Search This Blog

Followers

Powered By Blogger

Saturday, August 16, 2025

மன்னவரே 86


 

            அத்தியாயம் 86


    சிறைச்சாலையில் இருந்து ஏந்திழை அம்மையாரை வெளியே கூட்டி வந்த மகாராணியார், அங்கிருந்த காவல் வீரர்களுக்கு வேறு வேறு கட்டளைகளை இட்டு அவர்களை திசை திருப்பி விட்டு, ஏந்திழை அம்மையாரை அந்த திரிசூலம் பதித்து வைக்கப்பட்டிருக்கும் பாதை வழியே, அவர் எந்த தங்கு தடைகளும் இன்றி செல்ல, வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.


அந்தப் பாதையிலேயே சென்ற ஏந்திழை அம்மையார், நேராக திரிசூலம் பதித்து வைக்கப்பட்டிருக்கும் அந்த வேப்ப மரத்தடியை சென்று சேர்ந்தார்.


  மக்கள் அனைவரும் அரண்மனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், அவரை அங்கு அடையாளம் கண்டு கொள்ள யாரும் இல்லை, அதனால் எளிதாகவே அந்த திரிசூலத்தை கைப்பற்றியவர், அதை எடுத்துக்கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்றார்.


    அரண்மனையில் மோகனவை காணாமல், அரசரின் உடலில் தவித்துக் கொண்டிருந்த அந்த ராட்சசன், வேறு வழியின்றி மக்களை அடக்கி ஒடுக்கி விட்டு, ஏந்திழை அம்மையாருக்கு உடனே தண்டனையை  நிறைவேற்றுமாறு வீரர்களுக்கு கட்டளையிட்டான். 


  வீரர்களும் அரசரின் கட்டளையை மீற முடியாமல் வேறு வழியின்றி, ஏந்திழை அம்மையாரை அழைத்து வர, சிறைச்சாலையை நோக்கி சென்றனர்.


  அரசரின் ஆணைப்படி ஏந்திழை அம்மையாரை அக்னியில் தள்ளி  எரித்திட, காவல் வீரர்கள் சிறைச்சாலைக்கு வந்து, முகத்தை மறைத்துக் கொண்டிருந்த அவரை சூழ்ந்து நின்றனர்.


  "தாயே எங்களுக்கும் மனதுக்கு பாரமாக தான் இருக்கின்றது, தெய்வத்துக்கு சமமாகத்தான் நாங்கள் எல்லோரும் உங்களை மதிக்கின்றோம், ஆனால் அரசரின் கட்டளையை எங்களால் மீற முடியாதே, ஒருவேளை நாங்கள் மறுத்துப் பேசினால் எங்களோடு சேர்த்து எங்கள் குடும்பத்தையும் ஒழித்து கட்டி விடுவார்கள்... அதனால் தயை கூர்ந்து எங்களோடு வாருங்கள் தேவி."


  முகத்தை மறைத்துக் கொண்டு நின்றிருந்த ரஞ்சனி, மறுவார்த்தை பேசாமல் முகத்தை மறைத்தபடியே, அவர்களோடு இணைந்து நடந்தால்.


  சிவன்மலைக்கு வெளியே தங்களது குதிரைகளுடன் வெளிப்பட்ட பிரதீபனும் ரகுநந்தனும், தங்களை சுற்றி ஏதாவது அசைவு தெரிகின்றதா என்று உன்னிப்பாக கவனித்தபடியே அந்த பகுதிகளை கடந்து வந்து கொண்டிருந்தனர்.


   அவர்கள் சிவன் மலைக்கு வெளியே  தங்களது குதிரைகளை ஒட்டி , சுற்றிலும் ஒரு பார்வையை பதித்தவாறே நடந்து வந்து கொண்டிருந்தனர்.


  இவர்கள் வெளிவருவதை கண்டு ஒரு ஆன்மா மோகனவை கூட்டி வர சென்று இருந்தது, இன்னொரு ஆன்மாவோ இவர்கள் சிவன் மலையை விட்டு முழுவதுமாக  எப்போது வெளிவருவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தது.


  அவர்கள் சிவன்மலையில் இருந்து வெளியே வந்த அடுத்த நொடியே, அந்த ஆன்மா அவர்களின் மீது, மோகனாக கொடுத்து அனுப்பிய அந்த மாயப்பொடியை தூவியது. 


    அது பொடியை தூவியதும் அவர்களைச் சுற்றிலும் கரும்புகை சூழ்ந்தது. அவர்களை ஒட்டி வந்து கொண்டிருந்த குதிரைகள் அவர்களை தள்ளி விட்டுவிட்டு, மின்னல் வேகத்தில் பறந்தோடி விட்டது. 


  கீழே விழுந்த பிரதீபன் தனது ருத்ராட்சத்தை தவற விட்டிருந்தான். அத்தோடு குகையினில் பூதகணத்தோடு வாள் சண்டையில் ஈடுபடும்போது அவனது கையில் இருந்த மந்திர கயிறும் அறுந்து விழுந்திருந்தது.


  பிரதீபனுக்கும் ரகுநந்தனுக்கும் தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. தங்களை சூழ்ந்திருந்த கரும்புகை விலகுவதாகவும் தெரியவில்லை.


  அப்பொழுதே அவர்களுக்கு புரிந்து விட்டது, தங்களை தாக்கி கொண்டிருப்பது மனிதர்களின் வேலை அல்ல, இது மாய சக்தியின் வேலை என்று.


  அந்த மாய சக்தி யாராக இருக்கும் என்றும் அவர்களுக்கு தெளிவாக புரிந்தது.


    மோகனா ஆன்மாவிற்கு கொடுத்த அந்த மாயப் பொடியானது, அந்த இடத்திலேயே அவர்களை நகர விடாமல் செய்து, அவர்களை மயக்கி, சுயநினைவை இழக்க வைத்து, மரணத்தை ஏற்படுத்தும் சக்தியை கொண்டது. அதனால் சிறிது நேரத்திலேயே பிரதீபன் தள்ளாடத் தொடங்கினான்.


  ரகுநந்தனிடம் இருந்த ருத்ராட்சத்தின் மகிமையால், அவனுக்கு மயக்க நிலை ஏற்படவில்லை, ஆனால் அங்கிருந்து அவனால் நகரவும் முடியவில்லை.


  நிலைமை மோசமாவதை உணர்ந்த ரகுநந்தன், தன்னிடமிருந்த ருத்ராட்சத்தை பிரதீபனின் கைகளில் திணித்து, அவனை கஷ்டப்பட்டு அந்த புகையிலிருந்து வெளியே தள்ளி விட்டான்.


  சரியாக அந்த நேரத்தில் தான் மோகனா மற்றொரு ஆன்மாவுடன், ஆன்மா வடிவில் அங்கு வந்து சேர்ந்தாள்


  ரகுநந்தனிடம் ருத்ராட்சம் இல்லாத காரணத்தால், அவன் கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயநினைவை இழக்க தொடங்கினான். ஒரு கட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு பிரதீபனை நோக்கியப்படியே மரணத்தைத் தழுவினான்.


அந்தக் கரும்புகைக்கு வெளியே வந்த பிரதீபனுக்கு சிறிது நேரம் அங்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை, அவன் சுதாரிக்கும் முன்பே அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. 


  நடந்தவைகளை உணர்ந்து அவன் ரகுநந்தனை நோக்கி செல்ல முயற்சித்த போது மோகனா அவனைத் தடுத்து விட்டாள். 


  "என்ன அண்ணா, உன் உடன் பிறந்த தங்கையான நான் இங்கு ஆவி வடிவில் நின்று கொண்டிருக்கிறேன், என்னைக் கூட கண்டுகொள்ளாமல் எங்கு ஓடுகிறாய்? உயிர் பிரிந்து விட்ட உனது நண்பனின் உடலை கட்டிக் கொண்டு கதறி அழ வேண்டுமா?"


"ச்சீ வாயை மூடு, உன்னை நல்ல முறையில் தானே நாங்கள் வளர்த்தோம்? எதற்காக இப்படி இறந்த பிறகும் அனைவரின் சந்தோஷத்தையும் அழிக்க நினைக்கின்றாய்? நீ எல்லாம் பெண்ணா? எதற்காக இப்படி எல்லோரையும் ஆட்டி படைக்கின்றாய்? உன்னால் நம்மை பெற்ற அன்னை மனதால் மட்டுமல்லாமல் உடலாலும் பலவித  வலிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இப்போது ரகுநந்தனையும் கொன்று விட்டாயே பாவி, அவன் உனக்கு என்ன தீங்கு செய்தான்? எதற்காக அவனை கொன்றாய்?"


  "என்ன அண்ணா உளறுகிறாய் நானா அவனை கொன்றேன்? எனது ஆன்மாவை ஒழித்துக்கட்ட வாளை தேடி வந்த நீங்கள் நல்லவர்கள்? அதை தடுக்க முயற்சிக்கும் நான் கெட்டவளா? அவனாகவே அவனது முடிவை தேடிக் கொண்டான், அதற்கு நான் என்ன செய்வது?"


  "நீ என்ன செய்யவில்லை என்று கூறு? நம் தந்தையோடு சேர்ந்து கெட்ட சக்திகளுக்கு அடிமையாகி எத்தனை உயிர்களை கொன்று குவித்திருக்கிறாய் நீ? இப்போது ஆன்மா வடிவிலும் பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறாய், இது பத்தாதா? உன்னை பெற்ற பாவத்திற்காக நம் அன்னை அங்கு மனம் நொந்து கொண்டிருக்கின்றார். இன்னும் என்னென்ன பாவங்களை தான் செய்ய காத்திருக்கின்றாய்?"


  "ஆம் செய்தேன் தான் எல்லாம் எதற்காக? நமது தந்தையை பழி வாங்கிய இந்த நாட்டு அரசனின் ஆட்சியை ஒழித்து விட்டு, நமது ரத்னபுரியின் அரசை உலகமெங்கும் பரப்புவதற்காக தான். நம் குடும்பத்தின் சார்பாக நீ என்னோடு துணையாக நிற்காமல், இப்படி என்னை அழிக்க நினைப்பவர்களுக்கு துணையாக இருக்கின்றாயே? இப்போதே எங்களுடன் சேர்ந்து விடு அண்ணா, ரத்தினபுரி மட்டும் அல்ல? இந்த மகிழபுரியையே உனது ஆட்சியின் கீழ் கொண்டு வருகிறேன்."


"யாருக்கு வேண்டும் உனது பதவியும் அரசாங்கமும்? இப்போது ரத்னபுரியில் நான் ஏற்றுக்கொண்ட அரசர் பதவி கூட, நமது மாமா கேட்டுக் கொண்டதற்காகத்தான். அவர் மட்டும் இல்லை என்றால் நாம் என்ன ஆகி இருப்போம் தெரியுமா? நம்மை சிறு வயது முதல் தந்தைக்கு தந்தையாக பாதுகாத்து வருபவருக்கு போய் துரோகம் செய்ய நினைத்தாயே."


  "எதற்காக அதை செய்தார், நமது தந்தைக்கு கொடுத்த தண்டனைக்கு பரிகாரமாக, மன்னிப்பு வேண்டியே அவர் நம்மை பார்த்துக் கொண்டார் அவ்வளவுதானே, இது என்ன பெரிய விஷயம் ? அவ்வளவு நல்லவராக இருந்தால் இளவரசரை எனக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கலாமே? எதற்காக அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார். மித்ரன் மாமாவை நான்  மனமாற விரும்பியது இந்த அரண்மனை மட்டுமல்லாது, இந்த நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் தெரியுமே."


    "மோகனா காதல் என்பது இருமனங்கள் விருப்பி, மனதால் ஒன்றினைவது , அதை கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது, உனக்கு மட்டும் அவனை பிடித்தால் போதாது, அவனுக்கும் உன்னை பிடித்திருக்க வேண்டும். மித்ரனுக்கு உன்னை பிடிக்கவில்லை எனில் என்ன செய்ய முடியும்?... அவன் மனது உன்னை நாடவில்லையே மோகனா."


  "ஆமாம்,...அவர் மனது என்னை நாடவில்லை, அந்த காட்டுவாசி பெண்ணைத்தான் நாடி சென்றுள்ளது, அது தெரியாமல் சிறு வயதிலிருந்து அவர் மீது பைத்தியமாக இருந்திருக்கிறேன், இந்த விஷயம் சிறுவயதிலேயே தெரிந்திருந்தால், அந்த காட்டுவாசி பெண்ணை கழுத்தை நெறித்தாவது கொலை செய்திருப்பேன், இப்போது மட்டும் என்ன?... இன்றைய பூஜை முடிந்து விட்டால்,.... நான் இந்த உலகத்திற்கே முடி சூடா ராணி ஆகி விடுவேன், என் பக்கத்தில் ராஜாவாக அவரை அமர வைத்து இந்த உலகை ஒரு குடையின் கீழ் ஆட்சி புரியப்போகிறேன். அந்தக் காட்டுவாசிக்கு என் கைகளால் தான் முடிவு."


"அதுவரை நான் உன்னை விட்டு வைத்தால் தானே!..."


  பிரதீபன் தன் கைகளில் இருந்த ருத்ராட்சத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, அவளது ஆன்மாவை நோக்கி ஓடினான்.


  ஆனால் சிறிது நேர இடைவெளியில்  மோகனாவின் ஆன்மா விலகி விட, அவளுக்கு பின்புறம் இருந்த ஆன்மாவின் மீது, போய் விழுந்தான் பிரதீபன்.


  விழுந்த வேகத்தில் பிரதீபன் மயங்கி விட, அந்த ஆன்மா கத்திக் கொண்டே எரிந்து சாம்பலானது.

No comments:

Post a Comment