Search This Blog

Followers

Powered By Blogger

Tuesday, August 12, 2025

மன்னவரே 83


 

             அத்தியாயம் 83


    அகத்தியர் மலைக்கு வீரபத்திரரின் வாளைத் தேடி சென்றவர்களின் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை, பல காடு மேடுகளை கடந்து பல போராட்டங்களுக்குப் பிறகுதான் அவர்களால் அகத்தியர் மலையையே அடைய முடிந்தது. அவர்கள் அகத்தியர் மலையின் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அந்த ஈசனின் அருளோடு சித்தரின் அனுமதியும் தேவை.


  அகத்தியர் மலைக்கு கீழே இருந்த சித்தரின் சிலைக்கு, மரியாதை செலுத்தி விட்டு, அவரின் அருளாசியோடு மூவரும் அகத்தியர் மலையினுள் நுழைந்தனர்.


  பிரதீபனையும் ரகுநந்தனையும் தேடி அலைந்து கொண்டிருந்த ஆத்மாக்கள், அவர்கள் செல்லும் வழி எங்கும் அவர்களை பின்தொடர்ந்து கொண்டே வந்து கொண்டிருந்தன. அவைகள் அவர்களை நெருங்க நினைக்கையில், ருத்ராட்சத்தின் மகிமையால் தூக்கி வீசப்பட்டன. 


    அவர்கள் மூவரும் அகத்தியர் மலையினுள் நுழைவதை கண்டு, உடனே மோகனாவிற்கு தகவல் தெரிவிக்க, அங்கிருந்து மகிழபுரியை நோக்கி பறந்து சென்றன.


  ஆலோசனை மண்டபத்தில் நடந்த பேச்சுவார்த்தையை கேள்விப்பட்டு, அதிர்ந்து போய் அரசரிடம் ஓடி வந்தார் மகாராணி தாரகை தேவி.


    "சுவாமி நான் கேள்விப்படுவது அனைத்தும் உண்மையா? ரஞ்சனிக்கும் மித்ரனுக்கும் திருமணம் செய்து வைப்பதாக தாங்கள் முடிவெடுத்து உள்ளீர்களாமே?"


    "ஆமாம், அதில் உனக்கு என்ன சந்தேகம், ரஞ்சனி மித்ரனின் அத்தை மகள் தானே?"


  "ஆனால் சுவாமி, தாங்கள் மறந்து விட்டீர்களா? நம் மகனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதே?"


    "அது யாருக்கும் தெரியாமல் நடந்த கந்தர்வ மனம் தானே, அத்தோடு ஒரு மலைவாசி பெண்ணை எவ்வாறு நாட்டின் மகாராணியாக, அரியணையில் அமர வைப்பது?"


  "சுவாமி தாங்களா இவ்வாறு பேசுகிறீர்கள்?"


  "இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறாய் தாரகை? இந்நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பௌர்ணமி பூஜை புரிந்து வந்திருக்கும் ரஞ்சனியை விட்டுவிட்டு, அந்த காட்டில் வாழும் காட்டுவாசி பெண்ணை அரியணையில் அமர வைக்க வேண்டும் என்று கூறுகிறாயா? ஏன் உனக்கு தெரியாதா? ரஞ்சனிக்கு தாய் தந்தையர் மட்டுமல்ல அவளின் உறவு என்று சொல்லிக் கொள்ள, நாம் மட்டும் தானே இருக்கிறோம். அவளுக்கு ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பது நமது கடமையாகும். ஏன் என் தங்கை மகள் என்ற காரணத்தால், அவளை மருமகளாக ஏற்றுக் கொள்ள உனக்கு விருப்பம் இல்லையா?"


"என்ன கூறுகிறீர்கள் அரசே? உங்கள் தங்கைகளை நான் என் மகள்களாகத் தானே பாவித்தேன். உங்களது விருப்பமே எனது விருப்பம், அதை மீறி நான் செயல்பட போகின்றேனா? வருகிறேன் அரசே."


  மோகனா தனது கருத்துக்களை, அரசரின் வாய்மொழியாக தெரிவித்து, எப்படியோ மகாராணியாரை அடக்கி விட்டாள்.


அரசியின் மூலம் தன் தந்தையின் கருத்துக்களை கேட்டறிந்த மித்ரன், அவர் முன்பு செல்வதையே தவிர்த்து வந்தான். ஒருவேளை தன் தந்தை ரஞ்சனியை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுவிட்டால்? தன்னால் அதை தட்ட முடியாதே…ஏற்கனவே ரஞ்சனியின் உருவத்தில் இருக்கும் மோகனாவுடன் சிரித்து பேசுவதே மிகப்பெரிய வேதனையாக இருக்கின்றது, இதில் அரசர் வேறு அவளை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டு விட்டாள் என்ன செய்வது என்று அஞ்சியே அவன் அரண்மனைக்கு வருவதை தவிர்த்து வந்தான்.


  ஒருவேளை மித்ரன் அரசரைச் சென்று பார்த்திருந்தால், ருத்ராட்சத்தின் மகிமையால் அவரின் உடலில் இருக்கும் ராட்சசனை கண்டுபிடித்திருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது.


  அப்போதுதான் ரங்கராஜ பூபதிக்கு ரத்னபுரியில் பிரதீபன் இல்லை என்ற செய்தி கேள்விப்பட்டு, தனது நட்பு நாடுகளின் உதவியுடன் திரட்டிய படையுடன், ரத்தினபுரியை தாக்கினான். அங்கிருந்த படைவீரர்களுடன் போரிட்டு தனது ராஜ்யத்தை மீட்டுக் கொண்டான்.


  அமாவாசை அன்று மகிழபுரியை தாக்குவதற்காக, பக்கத்து ராஜ்யங்களின் உதவியினை நாடி, பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தான்.


  ரத்னபுரியை ரங்கராஜ பூபதி கைப்பற்றி விட்டதை அறிந்த மித்ரன், படைவீரர்களுடன் சென்று அவனுடன் போரிட முடிவு செய்தான்.


  கிளியாக உள்ள ரஞ்சனியின் கழுத்தில் ருத்ராட்சத்தை ஒரு கயிறு மூலம் கட்டி விட்டவன்,


  "ரஞ்சனி அமாவாசை வேறு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்குள் பிரதீபனும் ரகுநந்தனும் வாளை எடுத்துக் கொண்டு வர வேண்டுமே? அதுவரை என்னால், இங்கு அரண்மனையிலும் இருக்க முடியாது. ரத்னபுரியை வேறு ரங்கராஜ பூபதி கைப்பற்றி விட்டான், கூடிய சீக்கிரம் நம் மகிழபுரியை தாக்க போவதாக உளவு செய்தி வந்துள்ளது. அதற்குள் நான் சென்று, அவனை நம் படைகளுடன் தாக்கி, அவனது படைபலத்தை குறைக்க வேண்டும். அதனால் தான் இந்த ருத்ராட்சத்தை இப்போது உனது கழுத்தில் கட்டுகிறேன். அன்னை சொன்னது நினைவிருக்கிறதல்லவா? சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திரு ரஞ்சனி. உனது உடலில் இருந்து எப்போது மோகனா பிரிந்து செல்கின்றாளோ, உடனே அந்த உடலுக்குள் நீ உட்புகுந்து விடு. அந்த அன்னையின் துணை என்றுமே நமக்கு இருக்கும். சென்று வருகிறேன் ரஞ்சனி."


  அமைச்சர்களிடம் தான் படையுடன் ரத்தினபுரியை நோக்கி செல்வதை, அரசருக்கு அறிவிக்கும்படி கூறிவிட்டு, ரஞ்சனியின் உருவத்தில் இருக்கும் மோகனாவிடமும் விடை பெற்று விட்டு மித்ரன் ரத்தினபுரியை நோக்கி படைகளுடன் கிளம்பி விட்டான்.


    காரியம் கைக்கூடி வரும் நேரத்தில் தனது சித்தப்பாவால் அனைத்தும் நாசமாகி போவது மோகனாவிற்கு அதிக கோபத்தை உண்டாக்கியது, தனது பேச்சை மீறி அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது தான், பிரதீபனையும் ரகுநந்தனையும் தேடிச் சென்ற ஆன்மாக்கள், அவர்கள் ஜோசியருடன் அகத்தியர் மலையில் இருப்பதாக செய்தி கொண்டு வந்து சேர்த்தது.


  ரஞ்சனிக்கு புரிந்து விட்டது அவர்கள் அங்கு இருக்கும் வீரபத்திரரின் வாளை தேடித்தான் சென்றிருக்கிறார்கள் என்று,


  "ஓ என்னை அடக்க, இங்கு ஒரு சதி நடந்து கொண்டிருக்கின்றதா? ஏற்கனவே அந்த காட்டுவாசிப் பெண் கொற்றவை தேவியை மந்திர கட்டிலிருந்து விடுவிக்க பூஜை செய்து கொண்டிருக்கின்றாளாம்...இப்போது இவர்கள் வீரபத்திரனின் வாளை தேடி சென்றிருக்கிறார்களா? எனக்கு எதிராக செயல்படும் ஒருவரை கூட உயிருடன் விடமாட்டேன், இப்போதே அகத்தியர் மலைக்குச் செல்லுங்கள், அகத்தியர் மலையில் இருந்து அவர்கள் வெளிவந்ததும் ரகுநந்தனையும் ஜோசியரையும் கொன்றுவிட்டு, பிரதீபனை சிறை பிடித்து இங்கு அழைத்து வாருங்கள்."


    "தேவி நாங்கள் எத்தனையோ முறை அவர்களை நெருங்க முயற்சித்து அருகில் சென்றோம், ஆனால் ஏதோ ஒரு சக்தி அவர்களை காத்து கொண்டிருக்கின்றது. எங்களால் அவர்களை நெருங்கவே முடியவில்லை. அதனால் தான் இத்தனை நாட்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்று, அவர்கள் செல்லும் இடத்தை கண்டு கொண்டு, இப்போது உங்களிடம் அதை தெரிவிக்க வந்துள்ளோம்."


மோகனா காற்றில் தனது கைகளை சுழற்றி ஒரு மந்திர பொடியை கைகளில் கொண்டு வந்தாள். அதை அந்த ஆன்மாகளிடம் கொடுத்து,


  "அவர்கள் மலையில் இருந்து வெளி வந்த அடுத்த நிமிடம் இந்த பொடியை அவர்களின் மீது தூவி விட்டு எனக்கு செய்தி அனுப்புங்கள். பிறகு நடக்க வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன்."


அந்த ஆன்மாக்கள் அவளிடம் இருந்து விடை பெற்றுச் சென்றதும் முதலில் இந்த ஏந்திழையை ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவள், அரசர் உடலில் இருக்கும் ரத்தமாறனை அழைத்தாள்.


  உடனடியாக தான் கூறுமாறு ஒரு ஓலையை குருந்தங்காட்டில் உள்ள ஏந்திழைக்கு அனுப்பி வைக்குமாறு, அமைச்சர்களுக்கு உத்தரவிடச் சொன்னாள்.

No comments:

Post a Comment