அத்தியாயம் 84
ரத்னபுரியில் ரங்கராஜ பூபதியை எதிர்த்து போர் புரிய சென்ற மித்ரனுக்கு அதிகமாக போராட வேண்டி இருந்தது.
ரங்கராஜ பூபதிக்கு பக்கத்து நாட்டு அரசர்களின் படைபலத்தோடு, ராஜ குருவின் மாந்திரீக பலமும் அவனது படைகளில் சேர்ந்திருந்ததால், மித்ரனால் அவர்களை சமாளிக்கவே முடியவில்லை.
கெட்ட சக்திகள் மித்ரனை நெருங்க அஞ்சினாளும், அவனுடைய படைகளை அவைகள் விட்டு வைக்கவில்லை. முடிந்த அளவு அவனும் ரங்கராஜபுரி பூபதியின் படைகளோடு போராடிக் கொண்டிருந்தான்.
நாட்கள் செல்லச் செல்ல மித்ரனின் படைவீரர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
அமாவாசைக்கு இன்னும் இரண்டு தினங்களே இருந்தது. கொற்றவை தேவியை மனதில் வேண்டிக்கொண்டு, இன்றைய போருக்கும் தனது வீரர்கள் பின் தொடர, ரங்கராஜ பூபதியின் படையோடு மோத போர்க்களம் புகுந்தான் மித்ரன்.
நேற்று தனக்கு தூதுவன் மூலம் அரசர் அனுப்பிய ஓலையை கையில் வைத்துக் கொண்டு, சிந்தனையிலேயே அதை வெறித்துக் கொண்டிருந்தார் ஏந்திழை அம்மையார்.
அந்த ஓலையில் இளவரசருக்கும் அரசரின் தங்கை மகளான ரஞ்சனிக்கும், அமாவாசை முடிந்து வரும் வளர்பிறையில் ஒரு நன்நாளில் திருமணம் நிச்சயக்கப்பட்டிருப்பதால், அதை முன்னிட்டு கொற்றவை தேவி கோயிலில் பூஜை ஏற்பாடு செய்யுமாறு குறிப்பிட்டிருந்தது.
இளவரசருக்கு திருமணமா? அப்படி என்றால் எனது மகளின் கதி? அன்று என் மகளை ஏற்றுக் கொண்டதாக அரசரும் மகாராணியாரும் முனிவரின் முன்பு கூறியது எல்லாம் நடிப்பா?
அன்று அதிகாலை பூஜை முடிந்து திரும்பி வந்த மதுரவாணியிடம், ஏந்திழை அம்மையார் புலம்பிக் கொண்டே இந்த விஷயத்தை கூற, மனதால் நொறுங்கிப் போயிருந்தாலும் தனது அன்னைக்காக வெளிப்படையாக எந்த உணர்ச்சியையும் காட்டாமல்,
"தாயே அரச குடும்பத்தை பற்றி தெரிந்த விஷயம் தானே? ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு அங்கு செல்லுபடியாகாது? தாங்கள் இதனால் தான் என்னை சிறுவயதிலிருந்தே அவர்களிடம் இருந்துதள்ளி இருக்குமாறு கூறினீர்கள், நான் தங்களது பேச்சை மீறி நடந்ததால் தான் இவ்வளவு பிரச்சனைகள், நடப்பது நடக்கட்டும் நாம் தற்போது கொற்றவை அன்னையை மந்திர கட்டில் இருந்து விடுபதற்கான வழியை மட்டும் பார்ப்போம், இந்த விஷயத்தை இத்தோடு விட்டு விடுங்கள்."
"ஆனால் மகளே, உனது கதி என்னாவது? உனது வாழ்க்கைக்கு அவர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள்?"
"நிச்சயமாக அந்த இளவரசரின் அந்தப்புரத்தில் ஒருத்தியாக நான் இருக்க மாட்டேன். இந்த விஷயத்தை இத்தோடு விட்டு விடுங்கள், நான் இன்று பூஜை முடிந்து குடிலுக்கு வரமாட்டேன், நாளை உச்சி பூஜை முடித்துவிட்டு, அம்மன் குங்குமத்தோடு தான் கோவிலுக்கு வருவேன். தங்கள் அதற்கு முன்பே கொற்றவை தேவி கோயிலை சுத்தப்படுத்தி வையுங்கள், நாளை நமது அன்னை மந்திர கட்டில் இருந்து விடுபட்டு நம்மை வந்து சேரும் பொன்னாள், அதை மட்டும் நினைவில் வைத்து, மற்றவற்றை சிந்தையில் இருந்து ஒதுக்கித் தள்ளுங்கள், நான் வருகிறேன் தாயே."
மதுரா சற்று தூரம் சென்று திரும்பி பார்த்த போது, ஏந்திழை அம்மையார் அசையாமல் அதே இடத்தில் நின்று கொண்டு, அந்த ஓலையை வெறித்துக் கொண்டிருந்தார். தன்னுடன் நடந்து வந்து கொண்டிருக்கும் செம்பாவை நோக்கி திரும்பியவள்,
"செம்பா குழப்பமான மனநிலையில் இருக்கும் அன்னையை, இங்கு தனியாக விட்டுவிட்டு கோயிலுக்கு செல்ல எனக்கு மனம் வரவில்லை, நீ எனக்காக அவருடன் இருக்கின்றாயா?"
செம்பா சமத்தாக தலையை ஆட்டிக்கொண்டு ஏந்திழை அம்மையாரை நோக்கி சென்றது. போகும் அவனை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மதுராவிற்கு தெரியவில்லை, இனி அவனை தான் காணவே போவதில்லை என்று, பெருமூச்சோடு கொற்றவை அன்னையை மனதில் வேண்டிக் கொண்டு, மூலவர் சந்திதியை நோக்கி நடந்தால் மதுரா.
ஏந்திழைஅம்மையார் என்னதான் தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு, கொற்றவை தேவி கோயிலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாலும், அவரது மனதில் இளவரசரின் திருமண அறிவிப்பு நெருஞ்சிமுள்ளாக குத்திக் கொண்டே இருந்தது. அப்படியே யோசித்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நேராக அரசரிடமே இது குறித்து பேசி விடலாம் என்று மகிழபுரியை நோக்கி தனது பயணத்தை தொடங்கினார் ஏந்திழை அம்மையார். செம்பாவும் மதுராவின் கட்டளைப்படி அவரை பின்தொடர்ந்து சென்றது.
மோகனாவும் இதைத்தான் எதிர்பார்த்தாள், ஏந்திழையை எப்படியாவது அந்த குருந்தங்காட்டில் இருந்து வெளியே வர வைத்து விட்டால், பிறகு அவரை எளிதாக தீர்த்து கட்டி விடலாம் என்று தான் இவ்வாறு ஒரு ஓலையை அவருக்கு அனுப்பி இருந்தாள்.
அரச மண்டபத்தில் அரசரும் அமைச்சர் பெருமக்களும் குழுமி இருந்தபோது, ஒரு காவலன் வந்து, குருந்தங்காட்டிலிருந்து ஏந்திழை அம்மையார் அரசரை காண வந்திருப்பதாக கூற, அரசரின் உடலில் இருந்த ராட்சசன் உடனே மோகனாவுக்கு தன் மனதில் இந்த தகவலை தெரிவித்தான்.
"அவரை உள்ளே அழைத்து வா."
"வணக்கம் அரசே."
"ம்ம்ம்,... விஷயம் இன்றி தாங்கள் இவ்வளவு தூரம் வர மாட்டீர்கள், தாங்கள் வந்திருப்பதற்கான காரணம்?"
"அரசே,... நான் தங்களுடன் தனியாக விவாதிக்க விரும்புகின்றேன்."
"பரவாயில்லை ஏந்திழை, இந்த அமைச்சர்கள் அனைவரும் எனது நலம் விரும்பிகளே, தாங்கள் தாராளமாக வந்திருக்கும் காரணத்தை கூறலாம்?"
"அரசே இளவரசருக்கு திருமணம் என்று கேள்விப்பட்டேன்?"
"ஆமாம், என்ன அமைச்சரே? நான் தங்களிடம் இது குறித்து ஒரு ஓலையை ஏந்திழை அம்மையாருக்கு அனுப்பி வைக்கக் கூறினேனே? தாங்கள் அதை செய்யவில்லையா?"
"தங்கள் கட்டளை படியே தூதுவனின் மூலம், அவருக்கு ஓலை அனுப்பிவிட்டோம் மன்னா."
"ஓலை வந்து சேர்ந்து விட்டது அரசே, ஆனால்?..."
" என்ன ஆனால்? எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறு ஏந்திழை?"
"அரசே தாங்கள் மறந்து விட்டீர்களா? இளவரசருக்கும் எனது மகளுக்கும் தான் திருமணம் முடிந்து விட்டதே."
"என்ன?.... ஹா ஹா ஹா ஹா, இளவரசருக்கும் காட்டில் வசிக்கும் உனது பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டதா?"
"என்ன அரசே இப்படி பேசுகிறீர்கள்? அன்று குருதேவர் இவர்களின் திருமணத்தைப் பற்றி கூறிய போது, தாங்களும் மகாராணியாரும் எனது மகளுக்கு ஆசி கூறி, அவளை தங்களது மருமகளாக ஏற்றுக் கொண்டீர்களே…?"
"ஏந்திழை என்ன உளறிக் கொண்டிருக்கின்றாய்? இந்த மகிழபுரியின் இளவரசருக்கும், காட்டில் வாழும் சாதாரண காட்டுவாசி பெண்ணுக்கும் திருமணமா? ஆண்டவனுக்கு பூஜை செய்வதால் ,நீ ஆண்டவனாக ஆகிவிட முடியுமா என்ன? உன் மகளை மகிழபுரியின் அரியணையில் அமர வைக்கும் ஆசை வந்துவிட்டதா உனக்கு? வீணாக எனது கோபத்திற்கு ஆளாகாமல் இங்கிருந்து சென்றுவிடு."
"அரசே என்ன இது? அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்று மாறி மாறி பேசுகிறீர்கள்? அன்று குருதேவரின் முன்பு, எனது மகளை தங்களது மருமகளாக மனமார ஏற்றுக் கொள்வதாக கூறினீர்களே? அது எல்லாம் பொய்யா? இதுதான் நாடாளும் அரசருக்கு அழகா?"
மோகனாவின் அறிவுரைப்படி அரசரின் உடலில் இருந்த ராட்சசன், தனது முகத்தை ஏந்திழைக்கு காட்டினான்.
அமைச்சர்கள் தங்களுக்குள் விவாதித்து கொண்டிருக்கும் போதே, ஏந்திழை அம்மையார் கத்த தொடங்கினார்.
"இவன் அரசர் இல்லை, இவன் அரசர் இல்லை, இவன் ஒரு ராட்சசன், இவன் ராட்சசன்."
"என்ன தைரியம் இருந்தால் அரச சபையை அவமதித்து, அரசரையும் அவமானப்படுத்துவாய்? வீரர்களே இவளை இழுத்துச் செல்லுங்கள், நாளை காலை சூரிய உதயத்தில் இவளை அக்கினி குண்டத்தில் இறக்க வேண்டும், அரச சபையை அவமானப்படுத்தியதற்கு, இதுதான் அவளுக்கு சரியான தண்டனை.
அமைச்சர்களே நான் இவ்வாறு கூறியதில் தங்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து உண்டா?"
அமைச்சர்கள் அவரை எதிர்த்துப் பேசத் துணிவின்றி அமைதியாக இருக்க,
" அமைச்சர்களே,... எனக்கு ஏனோ நம் நாட்டில் நடக்கும் குழப்பங்களுக்கெல்லாம் காரணம், இந்த ஏந்திழையாகத்தான் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது? உங்களுக்குத் தெரியும் அல்லவா ஏந்திழைக்கு மந்திர தந்திரங்கள் அனைத்தும் தெரியும் என்று."
"ஆம் அரசே,...ஆனால் எதற்காக அவர் இவ்வாறெல்லாம் செய்யப் போகின்றார்?"
"வேறு எதற்கு? அவளது காட்டுவாசி பெண்ணை மகிழபுரியின் மகாராணியாக்குவதற்கு தான்."
ஏந்திழை அம்மையாரை இழுத்துச் சென்ற காவல் வீரர்களை, செம்பா பந்தாடியது. அதனை கேள்விப்பட்டு அரண்மனையிலிருந்து வெளிவந்த அரசர், வீரர்களுக்கு கட்டளையிட்டார்.
"வீரர்களே,...அந்த யானையை இரும்புச் சங்கிலியால் பிணையுங்கள், அது அடங்க மறுத்தால், வேல் கம்புகளைக் கொண்டு அதை குத்தி சாகடியுங்கள். இந்த சூனியக்காரியோடு அதுவும் எமலோகம் போகட்டும்."
வீரர்கள் பலர் வேல் கம்புகளைக் கொண்டு தாக்கிய போதும், ஏந்திழை அம்மையாரை தனக்குள் பொத்தி வைத்துக்கொண்ட செம்பா, ரத்த காயங்களோடும் முடிந்தவரை வீரர்களோடு போராடியது.
ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியாமல், ஏந்திழை அம்மையாரின் கண் முன்பே தனது மரணத்தை தழுவியது.
No comments:
Post a Comment