி, அன்னத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர்,  தனது தோழியின் மூலமாக இன்னொரு பக்கம் வயிறு நிறைய உணவை உண்டு கொண்டிருந்தார். 


    ரங்கநாயகி பயந்து கொண்டிருந்த அந்த நேரமும் வந்தது,  வீட்டிற்கு வரும் வரை கிருஷ்ணமூர்த்தி தனது மகள் கண்மணியிடம் திருமணத்தை பற்றி எதுவுமே கூறவில்லை. கண்மணியும் அது தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் தயங்கி தயங்கி ரங்கநாயகிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை பற்றியும், அதனால் அவளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அவசர கல்யாணத்தை பற்றியும் எடுத்துக் கூற, உங்க இஷ்டம் பா என்று அமைதியான பெண்ணாக உள்ளே சென்று விட்டாள். அதுவே ரங்கநாயகிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவளது அன்னைக்குத் தான் மனது பொறுக்கவில்லை, 


   “கண்மணி உன் முக வாட்டத்துலயே தெரியுது, உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு அப்பறம் எதுக்கு அப்பாகிட்ட சரின்னு சொன்ன? நீ ஒரு வார்த்தை சொன்னா போதும், உங்க அப்பா இந்த கல்யாணத்தையே நிறுத்திடுவாரு. உனக்கு சொல்ல கஷ்டமா இருந்தா நானே வேணும்னாலும் அவர்ட்ட பேசறேன்.”


   கண்மணியிடம் பேசுவதற்காக வந்த அவளது தந்தை அறை வாயிலில் நின்றிருந்தார். அதோடு அம்மாவும் மகளும் பேசுவதை ஒட்டுக் கேட்டு வர, கவியின் பாட்டியை ரங்கநாயகி அனுப்பியிருந்தார். அவர் வெளி ஜன்னல் பக்கம் நின்று இவர்களை கவனித்து கொண்டு இருந்தார். இருவரையுமே கண்டு கொண்ட கண்மணி, அவர்களை கவனிக்காதது போல தனது நடிப்பு திறமையை காட்டத் தொடங்கினாள். 


    “இல்லம்மா அப்பா ஆல்ரெடி எனக்கு கல்யாணம் பண்ண நினைச்சாரு தான், ஆனா எப்ப படிப்போட அருமை அவருக்கு தெரிஞ்சுதோ அப்பவே கல்யாணத்தை நிறுத்தி, என்னை காலேஜ்க்கு அனுப்பினாரு. 


   அப்படிபட்டவரு மறுபடியும் இப்படி கல்யாண பேச்சு எடுத்திருக்கார்னா, அதுக்கு அப்பத்தாவோட உடல்நிலை தான் முக்கிய காரணம். 


   அப்பத்தாக்காக இல்லாட்டியும் அப்பாவுக்காக, நான் இதை கூட பண்ண மாட்டனா? என்ன என் படிப்பு கெட்டு போகும், காலேஜ்ல என் ப்ரெண்ட்ஸ்ஸோட முன்ன மாதிரி சந்தோஷமா இருக்க முடியாது.


   படிச்சு நல்லபடியா ஒரு வேலைக்கு போய் அப்பாவை கௌரவ படுத்தனும்னு நினைச்சேன், பரவாயில்ல ம்மா இது தான்னு என் தலையில எழுதி இருந்தா, அதை யாரால மாத்த முடியும்.”


   அவள் பேசியதை கேட்டு மன வருத்தத்தோடு முகம் வாடி வெளியே சென்ற கிருஷ்ணமூர்த்திக்கு, தனது அன்னைக்காக மகளின் படிப்பிற்கு இடையே கல்யாணத்தை நிகழ்த்தி, தவறு செய்கிறோமோ என்று குற்ற உணர்வு ஏற்பட்டது. மறுபக்கம் கவியின் பாட்டி கண்மணியின் இந்த முடிவை பற்றி சந்தோஷமாக தனது தோழி ரங்கநாயகியிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். 


   ரங்கநாயகிக்கு இதைக் கேட்டவுடன் இப்போதே எழுந்த ஆட வேண்டும் போல இருந்தது, இருந்தும் சூழ்நிலை கருதி தோழியை கட்டிப்பிடித்து மட்டும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 


    தனது நடிப்பு திறமையைக் கண்டு கண்மணியே ஏமாந்து விட்டாள் என்று அவர் மனதிற்குள் மகிழ்ந்து  கொண்டிருக்க, அவரது பேத்தியோ அவருக்கு மேல் பெரிய பிளானை போட்டு வைத்திருந்தாள். 


   அதோடு தனது பேரனுக்கு சமைத்து கொடுப்பதற்காகவே அவர் வேலைக்கு அமர்த்திய லட்சுமியை அழைத்து, பாயசம் செய்து வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறுமாரு உத்தரவிட்டார் ரங்கநாயகி. 

  

    வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் பலமாக நடந்து கொண்டிருக்க, கண்மணியோ அமைதியாக அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சேகர் தனது எடுபிடிகளோடு பாட்டில்கள் சகிதமாக, வீட்டுக்கு பின்புறம் இருந்த தோப்பு வீட்டுப்பக்கம் ஒதுங்கிக் கொண்டான். 


   சமையல் அறையில் பாயாசம் செய்து கொண்டிருந்தாள் லட்சுமி. தாய் தந்தை இல்லாத வீட்டில் தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து தனது தங்கைகள் மூவருக்கும் திருமணம் செய்துவிட்டு, முதிர் கன்னியாக தற்போது காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.


     முப்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க அவள் தங்கைகள் யாருமே முன்வரவில்லை. ஏன் தங்களது வீட்டு விஷேசத்திற்கு கூட, அவளை வேலை வாங்கத் தான் அழைக்கிறார்களே தவிர, விருந்திட்டு உபசரிக்கவோ விழாவில் அவளை முன்னிருத்துவதோ இல்லை.


    தனியாக இருக்கும் அவளிடம் விஷமக்காரர்கள் நெருங்க, தன்னை காப்பாற்றும் படி ஊர் பெரியவரான கிருஷ்ணமூர்த்தியின் கால்களில் தஞ்சம் புகுந்தாள் லட்சுமி. உடனே ரங்கநாயகி அவளை சமையல் வேலைக்கு அமர்த்தி கொள்வதாக கூற, கிருஷ்ணமூர்த்தியும் அதற்கு ஒப்புக் கொண்டார். 


     சேகர் அதிகம் இந்த வீட்டில் தான் இருக்கிறான். அவனுக்கு நேர நேரத்துக்கு உணவு கொடுத்து கவனித்துக் கொள்ளவதற்காக, சமையல் வேலைக்கு அவளை நியமித்தார் ரங்கநாயகி. 


      இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அவன் எங்கிருந்தாலும், லட்சுமி சமைத்த பலகாரங்கள் அவனுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும் படி பார்த்துக் கொண்டார். 


   தற்போதும் அவனுக்காக ஒரு தூக்கில்  பாயாசத்தை  ஊற்றி விட்டு, அவன் நண்பர்களுக்கும் தனியாக எடுத்து வைத்து விட்டு வேலையாளை கூப்பிட சென்றாள் லட்சுமி. அவளை வெகு நேரமாக கண்காணித்துக் கொண்டிருந்த கண்மணி, அவள் அங்கிருந்து அகன்ற மறுநிமிடமே, தன் கையில் இருந்த பொடி செய்த பேதி மாத்திரைகளை பாயாசத்தில் கலந்து விட்டு, லட்சுமி  வரும் முன்பு அங்கிருந்து சென்று விட்டாள். 


   வீட்டில் இருந்த அனைவருக்கும் பாயாசத்தை கொடுத்து கொண்டிருந்த லட்சுமி, ரங்கநாயகிக்கு மட்டும் யாருக்கும் தெரியாமல் கவியின் பாட்டியிடம் கொடுத்து விட்டாள். 


    அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்த கவி  தனது பாட்டி தூக்குவாளியோடு, ரங்கநாயகியின் அறைக்குள் திருட்டுத்தனமாக நுழைவதை கண்டு, தலையில் அடித்துக் கொண்டவள் கண்மணியை தேடிச் சென்றாள். 


  “கண்மணி என்ன இவ்வளவு அமைதியா இருக்க, கல்யாண ஏற்பாடு வேற பரபரப்பா நடந்துட்டு இருக்கு, பிளான்படி எல்லாம் சரியா நடக்குமா?”


 “ பர்பெக்ட்டா நடக்கும், நான் காலையில யாரும் பார்கறதுக்கு முன்னவே, தோட்டத்து வீட்டுக்கு போய் ப்ளேனோட முதல் ஸ்டெப்பை ஆரம்பிச்சு வச்சுட்டேன். இப்போ ரெண்டாவது ப்ராஸஸும் ஓவர். இப்போ நம்ம ரிசல்ட்க்காக வெயிட் பண்ண வேண்டியது தான். அப்பறம் நான் சொன்ன விஷயம் என்னாச்சு?”


   “பேசிட்டேன் வனிதாவும் அதுக்கு ஒத்துக்கிட்டா, நாம சிக்னல் கொடுத்ததும் அவ வேலையை தொடங்கிடுவா.”


   “ ம்ம் எப்படியும் இந்த கல்யாணம் நின்னிடும், ஆனா இனி என்னோட  அப்பா என் கல்யாண பேச்சை எடுக்காம இருக்கணும்ங்கறது, அவ கையில தான் இருக்கு. நான் சொன்னபடி கரெக்டா பேசச் சொல்லு.”


   தோட்டத்து வீட்டிற்கு தூக்கில் வந்த பாயாசத்தை, ஒரே மடக்கில் குடித்த சேகர் சிறிது நேரத்திலேயே நெளியத் தொடங்கினான். பத்து முறைக்கு மேலாக பாத்ரூமுக்கும் ஹாலுக்கும் ஓட்டப் பந்தயத்தை நிகழ்த்தியவன், ஒரு கட்டத்தில் தண்ணீர் தீர்ந்து போக நண்பர்களிடம் மோட்டார் போடுமாரு கத்தினான். 


   “மாப்ள பீஸ் கட்டையை காணோம் டா,”


  “ஐயையோ , முடியலயே மறுபடியும் வருதே நான் பம்புசெட்டுக்கே போறேன்.”


   என்றபடி அவிழ்ந்த வேட்டியை கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டு, பட்டாபட்டி ட்ராயரோடு வரப்பில் ஓடினான். 


   நடக்கவே சோம்பேறித்தனப் படுபவன் ஓடுவது, அதுவும் வரப்பில் முடியும் காரியமா என்ன?  கால் வழுக்கி ஒரு புறமாக மல்லாக்க விழுந்தான். விழுந்த வேகத்தில் கால் சுளுக்கிக் கொள்ள வலியில் அலறியவனது குரல் வீடுவரை கேட்டது. 


   உடனே அனைவரும் பதறிக்கு கொண்டு அவனை நோக்கி செல்ல, ரங்கநாயகி தனது டிராமாவையும் மறந்து பேரனின் அலறல் கேட்டு ஓடோடி வந்தார். 


   அவரை கண்டு அதிர்ந்து போய்  நின்ற கிருஷ்ணமூர்த்தி தனது தாயின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தார். 


   “என்னடா எல்லாரும் பொருட்காட்சியை பார்க்கற மாதிரி வேடிக்கை பார்க்கறீங்க? ஹாஸ்பிடலுக்கு தூக்குங்கடா எம் பேரனை, ஐயோ பிள்ள வலியில கத்தறானே காலை ஊனக் கூட மாட்டேக்கறான், என்ன ஆச்சுன்னு தெரியலையே?”


    சேகரின் நண்பர்கள் அவனை தூக்கிக் கொண்டு செல்ல அவர்கள் பின்னே பதட்டத்தோடு மார்பில் அடித்தபடியே புலம்பிக் கொண்டே சென்றார் ரங்கநாயகி.


Powered by Blogger.