Search This Blog

Followers

Powered By Blogger

Tuesday, August 19, 2025

மன்னவரே 90


 

             அத்தியாயம் 90


  அடுத்தடுத்து நடந்து விட்ட இவ்விரு உயிரிழப்புகளும் அங்கிருந்தோரை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தங்களது வருங்கால மகாராணியும் மகாராஜாவும் இறந்ததை எண்ணி ஊர் மக்கள் கவலை கொண்டனர். உறவுகள் அவர்கள் இறந்து விட்டதை தாங்க முடியாமல் மண்ணில் விழுந்து புரண்டனர்.


  தமது மகளை எண்ணி பெருமை கொள்வதா! அல்லது அவளது இழப்பை இனி எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறோம் என்று கவலை கொள்வதா! என்று தெரியாமல் கலங்கி நின்றார் ஏந்திழை அம்மையார்.


  அனைவரையும் குருதேவர் தான் ஆறுதல் படுத்தினார், அவர்களைப் போலவே அரசரும் கலங்கிக் கொண்டிருப்பதை கண்டவர்,


  "அரசே ஊர் மக்களுக்காக தங்களது உயிரையே தியாகம் செய்த அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தாமல், அவர்கள் மீண்டும் பிறந்து வருவதற்காக காத்திருப்போம். அனைவரையும் போல தாங்களும் இப்படி கலங்கி நின்றால் அடுத்து நடக்கப் போவதை யார் கையாள்வது?"


  "இதற்கு மேல் என்ன நடக்க வேண்டும் குருதேவா? என் வருங்கால சாம்ராஜ்யமே உயிர் துறந்து விட்டதே!... இந்நாட்டு மக்களை காப்பாற்ற என் மருமகள் உயிர்த் தியாகம் செய்து விட்டாள்.


      என் மகனும் அந்த தீய சக்தியினால் வஞ்சிக்கப்பட்டு, நஞ்சு கொண்ட அம்பை முதுகில் தாங்கி, உயிரை விட்டு விட்டான். இதற்கு மேல் நான் என்ன காண வேண்டும் என்கிறீர்கள் குருதேவா?... போதும் இந்த வாழ்வு,..... அந்த எமதர்மர் இப்போதே வந்து என்னை கூட்டி செல்ல மாட்டாரா என்று வேண்டி கொண்டிருகின்றேன்."


    "அரசே என்ன பேச்சு இது? வருங்காலத்தில் அவர்கள் இந்த மண்ணில் பிறந்து வரும்போது, அவர்களுக்கான பாதுகாப்பை நாம் அமைத்து கொடுக்க வேண்டாமா?  மறுபடியும் மோகனா உயிர் பெற்று வரும் போது, அவளை முற்றிலுமாக ஒழித்து கட்ட, இவர்களுக்கு தேவையான சக்திகளை நாம் சேகரித்து வைக்க வேண்டாமா?"


  "குருதேவா தங்கள் என்ன கூறுகிறீர்கள்? அப்படி என்றால்?....."


    "ஆம் நாம் மோகனாவை தற்காலிகமாகத் தான் அடக்கி வைத்திருக்கின்றோம், ஒருவேளை அவள் இங்கிருந்து வெளியேறிவிட்டால், அவளை தடுக்க உங்கள் மகனும் மருமகளும் தான் மீண்டும் பிறந்து வருவார்கள், அவர்களுக்கான ஆயுதத்தை நாம் பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டாமா?"


"குருதேவா நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், தங்களின் சொல் படியே நாங்கள் கேட்டு நடக்கின்றோம்."


       குருதேவர் இளவரசன் கைகளில் இருந்த அந்த வாளின் கைப்பிடியை பிடித்து திருக, அது சிறிய கத்தி போன்று உருமாறியது, அதை மகாராணியிடம் கொடுத்தவர்.


  " அரசே மகாராணியாரிடம் இருக்கும் அந்த வளையலையும், இதோ இந்த வீரபத்திரரின் வாளையும், முறையாக உங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வர வேண்டும். பிற்காலத்தில் உமது பரம்பரையில் இளவரசரும், ஏந்திழை அம்மையாரின் தலைமுறையில் மதுரவாணியும் பிறந்த வருவார்கள். இவர்கள் இருவருக்காகவும் தாங்கள் இனி பாதுகாக்கப் போகும் இந்த பொருட்கள் தான், உற்ற துணையாக இருந்து மோகனாவின் ஆன்மாவை முற்றிலுமாக ஒளித்துக் கட்ட அவர்களுக்கு வழிவகை செய்து கொடுக்கும்."


      "அப்படியே செய்கிறோம் குருதேவா."


    சில நாட்களில் அந்த பள்ளதின் அருகே முளைத்த குருந்த மரத்தின் வேர்கள், அந்த மோகினி பள்ளத்தை அப்படியே மூடிவிட்டது.  மகிழபுரியில் கவிதாயிணிக்கும் பிரதீபனுக்கும் மன்னரின் உத்தரவின்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது, அந்த வாளையும் வளையல்களையும் பத்திரமாக ஒரு பெட்டியில் வைத்து, பூஜை அறையில் அவர்களிடம் கொடுத்த குருதேவர், அவற்றை முறையாக பூஜை செய்து வருமாறு  கூறினார்." 


    அத்தோடு அரசு குடும்பத்திற்கும் ஏந்திழை அம்மையாரின் வம்சாவழியினருக்கும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று குருதேவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.


    பிரதீபனுக்கும் கவிதாயிணிக்கும் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, தனது மகனைப் பிரிந்த துயர்த் தாளாமல் மகாராணியாரும் அரசரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தனர்.


    கொற்றவை தேவியின் அருளாசியின்படி குருந்தங்காட்டில் வசித்த மக்களில் இருந்து ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் குடும்பத்திற்கும் அரச குடும்பத்திற்கும் இடையே பெண் கொடுத்து பெண் எடுக்கும் பழக்கம் வழி வழியாக பின்பற்றப்பட்டது. அவர்கள்தான் வேலப்பன் ஐயாவின் முன்னோர்கள். 


    சிறிது நாட்களிலேயே ஏந்திழை அம்மையாரும் இறைவனடி சேர்ந்து விட, குருந்தங்காட்டுக்குள் மேகமலையை சேர்ந்த ஆதிவாசிகளின் அட்டூழியங்களும் அராஜகங்களும் எல்லை மீறின, அதனால் அங்கிருந்த மக்களில் பாதி பேர் அவர்களால் அழிந்து போயினர். 


  அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு சில குடும்பங்கள் மட்டும் ரத்தினபுரிக்கு குடி பெயர்ந்தனர். அதுதான் பின்னாலே வேலப்பன் ஐயா குடும்பம் குடியிருக்கும் மேலூராக மாறிப்போனது.


தற்போது பல தலைமுறைகள் கடந்து வேலப்பன் ஐயாவின் காலத்தில் தான் குலதேவி ஜனித்திருக்கின்றாள்.

 

    மெதுவாக காலச்சக்கரத்தில் பயணித்து நாம் இன்றைய நாளுக்கு திரும்பி வந்தால், அதோ தனது பூர்வ ஜென்ம நினைவுகளின் பிடியில் சிக்கி, தனது உயிர் போகும் கடைசி நிமிடத்தில் தன் கண்களுக்குள், தனது கணவனை நிரப்பிக் கொண்ட அதே மதுரவாணியாகவே எழுந்தமருகின்றாள் மதுரயாழினி.அவள் தனது கண்களை திறந்தபோது கருவிழிகள் இரண்டும் நீல நிறத்தில் மிளிர்கின்றன.


    விழிதாண்டி வழிந்த கண்ணீரை துடைத்தெறிந்தவள், இது கண்ணீர் விடும் நேரம் அல்ல மற்றவர்களுக்கு கவலையை உண்டாக்கும் மோகனாவின் கதை முடிக்க வேண்டிய நேரம், நான் இப்போது பிறந்திருக்கிறேன் என்றால் அவளும்  உயிர் தெழுந்திருப்பாளே, அவளால் பிற உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பே, அவளை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற முடிவோடு, அவளை புதைத்த அந்த மோகினி பள்ளத்தை நோக்கி கோபத்தோடு நடக்க தொடங்கினாள்.


  மதுராவிடம் இருந்து பறந்து சென்ற மோகனாவின் கரும்புகையானது மந்திர உச்சாடனங்களால் இழுக்கப்பட்டு,  தற்போது அது மேலூருக்கும் வேடந்தூருக்கும் இடையே உள்ள காட்டினை நோக்கி சென்றது. 


  முன்னொரு காலத்தில் காலகோடரின் சிலை பூஜிக்கப்பட்ட அதே குகையில்,  ரத்தத்தால் வரையப்பட்ட சக்கரத்தின் நடுவே நிரஞ்சனாவை படுக்க வைத்து, சுற்றி ரத்தத் துளிகளை சிதறவிட்டு, மந்திரங்களை உச்சரித்து கொண்டிருந்தனர் குருஜியின் சிஷ்யர்கள். 


  நிரஞ்சனாவை தூக்கிக் கொண்டு வரும்போது அவள் கத்தி கூச்சல்  போட்டதால் மயக்க மருந்தை அவள் மூக்கில் வைத்து அமுத்தி, அவளை தூக்கிக்கொண்டு வந்திருந்தனர். அரைகுறை மயக்கத்தில் அவளது காதுகளில் இவர்களின் மந்திரங்கள் ஒலித்தாலும், அவள் கைகளில் கட்டி இருந்த கயிறு அவளைக் காத்து நின்றது.

No comments:

Post a Comment