Search This Blog

Followers

Powered By Blogger

Sunday, August 17, 2025

மன்னவரே 88


 

              அத்தியாயம் 88


  மதுரவாணி அமாவாசைக்கு முந்திய நாளில் கொற்றவை தேவியின் மூலவர் சிலைக்கு, அன்றைக்கான குங்கும பூஜையை செய்து கொண்டிருக்கும் போது, அவளது மனதிற்கு ஏனோ நெருடலாகவே இருந்தது.


    ஒருவேளை தீரனை பற்றி நினைத்துக் கொண்டிருப்பதால் தான், இப்படி தனக்கு தோன்றுகின்றது என்று நினைத்தவள், மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டு பூஜை செய்யத் தொடங்கினாள்.


  அன்று ஏனோ கொற்றவை தேவியின் முகமும் சற்று கோபமாக இருப்பதாகத் தான் அவளுக்கு தோன்றியது, அது தனது மனப் பிரம்மையாக தான் இருக்கும் என்று அவள் எண்ணிக் கொண்டாள்.


  அங்கு மகிழபுரியில் செம்பாவை வீரர்கள் தங்களது கைகளில் உள்ள ஆயுதத்தால், குத்திக் கொல்ல தொடங்கிய  போது, இங்கு மூலவர் சிலைக்கு முன்பு எரிந்து கொண்டிருந்த தீபம் அணைந்து போனது.


  என்ன இது அபசகுணமாக நடக்கின்றதே என்று அவள் எண்ணினாலும்,  பூஜையை முழுமையாக செய்து முடித்தவள், இவ்வளவு நாட்களாக  செய்த பூஜையில் கிடைத்த குங்குமப் பிரசாதத்தை, தனது கைகளில் ஏந்தி கொண்டு, குருந்தங்காட்டு மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி நடந்தாள்.


    அவளது உள் மனம், உன் அன்னையை பார்க்க அவரது குடிலை நோக்கி செல் என்று கட்டளை இட்டது. குருந்தங்காட்டு மக்கள் வாழும்  பகுதியை ஒட்டி நடந்து சென்று கொண்டிருந்தாலும், கையில் பூஜை பொருட்களை வைத்துக் கொண்டிருப்பதால், நேராக கொற்றவை கோயிலை நோக்கி சென்றால்.


    ஏனோ அன்று  காடே மயான அமைதியாக இருந்தது. மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை கூட வெளியே காணவில்லை, அதுவே அவளுக்கு நெற்றியில் சிந்தனை முடிச்சுக்களை ஏற்படுத்தியது, இருந்தும் குங்குமப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, நேராக கொற்றவை தேவியின்  கோயிலுக்கு சென்றாள்.


    அங்கு ஏற்கனவே ஏந்திழை அம்மையார் முன் தினமே கோயிலை கழுவி சுத்தம் செய்து வைத்திருந்தார், மீண்டும் ஒருமுறை அன்னைக்கு கோயிலின் அருகில் உள்ள தீர்த்த குளத்தில் இருந்து, நீரை எடுத்து வந்து தேவிக்கு அபிஷேகம் செய்தவள், தனது கரங்களில் இருந்த குங்குமப் பிரசாதத்தால் அன்னைக்கு பூஜை  செய்ய முனையும் போது, அவளுக்கு பின்புறம் இருந்து ஏதோ சத்தம் கேட்டது.


    அங்கு குருந்தங்காடுவாழ் மக்கள் இவள் பூஜை முடிந்து திரும்பி வந்து விட்டதை அறிந்து, அவளிடம் விஷயத்தை தெரிவிக்க, பதறி அடித்துக் கொண்டு கோயிலை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தனர்.


  சத்தமிட்டு கொண்டே வந்த மக்கள் மகிழபுரியில் நடந்த நிகழ்வுகளை எடுத்து கூறினர், செம்பா கொல்லப்பட்டதையும், அரசர் ஏந்திழை அம்மையாரை இன்று காலை அக்னியில் தள்ளி கொல்லப் போவதாக அறிவித்திருப்பதையும் கேட்டு, மதுரவாணி கைகளில் இருந்த குங்குமத்தை தவற விட்டாள்.


  அது  கொற்றவை அன்னையின் பொற்பாதங்களை சென்றடைந்தது. அடுத்த நிமிடமே கொற்றவை அன்னை சிலையின் உள்ளிருந்து ஒரு பிராண சக்தி மதுரவாணியின் உடம்பினுள் புகுந்தது.


    அடுத்த நிமிடம் புயல் வேகத்தில் மகிழபுரியில் ஏந்திழை அம்மையாரை எரிக்க தயாராக காத்திருந்த அந்த மைதானத்தை நோக்கி குருந்தகாட்டு மக்கள் புடை சூழ நடக்க தொடங்கினாள் மதுரவாணி. 


  அவள் அந்த மைதானத்தை சென்று சேரும் போது தான், ஏந்திழை அம்மையார் திரிசூலத்துடன் மோகனாவினால் மைதானத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.


  திரிசூலமானது நேராக மதுரவாணிக்கு முன்பு சென்று நின்றது. அதை கைகளில் ஏந்தியவள் அடுத்த நிமிடமே மோகனவை நோக்கி வீசி எறிந்தால், திரிசூலம் மோகனாவை தூக்கி வீசிவிட்டு மீண்டும் மதுரவாணியின் கைகளிலேயே  வந்து சேர்ந்தது. 


  திரிசூலத்தின் தாக்குதலால் தூக்கி வீசப்பட்டவள், எழுந்து பார்த்த போது தான், கைகளில் திரிசூலத்தை தாங்கியபடி மதுரவாணி மைதானத்திற்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தாள்.


  ஏற்கனவே தனது ஆசை மாமனின் மனதை கொள்ளை கொண்டவள் என்று மதுரவாணியின் மீது மோகனா பெரும் கோபத்தில் இருந்தாள், இப்போது அவளால் தாக்கப்பட்டதால் அவளது அந்த கோபம் இருமடங்காக மாறி, அவளை நோக்கி கொடூரமாக நாக்கை சுழற்சியபடியே அவள் உயிரைக் குடிக்க பறந்து வந்தால்.


  மதுரவாணிக்கும் மோகனாவிற்க்கும் இடையே கடும் சண்டை நடந்தது. மூர்க்கமாக தன்னை தாக்க வந்த மோகனாவை, தனது கைகளில் உள்ள திரிசூலத்தால் எளிதாக தோற்கடித்துக் கொண்டிருந்தாள் மதுரவாணி.


    ஒரு கட்டத்தில் மதுரவாணியுடன் எதிர்த்து நிற்க முடியாததால்  மோகனாவின் கோபம் சுற்றியுள்ள மக்களின் பக்கம் திரும்பியது.


  தனது சக்திகளை ஒன்று திரட்டி அவர்களை நோக்கி ஒரு ஒளி மின்னலை உருவாக்கி தாக்கினாள்.


  அடுத்த நிமிடமே அங்கு இருந்த மக்கள் அனைவரும் மைதானத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்டனர்.அரசர் பிரதீபன் உட்பட அனைவரது உடலிலும் பலமான காயங்கள் ஏற்பட்டது.


    அப்பாவி மக்கள் தாக்கப்படுவதை கண்டு  கோபம் கொண்ட மதுரவாணி, தன் கைகளில் உள்ள திரிசூலத்தை எடுத்து அன்னையை வேண்டி ஒரு சுழற்று சுழற்றி மோகனாவின் ஆன்மாவை நோக்கி வீசினால். 


  திரிசூலமானது நேராக மோகனாவின் ஆன்மாவை தாக்கி நின்றது, தனது கைகளால் மதுரா அதை தூக்கிப் பிடிக்க, மோகனாவின் ஆன்மா கதற தொடங்கியது, திரிசூலத்தை அவளது ஆன்மாவோடு தூக்கி வீச, அந்த திரிசூலமானது  மோகனாவின் ஆன்மாவை சுமந்தபடி அழகு முத்து நாச்சியார் கோவிலுக்கு சற்று தள்ளி உள்ள பள்ளத்தில் மோகனாவின் ஆன்மாவோடு குத்தி நின்றது.


  மோகனா அந்த திரிசூலத்தில் இருந்து வெளிவர எவ்வளவோ முயற்சி செய்தும் அவளால் முடியவில்லை. அவளை நோக்கி வந்த மதுரவாணியிடம் கோபத்தோடு கத்த தொடங்கினால் மோகனா,


  "என்னை ஜெயித்து விட்டதாக மமதை கொள்ளாதே, அமாவாசை என்பது உங்களுக்கான நான் இல்ல அது எங்களை போன்ற சாத்தனுக்கான நாள்,

இன்னும் சிறிது நேரத்தில் உனது ஆயுதத்தில் இருந்து வெளிப்பட்டு, இந்த ஊரையே உன் கண் முன்பே நாசமாக்குகிறேன் பார். எந்த மக்களுக்காக என்னை அழிக்கத் துணிந்தாயோ? அவர்களது கதறல்களையும் ரத்த அபிஷேகங்களையும் கண்ணாரக் கண்டு மகிழ்ச்சி கொள்."


  என்று ஆர்ப்பாட்டமாக சிரிக்கத் தொடங்கினால்.


    அந்த நேரத்தில் தான் அரண்மனை ஜோதிடரின் குருதேவரான சாந்தகுரு அடிகளார் அங்கு வந்து சேர்ந்தார். மோகனாவின் பேச்சைக் கேட்டு அவளை நெருங்கத் துணிந்த மதுரவாணியை கை  நீட்டி தடுத்தவர்,


    "தாயே அமைதிக் கொள், அவள் கூறுவதிலும் ஒரு உண்மை இருக்கின்றது. அமாவாசை இரவு வந்துவிட்டால் அவளது சக்தி பல்கி பெருகிவிடும், அதற்குள் அவளை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.'


  குரு தேவரை வணங்கி நின்ற மதுரவாணி,


    "குருதேவா நீங்களே இதற்கு ஒரு நல்ல உபாயத்தினை கூறுங்கள். இனி இவளால் அப்பாவி மக்கள் யாரும் சித்திரவதைகளை அனுபவிக்கக் கூடாது, ஏற்கனவே இவளால் மக்கள் சிந்திய ரத்தம் போதும், இதற்கு மேல் இந்த உலகத்தில் இவள் இருக்கவே கூடாது, ஆன்மா வடிவில் இருக்கும் இவளை முற்றிலுமாக ஒழித்து கட்ட ஒரு வழியை கூறுங்கள் குருதேவா."


  "இருக்கிறது அம்மா ஒரே ஒரு உபாயம் இருக்கின்றது, ஆனால்...."


  "அப்படி என்றால் அதை உடனே கூறுங்கள் குருதேவா, எனது உயிரை கொடுத்தேனும் இம் மக்களின் உயிரை காப்பது எனது கடமையாகும்."


  "அதைத்தான் அம்மா நீ செய்ய வேண்டும், அவளை இங்கிருந்து செல்லவிடாமல் தடுக்க கூடிய சக்தி புனிதமான உனது ரத்தத்திற்கு மட்டும் தான் உள்ளது. அந்த ரத்தத்தால் இவளது ஆன்மாவை சுற்றி ஒரு மந்திர வளையத்தை நீ ஏற்படுத்த வேண்டும்."


குருதேவரின் இந்த பேச்சு அங்கிருந்தோரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.


  "இல்லை எனது மகளின் உயிரை விட்டு விடுங்கள் குருதேவா, அவள் இன்னும் வாழ்க்கையை தொடங்கவே இல்லை, இதோ நான் இருக்கின்றேன் கொற்றவை தேவிக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளேன். எனது ரத்தத்தின் மூலம் அந்த கெட்ட ஆத்மாவிற்க்கு மந்திர கட்டை இடலாமே சுவாமி?."


  "இல்லை ஏந்திழை, மோகனா கடைசியாக உயிர் விடுவதற்கு முன்பு மதுரவாணியின் உயிரை காவு வாங்க வேண்டும் என்று தான் நினைத்தால், அவள் வாணியை கொல்ல துணிந்த போது தான், அவளது உயிரும் பிரிந்து விட்டது, அதனால் வாணியின் ரத்தத்தை கொண்டு உருவாக்கப்பட்ட மந்திர வளையம் தான் மோகனாவை மந்திர கட்டிற்குள் வைக்க உதவும்."


ஏந்திழை அம்மையார் அவரை மறுத்து பேசுவதற்கு முன்பே, மதுரா இதற்கு தான் தயார் என்று குருதேவருக்கு தனது சம்மதத்தை தெரிவித்து இருந்தால்.


  "இல்லை இதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன், போர் புரிய சென்றிருக்கும் எனது மகன் வந்து கேட்டால் நான் என்ன பதில் கூறுவேன்? சிறுவயது முதல்  மனம் முழுவதும் உன்னை மட்டுமே நிரப்பி வைத்திருக்கும் அவனுக்கு நீ கொடுக்க போகும் பரிசு இதுதானா மதுரவாணி?"


    நீல விழிகளில் கண்ணீர் சூழ, அதை வெளிவிடாமல் மகாராணியாரை பார்த்து பேச தொடங்கினால் மதுரவாணி,


" மகாராணியாரே, ஒரு மனைவியாக எனது கணவரது பணியில் துணை நிற்க வேண்டியது எனது கடமையாகும். அதைத்தான் நான் இப்போது செய்யப் போகிறேன்."


  தனது கைகளில் உள்ள வளையல்களை கழட்டி அவரிடம் கொடுத்தவள்,


  "என்ன புண்ணியம் செய்தேனோ? இந்த பிறவியில் அவரது  தூய அன்பை பெற, இனி ஒரு பிறவி இந்த ஜீவனுக்கு கிடைத்தால், அப்போதும் அவரையே சரணடைய வேண்டும் என்று அந்த ஆதி சிவனை வேண்டிக் கொள்கின்றேன்."


  இங்கு இவள் தனது உயிரை நாட்டு மக்களுக்காக தியாகம் செய்ய, துணிந்து கொண்டிருந்த அதே வேளையில், ரத்னபுரியில் இருந்து மகிழபுரியை  நோக்கி, உயிர் போகும் நிலையிலும் இவளது திருமுகத்தை கடைசியாக காண வேண்டும் என்று குதிரையில் வேகமாக வந்து கொண்டிருந்தான் மித்ரன்.

No comments:

Post a Comment