அத்தியாயம் 85
சிவன்மலையில் மேடு பள்ளங்களை கடந்து அகத்தியர் குகையை ஒரு வழியாக மூவரும் கண்டுபிடித்து விட்டனர். ஜோசியர் குகைக்கு வெளியே நிற்க, பிரதீபனும் ரகுநந்தனும் மட்டும் குகையின் வாயிலின் வழியே உள் நுழைந்தனர்.
அவர்கள் குகையின் உள்ளே செல்லும் முன்பே, ஜோசியர் அவர்களிடம் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவர்களின் கைகளில் உள்ள ருத்ராட்சத்தை, பயன்படுத்துமாறு கூறி அனுப்பினார்.
அவர்கள் குகையின் உள்ளே செல்லும்போது விரிந்த கிடந்த பாதையானது, செல்லச் செல்ல குறுகிய பகுதியாக ஒரு மானிடன் குனிந்தபடியே செல்லும் வழியாக மாறியது. சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் பாதை சாதாரணமாக மாறியது.
அங்கு ஒரு குளத்தின் நடுவே சிவபெருமான் லிங்க வடிவில் அமர்ந்திருந்தார். அவருக்கு கீழே ஒரு பெட்டியில் வாள் வைக்கப்பட்டு இருந்தது
அந்தக் குளத்திற்கு எதிரே நந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியரை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அவருக்கு சற்று தொலைவு தள்ளி, ஒரு பூதக்கணம் சிலை வடிவில், கைகளில் வாள் பிடித்து நின்று கொண்டிருந்தது.
அந்தக் குளம் எங்கும் தாமரை பூக்கள் பூத்து, அந்த குளத்திற்கே அழகு சேர்த்துக் கொண்டிருந்தன.
நந்திக்கும் சிவலிங்கத்துக்கும் இடையே அங்கங்கே கற்கள் பதிக்கப்பட்டு, குளத்தை கடந்து செல்ல வழி செய்யப்பட்டிருந்தது. பிரதீபனும் ரகுநந்தனும் நந்திக்கு அருகில் உள்ள கல்லில் கால் வைத்ததுமே, சற்று தொலைவில் இருந்த பூதக்கணத்தின் சிலை உயிர் பெற்று விட்டது.
அந்த பூதக்கணம் தனது வாளை உயர்த்திக் கொண்டு, இருவரோடும் ஆவேசமாக சண்டையிட துவங்கியது. ரகுநந்தனும் பிரதீபனும் ஒருவருக்கொருவர் சலிக்காமல், அந்த பூதக்கணத்திடமிருந்து தப்பித்துக் கொண்டே வந்தனர்.
"பிரதீபா நான் இந்த பூதக்கணத்தை பார்த்துக்கொள்கிறேன், நீ எப்படியாவது சென்று சிவலிங்கத்திற்கு அடியில் இருக்கும் பெட்டியினை திறந்து, வாளை எடுத்து விடு."
பிரதீபன் குளத்தின் இடையே இருந்த கற்கலின் மீது காலை வைத்து, சிவ லிங்கத்தை நோக்கிச் சென்றான்,
அவன் பெட்டியை நெருங்கிய போது தான் தெரிந்தது, அந்த பெட்டியை சுற்றி ஒரு நாகப்பாம்பு சுருண்டு படுத்திருந்தை, அதன் தலைப்பகுதி பெட்டிக்கு மேலே தூக்கி நின்று, அவனைத்தான் படம் எடுத்துக் கொண்டிருந்தது.
மண்டியிட்டு கீழே அமர்ந்து சிவலிங்கத்தை நோக்கி கைகூப்பினான் பிரதீபன்.
"சிவபெருமானே கெட்ட சக்திகள் தங்களது ஆட்டத்தை தொடங்கி விட்டன, அவைகளை அடக்கத்தான் இந்த வாள் எங்களுக்கு தேவைப்படுகிறது, வேறு எந்த கெட்ட எண்ணமும் எங்களுக்கு இல்லை, தயை கூர்ந்து எங்களுக்கு பக்க துணையாக இருந்து, கெட்ட சக்திகளை வெற்றிகொள்ள துணை புரியுங்கள் சுவாமி."
பிரதீபன் தனது கைகளில் இருந்த ருத்ராட்சத்தை, நாகப்பாம்பை நோக்கி நீட்டினான். அதைக் கண்டவுடன் தனது உடலை பெட்டியில் இருந்து நீக்கிவிட்டு அந்த பெட்டியில் இருந்து இறங்கி, சிவலிங்கத்திடம் சென்று அவரை சுற்றிக்கொண்டு தலை மீது படம் எடுத்து நின்றார் நாகராஜன்.
ரகுநந்தன் இன்னும் அந்த பூதக்கணத்தோடு போராடிக் கொண்டுதான் இருந்தான். அவனை நோக்கி திரும்பிய பிரதீபன்,
"ரகுநந்தா உடனே உன்னிடம் இருக்கும் ருத்ராட்சத்தை, அந்த பூதக்கணத்திடம் காட்டு."
ரகுநந்தன் பிரதீபன் கூறியபடியே செய்ய, அந்த ருத்ராட்சத்தை கண்டதும் அந்த பூதக்கணம், மீண்டும் தனது பழைய இடத்திற்கு சென்று கற்சிலையாக மாறி நின்று விட்டது.
ரகுநந்தனும் பிரதீபனும் லிங்கத் திருமேனியரை சிரம் தாழ்ந்து வணங்கி விட்டு, பெட்டியில் இருந்த வாளை எடுத்துக் கொண்டனர்.
அடுத்த கணமே அந்த பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது, வீரவாளோடு வெளியில் வந்த இருவரையும் ஜோசியர் பரபரப்புடன் வரவேற்றார்.
பிரதீபனும் ரகுநந்தனும் குகைக்குள் நுழைந்த பிறகு, தனது குரு தேவரை என்னை தியானத்தில் ஆழ்ந்தார் ஜோதிடர். அப்போது அவர் கூறிய செய்தியில் அதிர்ந்து போய் தான், இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
"பிரதீபா சற்று நேரத்திற்கு முன்பு எனது குரு தேவரை நினைத்து தியானத்தில் ஈடுபட்டிருந்தேன், அப்போது அவரது குரல் எனக்கு கேட்டது, அவர் உடனடியாக நாம் செய்து முடிக்க வேண்டிய கடமைகளை என்னிடம் கூறினார்."
"இளவரசர் இப்போது ரத்தினபுரியில், ரங்கராஜ பூபதியை எதிர்த்து, போர் புரிந்து கொண்டிருக்கிறார். ரங்கராஜ பூபதியின் படைகளில் பக்கத்து நாட்டு படை வீரர்களோடு கெட்ட சக்திகளின் மந்திர பலமும் சேர்ந்துள்ளதால், அவரால் சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றாராம், உடனடியாக நம்மை இந்த வாளை எடுத்துக் கொண்டு அங்கு செல்ல வேண்டும் என்று அவர், எனக்கு கட்டளை இட்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல், சிவன் மலைக்கு வெளியே நமக்கான ஆபத்து காத்துக் கொண்டிருப்பதாக அவர் எச்சரிக்கை செய்தார்."
"அப்படி என்றால் நானும் ரகுநந்தனும் மலைக்கு வெளியில் இருக்கும், அந்த ஆபத்தை பார்த்துக் கொள்கிறோம். தாங்கள் இந்த வீரவாளை எடுத்து சென்று, எப்படியாவது ரத்தினபுரியில் இருக்கும் மித்ரனிடம் சேர்ப்பித்து விடுங்கள், எங்கள் உயிரை விட இந்த வாள் மித்ரனிடம் சேர வேண்டியது மிக முக்கியமானது, இங்குள்ள ஆபத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்."
மலைக்குக் கீழே வந்து அகத்தியரின் சிலைக்கு முன்பு அந்த வீரவாளை வைத்து விட்டு, அவரின் ஆசி பெற்று அதை ஜோசியரிடம் கொடுத்து, அவரை ரத்னபுரிக்கு வேறு வழியாக அனுப்பி விட்டு, பிரதீபனும், ரகுநந்தனும் சிவன் மலையை விட்டு வெளியேறினர்.
ரஞ்சனியின் உருவத்தில் இருந்த மோகனாவிற்கு ஆனந்தமாக இருந்தது, இன்று தனது கனவு நிறைவேற போகிறது, அதன் தொடக்கம் தான் ஏந்திழையின் அழிவு என்று உற்சாகமாக இருந்தாள். அப்போது தான் சிவன் மலையில் இருந்து அவளுக்கு செய்தி வந்தது.
"இன்று என் அனைத்து எதிரிகளையும் ஒழித்துவிட்டு, நிம்மதியாக பூஜையினை செய்யப் போகின்றேன். இனி இந்த உலகமே எனக்கு அடிமை..."
என்று மகிழ்ச்சியில் திளைத்த மோகனா, விடியும் முன்பே சிவன்மலையில் காரியத்தை முடித்து விட்டு வந்து விடலாம் என்று, ஆன்மாக்களுடன் ரஞ்சனியின் உடலில் இருந்து தனது ஆன்மாவை பிரித்துக் கொண்டு சிவன் மலையை நோக்கி பயணித்தாள்.
மகிழபுரி மக்களும் குருந்தங்காட்டை சேர்ந்த மக்களும், ஏந்திழை அம்மையாருக்கு ஆதரவாக அரசரை எதிர்த்து, மாளிகையை சூழ்ந்து கொண்டு, அரசருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஏந்திழை அம்மையாரை மக்கள் ஒரு குருநாதரை போலவே பார்த்தனர். அவருக்கு ஒரு தவறு இழைக்கப்படும் போது, அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க அவர்களால் முடியவில்லை. மக்களின் போராட்டங்கள் தீவிரமானது.
மகாராணியார் எவ்வளவோ முறை அரசரிடம் மன்றாடி விட்டார், இருந்தும் அவரால் ஏந்திழையின் தண்டனையை குறைக்க முடியவில்லை. மகாராணிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
தனது உடலில் இருந்து மோகனாவின் ஆன்மா பிரிந்ததை பார்த்துக் கொண்டிருந்த கிளி வடிவில் இருந்த ரஞ்சனி, இதுதான் தக்க சமயம் என்று தனது உடலுக்குள் தனது ஆன்மாவை புகுத்திக் கொண்டு, கிளியின் கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தை தனது கைகளுக்குள் பாதுகாப்பாக வைத்துக் கொண்டால்.
உடனே மகாராணியாரிடம் சென்று நடந்தவைகளை விவரமாக எடுத்துக் கூறியவள், அரசரின் உடலில் உள்ள ராட்சசன் பற்றியும் தெரிவித்தால். அரசரின் உடலில் இருந்து அந்த ராட்சசனை விரட்ட வேண்டும் என்றால், அதற்கு ஏந்திழை அம்மையாரின் துணை வேண்டும் என்று, யாரும் அறியாமல் அவரை தேடி, இருவரும் சிறைக்குச் சென்றனர்.
நடந்த அத்தனை விஷயங்களையும் ஏந்திழை அம்மையாரிடம் தெரிவித்த ரஞ்சனி, இன்றைய அமாவாசை பூஜையை பற்றியும் தெரிவித்தாள்.
"முதலில் எப்படியாவது அரசரின் உடலில் உள்ள ராட்சசனை வெளியேற்ற வேண்டும், அவர் மூலமாகத்தான் தங்களது தண்டனையை நிறுத்த முடியும். இன்றைய பூஜையை மோகனா நிறைவு செய்துவிட்டால்,...இனி எந்த சக்தியாலும் அவளை அழிக்கவே முடியாது, தாங்கள்தான் இதற்கு ஏதாவது உபாயம் கூற வேண்டும் தாயே."
தீவிரமாக சிந்தித்த ஏந்திழை அம்மையாருக்கு, அன்று கொற்றவை தேவி தமக்கு அளித்த அந்த திரிசூலத்தின், ஞாபகம் வந்தது. உடனே அதை எப்படியாவது அரண்மனைக்கு கொண்டு வந்து விட்டால், அரசரின் உடலில் இருக்கும் ராட்சசன் வெளியேறி விடுவான், அத்தோடு மோகனாவினாலும் இங்கு வர முடியாது என்று கூறினார்.
"அதற்குள் மதுரவாணி இன்றைய பூஜையையும் நிறைவு செய்து விடுவாள், கொற்றவை தேவிக்கு குங்கும அபிஷேகம் முடிந்து விட்டால், பிறகு தேவியே அந்த கெட்ட சக்தியை பார்த்துக் கொள்வார்."
"தாயே அந்த திரிசூலத்தை எங்களால் எடுத்து வர முடியுமா என்று தெரியவில்லையே?"
"அத்தை நான் ஏந்திழை அம்மையாருக்கு பதிலாக, எனது முகத்தை மூடிக்கொண்டு இங்கு சிறையில் இருக்கிறேன், தாங்கள் அவரை எப்படியாவது இந்த சிறையில் இருந்து வெளியே கூட்டிச் சென்று விடுங்கள். அவர் சென்று திரிசூலத்தை எடுத்து வரட்டும்."
"ஆனால் ரஞ்சனி நீ எப்படி இங்கு இருப்பாய்? ஒருவேளை தண்டனையை நிறைவேற்ற உன்னை அவர்கள் இழுத்துச் சென்று விட்டாள்?"
"என்னை அவர்கள் கண்டுபிடித்து விட்டாலும், நிச்சயமாக என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் அத்தை, ஏனென்றால் எனது உடல் மோகனாவிற்கு தேவைப்படுகிறது, அதனால் என்னைப் பற்றி கவலை கொள்ளாமல், இருவரும் சீக்கிரமாக இங்கிருந்து சென்று விடுங்கள்."
வெகு நேரமாக மோகனாவை தொடர்பு கொள்ள முடியாமல், அரசரின் உருவத்தில் இருந்த ராட்சசனும் தவித்துக் கொண்டிருந்தான். மக்கள் போராட்டத்தை அடக்கி ஏந்திழையின் தண்டனையை நிறைவேற்றுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டான்.
மக்களின் போராட்டத்தால் ஏந்திழை அம்மையாருக்கு நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனை சற்று தாமதமானது. மக்கள் கூட்டத்தை அடக்குவதற்கே அதிகநேரம் பிடித்தது.
அமைச்சர்களுக்கும் வீரர்களுக்கும் இது பிடிக்கவில்லை என்றாலும், அரசரை எதிர்த்து பேச முடியாமல், அவரின் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டனர்.
இங்கு எப்படி இருக்க, சிவன்மலை அடிவாரத்தில் ஒரு உயிர் தனது இறுதியாத்திரையை நெருங்கிக் கொண்டிருந்தது.
No comments:
Post a Comment