அத்தியாயம் 87
திரிசூலத்தை தனது கைகளில் ஏந்திய படி, அரண்மனையை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய ஏந்திழை அம்மையாருக்கு வழிநெடுகிளும் ஆதரவு பெருகியது.
அவரை கண்டதும் அவருடனே மக்கள் அனைவரும் ஏந்திழை அம்மையார் தீக்குழிக்குள் இறங்க தயார் செய்யப்பட்ட, அந்த அக்னி குண்டத்தை நோக்கி நெடும் பயணமாக சென்றனர்.
சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ரஞ்சனியை அரசர் மற்றும் மக்கள் சூழ்ந்த மைதானத்தின் மத்தியில் அக்கினி குண்டத்தின் முன்பு வீரர்கள் நிற்க வைத்தனர்.
அவரை அக்கினியில் தள்ள முனையும் நேரத்தில் தான், சரியாக ஏந்திழை அம்மையார் கைகளில் திரிசூலத்தை தாங்கியபடி மைதானத்திற்குள் பிரவேசித்தார்.
அவர் திரிசூலத்தோடு உள்ளே வந்த அடுத்த நொடி முதல், அரசரின் உடலில் இருந்து ராட்சசன் அலற தொடங்கினான்.
"வீரர்களே அந்த சூனியக்காரியை தடுத்து நிறுத்துங்கள், அவள் இங்கு முன்னேறி வரக் கூடாது. தடுத்து நிறுத்துங்கள் தடுத்து நிறுத்துங்கள் அவளை..."
அமைச்சர்களுக்கும் மக்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது, ஏந்திழை அம்மையார் இங்கு இருக்கிறார் என்றால், பின் அங்கு அக்னிக்கு முன் நின்று கொண்டிருக்கும் அந்தப் பெண் யார்? இங்கே என்னதான் நடக்கின்றது என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.
மக்களுக்கு முன் முகத்தை மறைத்துக் கொண்டு இருந்த ரஞ்சனி தனது முகத் திரையினை விலக்கிவிட்டு, முன்வந்து பேச தொடங்கினாள்.
"அதை நான் கூறுகிறேன் அமைச்சர் பெருமக்களே, இதோ இங்கு அரசர் ரூபத்தில் அமர்ந்திருப்பவன் ஒரு ராட்சசன், அவன் மோகனாவால் ஏவப்பட்டு அரசரின் உடலுக்குள் உட்புகுந்து விட்டான். அதனால் தான் கருணைமிக்க நமது அரசர் தற்போது எல்லாம் இவ்வாறு கொடூரமாக நடந்து கொள்கிறார்."
திடீரென்று மோகனாவின் ஆன்மா குடியிருந்த உடல் இவ்வாறு பேசவே, அரசரின் உடலில் இருந்த ராட்சசனுக்கு ஒன்றுமே புரியவில்லை இருந்தும்
"அவள் பொய் கூறுகின்றாள், நம்பாதீர்கள்.... நம்பாதீர்கள்.... இது அனைத்துக்கும் காரணம் அந்த சூனியக்காரி தான்.முதலில் அந்த சூனியக்காரியை இங்கிருந்து வெளியேற்றுங்கள்."
என்று கதற தொடங்கினார். ஏனெனில் ஏந்திழை அம்மையார் திரிசூலத்தை எடுத்துக் கொண்டு முன்னேறி வந்து கொண்டிருந்தார். அதன் சக்தி அந்த ராட்சசனை அங்கு இருக்க விடாமல் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.
"அப்படியா அப்படி என்றால் எதற்காக இப்படித் பயந்து போய் நிற்கிறாய்?...இதோ அம்மனின் திரிசூலம்.... தைரியம் இருந்தால் இதைத் தொட்டுப் பார் பார்க்கலாம்."
என்று தன் கையில் இருந்த திரிசூலத்தை, அரசரின் முன்பு கொண்டு சென்ற ஏந்திழை அம்மையார், அரசரின் கைகளில் அதை கொடுத்த அடுத்த நிமிடமே, அரசர் அலறிக்கொண்டு மண்ணில் விழுந்து புரண்டார்.
அந்த நொடியே அரசருக்குள் இருந்த ராட்சசனை, அவர் உடலில் இருந்து வெளியேற்றி, திரிசூலமானது தனக்குள் ஈர்த்து கொண்டது.
மக்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் அதிர்ச்சியோடு இதை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தான் மகாராணியாரும் அங்கு வந்து சேர்ந்தார்.
கீழே விழுந்து கிடந்த அரசரை தன் மடி மீது தாங்கி கொண்டவர். அவர் முகத்தில் நீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தார். அவரை எழுப்பி அசுவாசப்படுத்தி ஆசனத்தில் அமர வைத்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவு திரும்பிக் கொண்டிருந்த அவருக்கு நடந்த அத்தனை விஷயங்களையும் விளக்கமாக கூறினார்.
அப்போது தான் நடந்ததை அறிந்து ஆவேசமாக அந்த மைதானத்தை நோக்கி மயங்கி கிடந்த பிரதீபனையும் தூக்கிக் கொண்டு வந்து சேர்ந்தாள் மோகனா.
திரிசூலத்தின் சக்தியானது அவளது நிஜ உருவத்தை அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது.
மக்கள் அனைவரும் அவளது இந்த உருவத்தை கண்டு பதறி ஓடினர்.வீரர்கள் கூட அவளை நெருங்க அஞ்சினர்.
பிரதீபன் மயங்கி கிடப்பதை பார்த்து அவனை நோக்கி பதறி கொண்டு ஓடினாள் கவிதாயினி. எவ்வளவு எழுப்பியும் அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் இருக்க, அவர்களை நோக்கி அருகில் வந்த ஏந்திழை அம்மையாரின் கால்களை கட்டிக் கொண்டு கதறி அழுதாள் கவி.
அவன் மோகனாவின் பிடியில் சிக்கி இருப்பதை உணர்ந்து தன்னிடம் இருந்த கொற்றவை அன்னையின் பிரசாதத்தை பிரதீபனின் நெற்றியில் இட்டார். சிறிது நேரத்திலேயே அவனுக்கு சுயநினைவு திரும்ப தொடங்கியது.
ரஞ்சனி மீண்டும் அவளது உடலுக்குள் புகுந்து கொண்டதை அறிந்து உள்ளுக்குள் கோபம் மூண்டாலும், அதை மறைத்து சாதாரணமாக அவளை நோக்கி பேசத் தொடங்கினால் மோகனா,
"அடடே ரஞ்சனி உன்னை பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகி விட்டது? அது சரி, மக்களின் மனம் கவர்ந்த வருங்கால மகாராணியார் அக்னியின் முன்பு நிற்பதன் காரணம் என்னவோ? "
"நான் இப்படி நிற்பதற்கு காரணமே நீ தானே? உன்னால் என் பெற்றவர்களை இழந்து, உற்றார் உறவினர்களையும் இழந்து, என் மனம் கவர்ந்தவர் எங்கு சென்றார் என்று கூட தெரியாமல் இப்படி நிற்கின்றேன். கூடா நட்பு கேடில் தான் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆகிவிட்டது என் வாழ்க்கை."
"என்ன தோழி என் மீது பயம் விட்டுப் போய் விட்டதா என்ன?.... என்னை பற்றி நன்கு உணர்ந்தும் எவ்வாறு இந்த உடலுக்குள் நீ உனது ஆன்மாவை புகுத்தினாய்??.... ஏன், உனது மாமாவை உயிரோடு பார்க்க உனக்கு எண்ணம் இல்லையா?"
அவ்வளவு நேரம் தைரியமாக பேசிக் கொண்டிருந்த ரஞ்சனியின் முகத்தில் பயம் தோன்றியது.
"உன் மணாளனை நீ காண வேண்டும் என்றால், இப்போதே அங்கிருந்து என்னை நோக்கி வந்து விடு. இல்லை என்றால் அவன் உயிர் போவது உறுதி."
சரியாக அந்த நேரத்தில் பிரதீபனுக்கு நினைவு திரும்பி விட்டது
"வேண்டாம் ரஞ்சனி வேண்டாம் ரகுநந்தனை இந்த ராட்சசி எப்போதோ கொன்று விட்டாள். என் உயிர்த்தோழன் உயிரற்ற சடலமாக மண்ணில் சரிந்ததை பார்த்துக் கொண்டு, எதுவும் செய்ய முடியாத பாவியாகிப் போனேன் நான்."
என்று தனது தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு கதறி அழத் தொடங்கினான் பிரதீபன்.
பிரதீபனின் கூற்றில் பிரம்மை பிடித்தவள் போல் நின்றுவிட்ட ரஞ்சனி, அடுத்த நிமிடமே யாரும் எதிர்பார்க்கா வண்ணம் அந்த அக்னி குண்டத்தில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டால்.
நொடிப்பொழுதில் நிகழ்ந்து விட்ட அவளின் மரணம், அங்கிருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ரஞ்சனியின் உடல் அக்கினி குண்டத்தில் எரிந்து போனதை கண்டு மோகனாவின் கோபம் அதிகமானது. ரஞ்சனியின் உடல் இல்லை என்றால் அவளால் எதையுமே இனி சாதிக்க முடியாது, அதனால் வெறிபிடித்தவள் போல அங்கிருந்தோரை பந்தாடத் தொடங்கினாள்.
அவளை தடுக்க எண்ணி அங்கிருந்த சூலாயுதத்தை எடுத்துக்கொண்டு வந்த ஏந்திழை அம்மையார், மோகனா பார்த்த பார்வையில் மைதானத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.
மோகனா தன் கண்ணில் படுவோரின் குறல்வளையை பிடித்து திருகி, ரத்தத்தை அந்த மைதானம் முழுவதும் தெளித்ததால், அந்த மைதானமே இரத்த வெள்ளத்தில் காட்சியளித்தது. இவளது வெறி ஆட்டத்தை கண்டு, அங்கிருந்தோர் சிதறி ஓடினர்.
தூரத்தில் நின்று கொண்டிருந்த பிரதீபனை கண்டவள் அவனை நோக்கி வெறியோடு, தொங்கிக் கொண்டிருக்கும் தனது நாக்கை சுழற்றிக் கொண்டே வந்தவள், மைதானத்திற்கு வெளியில் இருந்து மின்னல் போன்று பாய்ந்து வந்த சூலாயிதத்தினால் குத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டால்.
எப்படி இந்த சூலாயுதத்திற்கு இவ்வளவு சக்தி வந்தது என்ற குழப்பத்தோடு அவள் திரும்பிப் பார்த்த போது, மைதானத்திற்கு வெளியில் இருந்து ருத்ரகாளியாக, கொற்றவை அன்னையின் மறு உருவமாக, கோபம் பூசிய விழிகளில் அவளை எரித்து விடும் நோக்கில், கையில் சூலாயுதத்தோடு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மதுரவாணி.
No comments:
Post a Comment