அத்தியாயம் 89
ரத்னபுரியின் முன்னாள் அரசரான ரங்கராஜ பூபதிக்கு எதிராக, போர் புரிந்து கொண்டிருந்த மித்ரனின் படைகள், படிப்படியாக குறைந்து கொண்டே இருந்தது. அவன் நேர்வழியில் போரிட்டு இருந்தால் மித்ரன் எப்போதோ ஜெயித்திருப்பான், ஆனால் ரங்கராஜ பூபதி அவனது ராஜகுருவின் தீய சக்திகளின் மூலம் பல ஏவல்களை ஏவி விட்டு, படைவீரர்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருந்தான்.
அங்கங்கு யானைப்படைகளும் குதிரை படைகளும் கூட தரிகெட்டு ஓடி, தங்களது படை வீரர்களையே மிதித்து, கொன்று குவித்து கொண்டிருந்தது.
எவ்வளவுதான் முழுமூச்சாக மித்ரன் போராடிக் கொண்டிருந்தாலும் ரங்கராஜ பூபதியின் படை, படிப்படியாக மித்திரனின் படைகளை ஒழித்து முன்னேறிக் கொண்டிருந்தது.
மித்ரனுக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டே சென்றது, அதுமட்டுமின்றி அவனுக்கு ஏனோ இன்று மதுராவின் நினைவு அதிகமாக வந்து கொண்டிருந்தது, அவளை சந்தித்து பல நாட்கள் ஆகி விட்டதால் இவ்வாறு தோன்றுகின்றது போல என்று அவன் தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
அந்த சமயத்தில் தான், சிவன் மலையில் இருந்து வீரபத்திரரின் வாளோடு அங்கு வந்து சேர்ந்தார் அரண்மனை ஜோதிடர்.
மாய சக்தியின் பிடியில் எங்கிருந்து எது வந்து தாக்குமோ என்று தெரியாமல் போராடிக் கொண்டிருந்த மித்ரன், தனது கைகளில் வாளை ஏந்திய பிறகு, அவன் கண்களுக்கு அங்கங்கே இருந்த தீய சக்திகள் தெரிய தொடங்கின.
மித்ரனின் கைகளுக்கு அந்த வாள் வந்தவுடன், அவனைச் சுற்றி அவனது படை வீரர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த ஏவல்களும் துஷ்ட ஆன்மாக்களும் அதன் சக்தியை தாக்கு பிடிக்க முடியாமல் சிதறி ஓடின.
தன் கைகளில் ஏந்திய வாள் கொண்டு, எதிரி நாட்டுப் படைவீரர்களையும், துஷ்ட சக்திகளையும் தாக்கத் தொடங்கினான் மித்ரன். ஏவல்கள் அங்கிருந்து விலகி ஓடிய பின்பு மித்ரனின் படை வீரர்களும் முழுமூச்சாக அவனுடன் சேர்ந்து, எதிரி படைகளுடன் போராடி முன்னேறிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று ஏற்பட்ட இந்த மாறுதல் ராஜகுருவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது, அதை ஊர்ஜிதம் செய்யும்படியாக மித்ரன் தன் கையில் இருந்த வீரபத்திரரின் வாளை, எதிரிகளின் ரத்தத்தால் குளிக்க வைத்துக் கொண்டிருந்தான்.
ராஜகுரு ரங்கராஜ பூபதியை சுற்றி தீய சக்திகள் கொண்டு ஒரு மந்திர வேலியை அவனது பாதுகாப்பிற்காக அமைத்திருந்தான். அதை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மித்ரன் ரங்கராஜ பூபதியின் தலையை வெட்டி மண்ணில் வீசினான்.
அதை கண்டு கோபாவேசத்தோடு அவனை தாக்க வந்தார் மோகனாவின் தந்தையான விஜயேந்திர பூபதி. விஜயேந்திர பூபதியுடன் மித்ரன் வாள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே, அவனை கெட்ட சக்திகளால் வீழ்த்த முடியாது என்பதை புரிந்து கொண்ட ராஜகுரு, கொடிய நஞ்சு தோய்ந்த அம்பை மித்ரனின் முதுகை நோக்கி வீசினான். இந்த எதிர்பாராத தாக்குதலில் மித்ரன் தடுமாறினாலும், முழுமூச்சோடு போராடி விஜயந்திர பூபதியின் தலையை வெட்டி வீசினான்.
அவனுடைய நாடிப் துடிப்பு குறைந்து கொண்டே வருவதை அவனால் உணர முடிந்தது, முதுகில் ஏற்பட்ட வலியை விட மனதில் ஏதோ நேர கூடாத ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருப்பது போல் தோன்ற, அவன் குதிரையை எடுத்துக்கொண்டு நேராக மகிழபுரியை நோக்கி சென்றான்.
அவனின் இந்த நிலையை புரிந்து கொண்ட ஜோசியரும், மற்றொரு குதிரையுடன் அவனை பின் தொடர்ந்து வந்தார். அங்கிருந்த மற்ற எதிரி நாட்டுப் படைவீரர்களை சிதறடித்து ஓட வைத்த மித்திரனின் படைகள், ராஜகுருவை நெருங்குவதற்குள் அவன் அங்கிருந்து தப்பித்து, கால கோடரின் குகைக் சென்று விட்டான். தனது சக்தியால் அதன் வாயிலை மூடிவிட்டு குகைக்குள் தன்னைத்தானே எரித்துக்கொண்டான்.
யார் கூறியும் தனது முடிவிலேயே நிலையாக நின்ற மதுரவாணியிடம், இனி எது கூறியும் பயனில்லை என்று புரிந்துகொண்ட பிரதீபன், மித்ரனால் மட்டுமே அவளது இந்த முடிவினை மாற்ற முடியும் என்று நினைத்தான், அதனால் தனது உடலில் இருந்த காயங்களையும் பொருட்படுத்தாமல், தனது குதிரையில் ரத்னபுரியை நோக்கி, பயணத்தை தொடங்கினான்.
அவன் ரத்தினபுரியை நெருங்கும் முன்பே சோர்ந்து போன முகத்தோடு, வேகமாக குதிரையில் வந்து கொண்டிருந்த மித்ரனை கண்டவன், அவன் குதிரையில் இருந்து கீழே விழப் போவதை உணர்ந்து, தனது குதிரையை நிறுத்திவிட்டு ஓடி சென்று அவனை கைகளில் தாங்கினான்.
அவனுக்கு பின்னே வந்த ஜோதிடரிடம் விஷயத்தை கேட்டறிந்தவன், உடனே அவனுக்கு முதலுதவி செய்ய வைத்தியரை அழைத்து வர கட்டளையிட்டான், ஆனால் மித்ரனோ,
"இல்லை பிரதீபா, இப்போதே நான் மதுரவாணியை காண வேண்டும், எனக்கு ஏனோ மனதில் உறுத்தலாகவே உள்ளது, அவளுக்கு ஏதோ கெடுதல் நடக்கப் போவது போலவே தோன்றிக் கொண்டிருகின்றது. என் இறுதி மூச்சு விடும் முன்பு, அவளை ஒருமுறையேனும் என் கண்களால் காண வேண்டும்." என்று மன்றாடினான்
எவ்வளவு கூறியும் மித்ரன் வைத்தியரிடம் செல்ல அனுமதிக்காததால், வேறு வழியின்றி அவனது குதிரையிலேயே அவனை ஏத்திக்கொண்டு பிரதீபனும் அவன் குதிரையிலேயே, அழகு நாச்சியம்மை கோயிலுக்கு அருகில் உள்ள பள்ளத்தை நோக்கி சென்றான்.
மகிழபுரியில் மோகனாவை சுற்றி பூஜை பொருட்கள் வாரி இறைக்கப்பட்டன. யாகத் தீ வார்க்கப்பட்டு மந்திர உச்சாடனங்கள் செய்யப்பட்டன, இங்கு குரு தேவர் மந்திரங்களை கூறிக் கொண்டிருக்கும்போதே, மோகனாவின் கதறல் அங்கு இருந்த மக்களின் காதுகளில் ரத்தத்தை வர வைக்கும் அளவிற்கு பயங்கரமாக இருந்தது.
யாக குண்டத்தின் முன்பு கைகளை கூப்பியபடி அன்னையை வேண்டிக் கொண்டு அமர்ந்திருந்த மதுராவின் மனம் முழுவதும் மித்ரனின் நினைவலைகள் தான், தனது மனதை கஷ்டப்பட்டு ஒருநிலை படுத்தி கொண்டவள், எழுந்து நின்று எப்போதும் தன்னுடனே வைத்து இருக்கும் அம்பினால், தனது கைகளில் கீறிக் கொண்டாள்.
அந்த ரத்தமானது அவளது உள்ளங்கை வழியே வழிந்து, விரல்களைத் தாண்டி பூமியை தொட்டுக் கொண்டிருக்க, அதனுடனே மோகனாவை நோக்கி நடந்தவள், அவள் இருக்கும் பள்ளத்தை சுற்றி தனது ரத்தத்தால் மோகனா வெளிவர முடியாதவாறு ஒரு மந்திர வளையத்தை ஏற்படுத்தினாள்.
அந்தப் பள்ளத்திற்கு முன்பு வந்து நின்றவள் கைகளை கூப்பிய படியே,
" இயற்கை அன்னையே நான் பிறந்ததிலிருந்து கொற்றவை அன்னைக்காகவே என்னை அர்பணித்து கொண்டது உண்மையானால், என் மணவாளனை மட்டுமே மனதால் நினைத்துக் கொண்டிருப்பது உண்மையானால், இம் மக்களை காப்பாற்ற இதோ எனது உயிரையும் உடலையும் உனக்குள்ளேயே புதைத்துக் கொள். இனி நம்மை தாண்டி இவள் வெளியே வரவேக் கூடாது, இவளால் இனி ஒரு துளி ரத்தம் கூட மண்ணில் சிந்தக்கூடாது, தாயாக மாறி என்னை அரவணைத்த இயற்கை அன்னையே, இதோ உன் பிள்ளையை முழுவதுமாக உனக்குள் புதைத்துக் கொள் தாயே."
அடுத்த நிமிடம் பெரும் சத்தத்துடன் அவள் நின்றிருந்த பகுதி பிளவு பட ஆரம்பித்தது, சிறிது சிறிதாக மதுரா நிலத்தினுள் புதைந்து கொண்டிருந்தாள், அவளோடு சேர்த்து திரிசூலத்தோடு மோகனாவும் அந்த பள்ளத்துக்குள் புதைந்து கொண்டிருந்தாள். அவளது அலறல் சத்தம் நிற்காமல் அந்த பகுதி எங்கும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
சரியாக மதுராவின் உடல் முழுவதும் புதைந்து கொண்டிருக்கும் போது தான், மித்ரன் அங்கு பிரதீபனுடன் வந்து சேர்ந்தான். அவன் தன்னை சரி படுத்திக் கொண்டு ஓடி வருவதற்குள், மதுரா மித்ரனை காதலுடன் கண்ணுக்குள் நிறைத்தபடியே, கைகளை கூப்பியபடி மண்ணுக்குள் புதைந்து போனாள். அடுத்த நிமிடமே பிளவு பட்ட பூமி ஒன்று கூடி சமமானது.
அவள் புதைந்து போனதை பார்த்த அந்த நிமிடமே மித்ரன் உயிரற்ற உடலாக மண்ணில் சரிந்தவன், அவள் புதைந்த இடத்தை பார்த்துக்கொண்டே தன் உயிர் துறந்தான்.
No comments:
Post a Comment